Thursday, November 29, 2007

விகடன் செய்த தவறு

"நாங்கள் இந்தியர்கள் அல்ல" என்கிற தலைப்பில் வெளியான நாகாலாந்து மக்களின் போராட்டத்தை பற்றிய ஒரு கட்டுரையில் (ஜுனியர் விகடன் 2-12-07 இதழில்) இந்திய வரைபடத்தை இவ்வாறாக பிரசுரித்துள்ளது.

 

 

 p21b

இதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை விட்டு விட்டது. தேசிய சிந்தனையுள்ள, பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கை இவ்வாறு கவனக்குறைவாக இருக்கலாமா?

Tuesday, November 27, 2007

அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா

அன்று வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்தேன். கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் விமான நிலையம், எப்பொழுதும் போல இருந்தது. டாக்சியிலிருந்து இறங்கி, போர்டிங் கார்டு வாங்கி, லக்கேஜ் செக் இன் செய்து, இமிகிரேஷன் கிளியெரென்ஸ் முடித்து, உங்கள் விமானம் புறப்படும் லவுஞ் வரைக்கும் கண்ணை மூடிக்கொண்டு சென்று விடலாம். எந்த மாற்றமும் இல்லை என்பதற்கு ஒரே அடையாளம், விரிந்திருந்த கார்ப்பெட் தான். அதே விரிப்பு. அதன் உண்மையான நிறம் மங்கி, காப்பி, டீ, பெப்ஸி கரைகளும், மற்ற கறைகளும் பட்டு,கறுப்பாக இருந்தது. உள்ளே தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த செடிகளும், மரங்களாகாமல், அப்படியே செடிகளாகவே (!!!) இருந்தன.

அங்கிருந்த நீரூற்றைப் பார்த்ததும், “அட்லீஸ்ட் இந்த தண்ணியையாவது மாத்திருப்பாங்களா?” என்ற சந்தேகம்தான் என்னில் எழுந்தது. உடனே என் மனைவி, “ஒரே ஒரு சேஞ்ச் பண்ணியிருக்காங்க. விமானப் புறப்பாட்டிற்காக காத்திருக்கிற இடத்தில, ஒன்னிரண்டு ஃபாஸ்ட் புட் கடைங்க வந்திருக்கு பாருங்க..” என்றாள்.

கூட இருந்த நண்பன், “..அது சரி. அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. பத்து வருஷத்திலே நிலா மட்டும் மாறிடுச்சா என்ன?..” என்று லொள்ளடித்தான்.

வழக்கம் போலவே விமானத்தில் ஏற அனுமதிக்கும் நேரத்தில், ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் 300க்கும் மேற்பட்ட பயணிகளை அடுத்த கேட்டுக்கு வரச் சொன்னார்கள், இத்தனைக்கும் இரண்டு அமர்விடங்களுக்கும் ஒரே பொதுவான கேட் தான் இருக்கிறது. அந்த அதிகாரி, இந்த வாசல் கதவிற்கு பதிலாக அந்த கதவைத் திறந்தால் போதும். அவர் ஒரு இரண்டு அடி மட்டுமே நகர வேண்டும். ஆனால் 300க்கும் மேற்பட்டவர்களை இங்கிருந்து அங்கு அலைக் கழித்தார். நம்மவர்களும், இந்த விமானம் நம்மை விட்டு விட்டு மேலே எழும்பாது என்று நன்றாக தெரிந்திருந்தும், எங்கே இடம் கிடைக்காமல் போய் விடுமோவென்று என்று எண்ணியோ என்னவோ, திபு திபுவெனெ அங்கிருந்து இங்கு ஒடி வந்தார்கள்.

இது ஒவ்வொரு முறையும் நடக்கும், நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை வைட்டிங் லவுஞ்சிலிருந்து பார்த்ததால், ஏன் இப்படி நடக்கிறது என யோசித்தேன். பின்னர்தான் இதன் காரணம் புலப்பட்டது. புறப்பாடு கேட் எண்ணை அராபியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். ஆங்கில எண் ஒரு கதவின் மேலும், அராபி எண் இன்னொரு கதவின் மேலும் எழுதியிருந்தது. நம் மக்கள் (அவர்கள் அராபி எண்ணை அறிந்திருந்தாலும்) ஆங்கில எண் எழுதிய கதவு இருக்கும் லவுஞ்சில் சென்று அமர்ந்து விடுகிறார்கள். போர்டிங் பாஸ் செக் செய்து உள்ளே அனுமதிப்பவரோ இந்த ஊர் ஆசாமி. அவர் சரியாக, அராபி எண் எழுதியிருக்கும் கதவருகே வந்து உள்ளே செல்ல அனுமதிக்கிறார். அதனால்தான் இந்த குழப்பம்.

அப்பொழுது கண்ட இன்னொரு காட்சி, என் மனதை என்னவோ செய்தது. 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு கேட்டிலிருந்து இன்னொரு கேட்டிற்கு வரிசையாக இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் 25லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து அவர்கள் ஸீலங்காவை சேர்ந்தவர்கள் என்று கண்டு கொண்டேன். மற்ற தோற்றங்களை வைத்து அவர்கள், இங்கே பணிப்பெண்களாக பணி புரிபவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

குடும்ப நன்மைக்காக, வளமான வாழ்க்கைக்காக ஆண்கள், தனியாகவோ அல்லது குடும்பத்தாரோடு புலம் பெயர்வதென்பது வேறு. பெண்கள் தனியாக புலம் பெயர்வதென்பது வேறு. படித்த பெண்கள் தனியாக வெளிநாடுகளில் சென்று பணி புரிகிறார்கள். அவர்களையும், இவர்களையும் ஒப்பிடக்கூடாது. இந்தக் காட்சி ஏன் என்னை இவ்வாறாக சிந்திக்கத் தூண்டியெதென்றால், சில நாட்களுக்கு முன் படித்த ஒரு செய்திதான்.

ஒரு பெண், 13 வருடங்களுக்கு முன், பணிப்பெண் வேலைக்கு இங்குள்ள ஒரு குடும்பத்தால் அழைத்து வரப்பட்டார். வந்த சில மாதங்களைத் தவிர, அவருக்கு எந்த வித ஊதியமும் கொடுக்கப்படவில்லை. அவரால் ஊரிலிருக்கும் தன் குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல விதமான சித்திரவதைகளுக்கு ஆளான பின்னர், அவர் அந்த வீட்டிலிருந்து தப்பித்து ஸீலங்கா தூதரகத்தில் போய் அடைக்கலமானார். பின்னர் அங்கிருந்து அவர் ஒரு புகலிடம் இல்லாதோருக்கான ஆதரவகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், அவரை அழைத்து வந்த, அவருக்குப் பொறுப்பான அந்த அராபியக் குடும்பத்தலைவர் இறந்து போய்விட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கியை பெற வழியேதும் இல்லாமல் போய் விட்டது. இதை அறிந்த கவர்னர், அந்த சம்பள பாக்கியைத் தான் தருவதாக ஒத்துக்கொண்டு 53,000 ரியால் அளித்தார்.

இவற்றை எடுத்துக்கொண்டு அந்தப்பெண்மணி, தன் ஊரை அடைந்தார். அவரிடமிருந்து இந்தனை நாள் எந்தவித தகவலும் இல்லை என்பதால், அவர் குடும்பத்தார், அவர் இறந்து விட்டதாக கருதியுள்ளார்கள். அவரைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்தப் பெண்மணி இன்று அந்த ஊரில் ஒரு பணக்காரப் பெண்மணி (கிட்டத் தட்ட 15.50 இலட்சம் ஸீலங்கா ரூபாய் 1 SAR = 29.50 Lankan Rupee).

குறிப்பிட்ட விமான நிலையம் = ரியாத், சௌதி அரேபியா.

Friday, November 16, 2007

Sachin Syndrome ... 'Oh.. not again..'

Syndrome - A group of symptoms that collectively indicate or characterize a disease, psychological disorder, or other abnormal condition - American heritage dictionary

சச்சின் டெண்டுல்கரின் நேற்றைய ஆட்டம் அபாரம். ஆனாலும் சதம் அடிக்க முடியவில்லை. அவர் இவ்வாறு 90களில் ஆட்டம் இழப்பது வாடிக்கையாகி விட்டது. அவரே இதை ஒரு 'wrong habit'  என்று ஒத்துக் கொள்கிறார். 2007ல் மட்டும் 6 முறை இவ்வாறு ஆட்டம் இழந்துள்ளார்.

அவர் சதத்தை நெருங்கிய போதெல்லாம், 'இன்று சதம்தான்' என்று எழுந்து நின்று ஆர்ப்பரித்த ரசிகக் கூட்டம், இன்று ' சதம் போடுவாரா' என்று சந்தேகம்/விவாதம் செய்கிறது. இனிமேல் அவர் 'சதம் போட வேண்டுமே' என்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர் ஆட்டமிழந்து வரும் போது, 'He is great' என்று கூறி ஆரவாரம் செய்தவர்கள், 'Just missed' என்று சமாதானம் செய்து கொண்டே கை தட்டியவர்கள், இன்று 'Oh.. not again..' என்று உச்சுக் கொட்டும் நிலைக்கு வந்து விட்டார்கள். அவரின் குழந்தையும் கூட sixer அடித்து சதத்தை எட்டி விடு என்று தொலைபேசியில் கூறும் அளவுக்கு உள்ளது.

உன்னதத்திலிருந்து, வியப்பிற்கு மாறி, இப்போது பரிதாபத்திற்கு உரியவாராகியுள்ளார். சச்சின் ஒரு 'statistician's delight'  என்று கூறுவார்கள். இப்போது ஒரு புதுவிதமான புள்ளி விவரத்தை ஆரம்பித்து உள்ளார். 50 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 200க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, என்பதின் இடையே, 90-100 எண்ணிக்கை என்கின்ற ஒரு புது புள்ளி விவரத்திற்கு அடி போட்டு அதிலும் அவரே முதன்மையான வராயிருக்கிறார்.

பாகிஸ்தானின் சல்மான் பட், யுனிஸ் போன்றவர்கள் 90களில் சர்வ சாதாரணமாக ஆடும் போது, 400 பந்தயங்களுக்கு மேல் ஆடிய சச்சின் 90 களில் ததிங்கனத்தோம் போடுகிறார். அவர் அதிக ஒட்டங்கள் குவித்திருக்கலாம், மிக அபாரமாக ஆடி குழுவின் வெற்றியை உறுதி செய்யலாம். அனாலும் அந்த மைல்கல்லை எட்டமுடியாதிருப்பது அவ்ர் ஒரு விதமான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.  

மேலே கூறிய விளக்கப்படி இது ஒரு வியாதியே. அவர் ஒரு மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது எனத் தோண்றுகிறது.

 

பி:கு: சச்சினின் ஆட்டத்தையோ, அவர் குழுவின் வெற்றிக்கு ஆற்றிய பங்கைப் பற்றியோ, அவரின் dedication பற்றியோ எந்தவொரு சந்தேகமும் எழுப்பவில்லை. அவை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது.

Wednesday, November 14, 2007

டாடா குழுமத்தின் ஆசியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் நான்காவது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த Computational Research Laboratories (CRL), நொடிக்கு 117.9 trillion கணக்குகள் செய்யக்கூடிய ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க CRL ன் சுய தொழில் நுட்பத்தால் உருவானது என்று அதன் தலைவரும், TCS நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுமான S. ராமதுரை கூறியுள்ளார். இதன் பெயர் 'ஏக'. சம்ஸ்கிருத வார்த்தையான இது 'முதல்' என்ற அர்த்தம் தரும். இது பற்றி மேலும் அறிய

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEB20071113105830&Title=Business&rLink=0

இந்தியத் தொழில் நுட்பத்தை உலகறியச் செய்யும் டாடா குழுமத்திற்கு இது மற்றும் ஒரு வெற்றிக்கல். பாராட்டுக்கள்.

Sunday, November 11, 2007

அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ - மத்திய அரசின் பாராமுகம். அது சரி முதலில் முகம் என்று ஒன்று இருந்தாலல்லவோ பார்ப்பதற்கு. மேற்கு வங்காள ஆளுனர் நந்திகிராம் ஒரு ‘யுத்த களம்’ ஆக மாறிவிட்டது. எந்த ஒரு அரசாங்கமும், அந்நிலையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருக்க கூடாது என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.

மேலும், மேதா பாட்கர் போன்ற சமுதாய சிந்தனையாளர்களின் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது, நாகரீகமான அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று வேறு கூறியுள்ளார்.

CPI-M கட்சியாளர்கள் நந்திகிராமத்தை மீண்டும் ‘அபகரித்திருப்பது’ ஒரு சட்ட விரோதமான செயல் என்றும் ஒத்துக்கொள்ள முடியாதவொன்று என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ என்று மேற்கு வங்காள உள்துறை காரியதரிசி கூறியதையே ஆளுனரும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் இடது சாரி கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. அவர் தன் எல்லை மீறி நடப்பதாகவும், சார்பற்று நடப்பதாகவும் கூக்குரல் இடுகின்றன. இதன் நடுவில் அவர்கள் மந்திரி சபையிலிருந்து ஒரு அமைச்சரும் (கோஸ்வாமி) அரசின் நிலையை எதிர்த்து ராஜினாமா செய்திருக்கிறார்.

உண்மையான நிலை தனக்கு பாதகமாயிருப்பதால், ஆளுனரின் கண்டனத்தையும் அவரின் நிலைப்பாட்டையும் அரசு எதிர்க்கிறது. ஆளுனர் என்றால் என்ன கர்நாடகா ஆளுனர் தாக்கூர் போல கை கட்டி வாய் பொத்தி உட்கார்ந்திருக்க வேண்டுமா? அத்தனை நாள் அவகாசம் கொடுத்தும் காங்கிராசால் குதிரைப்பேரம் பேசி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜபா வை நேற்று அரசமைக்க அழைத்துள்ளார். ஆனால், காந்தி உண்மையான அக்கறையோடு செயல்பட்டால் அதற்குக் கூப்பாடு, மத்திய அரசும் மவுனம்.

ஒரு நடுநிலையான அரசாயிருந்தால் ஆளுனரின் இந்த பேட்டியையே அவரின் அறிக்கையாக எடுத்துக்கொண்டு இந்நேரம் மேற்கு வங்க அரசை கலைத்திருக்க வேண்டும். ஆனால், எப்படிப் பண்ண முடியும்? குடுமி அங்கேயல்லவா இருக்கிறது. அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

இதே எதிர்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருந்தால் இத்தனை நேரம் ஜனாதிபதி ஆட்சி அமுலாயிருக்கும். ராத்திரியோட ராத்திரியா, அப்துல் கலாமை மாஸ்கோவிலே கையெழுத்து போட வச்சவங்க தானே இவங்க.

ஆனா ஒன்னு, வரப்போகிற பாராளுமன்றத் தொடர், அணு சக்தி ஒப்பந்தம், நந்திகிராம் ரெண்டுலேயே அடிபட்டுப்போயிடும். சாட்டர்ஜியோ, ப்ளீஸ், ப்ளீஸ்.. சிட் டவுண், என்று கெஞ்சியே, (சபையைத் தள்ளித் தள்ளி வச்சு, பாராளுமன்றக் கட்டிடம் கடைசியிலே சென்னைக்கே வந்து விட்டாலும் ஆச்சரியப் பட வேண்டாம் :-))))))) ) நொந்து போக வேண்டியதுதான்.

Thursday, November 08, 2007

தீபாவளி தொல்லைக் காட்சிகள் - 1

காலையில் மங்கள நாதத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடங்கின. ஜெயாவின் வேலூர் ஸ்ரீபுரம் பற்றிய தொகுப்பு மிக அருமை. விடியலில் எடுத்த படப்பிடிப்பு மனத்தைக் கொள்ளை கொண்டது.

பின்னர் 6:30 க்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் பழமை சங்கீதம் பற்றிய நிகழ்ச்சிகள், கலைஞரைத் தவிர. சன் - நித்யஸ்ரீ கர்நாடக சங்கீதத்தில் தமிழ்ப் பாடல்கள் , ஜெயா - சுகன்யா ராம்கோபால் நடத்திய லய ராக சங்கமம், பஞ்ச கன்னிகைகள் கடம், மிருதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று புது விதமான ஒரு ஆர்கெஸ்ட்ரா. ஸ்டார் விஜயில் ஹரிஹரனின் ஹார்மோனியம், கஜல், கிடார், தபேலா,  சரோட் என்று வடக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளோடு சங்கீத சங்கமம். கலைஞரில் மட்டும் டாக் ஷோ சத்யராஜோடு, சினிமா தான் வாழ்வின் ஆரம்பமும், முடிவும் என்று.

7:00 மணிக்கு கலைஞரிலும், சன்னிலும் கிட்டத்தட்ட ஒரே நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீகாந்தும், அவர் மனைவி வந்தனாவும் பேட்டி காணப்பட்டார்கள், தலை தீபாவளி தம்பதியாம். கடந்த சில மாதங்களாக வேறு சில காரணங்களுக்காக தொலக்காட்சிகளும், ஊடகங்களிலும் தோன்றியவர்கள் இன்று ஜோடியாக சேர்ந்து வந்தது ஒன்றை நன்றாக நினைவு படுத்தியது. விட்டுக்கொடுத்தல் இருந்தால், வாழ்வில் நலம் பெறலாம் என்பதுதான் அது. ஆனால் அது எப்படி ரெண்டு தொலைக்காட்சிகளும் ஒரே நிகழ்ச்சி. இன்னிக்கு மீண்டும் 'கில்லி' யாட்டமா? போகப்போகத்தான் தெரியும்.

7:30க்கு பொதிகையில் சொர்ணமால்யாவின் 'வந்தாள் மகாலக்ஷ்மி' பரத நாட்டியம். சொர்ணமால்யாவின் முதல் நாட்டிய நிகழ்ச்சியாம். ஹரிபிரசாத்தின் சாரீரம் ரொம்பவும் நன்றாக இருந்தாலும், சொர்ணமால்யாவின் சரீரம் ரொம்ப சங்கடம் கொடுத்தது. இவர் உடம்பு மெலிதாக இருந்த காலத்தில் ஆட வந்திருக்க வேண்டும். இவ்வளவு ரெட்டை நாடியான உடம்பை வைத்துக் கொண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டார். சிகப்புக் கலரில் உடை கண்ணை கூச வைத்தது. ஜெயாவும், சன்னும் சினிமா நிகழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டார்கள், நதியாவும், விஷாலும். ஸ்டார் விஜய் 7:00 மணிக்கே புது பாடல்களை ஆரம்பித்து விட்டனர். இனிமே இன்னிக்கு முழுசும் குத்தாட்டம்தான்.

Monday, November 05, 2007

மரத்தை வெட்டினால் 1 கோடி ரூபாய் இனாம்.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டும் போது அங்கே இருக்கும் ஒரு பேரிச்சை மரத்தை அகற்ற முடியவில்லை. அந்த மரம், கார் பார்க்கிங் தளத்தில் இருக்கின்றது. முதலில் அதை வெட்ட முயன்றனர். முடியவில்லை. பின்னர் டிராக்டர் கொண்டு இழுத்து சாய்க்க முயன்றனர். தோல்வி கண்டனர். இன்னும் பெரிய டிராக்டர் கொண்டு வந்து முயற்சி செய்தனர். அப்போதும் அதை சாய்க்க முடியவில்லை.

பிறகு மதத் தலைவர்கள்,அங்கே ஒரு பூதம் தன் குடும்பதுடன் வாழ்வதாகவும், அந்த மரத்தை அதுதான் பாதுகாத்து வருவதாகவும் கூறி அந்த மரத்தை வெட்ட எத்தனிக்க வேண்டாம் என்று அந்த கான்டிராக்டரிடம் கூறினராம்.tree5_

அங்கே வேலை செய்பவர்களும், காவல் காரர்களும், அந்த மரத்தை அகற்ற முயன்ற நேரத்திலிருந்து அங்கே பல அசம்பாவிதங்கள், ஒருவர் மாடியிலிருந்து தலை குப்புற கீழே வி ழுந்து உயிர் விட்டது முதற்கொண்டு, நடக்கின்றன என்கிறார்கள்.

அந்த மரத்தை அப்புறப் படுத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் ரியால் (ஒரு ரியால் = 10 ரூபாய்க்கும் மேல்) தருவதாக அந்த காம்ப்ளெக்ஸ் சொந்தக்காரர் அறிவித்திருக்கிறார் (இடம் ஜித்தா, சவுதி அரேபியா).

ராமர் பாலம், ஆதாம் பாலம், மணல் திட்டு (நீங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க, என்ன) உடைக்கும் முயற்சியிலும், இப்படித்தானே டிரெட்ஜர் மாறி மாறி உடஞ்சது.

நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற்கும் ஒரு முடிச்சும் போடலைடா, சாமி, ஏதோ ஞாபகம் வந்திச்சு சொன்னேன், அம்புட்டுத்தான்….

Sunday, October 21, 2007

நன்றி, நன்றி, நன்றி........

இந்த நட்சத்திர வார அனுபவம் ஒரு சுகம்.

ஒரு வாரம் முகப்பில் நின்று, opening batsman போல நிதானமாக ஆடும் ஆட்டம்.

கண்ணாடி முன் நின்று, தலையை இப்படிக் கோதி, அப்படி வாரி, பக்கவாட்டில் பார்த்து, உதட்டை சுழற்றி, சட்டையை சரி செய்து, இன்று நான் அழகாக இருக்கிறேனா என்று பார்ப்பது போல், எப்பொழுது தமிழ்மணத்தைத் திறந்தாலும், தன்னைத்தானே அழகு காணும் ஆரவாரம்.

தன் வருகைப் பதிவில் எவ்வளவு எண்ணிக்கை கூடியிருக்கிறது, எவ்வளவு பேரை ஈர்த்திருக்கிறோம், யார் யார் மறு மொழியிட்டார்கள் என்று தனக்கு கிடத்த அங்கீகாரத்தைப் பற்றிய ஒரு பரிசீலனை, நித்தம், நித்தம்.

“வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த பூமியில் நமக்கு இடமேது..” என்று எண்ணியோ என்னவோ, பலர் வந்து பார்த்து, ரசித்து (?) மட்டும் போயினர், சிலர், “உள்ளேன் ஐயா..” சொல்லிவிட்டுப் போனார்கள்.

3000த்திற்கு மேல் வரவு, என்னைப் பொருத்தமட்டில் ஒரு வாரத்தில் (சொல்லப் போனால் 5 நாட்களில்) மிக அதிகம், உயர்ந்த பட்ச மரியாதை. (நான் என்ன இட்லி வடையா, டோண்டுவா இல்லை லக்கிலுக் கா, இதற்கு மேல் எதிர்பார்க்க?) வந்தவர்கள் அனைவருக்கும் வந்தனம்.

மறுமொழியிட்டவர்கள் அனைவருக்கும, பதில் கருத்துக்களை ஒரு தனிப் பதிவாக வரும் வாரத்தில் போடுவேன்.

திட்ட மேலாண்மை (Project Management) பற்றிய கட்டுரைத்தொடர் தொடரும்.

என் புரிதலில் ஏற்பட்ட குறையினாலும், வெளியுர் செல்லும் படியான சூழ்நிலையினாலும், முதல் 2 நாட்களுக்கு பதிவுகள் ஏதும் இட முடியவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

எனக்கு என்னை அறியத் தந்து,  பிறருக்கும் அறிமுகப்படுத்திய  தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் வணக்கங்களும், நன்றியும். 

கொசுறுப் பதிவு

ஆசிரியர் : வல்லினம், மெல்லினம், இடையினம் எடுத்துக்காட்டு சொல்லு பார்ப்போம்.


மாணவன் : 20-20 போட்டி வல்லினம் சார். முதல் பந்திலிருந்தே விளாச ஆரம்பிக்கனும்.

ஒரு நாள் போட்டி இடையினம் சார். வேகமா ஆரம்பிச்சு, ஸ்பின்னர்ஸ் வரும்போது சற்று நிதானமாகி, 35 ஓவருக்கு மேலே பொளந்து கட்டனும் சார்.

5 நாள் டெஸ்ட் போட்டி, மெல்லினம் சார். நிதானமா டொக்கு டொக்குன்னு கட்டை போட்டு, செஞ்சுரி போடறதுக்காகவே ஆடறது சார்.

2020 லே வல்லரசு ஆனம்னா என்னென்ன வெல்லாம் பன்ணனும்?

இப்பத்தானே 20-20 கிரிக்கெட் போட்டியிலே வல்லரசு ஆயிருக்கோம். இதுதான் தொடக்கம். மத்ததயெல்லம் இனிமேதான் ஆரம்பிக்கனும்..

புலிகட் (அ) பழவேற்காடு ஏரி

சென்ற முறை விடுமுறையில் ஊர் சென்றிருந்த போது, அடிக்கும் வெய்யில் தாங்காமல் எங்காவது குளம், குட்டையைத் தேடிப் போய் சுகமாக, எருமை மாடு போல் ஊற வேண்டும் போல இருந்தது. தமிழ் நாடே வெய்யிலின் உக்கிரத்தில் வரண்டு போய் கிடந்தது. எங்கே போவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் எங்களுக்கு உதித்த இடம் புலிகட் ஏரி என்று சொல்லப்படும் பழவேற்காடு ஏரி. சென்னையிலிருந்து சுமார் 30 கல் தொலைவில், கொல்கொத்தா நெடுஞ்சாலையில், ஸ்ரீஹரிகோட்டா அருகில் அமைந்துள்ளது.

உண்மையில் அது ஏரி இல்லை. ஒரு Lagoon. கடல் ஒரு சிறு முகத்துவாரம் வழியாக உள்வாங்கி ஒரு ஏரி போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இடையில் அழகான சிறு தீவுகள். சவுக்குத் தோப்புகளும், மணல் மேடுகளும் நிறைந்த திட்டுக்கள். ஒரு கலங்கரை விளக்கம். தீவுகளில் வசிக்கும் மக்கள் படகில் பயணிக்கும் காட்சி. ஒரு தீவில் இருக்கும் கோயிலுக்கு, நேர்த்திக்காகச் செல்லும் பக்தர்கள்.

DSC02530

DSC02531

DSC02532

அந்த இடத்திற்கு சென்றாலே ஒரு ரம்மியமான சுழ்நிலை. அது ஒரு மீன்பிடி துறைமுகமாதலால் அங்கு அடிக்கும் அந்த கவுச்சி வாசம் முதலில் எங்களுக்கு குமட்டிக் கொண்டு வந்தாலும், ஏரியில் சற்று உள்ளே சென்றவுடன் இயற்கையன்னை எங்களை முழுவதும் ஆட்கொண்டாள்.

அது ஒரு பறவைகள் சரணாலயமும் கூட. பருவ காலங்களில் பறவை பார்ப்பவர்களுக்கு அது மிகச் சிறந்த இடம் என்று கூறினார்கள். நாங்கள் சென்றது வெய்யில் காலமாதலால் அவ்வளவாக பறவைகள் இல்லை. இருந்தாலும் சில பறவைகளைப் பார்த்தோம்.

DSC02577

DSC02574

அந்த திட்டுக்களுக்கு செல்ல மீன்பிடி படகுகளில்தான் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது அங்கே செலவிட வேண்டும். அப்போதுதான் அந்த சூழலை முழுமையாக ரசிக்க முடியும். Picnic செல்லும் போது எப்படிப் போவோமோ அப்படித் தேவையான திண்பண்டங்களையும், விளையாட்டு சாதனங்களையும் வீட்டிலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். பழவேற்காடு ஒரு குக்கிராமம். சென்னைக்கு இவ்வளவு அருகிலிருந்தும், நகரத்தின் பாதிப்புகள் அங்கு அவ்வளவு இல்லை. அதிக பட்சம் டீ, பஜ்ஜி, வடை கிடைக்கும். மீன்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.

தோராயமாக 500 ரூபாயில், ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பெரும்பாலும் முன்னிரவுகளிலோ அல்லது இரவுகளிலோதான் மீன்பிடிக்க செல்வார்களாம். எனவே பகல் வேளைகளில் படகுகள் கிடைக்கும். ஒரு படகில் 10 பேர் சாதாரணமாக செல்லலாம்.

நாங்கள் சென்றது ஒரு சவுக்கு மரங்கள் அடர்ந்த ஒரு திட்டுக்கு. பொசுக்கும் வெய்யிலிலும், சுகமான கடற்காற்று, அந்தத் தோப்புக்குள் நுழைந்ததுமே எங்களை வரவேற்றது. ஆட்டம், பாட்டம் என கும்மாளங்கள் முடிந்த பின், சிற்றுண்டிக் கடை விரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கே வந்து மோதும் கடலைகளில் விளையாடினோம்.

DSC02560

DSC02561

பின்னர் முகத்துவாரத்திற்குப் பயணம், அந்தப் படகிலேயே தொடர்ந்தது. அங்கு சென்றடையும்வரை அந்த முகத்துவாரம் கண்ணில் படவேயில்லை. அந்த மணல் திட்டு மறைந்து, கடல் பகுதி கண்ணில் பட்ட போது ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவேயில்லை. அதுவரையில் சிறு, சிறு சலனங்களுடன் மட்டுமே இருந்த ஏரி, சடாரென்று சல சலவென்ற சத்ததுடன் வங்காள விரிகுடாவில் கலந்தது. அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக கரையைத் தொடும் காட்சி மிக அற்புதம். மெரினாவில் சற்று தூரம் மட்டுமே அலைக்குள் செல்ல முடியும். இங்கே கரை ஆழமில்லை, சுமார் 100 மீட்டர் தூரம் வரை நீச்சல் தெரியாதவர்களும் அலைகளுக்குள் செல்லலாம். கடற்கரையும் மிகவும் அழகாக, செயற்கையான கட்டிடங்களோ, பொருட்களோ இல்லாமல், தூய்மையாகவும், அமைதியாகவும் இருந்தது. கிளிஞ்சல்களும், கூடுகளும் ஏராளமாக கிடைத்தன. ‘மியாமிய விட இது சூப்பர் பா…’ என் மகனின் ஆனந்தக் கூத்தாட்டம். பிள்ளைகள் ஒரே களியாட்டம். அந்த வாரம் அடித்த வெயிலுக்கு சேர்த்து வைத்து கடலில் குதியாட்டம் போட்டார்கள்.

DSC02579

DSC02584 

DSC02582

DSC02594

அந்தி சாயும் நேரத்தில் கரை திரும்பினோம். பாதி வழியில், படகின் டீசல் தீர்ந்தது. நாங்கள் சற்று பயந்த வேளையில், எங்கள் மீனவநண்பனின் உதவியாக வந்த சிறு பையன் சடாரென்று ஏரியில் குதித்தான். அவன் மார்பளவே தண்ணீர். அவன் கையால் படகைத் தள்ள ஆரம்பித்தான். உடனே சிறார்களும் குதித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.  ஒரு மாட்டு வண்டி  ஒரு தீவிலிருந்து கரைக்கு கடந்து சென்றது.

 

p

கரை சேர்ந்து, மீனவ நண்பனுக்கு நன் றி சொல்லிவிட்டு, அடுத்த நாள் வெய்யில் எவ்வளவு உக்கிரம் இருக்குமோ என பயந்து கொண்டே வீடு திரும்பினோம்.

எங்கள் அதிர்ச்சி என்னவென்றால், இவ்வளவு அழகான ஒரு இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை ஒரு வசதி கூட செய்து கொடுக்கவில்லை. கழிப்பிடங்களோ, உணவு சாலைகளோ எதுவும் இல்லை. ஒரு விதத்தில் பார்க்கும் போது இவர்களின் சோம்பேறித்தனமும் நல்லதுக்கே என்று கூடத் தோண்றியது. இல்லாவிடில், இதுவும் ஒரு வியாபார சந்தையாகி விட்டிருக்கும். கேளிக்கைகள் என்கிற பெயரில், வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

Saturday, October 20, 2007

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம்.

பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்கும் மாறினோம்/ மாறிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்கள் தேவையானது மட்டுமில்லாமல், நல்லதும் கூட . இவ்வாறாகத்தான் மாற்றங்கள் நம்மீது திணிக்கப் படுகின்றன.

இந்தியாவின் இன்றைய நிலைக்கு வித்திட்டவர்களில், ராஜிவ் காந்திக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இன்னும் பல பேர்கள் இருப்பார்கள், ஆனாலும் என்னளவில் அவர் மிக முக்கியமானவர். சாம் பிட்ரோடா போன்ற வல்லுனர்களை பக்கத்தில் வைத்துககொண்டு அவர் தொலைத் தொடர்பில் தினித்த மாற்றங்களின் பயனைத்தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா ஒரு இளமையான நாடு. இங்குள்ள மக்கள் தொகையின் சராசரி வயது 35-40க்குள்தான். அதனால்தான் இங்கு வளர்ச்சியின் அதிர்வுகளைக் காண முடிகிறது. இந்த இளமைத் துடிப்பான நாடை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல, துடிப்பான திட்டங்கள் தேவை, அவ்வாறான திட்டங்கள் வரும் போது, அதற்கான ஆதரவுகள் பெருக வேண்டும். இன்னும் பத்தாம் பசலித்தனமான கருத்தக்களையும், எண்ணங்களையும் கூறிக்கொண்டு அவற்றிற்கு முட்டுக் கட்டை போடுவது சரியல்ல. அத்திட்டங்களில் சற்று பாதகங்களிருப்பின் அதற்கு மாற்று, அத்திட்டங்களை கிடப்பில் போடுவது அல்ல, மாற்றுக்களை ஆராய்வதுதான்.

உதாரணமாக, நாம் இரு விடையங்களை ஆராய்வோம். முதலில் அணுசக்தி ஒப்பந்தம். நமக்கு மிக அத்தியாவசியத் தேவை எரிபொருள். அது நம் நாட்டில் அரிதானதொன்று. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் எரிபொருட்களின் விலையோ ( நேற்று கச்சா எண்ணையின் விலை $ 90 ஒரு பேரலுக்கு) உச்சாணிக் கொம்பிலிருக்கிறது. இந்த நிலையில், அணு சக்தியை எரி பொருள் தேவைக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? இன்னும் எதற்காக பொதுவுடைமை வாதிகள் அமெரிக்கா, அமெரிக்கா என்று கூக்குரலிடவேண்டும். தொழில் நுட்பம், மூலதனம், கச்சாப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றனவோ அங்கேதானே போய் வாங்க வேண்டும். அரிதான பொருட்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா? சற்று கடினமான விலையை கொடுக்கத்தான் வேண்டியி்ருக்கும். சரி, கூக்குரலெழுப்பும் இவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் ஆதரவை ஆளும் கட்சிக்கு கொடுத்து விடுகிறார்களா? தங்கள் ஆதரவு மிக முக்கியம் என்பதினாலேயே, எவ்வளவு அலைக்கழிக்கிறார்கள். அதுவே ஆளும் கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்த உடன்பாடு இத்தனை நேரம் கையெழுத்தாகியிராதா? இந்த கூச்சல், முடக்கல் எல்லாம் எதற்காக? நான் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்ளவா, இல்லை என்னால் உன்னை முடக்க முடியும் என்று முட்டி முயர்த்தவா?

அடுத்து சில்லறை வியாபாரத்தில் பெரு குழுமங்கள் நுழைவதை எதிர்ப்பது. நாட்டில் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் தனி மனிதனின் தேவைக்காகத்தான். அப்படியென்றால் அவை அனைத்தும் சில்லரை வணிகம்தான். 90 விழுக்காடு பொருட்களை குழுமங்கள்தான் தயாரித்து வருகின்றன. அவை அனைத்தையும் இனி தனி நபர்கள்தான் தயாரிக்க வேண்டும், சிறு வியாபாரிகள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தலாமா?. இனிமேல் சிமெண்ட் தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்ற வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தலாமா?

சரி, முன்னர் தனி நபர்கள் சிறு சிறு கடைகள் நடத்தி கறிகாய் வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது பழமுதிர்சோலை (சென்னை போன்ற இடங்களில்) என்று கடை ஆரம்பித்து பலதரப்பட்ட காய்கறி, கனிகளை ஒரே இடத்தில், குறைவான விலைக்கு விற்பதை இவர்கள் ஏன் குறை கூறுவதில்லை? பார்க்கப்போனால், பழமுதிர்சோலைகளின் கடைப் பரப்பளவை விட, ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் கறிகாய், கனிகள் விற்பதற்காக ஒதுக்கியிருக்கும் இடத்தின் பரப்பளவு கம்மிதான். மொத்தக் கொள்முதல் செய்து, இடைத்தரகர்களை ஒழித்து, குறைவான விலையில் கொடுப்பதை எதிர்த்தும் ஒரு போராட்டம். இவ்வாறுதான் கணிணி உபயோகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள், பல பேருக்கு வேலை போய் விடுமென்று. ஆனால் நடந்தது என்ன, பல நூறு மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுதான் கண்கூடாகக் கண்ட உண்மை.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பதென்ன? மாற்றங்கள் தேவையில்லை என்று கூறி நம்மை முந்திய நிலைக்கு இட்டுச்செல்லும் போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்குத் தேவை இளமையான, அடுத்த 20, 40 ஆண்டுகளில் என்ன தேவை என்பதை எதிர்நோக்கித் திட்டமிடும் தலைவர்கள்தான். சிமெண்ட்டை ரேஷன் கடைகளில் கொடு என்று கோஷம் போடுகிற தலைவர்கள் அல்ல. ஞானி விகடனில் எழுதிய முறை வேண்டுமானால் சிலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் கருத்தில் குறையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது அப்படியே வாஜ்பேயிற்கும், அத்வானிக்கும், தேவ கவுடா, அர்ஜுன் சிங் போன்ற பலருக்கும் (அரசுக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தி்ண்ணைக் கட்டிலில் இருப்பவர்களுக்கும) பொருந்தும்.


நம்ம வீட்டு கொலு

இது நவராத்திரி காலம். இன்று சரஸ்வதி பூஜை. இப்போ கூட எங்க வீட்டு கொலு பற்றி ஒரு பதிவு போடல்லைன்னா எப்படி?

இதுதான் மெயின் கொலு.

DSC01195

ரெண்டு பக்கமும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.

DSC01197

என் மகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த 'தாஜ் மஹால்' மாடெல்

DSC01202

செட்டியாரும், ஆச்சியும் இல்லாத கொலுவும் ஒரு கொலுவா?

DSC01203

ஒரு பேர்ட்ஸ் ஐ பார்வை

DSC01206

ஹிஹி, கிரிக்கெட் நம்ம வாழ்க்கையிலே ஒரு இன்றியமையாத அம்சமாயிட்ட பிறகு, கொலுவிலே அதை விட்டுட முடியுமா?

DSC01210

Friday, October 19, 2007

திட்ட மேலாண்மை - முன்னோட்டம் (Project Management - An Introduction) - பாகம் 1

முன்னுரை:

தமிழ்ப் பதிவுகளில் பல தரப்பட்ட தலைப்புக்களில் கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் பதியப்படுகின்றன. தற்பொழுது தொழில் நுட்பம் சம்பத்தப்பட்ட பல பதிவுகள் வருகின்றன. அவ்வகையில், நான் Project Management பற்றி பதிய விழைகின்றேன். இந்தத் தலைப்பு, பெரும்பாலான பதிவர்களுக்கு புதியது அல்ல, தெரிந்த ஒரு விடையம்தான். இருந்தாலும், நான் இதை எழுத எத்தனித்ததன் காரணம், தமிழில் இது பற்றி எழுத வேண்டும் என்கின்ற ஒரே ஒரு நோக்கம்தான்.

நண்பர்கள் குழுவில் இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், அவர்களும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த வித தமிழ்க் கட்டுரைகள், பல மாணவர்களுக்கு மென் தகுதிகளை (soft skills) வளர்த்துக் கொள்ள மிகவும் உதவியளிக்கும் என்றும் கருதினார்கள்.

இந்த கட்டுரைகள் ஒரு தொடராக வெளி வரும். தமிழில் என் சொல்லாண்மை அவ்வளவு வலிதானதல்ல. எங்கேனும் தவறுகள் இருப்பின், தயை கூர்ந்து எனக்குத் தெரியப்படுத்தவும். என் கருத்துக்கள் தவறு என் உங்களுக்குப் பட்டால், நீங்கள் நிச்சயம் சுட்டிக்காட்டலாம். விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட மேலாண்மை - முன்னோட்டம் (Project Management - An Introduction ) - பாகம் 1

திட்டம் என்பது Plan என்கிற வார்த்தையையும் குறிக்கும். இது குறித்து விவாதம் செய்கையில், நண்பர் நாக. இளங்கோவன் 'முயலல்' என்ற வார்த்தையைக் கூறினார். ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு விதமான முயற்சிதான். எனவே 'முயலல்' பொருத்தமான சொல்லாகப் படுகிறது. எனினும் பெரும்பாலான மக்களை சென்றடைய வேண்டி, எளிதில் புரியும் வார்த்தையான 'திட்டம்' என்கிற சொல்லையே பயன்படுத்துகிறேன்

திட்ட மேலாண்மை என்றால் என்ன?

திட்ட மேலாண்மை என்று எதைக் கூறுகிறோம்? ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன் ஒரு வரை படம் (Plan) தயாரிக்கிறோம். இந்த வரை படம் ஒரு திட்டம் தான். ஆனால் அதுவே திட்ட மேலாண்மை ஆகி விடுமா? ஆகாது.

ஒரு முனைப்போடு, நமக்குள் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு, அதற்கான ஒரு கால வரம்பை உறுதி செய்து, செலவினங்களுக்கான ஒரு உச்சத் தொகையை நிர்ணயித்து, இதனை இன்னார்தான் செய்ய வேண்டும் என தீர்மானம் செய்து, அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, எப்போது எதைச் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு செயல் பாட்டினை வரைந்து, அந்த செயல்பாடு அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் திட்ட மேலாண்மை ஆகும்.

திட்டம் அல்லது திட்ட மேலாண்மை என்பது ஒரு புதிய வார்த்தையா? ஏன் எல்லோரும் இப்பொழுது அதைப் பற்றி அதிகம் பேச வேண்டும்?

எகிப்தியர்கள் பிரமிட்கள் கட்டினார்கள். சீனாவில் நீள்சுவர் எழுப்பினார்கள். ரோமானியரின் கட்டிடங்கள், இந்தியாவில் உள்ள பெரும் கோவில்கள், அரண்மனைகள் ஆகியவை மிகவும் பழமையானவை. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. அப்பொழுது எந்த விதமான மேலாண்மை நுட்பத்தை அவர்கள் கையாண்டார்கள்?

இப்பொழுது ஒரு சிறிய கட்டடம் கட்டுவதென்றால் கூட ஒரு திட்ட மேலாளர் (Project Manager) வேண்டும் என்று கூறுகிறோம். அப்படியென்றால், இது மாதிரியான பிரமாண்டங்களை அவர்கள் எவ்வாறு எழுப்பினார்கள்? அவர்கள் எந்த விதமான உத்திகளைக் கையாண்டார்கள்?

அப்பொழுதும் அவர்கள் திட்டமிட்டுத்தான் பணி புரிந்தார்கள். செய்யும் உத்திகள் மாறியிருக்கலாம். ஆனால் செயல்பாடுகள் (Process) ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். எனவே இது ஒரு பழம்பெரும் கலை. இந்தக் காலக்கட்டத்தில்தான் உருவானது என்று நிச்சயமாக கூற இயலாத ஒன்று.

பொதுவாக திட்ட மேலாண்மை என்பது, கலைந்து கிடக்கும் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு முழு உருவமாக்குதலே. (arranging a jigsaw puzzle)

திட்டம் என்றால் என்ன?

 • ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கம்
 • தனித்துவம் நிறைந்தது (Unique)
 • ஆதியும், அந்தமும் உள்ளது ( Start and End dates)
 • எண்ணங்கள், செயல்களாக உருமாற்றப்பட்டு, செயல்கள் அவற்றை நிறைவேற்றுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரைமுறைகளுக்கு உட்பட்டு முடிவுகளை அடையும் முயற்சியே திட்ட செயல்பாடு ஆகும்.
இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்

சரி, நாம்தான் தினம் எல்லாவற்றையும் இப்படித்தானே செய்கிறோம். தினமும் குறித்த நேரத்திற்கு எழுந்து, அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து, தினந்தோறும் ஒரு திட்டமிட்ட வாழ்க்கை வாழுகிறோமே. அப்படியென்றால் அவை அனைத்தும் திட்டங்களா என்றால், இல்லை. இவை தினசரி நெறிமுறைகள் (Operations) என்று கூறப்படும்.

ஆனால், நாமும் திட்ட மேலாண்மை செய்கிறோம். எப்போழுது? எல்லோர் வீட்டிலும், கல்யாணம், சுப நிகழ்ச்சிகள், இதர நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை தினந்தோறும் நடப்பதில்லை வருடத்தில் ஒரு முறையோ அல்லது பல வருடங்களுக்கு ஒரு முறையோ நடைபெறும். உதரணமாக, வீட்டில், சகோதரிக்கோ, சகோதரனுக்கோ, அல்லது செல்வங்களுக்கோ திருமணம் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்களுக்கு, வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் தொடங்கி, பொருத்தமான வரனை அடையாளம் கண்டுபிடிப்பது முதல் இந்த திட்ட மேலாண்மை தொடங்குகிறது.

வரண் அடையாளம் காணல், பின்னர் முக்கிய உறவினர்களின் வசதிகள் அறிந்து கல்யாண நாள் குறித்தல், கள்யாணம் நடத்த இடம் நிச்சயம் செய்தல், யாரை அழைப்பது, எப்படி அழைப்பது (நேரிலா அல்லது தபாலிலா), எந்த விதமான பத்திரிக்கை அடிப்பது, விருந்து ஏற்பாடுகள், யார் சமையல்காரர், என்ன விதமான பதார்த்தங்கள், எத்தனை நபர்கள் ஒவ்வொரு வேளையும் வருவார்கள் என்கிற குத்து மதிப்பான எண்ணிக்கை, எந்த விதமான உடைகள் அணிவது, எங்கே உடைகள எடுப்பது, மணமக்களுக்கு என்னென்ன நகைகள் வாங்க வேண்டும், என்னென்ன நகைகள் விழாவிற்கு அணிய வேண்டும், மணநாளில் செய்ய வேண்டிய சடங்குகள், மணமக்கள் எங்கே தேனிலவு செல்லப் போகிறார்கள் என்பது வரை ஒவ்வொன்றும் தெரிவு செய்து, அதற்கான செலவுகள் எவ்வளவு, கையிருப்பு எவ்வளவு, மீதி தெவைப்பட்டால் எப்படி ஏற்பாடு செய்வது, என்று வகைப்படுத்தி செய்யும் செயல்பாடு ஒரு திட்டமாகும். அதை செய்யும் முறையை கட்டுப்படுத்தி செவ்வனே செய்யும்போது அது திட்ட மேலாண்மை எனப்படும்

ஆக, திட்ட மேலாண்மை என்பது, நாம் பணி புரியும் அலுவலகத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் மட்டுமல்ல, நம் சொந்த வாழ்க்கையிலும் செய்யும் சில செயல்பாடுகள்தான்.

ஏனென்றால், இந்த செயல்பாட்டுக்கு

 • ஒரு நோக்கம் உள்ளது
 • ஒரு ஆரம்ப தேதியும், முடிவு தேதியும் உள்ளது
 • செலவுத் திட்டமுள்ளது
 • ஒரு சடங்கு போல் மற்றொரு சடங்கு இருப்பதில்லை

எனவே ஒவ்வொருவருக்கும், திட்ட மேலாண்மையில் பயிற்சி வேண்டும். இந்தப் பயிற்சி அனுபவத்தினாலும் கிடைக்கலாம், ஏட்டுப்படிப்பினாலும் கிடைக்கலாம். அனுபவ அறிவு ஒருவரை மெருகெற்றி, மெருகேற்றி சிறந்த மேலாளராக ஆக்குகிறது.

அதனால் ஏட்டுப்படிப்பு நமது சிறார்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே கொடுக்கப்பட்டால், அவர்கள் வாழ்க்கையை ஒரு தெளிந்த சிந்தனையோடு மேற்கொள்ள முடியும்.

இப்பொழுது ஏன் அனைவரும் திட்ட மேலாண்மையைப் பற்றி இவ்வளவு பேசுகிறார்கள், முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

அலுவலகங்களில் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல், தனி மனித வாழ்க்கையிலும்ம் இதன் முக்கியத்துவம் அதிகம் பேசப்படுகிறது.

ஏனென்றால், இன்று ஒரு திட்டத்தை செயல் படுத்த பல் வேறுபட்ட திறன்கள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருவரிடத்திலோ அல்லது ஒரு குழுவிலோ இல்லை. இந்தத் திறன்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றைக் கண்டு பிடித்து, தனக்குத் தேவையான அளவு உபயோகப்படுத்திக் கொண்டு, நம் திட்டங்களை முடிக்க வேண்டும்.

இந்த மேலாண்மையில் மேம்படுவதற்கு தற்போது பலதரப்பட்ட பட்டப்படிப்புகளும், பட்டயப் படிப்புகளும், கல்வி நிலையங்களால் அளிக்கப்பட்டு வருகின்றன.

திட்ட மேலாண்மைத் துறையில் வல்லமை பெற்ற திட்ட மேலாளர், பேனா எடுத்து பெரிதும் வேலை செய்ய மாட்டார், தட்டச்சு செய்ய மாட்டார். ஆனால் மற்றவரிடம், இதைச் செய், அதைச் செய் என்று வேலை வாங்கிக் கொண்டிருப்பார். இவரின் வேலை பெரும்பாலும் கண்காணித்தலும், ஒருங்கிணைத்தலும் ஆகும்.

ஒருங்கிணைத்தலைப் பற்றி வள்ளுவர் கூறுவது:

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள் தீர எண்ணிச் செயல்

பொருள் - பணம்

கருவி - கருவிகள் மற்றும் வழி முறைகள் ( Tools and processes)

காலம் - நேரம்

வினை - நோக்கம்

இடம் - இடம்

ஆகியவற்றை முடிவு செய்து பின்னர் ஒருங்கிணைத்து செயல் பட வேண்டும்.

வள்ளுவர் மீண்டும் கூறுவது:

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

அதாவது ஒரு நோக்கத்தை முடிவு செய்த பின் அதற்கான செயல் பாட்டு வழி முறைகளையும் முடிவு செய்து விட வேண்டும். அதன் பின்னரே செயலாக்கத்தில் இறங்க வேண்டும். ஆக்க முயற்சியில் ஈடுபட்டபின் செயலாக்க வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதென்பது ஒவ்வாது என்கிறார்.

ஒருங்கிணைத்தல்:

ஏன் இவ்வாறு ஒருங்கிணக்கப்பட வேண்டும்? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

ஒரு திட்டம் செயல்படுத்தப் பட வேண்டுமானால், நாம் முன்னரே கூறியபடி, பலதரப்பட்ட செயற்திறன்கள் தேவைப்படுகின்றன. அவற்றை நம் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்தால் மட்டுமே, முடிவை அடைய முடியும்.

அவ்வாறு தேவைப்படும் திறன்கள் என்னென்ன?

இவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

The Return of Benazir Bhutto

பாகிஸ்தானுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கி விட்டது. 8 வருடமாக ஓடி ஒளிந்து கொண்டிருந்த பெனாசீர் புட்டோ சொந்த நாட்டிற்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஒரு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 150 பேர் மரணம், 500 க்கும்மேற்பட்டவர்கள் காயம்.

"மேடம் 20%" என்று உலக அளவில் வர்ணிக்கப்பட்ட ஊழல் மஹாராணி. லஞ்சம் வாங்குவதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர். இவரும், முஷாரஃப் ம் சேர்ந்து இனி கூட்டுக் கொள்ளை தான். பெனாசீர் சொந்த நாடு திரும்ப தோதாக அவர் மேல் உள்ள எல்லா ஊழல் வழக்குகளும் ஒரு அவசர சட்டம் மூலமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இன்று நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி முஷாரஃப், 'இது ஜனநாயகத்திற்கு நடந்த சதி' என்று விமரிசிக்கிறார். சாத்தான் வேதம் ஒதுகிறது போல் இருக்கிறது.

புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி, இது பாகிஸ்தானிய ஊளவு நிறுவனங்களின் சதி வேலை என்கிறார். இந்தியா போன்ற அண்டைய நாடுகள் பாகிஸ்தானின் உளவு நிறூவனங்களை குறை சொன்ன காலம் போய் இப்போது உள்ளூரிலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன புட்டோ, முஷாரஃப் வுடன் கை கோர்த்துப் போவது விந்தையிலும் விந்தை.

புற்று நோய் முன்னறிதல் முறை - புதிய கண்டுபிடிப்பு - ஒரு வரப்பிரசாதம்

அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், அது எந்த உறுப்பைப் பாதித்தாலும் அதனால் ஏற்படும், மன உளைச்சலும், பயமும் தவிர்க்க முடியாதது. புற்று நோய் சிகிச்சையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்ததாலும், இன்னும் அதைப் பற்றி அந்த அளவு விழிப்புணர்ச்சி  நம் மக்களுக்கு  ஏற்படவில்லை.

புற்றுநோய் பெரும்பாலும் சற்று வளர்ந்த நிலையிலேயே கண்டு பிடிக்கப்படுகிறது. விவரம் தெரியாதவர்களுக்கு, அது ஏதோ ஒரு வலி என்று இருந்து, பின்னர் கண்டறியடுப்படும்போது அது பெரும்பாலும் முற்றிய (malignant) நிலையை அடந்து விடுகிறது.

இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய ஒரு புதிய முன்னறிதல் முறை  (http://balablooms.blogspot.com/2007/06/blog-post_8535.html) தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்தவர் முனைவர் திரு. மாசிலாமணி அவர்களும் அவர் குழுவும். இவர் சௌதி அரேபியா, ரியாத்தில் கிங் ஃபைசல் பல்கலைக் கழகத்தில் கதிரியக்கத் துறையில்  பேராசிரியராக பணி புரிகிறார்.

இந்த முறையில் ஒருவருக்கு புற்றுநோய் வரக்கூடிய அறிகுறிகள் இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு சிறு சோதனை மூலம் அறியலாம். அதாவது,  சிறுநீர், இரத்த மாதிரிகளை பரிசோதனைகள் செய்து அரை மணி நேரத்திலேயே இந்த சோதனைகளின் முடிவுகளை அறியலாம்.

இந்த சோதனைகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து, புற்றுநோய் பற்றிய சாத்தியக்கூறுகளை முன்னறியலாம். மம்மோக்ராம், மற்றும் செலவு , வலிகள் மிகுந்த சோதனைகள்  தேவையில்லை.

இந்த கண்டுபிடிப்பு இந்திய மருத்துவக் கழகத்தினால் தேர்ந்த குழுக்களின் மூலம்  சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னறி முறை, புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு மைல்கல் ஆகும். குறிப்பாக, வம்சாவளி புற்றுநோய் சாத்தியக் கூறுகள் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாகும்.

என் அனுபத்தில் Passive smoking கினால் ஏற்பட்ட ஒரு நிகழ்வை, ஒரு சிறு கதையாக முன்பு பதிவேற்றியுள்ளேன். அதன்  மீள் பதிவு கீழே:

------------------------------------------------------------------------------------------------------

உன் சுகம் - என் சுமை

சுரேஷின் புருவம் விரிந்து, நெற்றி சுருங்கியது. தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தவன், wash basin ல் சளியை உமிழ்ந்த போது, அதில் தென்பட்ட சிறிய துளி இரத்தத்தைப் பார்த்ததும் மனம் சற்று துடுக்குற்றான். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வாறுதான் இருந்து வருகிறது. முதலில் அவன் இது தற்செயலாகத்தான் இருக்கும் , இருமலால் தொண்டை ரணமானதால் இந்த இரத்த கசிவு ஏற்படுகிறது போலும் என எண்ணினான். ஆனால் அது தொடரவும், முன்பு கடுகு அளவு தெரிந்த கசிவு, இப்போது ஒரு குங்குமப் பொட்டு அளவு வர ஆரம்பித்ததும் அவனுக்கு ஒரு இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது.

வாயை துடைத்துக்கொண்டு சற்று நிதானமாக நடந்து போய் ஊஞ்சலில் சென்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தான்.

"என்னங்க.... ஏன் சோர்வா இருக்கீங்க? உடம்பு முடியலியா? ..........நீங்களும் இந்த சளி, இருமலாலே ரொம்பத்தான் கஷ்டப்படறீங்க. ...........வேணும்னா கஷாயம் போட்டு தரட்டுமா?.." என அக்கறையோட விசாரித்துகொண்டே அவன் மனைவி வந்தாள்.

சுரேஷின் நிலை பார்த்து மேலும் "....டாக்டர போய் பாருங்கன்னா போக மாட்டேங்கறீங்க. .........ஏன் இன்னிக்கு லீவுதானே...வாங்க டாக்டர்கிட்டே போலாம்..."

"ம்ம்ம்ம்ம்........................சாயங்காலம் போலாம்.." எனக்கூறி அப்படியே சாய்ந்து படுத்தான்.

"சுரேஷ் உங்களுக்கு இந்த இருமல் எத்தனை நாளா இருக்கு? " அவனை பரிசோதித்த டாக்டர் கேட்டார்.

"இருமல் ஒரு 15 நாளா இருக்கு. ஆனா எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படியே இருமலும் வரும். இது ஒன்னு, ஒன்னரை வருஷமா இருக்கு டாக்டர்...."

"...மூச்சு விடும் போது சாதாரணமாய் இருக்கா? இல்லே ஏதாவது சிரமப் படறீங்களா?.."

"....சமயததுலே ஏதோ மூச்சு அடைக்கற மாதிரி இருக்கும். அப்போ கொஞ்சம் மூச்சை இழுத்து வாங்குவேன்.. சரி, இது நெஞ்சுலே இருக்கிறே சளியாலே இருக்குன்னுட்டு விட்றுவேன்.."

"சரி, இந்த medicines எடுத்துக்கோங்க....அப்படியே உள்ளே லேப்லெ போய் sputum sample ம் blood sample ம் கொடுத்துட்டு போங்க. அடுத்த வாரம் வந்து பாருங்க.." என விடை கொடுத்த டாக்டரிடம் "...is there any problem?.." என சற்று கலக்கத்துடன் கேட்டான்.

"No..No.. it is just a routine test. No worry please!!!!......"

சாப்பிட்ட மருந்துகள் சற்று இதம் தந்தாலும், இருமல், சளி தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆயினும் வேலைப்பளு காரணாமாய் அதைப் பற்றி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அந்த வாரம் கழிந்தது. மீண்டும் டாக்டரை பார்க்க சென்றான்.

குசலங்கள் விசாரித்து, மீண்டும் தொண்டை, மார்பு பரிசோதனைகளுக்குப் பிறகு "....sputum and blood examination result வந்துருக்கு. எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. நான் ஒரு டாக்டர் அட்ரஸ் தரேன். நீங்க அவரைப் போய் பாருங்க. அவர் சில டெஸ்ட் எல்லாம் பண்ணுவார். அதுக்கப்பறம் நாம ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்...."

தூக்கி வாரிப் போட்டது சுரேஷிற்கு. "டாக்டர்.. என்ன சொல்றீங்க... Do you mean something serious?..." தொண்டை அடைத்து குரல் கம்மியது.

"No.. No.. நான் இப்போ எந்த முடிவுக்கும் வரலே.. உங்க sputum பரிசோதனை பண்ணினதிலே எனக்கு சில சந்தேகம் இருக்கு. அதுக்காகத்தான் நான் உங்களை அந்த cancer specialist போய் பார்க்க சொன்னேன். அது மட்டுமில்லாமெ சில pathological test எல்லாம் செய்யனும். அதுக்கு பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆன நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். Alarming ஆ ஒன்னும் இல்லே. It is just a precaution...."

வாயடைத்துப் போய் இருந்தாள் சுரேஷின் மனைவி. அவளுக்கு டாக்டர் கூறியது முழுவதும் புரியவில்லை என்றாலும், கணவனின் முகப்போக்கும், டாக்டர் சாந்தப்படுத்தும் விதமாய் கூறிய பதிலும் ஏதோ சீரியஸ் என மட்டும் புரிந்தது. ".. டாக்டர்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு வெறும் சளி, இருமல். இதற்கு போய் எதற்கு cancer specialist, டெஸ்ட் எல்லாம்.." என படபடத்தாள்.

"..அது இல்லம்மா.. டாக்டருக்கு கொஞ்சம் சந்தேகம். அதனாலேதான் இதெல்லாம்.." மனைவியை மேலும் வேற எந்த கற்பனையும் செய்ய விடாமல், அதே நேரம் இந்த பேச்சைத் தொடர விடாமலும் செய்து.." டாக்டர், நான் உங்களுக்கு அப்புறம் போன் செய்றேன்.." என வெளி நடந்தான்..

அவனுக்கே உள்ளூர பயம்தான். அவனும் டாக்டரை அந்த சமயம் தவிர்க்கத்தான் விரும்பினான். Cancer என்கிற விஷயம் பற்றிய விவாதம் மேலும் தொடர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் அவன் மனைவி அவனை விடவில்லை. வீடு வரும் வரையிலும் திரும்ப திரும்ப டாக்டர் ஏன் அப்படி சொன்னார்? அவனுக்கு என்ன சரியில்லை? ஏன் வெரும் சளி, இருமலுக்கு இவ்வளவு test, இவருக்கு என்ன தெரியும், வேற ஒரு டாக்டரை போய் பார்க்கலாமா? என்று தொணதொணவென்று பிடுங்கி எடுத்து விட்டாள். வீடு திரும்பியதும் சுரேஷ் அவளை சமாதானப்படுத்தி, அவளிடம் தனக்கு இருமல் சளியோடு இரத்தம் வருவது பற்றியும், உள்ளூர இருக்கும் பயம் பற்றியும் கூறி, cancer specialist ஐ சந்திப்பதுதான் சரி என்றும் விளக்கினான்.

இருவருக்குமே பயம் நெஞ்சை கவ்வியது. உலகமே இருண்டுவிட்டது போல் இருந்தது. டாக்டர் கூறியது போல் எதுவுமே இருக்காது என நம்பத்தான் நினைத்தார்கள். ஆயினும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

"....நான் முன்னாடி செய்த sputum and blood examination report பார்த்தேன். உங்க டாக்டரோட ரிப்போர்ட்டையும் பார்த்தேன். ஒரு MRI scan ம், PET scan ம் எடுக்கனும். நீங்க நாளைக்கு வரமுடியுமா? Lung Specialist வருவார். ஒரு bronchoscopy எடுக்கனும். இதிலெ கொஞ்சம் வலியிருக்கும். அனெஸ்திசியா கொடுத்துதான் எடுப்போம். நாளைக்கு ஒரு நாள் நீங்க இங்கேயே அட்மிட் ஆகனும்.." என படபடவென்று அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் முடித்தார்.

"அதுக்கு முன்னாடி, நீங்க என்னோட சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. நீங்க புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?.."

"இல்ல டாக்டர். காபி, டீ கூட ரொம்ப குடிக்க மாட்டேன்.."

"What are you Mr Suresh? ..உங்க work environment பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...."

"நான் ஒரு software company யிலே senior executive ஆ இருக்கேன். வேலைப்பளு இருக்கும். Office யெல்லாம் நல்ல சௌகரியமா இருக்கும். தனி அறை, ஏசி எல்லாம்.. ஆமா டாக்டர், do you suspect the impact of passive smoking?...something like lung cancer?" என்று பட்டென்று தன் மனதில் இத்தனை நாள் உறுத்திக்கொண்டிருந்ததையும், அவ்ர் தன்னிடம் எதிர்பார்த்ததையும் தூக்கிப் போட்டான்.

'Exactly....'

"நானும் அதைத்தான் நினைத்து பயந்தேன் டாக்டர். அலுவலகத்தில் புகை பிடிக்கிறவர்கள் அதிகம். வேலையில் சேர்ந்த இரண்டு, மூன்று வருஷத்திலே புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஆரம்பித்து விடுகிறார்கள், வேலை அழுத்தம் காரணமாய். எனவே எங்கே போனாலும் ஒரே புகை தான், கேண்டினிலும் கூட. நான் அதிகம் meetings attend செய்யனும். அங்கேயும், இதே கதைதான். அதுவும் சிறிய ரூமாயிருப்பதால், ஒரே புகை மூட்டமாயிருக்கும். இதே நிலைதான் நான் முன்பு வேலைபார்த்த அலுவலகங்களிலும். ...............என் பதவியின் மூலமாக, நான் எவ்வளவோ முயற்சி செய்தும், அலுவலகத்தில் anti-smoking policy in work area கொண்டு வர முடியவில்லை. அரசாங்கமே திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது? இந்த சிகரெட் தயாரிப்பவர்களின் லாபி அவ்வளவு எளிதில் இதை விட்டு விடுவார்களா? அமெரிக்கா,கனடா போன்ற மேலை நாடுகளில் இதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளில் தான் இது போன்ற பிரச்சினைகள். இதை ஒரு occupational hazard ஆகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதி இதற்கும் சேர்த்துதான் என்று எண்ணிக்கொள்கிறேன். ஆனால் அது இவ்வளவு தூரத்திற்கு கொண்டு விடும் என்று எதிர் பார்க்கவில்லை....." தன் மனதில் இருந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், கையாலாகத்தனம ஆகிய அனைத்தையும் ஒரேமூச்சில் கொட்டித் தீர்த்தான்.

"....Relax.. relax Mr சுரேஷ்.. கவலைப்படாதீர்கள். Let us wait for the results of the tests...."

ஒரு வாரம் கழித்து.......

"Congratulations...Mr. சுரேஷ். ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்தாச்சு. the symptoms are benign (In a general sense, "benign" means of a mild character that does not threaten health or life.). நீங்க ஒன்னும் பயப்படவேண்டியதில்லை. வெறும் medicine மூலமாகவே சரி பண்ணி விடலாம். நல்ல வேளை நீங்கள் சரியான நேரத்தில் வந்து இருக்கிறீர்கள். இல்லையென்றால் இது வளர்ந்து நுரையீரல் புற்று நோயில் கொண்டு போய் விட்டிருக்கும். Thank God!!!....."

-----------------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு :

 1. Passive smoking போன்ற மோசமான இலவசம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
 2. Passive Smoking அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் புகையே பிடிக்காதவர்களிடத்தில, passive smoking க்கிற்கு உட்பட்டவர்களுக்கு சாத்தியக்கூறுகள் 24% அதி்கமாய் இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன.
 3. நான் இந்த சிறு கதையில் படிப்பவர் மனம் அதிகம் பாதிக்கக்கூடாது என்பதற்காக benign என முடித்துள்ளேன். ஆனால் என் சக ஊழியர் ஒருவருக்கு passive smoking ஆல் Non-small cell lung cancer இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் தற்போது chemotherapy உட்பட மற்ற சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 4. என் தந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர், நுரையீரலில் புகையினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். என் தந்தை இரயில்வேயில் அப்போது cabin station master ஆக வேலை பார்த்து வந்தார். அது சரக்கு இரயில் shunting yard அருகில் இருந்தது. அப்போது நீராவி இஞ்சின் மட்டுமே. அதன் புகையே என் தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
 5. இதில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவ முறைகள் கதைக்காக எழுதப் பட்டது. உண்மைப் பிரயோகம் மருத்துவர்கள் மட்டுமே கூற முடியும்.
 6. சற்றே அதிகமான ஆங்கில வார்த்தைப் பிரயோகத்திற்கு மன்னிக்கவும். கதையின் ஓட்டத்திற்காக அதைத் தவிர்க்க முடியவில்லை.

Thursday, October 18, 2007

கானல் நீர் சத்தியப் பிரமாணங்கள்

அன்று விடுமுறை நாள். ஒரு முடி திருத்தகத்திற்கு சென்றிருந்தேன். அவர் கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால், மண் வாசனை காரணமாக எப்போழுதும் அவரிடமே முடி திருத்தச் செல்வேன். ஊர் நலன்களைப் பற்றி விசாரித்துக் கொண்டே, அவர் பணி தொடர்ந்தது. கடையில் வேறே யாரும் இல்லாததால் சற்று நெருக்கமான உரையாடலாகத் தொடர்ந்தது.

"என்னமோ போங்க.. ரெண்டு வருஷம், ரெண்டு வருஷம்ன்னு சொல்லியே, ரொம்ப வருஷம் ஆயிடுச்சு.... " இது நான்.

"இதுதான் பொழப்புன்னு ஆனதுக்கப்பறம் இதை பத்தி ஏன் சார் நாம அலுத்துக்கனும். இந்த தடவ ஊர் போயிருந்தபோது, சொந்தமா  கும்மோணத்திலேயே தொழில் செய்யலாமுன்னு பார்த்தேன். கடை போட இடம், செலவு எல்லாம் கணக்குப் போட்டு பார்த்தேன். ரொம்ப ஒன்னும் மிஞ்சாது போல இருந்தது. என்னோட ஃப்ரெண்ட்ஸையும் கலந்து பேசினேன். அவங்க எல்லோரும், இருக்கிற இடத்திலே, பாக்கிற தொழிலை முடிச்சு, நிம்மதியா வந்து சேரு. இங்கே தொழில் ஆரம்பிச்சீன்னா, ஒன்னும் பெரிசா நிக்காது, வரவும் செலவும் சரியாப் போயிடும்ன்னாங்க. சரின்னுட்டு, லீவு முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்."

தொடர்ந்தார். "அன்னிக்கு நம்ம ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர், அவர் சொந்தக்காரப் பையனை கொண்டு வந்து விட்டுட்டுப் போனார். அவன் என்கிட்டே கேட்ட முத கேள்வி - நீங்க எத்தனை நாளா இங்கெ இருக்கீங்கன்னுதான் - நான் இருபது வருஷமா இருக்கேன்னு சொன்னதும் 'அய்யோ, இருபது வருஷமாவா இங்கே இருக்கீங்க, எப்படி?' ன்னு வாயடச்சுப் போயிட்டான். ஏதோ ஹார்ட் அட்டாக் வந்தது போல இருந்தான்.

நான் பதிலேதும் சொல்லாமல், என் காரியத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் விடாப்பிடியாக, அது எப்படி இருபது வருஷம் இருக்கிறீங்க? என்று பதில் கிடைக்காமல் விடமாட்டேங்கற மாதிரி கேட்டான்."

"சரி, தம்பி, நீங்க ஏன் இங்க வந்தீங்க, பொழைக்கறதுக்கு, ஊர்லே வேலை ஏதும் கிடைக்கலியா?"

"இல்லீங்க, வீட்லே கொஞ்சம் கடன் தொல்லை. அப்றம், ரெண்டு தங்கைங்க, அவங்க கல்யாணத்துக்கு காசு வேணும், அதான் இங்கே வந்தேன்"

"சும்மா டைரெக்டா விசா கிடச்சு வந்தீங்களா, இல்லே காசு கொடுத்து வந்தீங்களா?"

"காசு கொடுத்துத்தான் வந்தேன்"

"அந்த காச எடுக்க எவ்வளவு நாளாகும்?"

"ஒரு ஒண்ணு, ஒண்ணரை வருஷத்திலே எடுத்துடுவேன்"

"அப்றம் உங்க தங்கச்சிங்க கல்யாணம், குடும்ப கடன் எப்படி அடைப்பீங்க?"

"கடனை ஒரு வருஷத்லே அடைச்சுடலாம். அப்றம் மூத்தவளை ரெண்டு வருஷத்லே கல்யாணம் கட்டிக் கொடுத்திடலாம். அடுத்தவளுக்கு அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் ஆவும்"

"இடையிலே, ஒங்களுக்கும் நல்லது ஒன்னு நடக்குமில்லே, அதுக்கும் சேக்கனுமில்லே?"

"ஆமாம்."

"சரி இதெல்லாம், கணக்கு போடுங்க, எத்தனை வருஷமாச்சு"

"7, 8 வருஷமாயிடும்"

"இப்படித்தான் நானும் இங்கே வந்தேன். நாம என்ன எஞ்சினியரும், டாக்டருமா படிச்சுட்டு இங்கே வந்திருக்கோம். நாம திரும்பி போனாலும் அங்கே இதே வேலைதானே? அங்கே போய் செய்றதுக்கு, இங்கேயே செய்றேன். வேற வழி தெரியல்லே. நீங்க வேற தொழில் கத்துக்கிட்டு அங்கே போய் செய்ய முடியும்ன்னா, ஒரு வேளை சீக்கிரம் போவலாம்" என்று அவர்கள் உரையாடலை சொன்னார்.

"அப்டித்தாங்க எல்லோருக்கும். இதோ போயிடுவோம், இதோ போயிடுவோம்னு எல்லோரும் சொல்றோம், ஆனா ஏதொ ஒரு கடமையோ, சுமையோ இல்லேன்னா ஒரு பயமோ வந்து போக முடியலே. கடைசியிலே, அங்கே போய் பண்ணப் போறதை, இங்கேயே செய்துட்டு, பேசாம ஊர்லே போய் ரிடையர் ஆகி செட்டிலாகிடுவோம் ன்னுதான் எண்ணத் தோணுது"

சத்தியப் பிரமாணங்கள், "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று டீக்கடைகளில் எழுதி வைத்திருப்பார்களே அது மாதிரியே ஆகி விட்டன.

'கவடை' பாலு

நான் இந்த பதிவில் ஒரு கதா பாத்திரத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்தப்போகிறேன். அவன்தான் 'கவடை' பாலு.

இது என்ன மசால் வடை, மெது வடை மாதிரி கவடைன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும். அது கதை, வசனம், டைரக்ஷன் என்கறதோட சுருக்கம்தான்.

என்னா ஒவ்வொரு நாடகத்துக்கும் அவன்தான் முழுப் பொறுப்பு. அது கூடவே அவன் வேற நடிச்சாகனும். முக்கிய கதாபாத்திரத்தை அவனை விட்டா யாரும் பண்ண முடியாதுன்னு அவனுக்கு ஒரு எண்ணம்.  அவனுக்கு நாடகங்களில் நடித்து அனுபவம் இருந்ததால் அவன் தன்னை விட வேற யாரும் நன்றாக செய்ய முடியாது என்று நினைத்தான்.

டயலாக் எல்லாம் பக்கம்,பக்கமா எழுதுவான். எழுதறதுக்கு வெள்ளைப் பேப்பர் வாங்க காசு கிடைக்காது. அப்பா கொடுக்க மாட்டார். ஆனாலும் அவன் சிறிதும் சளைக்க மாட்டான். அப்பொழுதெல்லாம், அந்த ஊர் திரையரங்குகளில் (கூரைக் கொட்டாய்) வரும் படங்களுக்கு ஒரு மாட்டு வண்டியில் வந்து கூம்பு ஸ்பீக்கர்  வைத்து விளம்பரம் செய்வார்கள். அப்பொழுது பிட் நோட்டிஸ் வினியோகம் நடக்கும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, ஒரு கத்தை நோட்டீஸ் வாங்கி வருவான். கலர் கலராக நோட்டீஸ் இருக்கும். அதன் பின் பக்கம்தான் ஸ்கிரிப்ட் எழுதுவான்.

ஸ்கிரிப்ட் ரெடியானதும், ஸ்டேஜ் செட்டிங்தான். நடிகர், நடிகையர் செலெக்ஷன்ல்லே எல்லாம் ஒரு பிரச்சினையும் இருக்காது. அந்த தெருவில் இருக்கும் எல்லோரும் அவனிடம் பிச்சையெடுக்காத குறையாக வந்து கேட்பார்கள். அவனும் ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு அவர்களுக்கு பாத்திரங்கள் கொடுப்பான். ஆனால் அவர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஸ்டேஜ் செட்டிங் போன்ற விஷயங்களில் அவனுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்.

எல்லார் வீட்டிலேருந்தும் மர பெஞ்சுகள் கொண்டு வரப்படும். அதுதான் ஸ்டேஜ். வாசலில் இருக்கும் மைதானத்தில் அவை வரிசைப்படுத்தப்படும். பார்வையாளர்கள் எல்லாம் தரையில் தான் உட்கார வேண்டும். ஸ்பான்சர்களுக்கு மாத்திரம் ஸ்டீல் சேர். அதுவும் அவர்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரப்படும்.

இப்போ ஸ்டேஜ்  ரெடி. அடுத்தது ஸ்கிரீன் செட்டிங்ஸ். மூங்கில் கம்புகள் எல்லாம் நட்டு, எல்லார் வீட்டிலெருந்தும் பவானி ஜமக்காளங்கள்  கொண்டு வரப்படும்.  அது கருப்பு கலர்லே,  சிகப்பு பார்டர் போட்டு  இருக்கும் (விடியற் காலையிலே வரும் குடுகுடுப்பைக் காரன் போர்த்திக் கொண்டு வருவானே, அதேதான்). அதை சைட்லேயும் மேலேயும் போட்டு ஸ்டேஜ் ரெடியாகும். பையனின் சிரத்தையைப் பார்த்து அப்பா, அலுவலகத்திலேருந்து சில நபர்களை அனுப்புவார். அவர்கள்தான் கம்புகள் நட்டு, படுதாவை விரித்து ரெடி பண்ணிக் கொடுப்பார்கள்.

அப்போதெல்லாம்,  அந்த ஊர்லே கரெண்ட் கிடையாது. அரிக்கேன் விளக்குதான். அந்த விளக்குலேதான் முழு நேர நாடகமும் நடக்கும். ரெண்டு, மூணு விளக்குகள் மேடையில் தொங்க விடப்படும்.

பெரும்பாலும் நாடகங்கள் ராஜா தர்பார் ஸீனாக இருக்கும், இல்லா விட்டால் போலீஸ், திருடன் கதையாக இருக்கும்.

நாடகம் முடிந்தவுடன், அவன் பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவான். அத்துடன் அன்றைய நிகழ்ச்சி முடிந்து விடும்.

ஜாக்கி ஷான் படத்திலே வர மாதிரி, 'Behind the scene' குறிப்புகள்.

ஒரு நாடகம் முடிந்தவுடன் அவனுக்கு 'கவடை' பட்டமும் அந்த வயசுலேயேதான் கொடுத்தாங்க. கொடுத்தவர் பக்கத்து வீட்டுக்கார மாமா.

அவன் நாடக எக்ஸ்பிரீயன்ஸ் எப்படின்னா, ஸ்கூல் நாடகத்திலே தர்பார் சீன்லே காவல்காரனா நின்னதுதான். ஆரம்பம் முதல்லே, கடைசி வரையும் நின்னதுனாலே டிராமாவிலே ரொம்ப நேரம் நடிச்சேம்பான்.

மொத்த ஸ்கிரிப்டெல்லாம், பிட் நோட்டிஸ்லெ 10 பக்கம்தான் இருக்கும். அதுலேயும் அவன் பேசற டயலாக் தான் ரொம்ப நேரம் இருக்கும்.

மொத்த நாடகமே அரைமணி நேரம்தான் ஒருக்கும், அதுக்குதான் இவ்வளவு பில்டப்.

ஆடியன்ஸ் ஒரு 15 பேர்தான் இருப்பாங்க. அங்கே இருக்கும் வீடே 8 தான். (திருவெண்ணை நல்லூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் ஸ்டாஃப் காலனி)

அவனுக்கு ஒரு பாட்டும் முழுசா தெரியாது. ரெண்டு, ரெண்டு வரிதான் தெரியும். எல்லா பாட்டையும், தொடர்ச்சியா பாடுவான். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்'  எங்க வீட்டுப் பிள்ளை (அப்போது தான் ரிலீஸ் ஆனது)  படப் பாட்டுதான் எப்போதும் முதல் பாட்டு.

எனக்கு, இவனை ரொம்ப சின்ன வயதிலேயே தெரியும். சின்ன வயதுன்னா, நிஜமாகவே சின்ன வயதுதான். 9, 10 வயசுலேயே.

ஒரு முக்கிய குறிப்பு:

அந்த 'கவடை'  பாலு வேற யாருமில்லே...நான் தான்.. ஹிஹி...ஹிஹி...ஹி

Wednesday, October 17, 2007

ஆட்டமும், தடுமாற்றமும்

வட நாட்டிலே, குறிப்பாக குஜராத்திலே, நவராத்திரியும் டாண்டியா ஆட்டமும், நகமும் சதையும் மாதிரி. அது துர்கை, அரக்கனை கொன்றதை நினைவு படுத்தும் ஒரு கொண்டாட்டம். அது மட்டுமல்லாமல், கிருஷ்ணனின் ராச லீலையைக் கொண்டாடும் ஒரு வைபவம்.

டாண்டியா ஆட்டம் ஆட, தசரா கூட்டமும் கூட

குஜராத் குமரிகள் ஆட, காதலன் காதலியைத் தேட

Dandiya1

குமரி(ரன்)களும், குழந்தைகளும் உற்சாகத்துடன், கையில் கோல் எடுத்து ஆடும் போது, துள்ளாத மனமும் துள்ளும். மிக அற்புதமாக, சிருங்கார பாவத்தை எடுத்துக் காட்டும். சுற்றி, சுற்றி வந்து ஒருவருக்கு ஒருவர் கையில் உள்ள கோலாட்டக் குச்சிகளை சுழற்றி, சுழற்றி அடித்து வட்டமாக ஆடும் ஆட்டம் மிக அழகானது. இந்த பாரம்பரிய நடனம், இன்னும் நீத்துப் போகாமல், சொல்லப் போனால் இன்னும் விரிவாகப் பல பேரால் ஆடப்பட்டு வருகிறது.

கோலாட்டம் என்றாலே என் நினைவுக்கு வருவது சிறு வயதில் பார்த்த பின்னல் கோலாட்டம் தான். எங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணங்களில் ( நான் சொல்வது 40 வருடங்களுக்கு முந்தி.... அடடா என் வயதைக் கண்டு பிடிக்க ஒரு க்ளூ கொடுத்து விட்டேனே!!), கல்யாண கோலாகலத்தின் மூண்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.

pinnalkolattam_12

உத்தரத்தில் கயிறு கட்டி, இரு முனைகளிலும் ஒவ்வொரு குச்சியைக் கட்டி, கிட்டத்தட்ட 10 பேர் ஆடுவார்கள். அழகாக முன்னும் பின்னும் ஆடி, அந்த கயிறுகளை பின்னல்களாக கோத்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்ப ஆடி, அந்த பின்னலை அவிழ்ப்பார்கள். மிகவும் லாகவமாகவும், அழகாகவும் இருக்கும். இப்பொழுது இந்த ஆட்டம் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

மீண்டும் டாண்டியாவிற்கு வருவோம். குஜராத்தின் பாரம்பரியமான இது, இப்போது நாட்டின் எல்லா மூலைகளுக்கும் சென்று விட்டது. இளைஞர்களைக் கவரும் இந்த ஆட்டம், குறிப்பாக பெரும் நகரங்களில் ரொம்ப பிரபலம். சொல்லப் போனால் 'தேசி டிஸ்கோ' வாகக் கூட ஆகி விட்டது.

ஆனால் இந்த ஆட்டத்திற்கு ஒரு கருமை சூழ்ந்த பின் பக்கம் உருவாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இதில் ஈர்க்கப்படும் இளைஞர்கள் மிகவும் தவறான எண்ணத்துடன் பழகி, உறவு முறை வைத்துக் கொள்கிறார்கள் எனவும், இது பல நேரங்களில் கருத்தரிக்கும் நிலைக்கும் கொண்டு செல்லப் படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. டாண்டியா முடிந்த இரண்டு/மூன்று மாதங்களில், பெரும் அளவில், இளம் பெண்களுக்கு கருச் சிதைவுகள் நிகழ்த்தப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன் படித்த ஒரு செய்தி. பெற்றோர்கள் டாண்டியா போது தங்கள் பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, தனியார் துப்பு நிறுவனங்களை நாடுகிறார்கள். இந்த நிறுவனங்கள் ஒரு இரவு கண்காணிக்க ரூபாய் 2,500- 15,000 வரை வாங்குகிறார்களாம். இவர்களும் நாட்டியங்களில் பங்கு கொள்வது போல் போய், துப்பு துலக்குகிறார்களாம்.

சிறார்களுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களை டாண்டியா நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தடை போடத் தடுக்கிறது. எங்கே கொடுத்த சுதந்திரமே, அவர்களின் எதிர்காலத்தை பாழ் படுத்திவிடுமோ என்கிற பயம், துப்பு பார்க்க வைக்கிறது.

சமர்ப்பணம்

இந்த நட்சத்திர வார பதிப்புகள் அனைத்தையும் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்ய விழைகின்றேன். அவர் யார் என்பதை இந்த பதிவின் முடிவில் அறிவீர்கள்.

வாழ்க்கையில் ஒரு தூண்டுகோல் என்பது அனைவருக்கும் தேவை. அது பல சமயங்களில் நமக்கு வெளிப்படையாகத் தெரியும். இன்னாராலோ, எதோ ஒண்றினாலோ ஈர்க்கப்பட்டு நாம் சில விஷயங்களைச் செய்து அதில் வெற்றியும் கண்டிருப்போம். சில நேரங்களில் இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு அது எது என்று அறியாமலே செய்திருப்போம்.

எனக்கு அவ்வாறு ஒரு தூண்டுகோல் கிடைத்து.

"ஏன் பாலா, நீங்களும் வலைப்பதிவு எழுதக்கூடாது? சில சமயங்களில் நீங்க விவாதம் செய்யும் போது ஒரு தனிப் பார்வை இருக்கு, உங்க விமரிசனங்கள் சரியாவும் இருக்கு. இதையெல்லாம் நீங்க எழுத்தாக்கினா, உங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கும், பொழுதும் போகும்.."

" இல்லேப்பா! எனக்கு அவ்வளவா எழுத வராது. அதுலேயும் தமிழ்லே தட்டச்சு செய்ய எனக்குத் தெரியாது."

" அடே போங்க சார். எனக்கு மட்டும் தமிழ் தட்டச்சு தெரிஞ்சா நான் செய்றேன்? இப்போ ரொம்ப சுலபமா செய்யலாம். முதல்லே உங்க பேர்லே ஒரு ஃப்ளாக் கிரியேட் பண்ணுங்க. அப்புறம் சும்மா எழுதுங்க. அப்படியே இந்த கதைப் போட்டிக்கும் ஒன்னு எழுதி அனுப்பி வையுங்க..."

சரி, எதுக்கும் இருக்கட்டும்னு சொல்லி ஒரு பதிவுக் கணக்கை ஆரம்பித்து "அங்கீகரிக்கப்பட்ட அத்து மீறல்கள்" ன்னு ஒரு பதிவு போட்டேன்.

http://balablooms.blogspot.com/2006/03/blog-post.html

இரண்டு நாட்கள் கழித்து...

"சார்.. கங்கிராஜுலேஷன்ஸ்...." அவரிடமிருந்து ஒரு ஃபோன்.

"என்னப்பா. என்ன விஷயம்..?"

"உங்க ஃப்ளாக், தினமலர்லே, 'இன்றைய வலைப் பதிவு' பகுதியிலே பிரசுரமாயிருக்கு சார். முதல் பதிவிலேயே ஸ்பாட் லைட்டுக்கு வந்திட்டீங்க சார்.."

தினமலர்லே வந்தது என்னமோ ஒரு எதேச்சையான செயல்தான். இருந்தாலும், என் முதல் பதிவே வந்தது, எனக்கு ஒரு 'கிக்' கைக் கொடுத்தது. தொடர்ந்து எழுத முயற்சித்தேன்.

தேன்கூடு அப்போது சிறுகதைப் போட்டி நடத்தியது. அப்போது தேர்தல் சமயமாதலால் தேர்தலைப் பற்றி ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. நானும் கலந்து கொண்டு "தேர்தல் - 2060" என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.

http://balablooms.blogspot.com/2006/05/2060.html

போட்டியின் முடிவில், தேன்கூடு நிர்வாகத்தினிடமிருந்து ஒரு வாழ்த்துச் செய்தி.

"...உங்கள் கதை நான்காவது சிறந்த கதையாக, இன்னொரு கதையுடன் கூட்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் ஓவியத்தில் பிரசுரமாகும். வாழ்த்துக்கள்.."

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...

மேலும் சில நாட்கள் கழித்து....

நண்பர் ஃபக்குருத்தினிடமிருந்து ஒரு குழும மடல் யாகுவில். "நண்பர் பாலமுகுந்தனின், நுண் வியாபாரயுரிமை (Microfranchising ) பற்றிய பொருளாதாரக் கட்டுரை "பூங்கா" வில் வெளியிடப்பட்டுள்ளது, வாழ்த்துக்கள்..."

http://balablooms.blogspot.com/2007/01/microfranchising-2.html

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் என்னையே, எனக்கு அறிமுகப் படுத்திய பதிவுகள். இவைதான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தன. அதுவே உங்கள் முன் இன்று ஒரு நட்சத்திர பதிவாளனாக என்னை முன்னிருத்தியிருக்கிறது.

இந்த ஊக்கத்தை எனக்கு அளித்தவ்ர் இன்று நம்மிடையே இல்லை. காலத்தின் கோலம் அது. அவர் என்னை விட வயதில் சிறியவர். என்னை uncle என்று அழைத்தவர். ஆனாலும் நான் அவரை என் வலைப்பதிவுலக் குரு என்றுதான் கூறுவேன்.

அவர்தான் தேன்கூடு நிருவனராகவும், 'சாகரன்' என்று வலையுலக நண்பர்களாலும்அறியப்பட்ட கல்யாண்.

இந்த நட்சத்திர பதிப்புக்கள் அனைத்தும் அவருக்கே சமர்ப்பணம்.

http://balablooms.blogspot.com/2007/02/blog-post_13.html

என்னைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை

என்னைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை.

நான் ஒரு நாடோடியாகத்தான் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லை என்பது என் வரையில் உண்மை. இதுவரையில் வாழ்ந்த ஊர்கள் 14, இருந்த இருப்பிடங்கள் 22. தஞ்சை மண்ணிலே பிறந்து, தென் ஆற்காட்டால் (இப்பொழுது விழுப்புரம் மாவட்டம்) சீராட்டப்பட்டு, திருச்சியால் அறிவூட்டப்பட்டவன், திருநெல்வேலியால் சீலனாய், சென்னையால் பொருப்பானவனாய், டெல்லி/ பெங்களூருவால் வல்லுனனாய், தற்போது  ரியாத், சௌதி அரேபியாவால் வாழ்க்கையில் ஒரு நிலையில் இருப்பவன்.

என் சிறு பிராயத்தில் ஊர், ஊராய்த் திரிந்தது, என் தகப்பனாரின் வேலை நிமித்தம் காரணமாக. பின்னாளில் திரிந்தது என் வங்கி வேலை காரணமாக. தற்போது ஒரிடத்தில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறேன்

எனக்கு விமர்சனம் செய்வதில் ஈடுபாடு உண்டு (தருமி மாதிரி, கேள்வி கேட்கத்தான் தெரியும்). அதில் சில சமயம் குசும்புகளும் இருக்கும். (என் மனைவி அதைப் படித்துவிட்டு கூறுவது, "தஞ்சாவூர்ங்கறது சரியாத்தான் இருக்கு.." அவருக்கு கோயம்பத்தூர் காரர்கள் எல்லாம் ரொம்ப சாது என்ற எண்ணம் - அவர்கள் தகப்பனார் ஊர்).

சில சமயங்களில் கதைகளும் எழுதியுள்ளேன். ஆனாலும், எனக்குள் இருக்கும் ஒரு தாக்கம், பொருளாதார, தொழில்நுட்பம் சம்பத்தப்பட்ட கட்டுரைகள் எழுத வேண்டும் என்பதுதான். இந்த நட்சத்திர வாரத்தின் போது ஒரு சில பதிவுகளை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

மற்றபடி, நான் ஒரு சாதாரணமானவன். என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மறுமொழியிட்டு ஆதரவளியுங்கள். பிடிக்காவிட்டாலும், மறுத்து மொழியிடுங்கள்.

நட்சத்திர வாரம் சற்றே தாமதமாய் தொடங்கியதற்கு என்னை மன்னிக்கவும். வெளியூர்ப் பயணம் ஒன்று குறுக்கிட்டதால் உடன் பதிவு போட முடியவில்லை.

 

வணக்கங்களுடன்,

Friday, October 12, 2007

எரி பொருட்கள் விலை உயர்வு இல்லை....

நேற்று (11 அக்டோபர், 2008) நடுவண் அரசின் மந்திரி சபை கூடி, எரி பொருட்களின் (சமையல் வாயு உட்பட)  விலையை, மார்ச், 2008 வரை உயர்த்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு நல்ல முடிவு. இதனால், அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகள் போக்கு வரத்து காரணமாக ஏறாது. பணவீக்கமும் ஒரு வித கட்டுப்பாட்டில் இருக்கும்.

இவை உலகம் அறியத் தெரிய கூறும் காரணங்கள்.

ஆனால், உண்மையில் இதற்குக் காரணம், தேர்தல் வரக்கூடிய ஒரு அபாயம் மற்றும் மாநிலத் தேர்தல்கள் சமீபத்து விட்டன.  ஓட்டு வங்கியை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டு போக வேண்டிய கட்டாயம்.

எரி பொருட்களின் விலையை உயர்த்தினால், தற்போழுது 3.42% இருக்கும் பணவீக்கம் கும்மென்று உயரும் (5.11% வரை போகலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்). நடுவண் அரசுக்கு எதிர்க்கட்சிகளிலிருந்தும், துணைக் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு வரும். (இப்பொழுதுதான் அணுசக்தி விடயத்தில் தோளில் கை போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்).  வேலியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்டது போலாகி விடும்.

உலகச் சந்தையில் எரி பொருட்களில் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சந்தை நிர்ணய முறையில்தான் இதற்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியானால், இங்கும் எரி பொருட்களின் விலைகள் ஏற்றப்பட வேண்டும்.  ஆனால், இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக, அரசாங்கம் ஒருவித கட்டுப்பாட்டை, எண்ணெய் நிருவனங்களுக்கு விதித்திருக்கிறது. இந்த விலை கட்டுப்பாட்டினால் வரும் நட்டத்தை ஏடு கட்ட, ரூபாய் 23,457.24 கோடிக்கு அவர்களுக்கு எண்ணெய்க் கடன் பத்திரம் வழங்கப் போகிறது.

ஆனால், இந்த சுமையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பது, இப்போது தெரியாவிட்டாலும், வரவு-செலவு பற்றாக்குறையை அதிகரிக்கச்செய்யும். அப்பொது அந்த சுமையை வேறு ஒரு ரூபத்தில் மக்களின் மீது செலுத்தப்படும்.  அது உதவித்தொகை(subsidy) குறைப்பாக இருக்கலாம். அதிக வரி விதிப்பாக இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு வழியில் மக்களை அது வந்தே அடையும்.

இது நடுவண் அரசு காட்டும் ஒரு கண் கட்டு வித்தை. ஆனாலும் அவர்கள் அதை செய்தே ஆக வேண்டும். இனிப்பு தடவிய மாத்திரை மாதிரி.

Thursday, October 11, 2007

நந்தவனத்தில் ஒரு ஆண்டி....

நந்தவனத்தில் ஒரு ஆண்டி,

அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,

கொண்டு வந்தானொரு தோண்டி,

அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.....

அது என்னமோ தெரியலே, கர்நாடகத்திற்கு ஒரு சாபக்கேடு போல இருக்கு.

அழகா பாஜபா விற்கு ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஆட்சிக்கட்டிலில் இன்னும் ஒரு 20 மாதம் குமாரசாமியும், JD(S) ம் இருந்திருக்கலாம். ஆனால், விதி அப்பா ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது. இப்போது, ஜனாதிபதி ஆட்சி வந்து உள்ளதும் போச்சு. தன் வினை தன்னைச் சுடும்.

அது போலத்தான் டிராவிட்டின் நிலையும். ஒழுங்காக அணித்தலைவராகவே இருந்திருக்கலாம். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து வந்து அணித்தலைவர் பதவியை, தன்னிச்சையாக ராஜினாமா பண்ணினார். காரணம், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றார். ஆனால் தற்போதைய தொடரில் அவர் ஆட்டம் சுத்த மோசம். அடுத்த மேட்சுக்கு அவர் இருப்பாரா என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.

அது ஏன் கர்நாடக பிரபலங்கள் மட்டும் இப்படி, தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்?

ICC யின் மீது தோனி பாய்ச்சல்.

இன்று பரோடாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது தோனி ICC யின் ஒருதலைப் பட்சமான போக்கைக் கண்டித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.

"நாங்கள் 20 ஓவர் மேட்ச் என்று ஆடி வருகிறோம். 20 ஓவர் முடிந்தவுடன் டெந்துல்கரும் பதானும் பெவிலியன் நோக்கி வர ஆரம்பிக்கும் போதுதான், அம்பயர் இது 50 ஓவர் மேட்ச் என்று அவர்களிடம் கூறினார். இது எங்களுக்கு முன்பே தெரிவிக்கப் படவில்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ICC எடுத்த முடிவு. இருந்தாலும், நாங்கள் தற்போது 33 ஓவரைத் தாண்டி ஆடி வருகிறோம்" என்றார்.

பாண்டிங் அளித்த பேட்டியில் "இந்த போட்டியில் ஒரு மாற்றத்திற்காக, நாங்கள் reverse batting செய்யப் போகிறோம். அதாவது 11 , 10 வது வீரர்கள் முதலில் களம் இறங்குவார்கள்.  தேவைப்பட்டால், 9வது வீரர் களம் இறங்குவார்" என்றார்.

BCCI காரியதரிசி அளித்த பேட்டியின் போது, இவ்வாறு குறுகிய ஓவரில் மேட்ச் முடிந்தால், எங்கள் வருமானம் பாதிக்கப்படுவதால், நாங்கள் ஒரு புதிய விதிமுறையை ICCக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அதன்படி, 12, 13, 14, 15 வது வீரர்கள் களம் இறங்கி 50 ஓவர் வரை ஆட வழி செய்யப்படும். அதனால் எங்கள் வருமானம் பாதிக்காது. இதில் ICCக்கும் ஒரு பங்கு கொடுப்போம் என்றார்.

Monday, October 08, 2007

சூழும் கரும் மேகங்கள்

சூழும் கரும் மேகங்கள்

சமயம் நெருங்கி வந்துவிட்டது போல் இருக்கிறது. ஆம், தேர்தலுக்கான சமயம் கனிந்து விட்டது போல் தோன்றுகிறது. தலைவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போதும், பத்திரிக்கைகளில் வரும் ‘கிசு-கிசு’க்களை வைத்தும், மக்களவைக்கு இடைத்தேர்தல் வரும் நாள் அதிக தொலைவில் இல்லை.

சோனியா காந்தியின் நேற்றைய பேச்சு, சற்று கடுமையாகவே உள்ளது, அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், காங்கிரஸுக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிரியும் கூட என்று சற்று கடுமையாகவே சாடியுள்ளார். உடனே இடது சாரிகள், காங்கிரஸ் தேர்தல் பேச்சு பேச ஆரம்பித்து விட்டது என்றும், அவ்வாறு இடைத்தேர்தல் வந்தால் அதற்கு காங்கிரஸ் தான் முழுக் காரணம் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதாவது இடது சாரிகளின் உச்ச குரலுக்கு காங்கிரஸ் சமாதானம் சொன்ன நிலை போய், காங்கிரஸின் அதிரடிக்கு, இடது சாரிகள் விளக்கம் சொல்லும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

இதைத் தவிர, லல்லு தன் கட்சியினரிடம் தேர்தலுக்குத் தயாராகுமாறு சொல்லியுள்ளார். பவாரும், லல்லுவும் சேர்ந்து கூட்டணி பற்றி, சோனியாவிடம் பேசியதாக செய்திகள் வேறு வந்தன. அதில் திமுக, கூட்டணியில் தொடர்ந்தால், மற்ற கட்சிகளுக்கு வட மாநிலங்களில் நேரக்கூடிய இழப்புக்கள் பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

திமுகவும், கூட்டணி கட்சிகளின் (பாமக, இடது சாரிகள்) தரும் தொல்லையிலிருந்து தப்பிக்க, தமிழ் நாட்டிலும் சட்டசபைக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து, இடைத்தேர்தல் கொண்டு வரலாமா என்று யோசிப்பதாகச் செய்திகள் தமிழ் ஊடகங்களில் வந்தன.

அண்டைய கர்நாடகத்தில், தேர்தல் வந்தே விட்டது என்று சொல்லலாம். காங்கிரஸ், ஆட்சி உரிமை கேட்காமல், ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யக் கோரியுள்ளது. காங்கிரஸின் தயவும் இல்லாமல், பாஜபாவின் ஆதரவும் போய், ஏன் JD(S)ன் 12 MLA க்கள், குமாரசாமி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனது ஆகிய எல்லாவற்றையும், கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜனாதிபதி ஆட்சி நிச்சயம் என்றே தோன்றுகிறது. தேவ கவுடா, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார் போல இருக்கிறது. (குமாரசாமி இன்று மாலை ராஜினாமா செய்வார் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன).

ஆக NDTV பிராணாய் ராய்க்கம் மற்ற தொலைகாட்சிகளுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். கருத்துக்கணிப்பும், அரசியல் நிலை அலசல்களும், வெவ்வேறு கட்சியினரை நேரடியாக மோத விட்டும், air time நிரப்பி விடலாம். இன்னும் சில நடிகர்கள் கட்சிகளில் சேரலாம், சேர்ந்தவர்கள் கட்சி மாறலாம்.

புது உறவுகள், புது பிணக்கங்கள் உருவாகலாம், எதிரிகள் நண்பர்களாய், தோழர்கள் துரோகிகளாய் மாறும் காலம்.

சூழ்வது மழைக் கால மேகமா? அல்லது வெறும் மூட்டமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Friday, October 05, 2007

மண் குதிரையை நம்பி.....

தமிழில் ஒரு பழமொழி உண்டு. "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று. ஆனாலும் இது உண்மையல்ல, "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி.  மண் குதிர் என்பது ஆற்றின் நடுவே இருக்கும் சிறு, சிறு மணல் திட்டுக்களையே குறிக்கும்.

இந்த மண் குதிர் என்பது ராமர் பாலம் என்கிற, ஆதாம் பாலத்திற்கும் பொருந்தும். ஏனென்றால், அந்தப் "பாலமு"ம் பல மணல் திட்டுக்(குதிர்)களை கொண்ட ஒரு தொடரில்லா பாலம்தான்.

இன்று இந்த மணல் திட்டுக்களை நம்பித்தான் எல்லோரும் அரங்கத்தில் இறங்கியுள்ளார்கள். ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி. 

இந்த மண் குதிர்கள் யார் காலை வாங்கி, கபளீகரம் பண்ணப்போகின்றனவோ?

Wednesday, October 03, 2007

பரம்பரை அரசியல்

பரம்பரை அரசியல் பற்றி வலையில் மேய்ந்த போது 'விக்கிபீடியா'வில் கிடத்த பட்டியல்.படியுங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்.

ஏதாவது பரம்பரை விட்டுப்போயிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.எனக்குத் தெரிந்த விட்டுப்போனவை:

The Gowda Family
* Deve Gowda
---- o HD Revanna (Son)
---- o HD Kumarasamy (Son)

The Aaladi Aruna Family
* Aladi Aruna
---- o Poongothai (Daugther)

The Dutt Family
* Sunil Dutt
---- o Priya Dutt (Daughter)
================================================================
The Nehru Dynasty
* Motilal Nehru (politician and lawyer) (Father)
---- o Jawaharlal Nehru (Prime Minister, 1947-1964) (Son of Motilal)
---- o Kamala Nehru, (wife of Jawaharlal, Congress leader)
---- o Vijaya Lakshmi Pandit , (MP and diplomat) (daughter of Motilal)
-------- + Nayantara Sehgal, (novelist and political critic) (daughter of Mrs Pandit)
-------- + Indira Gandhi (Prime Minister, 1966-1977 and 1980-1984) (Daughter of Jawaharlal)
------------ # Rajiv Gandhi (Prime Minister, 1984-1989) (Son of Indira)
------------ # Sonia Gandhi, (president of the Indian National Congress party) (Widow of Rajiv)
---------------- * Rahul Gandhi (politician) - (Son of Rajiv)
------------ # Sanjay Gandhi (politician) - (Son of Indira)
------------ # Maneka Gandhi (politician, ex-minister) - (Widow of Sanjay) - (BJP MP)
---------------- * Varun Gandhi (politician) - (Son of Sanjay) - (BJP)
-------- # Uma Nehru (Member of Parliament) - (Indira's cousin)
-------- # Arun Nehru (politician, ex-minister) - (Nephew of Indira, son of Uma) - (not of Congress party)

The Karunanidhi Family
* M. Karunanidhi, Tamil Nadu Chief Minister
---- o M.K. Stalin, State Minister of Local Bodies, Ex-Mayor of Chennai (Son of Karunanidhi)
---- o Karunanidhi Kanimozhi, Member Parliament (Daughter of Karunanidhi)
---- o Late Murasoli Maran, Former Union Minister (nephew of Karunanidhi)
-------- + Dayanidhi Maran, EX - Union Minister (son of Murasoli)

The Ramachandran Family
* M.G. Ramachandran (Ex-Chief Minister of Tamil Nadu)
---- o Janaki Ramachandran, wife of MGR, (Ex-Chief Minister of Tamil Nadu)

The Kumaramangalam Family (father-son and daughter)
* Mohan Kumaramangalam (INC cabinet minister)
---- o Lalitha Kumaramangalam (BJP politician in Pondicherry)
---- o Rangarajan Kumaramangalam (BJP cabinet minister)

The Ramadoss Family
* Ramadoss
---- o Anbumani, son of Ramadoss, Cabinet Minister for Health

The Rajan Family
* P. T. Rajan
---- o P._T._R._Palanivel_Rajan

The Chidambaram Family
* P. Chidambaram, Finance Minister of India
---- o Karti Chidambaram

The Abdullah Family
* Sheikh Mohammad Abdullah, Chief Minister of Kashmir
----* Begum Akbar Jahan, Member of Parliament (wife of Sheikh Abdullah)
-------- o Farooq Abdullah, Chief Minister of Kashmir (son of Sheikh Abdullah)
------------ + Omar Abdullah, Union Minister, (son of Farooq)
------------ + Sara Abdullah, (daughter of Farooq)
------------ + Sachin Pilot, Member of Parliament (husband of Sara)

The K. Karunakaran Family
* K. Karunakaran,Former Kerala chief minister,Former Cabinet Minister
---- o K. Muraleedharan, Former Lok Sabha member
---- o Padmaja Venugopal, Former Chairperson of Kerala Tourism Development Corporation

The Naidu Family
* Sarojini Naidu (freedom fighter and poetess) (Mother)
---- o Padmaja Naidu (Governor) (Daughter)

The Reddiar Family
* V. Venkatasubha Reddiar (Ex-Chief Minister of Pondicherry and Freedom Fighter) (Father)
---- o V. Vaithilingam Reddiar (Ex-Chief Minister of Pondicherry) (Son)

The Mirdha Family of Rajasthan
* Baldev Ram Mirdha
---- o Ram Niwas Mirdha
---- o Nathuram Mirdha
-------- + Harendra Mirdha
------------ # Raghuvendra Mirdha
-------- + Richpal Mirdha

The Patnaik Family
* Biju Patnaik
---- o Naveen Patnaik, son of Biju
---- o Gita Mehta, daughter of Biju

The Yadav Family
* Laloo Prasad Yadav, Bihar chief minister
----* Rabri Devi, Bihar chief minister
---- o Sadhu Yadav, Rabri Devi's brother

The Rao Family
* N.T. Rama Rao
---- o Lakshmi Parvathi, wife of NTR
-------- + Chandrababu Naidu, Chief Minister of A.P. (son-in-law of NTR)
-------- + Daggubati Purandareswari, Member of Parliament (daughter of NTR)

The Sayeed Family
* Mufti Mohammad Sayeed
---- o Mehbooba Mufti, daughter of Mufti Muhammed

The Scindia Family (former Maharajas) (mother-son and daughters-grandsons)
* Rajmata Vijayraje ScindiaBJP
---- o Madhavrao Scindia, son of Vijayaraje INC
-------- + Jyotiraditya Scindia, son of Madhavrao
---- o Vasundhara Raje Scindia, daughter of Vijayaraje
-------- + Dushyant Singh, son of Vasundhara Raje
---- o Yashodhara Raje Scindia, daughter of Vijayaraje

The Thackerary Family
* Balasaheb Thackeray
---- o Udhav Thackeray, son of Balasaheb
---- + Smitha Thackeray, daughter-in-law of Balasaheb
---- + Raj Thackeray, nephew of Balasaheb

The Pawar Family
* Sharad Pawar, Agriculture Minister, India
---- o Supriya Sule, daughter, Member, Rajya Sabha
---- o Ajit Pawar, nephew of Sharad Pawar Irrigation Minister, Maharashtra
-------- + Parth Pawar, son of Ajit Pawar
-------- + Jay Pawar, son of Ajit Pawar

The Hooda Family
* Ranbir Sing Hooda , EX-Minister of Punjab&Haryana
---- o Bhupinder Singh Hooda, Chief Minister of Haryana
-------- + Deepender Singh Hooda, Member Loksabha

Tuesday, October 02, 2007

தேவ கவு(த்து)டா

இது இன்னொரு அரசியல் குடும்பம். அப்பா முன்னாள் முதல்வர், பிரதமர், அண்ணன் முன்னாள் மந்திரி, சட்டசபை உறுப்பினர், தானும் ஒரு முதல்வர், சட்டசபை உறுப்பினர்.

பிப்ரவரி 3ம் தேதி 2006 ல் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பா.ஜ. பா.வின் உதவியோடு பதவி ஏற்றார். மீதமிருக்கும் 40 மாதங்களில், 20 மாதம் அவர் முதல்வாராகவும், பின்னர் பாஜபா வும் ஆட்சி நடத்தும் என்ற உடன் படிக்கையின்படி. 20 மாதம் நேற்றோடு முடிவடைந்து, இன்று பாஜபாவிடம் ஆட்சி ஒப்படைக்கப்படவேண்டும்.

ஆனால், பதவி ஆசை யாரை விட்டது. இப்போது, அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து, தினம் ஒரு நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டு, ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார்கள். முதலில், குமாரசாமி ஆட்சி அமைக்கும் போதே ஒரு மாதிரி டிராமாவெல்லல்ல்ம் ஆடினார் தேவ கவுடா. பின்னர் ஏதோ வேறு வழியில்லாதது போல அதை ஒத்துக் கொண்டார். பின்ன என்ன, தன் மகன் முதல் மந்திரி ஆவது ஒரு தந்தைக்கு பெருமையாக இருக்காதா என்ன?

20 மாதம் முடிந்து ஆட்சியை ஒப்படைக்கும் சமயம் வரும் போது ஜகா வாங்குகிறார். குமாரசாமி மிக நன்றாக ஆட்சி நடத்துவதாகவும், அவருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல பெயர் இருப்பதாலும், அவரையே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்க விடுமாறும், யஷ்வந்த் சின்காவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்ததின் பெயரில், கட்சியின் செயற்குழு 5ம் தேதி கூடி முடிவெடுக்கும் என்று தள்ளிப்போடுகிறார். நிச்சயமாக பாஜபாவிற்கு ஆட்சியைத் தரப்போவதில்லை. வேறு யார் ஆதரவுடனாவது ஆட்சியைத் தொடர வைக்க சமயம் வாங்குகிறார். அவர்களிடமும் இன்னும் 20 மாதம் இருக்கிறது. நான் 10 மாதம், நீ 10 மாதம் என்று பேரம் பேசி, 10 மாததிற்குப் பிறகு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி விடுவார்.

இவர் ஏதோ ஒரு "தூங்குமூஞ்சி" பிரதம மந்திரி என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் மனிதன் ஒரு எமகாதகர். சரியாக பாஜபாவை கவிழ்த்து விட்டார்.

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி….

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி….


கடந்த 3 வாரங்களாக நடந்த கூத்தைப் பார்த்தால், எல்லோருக்கும் தலை சுத்தும். இதுக்கெல்லாம் மூல காரணம் மத்திய தொல் பொருள் துறைதான். ஒரு அரசாங்கத் துறை தன் எல்லை எது எனத் தெரியாமல், உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஒரு ஆவணத்தினால், இன்று தேவையில்லாமல் கிளப்பி விட்ட பல அரசியல் நிகழ்வுகள்.

அந்த ஆவணத்தின் பின் விளைவையறிந்த காங்கிரஸ் கட்சி, ஆவணத்தை திரும்பப் பெற்று, சத்தம் காட்டாமல் ஒதுங்கி விட்டது. ஆனால், அனாவசியமாக வார்த்தைகளை விட்டு, பகுத்தறிவு பகலவர்கள், குட்டையைக் குழப்பினார்கள். செங்காவிக் கும்பலோ, வெட்டு, குத்து என்று பேசி, குழப்பின குட்டையிலிருந்து சேற்றை வாரி இரைத்தது. இடையில், உச்ச நீதி மன்றம் வேறு தன் பங்கிற்கு ஒரு சித்து விளையாட்டு ஆடியது. பந்த் என்றும், பின்னர் உண்ணா நோன்பு மட்டுமே என்று வார்த்தை ஜாலங்களில் விளையாடினார்கள். உண்ணா நோன்பிருந்தவர்கள், புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.

இதுவரை நடந்தவைகளில் ஏதெனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா? அரசியல் கட்சிகள், தரம் தாழ்ந்து, தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட விரோதங்களை, கட்சியினரிடையே விதைத்து, மக்களை மக்களுடன் மோத விடுகிறார்களே, இது என்ன நியாயம்? குப்பனுக்கும், சுப்பனுக்கும் ஒரு நாள் வருமானம் போனதுதான் மிச்சம். அரசாங்கம் ஆதரித்த வேலை நிறுத்தத்தினால், அரசு ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும், அன்றைய சம்பளம் நிறுத்தப் படாது. ஆனால் தினம், தினம் உழைத்து சாப்பிட வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்ன செய்திருப்பார்கள்.

தன் கர்வம், தன் அதிகாரம், தன் வீச்சு என்று செயல் படும் தலைவர்கள், இன்று காந்தி சிலைக்கும், காமராசர் சிலைக்கும் மாலை போட்டு, தங்களை சத்திய வந்தனாகவும், கர்ம வீரர்களாகவும் காட்டி இருப்பார்கள்.

தினம் தினம் வேஷம் போடும் அரிதாரம் பூசாத கலைஞர்கள்.

Tuesday, August 21, 2007

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

என்ன தலை சுத்துதா? இது ஏதோ மடாதிபதியோ அல்லது, நாத்திகவாதியோ சொன்னது அல்ல. ஒரு அரசாங்கத்தின் மந்திரி, மறுஅவதாரம் எடுப்பதை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக எடுத்திருக்கும் முடிவுதான். எங்கே என்று கேட்கிறீர்களா? நல்லவேளை, நம் நாட்டில் இல்லை. சீனாவில்.

சரி சரி.. ஏன் இந்த சட்டம் ? திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா ஒவ்வொரு முறையும், தற்போதைய வாழ்க்கை முடிந்தவுடன், மறு அவதாரம் எடுத்து மீண்டும் வருவதாக நம்பிக்கை. தற்போதைய தலாய் லாமா, தான் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையில் மறு அவதாரம் எடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், சீன அரசாங்கம், இந்த சட்டத்தை இயற்றி, தனக்கு ஏற்புடையவரை புதிய தலாய் லாமாவாக முன்னிருத்தவே இந்த சட்டம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம், பிறப்புக்களை கட்டுப்படுத்துவதுதான். சஞ்சய் காந்தி செய்த கட்டாயக் கருத்தடை மாதிரி. ஆனால் சீனா இன்னும் ஒருபடி மேலே போய் மறு அவதாரத்தையும் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இது இப்படியே போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்:

“புதிதாக அமலுக்கு வந்த சட்டத்தின்படி இந்த அரசாங்கம், ராமர் என்கிற கடவுளை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் நேற்று அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில், தான் ராமேஸ்வரத்தில் கட்டிய பாலத்தை, சீதையை மீட்டு இந்தியா திரும்பியவுடனே அழித்து விட்டதாகவும், இப்போது ராமர் சேது என்கிற மணற் திட்டு தாம் கட்டிய பாலம் இல்லை யென்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குறிய இடத்தைப் பார்த்துவிட்டு, நான் பிறந்த இடம் அது அல்லவே அல்ல. அங்கிருந்து இன்னும் 100 கி.மீ தள்ளி இப்பொழுது ஒரு பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் தான் பிறந்தேன் என்றார்.”

உங்கள் கற்பனைகளையும் தாராளமாக பின்னுட்டம் இடலாம்.

(http://www.msnbc.msn.com/id/20227400/site/newsweek/)

Saturday, August 18, 2007

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.


காலம் கனிந்து வந்து விட்டது. அது தானாக வந்ததோ, இல்லை தடியால் அடித்து கனிய வைக்கப்பட்டதோ, தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இடது சாரிகளால் எடுத்து வந்து கொடுக்கப்பட்டது.


அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோஹன் சிங்கும், இடது சாரிகளும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். நாக்கில் சனி பிடித்து இருவரும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


மன்மோஹன்சிங், "இடது சாரிகள் வேண்டுமானால் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்ளட்டும்" என்றும், "ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை" என்றும் ஆணித்தரமாக ஊடகத்திலும், மக்கள் மன்றத்திலும் கூறி விட்டார். இடது சாரிகளோ அவரின் அந்த ஆணித்தரமான பேச்சால் நிலை குலைந்து போய், "தேனிலவு முடிந்து விட்டது, இப்பொழுது கல்யாண வாழ்க்கை (என்னவோ கல்யாண வாழ்க்கை என்றாலே சண்டை மட்டும்தான் போல)" என்று ஏதோ டயலாக் விட்டிருக்கிறார்கள். ஒப்பந்த அறிக்கையை முழு விவாதத்திற்கு விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.


இந்த நிலையிலிருந்து இருவரும் கீழே வருவதற்கு தற்பொழுது சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தெரிகிறது. அது இருவருடைய தன்னிலைத் தன்மையை பாதிக்கும் என்பதினால் ஒரு முடிவில்லா நிலையில்தான் இருக்கும்.


இடது சாரிகளோ, ஒரு கட்சி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசாங்கமோ, மன்மோஹன் சிங் என்கிற ஒரு தனி மனிதரின் நிலையிலிருந்து வழக்காடுகிறது. அவருடைய குரலுக்கு ஆதரவாக இது வரையில் (18/8/2007 6:00 மாலை) எந்த ஒரு மந்திரியும், காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுக்க வில்லை. எங்கே இப்பொழுது குரல் கொடுத்தால் பின்னர் தனக்கு பாதகமாகப் போய் விடுமே என்று பயந்து இருக்கலாம்.


இந்த நிலைமையின் கடினத்தைக் குறைக்க, பிரணாப் முகர்ஜியும், சோனியா காந்தியும் களாம் இறங்கி உள்ளார்கள். மன்மோஹன் சிங் தன்னிலையிலிருந்து இறங்கி வராத பட்சத்தில், ஆட்சியை கவிழாமல் காப்பதற்கும்,  இடது சாரியை சந்தோஷப்படுத்தவும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படலாம். அது மன்மோஹன் சிங்கின் பதவி விலகலாக அமையலாம். அந்த நேரத்தில், சோனியா காந்தி பிரதமாராக அமரலாம்.


மன்மோஹன் சிங்கை இத்தனை நாள் எதிர்த்துக் கொண்டிருந்த இடது சாரிகளுக்கு இது ஒரு வெற்றி யாகையால் அவர்களும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சற்று அடக்கி வாசிக்கலாம். (எப்படியிருந்தாலும் அதில் அவர்கள் பூச்சாண்டி காண்பிக்கற மாதிரி அவ்வளவு பயங்கரமான விளைவுகள் ஒன்றுமில்லை).


சோனியா மீண்டும் ஒரு பெரிய ராஜதந்திரி போல பேசப்படுவார். பிரதிபா பாட்டில் தான் காண்பிக்க வேண்டிய விஸ்வாசத்தைக் காட்டி அவருக்கு பதவிப் பிரமானம் செய்விப்பார். பா.ஜ.பாவும், மற்ற எதிர்க் (உதிரி) கட்சிகளும், சோனியா வெளி நாட்டவர் என்ற பழைய கோஷத்தைச் சொல்லி மீண்டும் கூச்சல் போடுவார்கள். அணு சக்தி ஒப்பந்தம், பழைய கதையாகிவிடும், சத்தம் போடாமல், பிரணாப் முகர்ஜி போய் கையெழுத்து போட்டுவிட்டு வந்து விடுவார்.


ஏற்கனவேதான் "மஹாராணியின் சேவையில்" (Her Majesty's Service) பல மந்திரிகள் இருக்கிறார்களே, சட்ட அமைச்சர் பரத்வாஜ் போல ( சத்தம் போடாமல் கொட்ரொச்சி வழக்கிலிருந்து, CBI க்கும் தெரியாமல் அப்பீலை வாபஸ் வாங்கினவர்). அப்பேற்பட்ட சகாக்களுடன் இத்தாலி அம்மையாரின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.Take the Internet to Go: Yahoo!Go puts the Internet in your pocket: mail, news, photos & more.

விசித்திரமான படுக்கை நண்பர்கள் (Strange bedfellows)

விசித்திரமான படுக்கை நண்பர்கள் (Strange bedfellows)

 

மத்தியிலும், மாநிலத்திலும், நிகழும் அரசியல் காட்சிகளைக் காணும் பொழுது, இதைக்கண்டு சிரிப்பதா, இல்லை அழுவதா என்று தெரியவில்லை. நாம், பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சியிலிருந்து, கூட்டுக்கட்சிகள் ஆட்சிக்கு வந்து, தற்பொழுது சிறுபான்மை எண்ணிக்கை உள்ள ஒரு கட்சி ஆள்வதையும் அதற்கு சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையிலும் உள்ளோம்.

 

வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகள், தாங்களே ராஜாக்கள் போலவும், ஆளும் சிறுபான்மை கட்சி தங்கள் சேவகர்கள் போல நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது தாங்களே மறைமுகமாக ஆட்சி நடத்த வேண்டும் என்று விழைகிறார்கள். இடது சாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியினரின் தற்போதைய நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று ஏதோ தியாகம் செய்வதைப் போல் காட்டிக்கொண்டு, ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவர்கள் மந்திரி சபையில் இடம் பெற்றால், முக்கிய பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை மந்திரி சபைக் கூட்டங்களிலே எழுப்பலாம். ஆனால், மந்திரி சபையில் இடம் பெறாமல், எல்லா முடிவுகளையும், அரசாங்கம் சேரா அமைப்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டதிலும், தேநீர் விருந்திலும், தங்களுடன் அரசு கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசாங்கத்தை விட ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக தங்களை காட்டிக்கொள்ள விழைகிறார்கள்.

 

பிரதிநிதிகள் எண்ணிக்கையில் எண்கள் குறைவாக இருந்தாலும், அந்த என்ணிக்கையே பெரும்பான்மைக்கு இட்டு நிரப்பும் எண்ணிக்கையாக இருப்பதால், இவர்கள் கை ஓங்கியே இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகும் போது தான் "முடிவெடுக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது", "வேண்டுமானல் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும்" என்று முதன் மந்திரியும், பிரதம மந்திரியும் அறிக்கை விடும் அளவிற்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

 

அரசாங்கம் செய்யும் மக்கள் நலத்திட்டங்களில் இவர்களும் குளிர் காய்ந்து கொள்கிறார்கள். அதே சமயம், மிகவும் நெருடலாக இருக்கும் திட்டங்களில் அரசுக்கு எதிர் குரல் கொடுத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கவும் முனைகிறார்கள்.

 

இந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்கு, ஆளும் கட்சிகளே காரணம். சேரா நட்பால் விளைந்த வினையை அவர்கள் தானே அனுபவிக்க வேண்டும். தவளைக்கும், எலிக்கும் ஏற்பட்ட நட்பு போல, இந்த நட்பு எத்தனை காலத்திற்கு நீடிக்கும்? இடது சாரிகளும், காங்கிரசும் எந்த விதத்தில் உத்தமமான நண்பர்கள், பா.ஜ.பா விற்கு எதிரிகள் என்பதைத் தவிர?Building a website is a piece of cake.
Yahoo! Small Business gives you all the tools to get online.