Tuesday, February 13, 2007

சாகரன் என்கிற கல்யாணின் மறைவு....

11ம் தேதி மதியம் 1:15க்கு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபொழுது, மாடிப்படியில் என்னுடன் நின்று உரையாடிய சாகரன் என்கிற கல்யாண், மாலை 4 மணிக்கு இல்லை. கல்யாண், சாகரனாய் அவதாரம் எடுப்பதற்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். என் இளைய சகோதரன் வயதானாலும், எனக்கு ஒரு குரு போன்றவர். என்னை இந்த வலையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

சென்ற வியாழனன்று (8ம் தேதி) இருவரும் தேன்கூட்டின் அடுத்த நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது "சுடர் தொடர் விளையாட்டு" பற்றி என்னுடைய கருத்துக்ளையும் கூறினேன். சுடரை ஏற்றி வைத்து அதன் ஜோதியில் ஐக்கியமானாரே. ஐயகோ! இதைவிட காலத்தின் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியுமோ?

கடந்த 8 வருடங்களாக அவரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அருகிலிருந்து பார்த்து வந்தவன் இன்று அவரின் பூத உடலை பார்க்கும் நிலையையும் அடைந்தேனே.

சாகரத்தில் என்றேனும் அலைகள் ஓயுமோ? ஆயினும் இன்று சாகரம் அடங்கிப் போனதே.

நான் வலை பதிய ஆரம்பித்த புதிதில், என் வலைப்பதிவு ஒன்று தினமலரில் பிரசுரிக்கப்பட்டதும் உடனே தொலைபேசியில் எனக்கு வாழ்த்துக்கூறி என்னை ஊக்கப்படுத்தியவர். அதேபோல் நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரை இனையப்பத்திரிக்கைகளுக்கு அவரே அனுப்பி அது "பூங்கா"வில் பிரசுரிக்கப்பட்டவுடன் எனக்கு முதன் முதலில் தெரிவித்து வாழ்த்து சொன்னவரும் அவர்தான். இன்று அவரின் மறைவுக்கே இரங்கல் தெரிவிக்கும் நிலையை என்ன சொல்ல?

அவர் முதன்முதலில் ரியாதிற்கு வந்தபோது விமானநிலையம் சென்று அழைத்து வந்த நானே இன்று அவரை இக்கோலத்தில் வழியனுப்பும் துர்பாக்கியசாலியானேனே.

அவரின் துணைவியாரையும் அவர்களின் அன்பு குழந்தையின் பிஞ்சு முகத்தையும் பார்க்கும் போது "காலா! உனை நான் சிறு புல்லெனெ மதிக்கிறேன்: என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" - பாரதியின் அதே ஆத்திரம் எனக்கும் வருகிறது. எது என்ன ஒரு வயதா கொண்டு செல்ல? சாதிப்பவர்களை சோதிக்கும் இது என்ன சாத்திரம்?

சகோதரனாக, நண்பணாக, ஆசானாக என்னை ஆக்கிரமித்த ஒரு மனிதர் அவர். அவர் இன்று இல்லை என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்த மாடிப்படி தினமும் 4 தடவையாவது அவரை எனக்கு நினவு படுத்தும்.

Thursday, February 08, 2007

அந்த நாளும் வந்திடாதோ - நடக்கும் சண்டையை கண்டு பயந்த ஒரு கிளியின் ஏக்கக் குரல்

ஓர் அடர்ந்த பெருங்காடு. அதிலே ஒரு ஆலமரம். அதன் கிளை ஒன்றிலே, தன் துணையை காணாத ஏக்கத்தில் ஒரு கிளி. சோடிக்கிளி கடந்த ஒரு வாரமாக கன்ணில் படவில்லை.

சோடி இல்லாத ஏக்கம் அந்த கிளிக்கு மட்டும்தானா? குயில், குருவி மற்ற பறவைகள் அனைத்துமே தத்தம் சோடியையோ, சுற்றத்தையோ காணாமல் மருண்ட பார்வைகளுடன், முகத்தில் ஏக்கத்துடன், படபடவென சிறகுகளை, அதிக சத்தம் வராமல் பயத்துடன் அடித்து கொண்டிருந்தன. ஏன் இந்த பயமும், பிரிவும்? அந்த காட்டில் நடந்து கொண்டிருக்கிற பெரிய யுத்தம்தான். ஒரு வயதான சிங்கத்துக்கும், பல இளவயதுடைய சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், நரிகள், ஓநாய்கள் போன்ற பல மிருகங்களுக்கும் நடக்கும் யுத்தம்தான்.

சற்றே வயதான ஒரு சிங்கம் நன்றாகத்தான் தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டு வந்தது. ஆனாலும் அவ்வப்பொழுது காட்டில் உள்ள மற்ற மிருகங்களுடன் சிறு தகராறுகள், வம்புகள் பண்ணிக்கொண்டிருக்கும். அவ்வாறு செய்வது அந்த சிங்கம் மட்டுமல்ல, எல்லா மிருகங்களுமே.

இருந்தாலும் ஒரு குள்ள நரிக்கு, இந்த சிங்கத்தை கண்டால் ஆகாது. எனவே சிங்கத்தின் வீட்டிற்கு போய் அசிங்கம் செய்து விட்டு வந்து விடும். அது போலவே யார் யார் சிங்கத்தின் வீட்டிற்கு சென்றார்களோ அவர்கள் வீட்டிலும் போய் அசிங்கம் செய்து விடும்.

இதை கண்டுபிடிக்க சிங்கம் தந்திரமாக மாறு வேடம் போட்டுக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிற்கெல்லாம் போய் சாதாரணமாய் பேசியும், சண்டை போட்டு விட்டும் வந்தது. இந்த ஆட்டத்தில் குஷி கண்ட சிங்கம், தன் நண்பர்களையும் மாறு வேடத்தில் வரச் சொல்லி அழைப்பு விடுத்தது. அப்படியே தன் சுய ரூபத்திலும் மற்ற மிருகங்களுடன் உறவாடி, அவர்களுடன் சேர்ந்து உலாவல் போய் வருவது, சாப்பிடுவது என்று இருந்தது. ஒரு சமயம் புல்லும் சாப்பிட்டது. இடையில் மற்ற சிங்கங்களுக்கும், நாம் இனிமேல் நம்மை சிங்க ராஜா என்றே கூப்பிட்டுக்கொள்வோம், என்று உபதேசம் வேறு செய்தது.

அந்த சமயத்தில்தான் ஒரு நாள், தான் மாறு வேடத்தில் இருப்பதை மறந்து சொந்தக் குரலில் ஒரு வீட்டில் கர்ஜித்து விட்டது. அப்போதுதான் மற்ற மிருகங்களுக்கு, சிங்கம் மாறு வேடத்தில் வந்தது, தம்முடன் சண்டை போட்டது எல்லாம் தெரிய வந்தது.

அந்த மிருகங்கள் மிகக் கோபம் கொண்டன. தாங்கள் ஏமாற்றப்பட்டது, பொய் முகத்துடன் வந்து சண்டை போட்டது, தன்னை ராஜா என்று கூறிக் கொண்டது போன்றவை மற்றும் முற்காலத்தில் போட்ட வம்புகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து அந்த சிங்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் வீட்டிற்கு சென்றும், தத்தம் வீட்டு வாசலில் நின்று கொண்டும், பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டும், கர்ஜித்தும், ஊளையிட்டும், ஒப்பாரி வைத்தும் கூச்சல் போட்டன. இதில் சில மான்களும், முயல்களும் கூட சேர்ந்து கொண்டன. அவைகளும் தங்களுக்கு சிங்கம் இழைத்த அநீதியை கண்டித்தன. சிங்கத்திற்கு ஆதரவாகவும் சில மிருகங்கள் குரலிட்டன. சிங்கமும் தான் செய்தது சரிதான் என்றும், மாறு வேடத்தில் வர தனக்கு உரிமை உள்ளது என்று வாதாடிற்று. யானை வந்து சமாதானம் செய்ய முயற்சியெடுத்தாலும், அதையும் ஒதுக்கித்தள்ளின. இந்த வாதம், எதிர்வாதம் பெரிய சண்டையாக மாறி எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை knock-out செய்ய நினைத்தன. இதனால், காட்டில் ஒரே அமளி, துமளி, புழுதிப் புயல், சத்தம்.

ஒன்றும் அறியாத பறவைகளும், முயல்களும், மான்களும், தான் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த இந்த அழகான காடு இவ்வாறு போச்சே. இத்தனை காலமாக நமக்கு நிழல் தந்த மரங்கள் முறிந்தனவே, நீர், நிலைகள் குழம்பிப் போயினவே என்று பயந்து காட்டிற்கு வரவே நடுங்கி, திக்கிற்கு ஒன்றாக ஓடின.

இந்த சண்டையை காட்டிலாகா அதிகாரிகளும் சும்மனே கைகட்டி வாய் பொத்தி பார்த்துக் கோண்டிருக்கிறார்கள். அவர்களும் இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரக் காணோம்.

சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கம் மாண்டு போய் விடுமா, இல்லை மீண்டு வருமா, எல்லா மிருகங்களும் மீண்டும் ஒற்றுமையோடு வலம் வருவார்களா, நாம் நம் சோடிகளுடன் கைகோர்த்து ஆடிப்பாட முடியுமா என்று பறவைகளும், முயல்களும், மான்களும் ஏங்கி கொண்டிருக்கின்றன.

Wednesday, February 07, 2007

உடல் கொடுத்த உத்தமர்கள்.

Cadaver தான் கடவுள். The Dead teaches the Living

முன் குறிப்பு: இந்த உரையாடலை படிக்காவிட்டாலும், கடைசியில் உள்ள கவிதையை
படிக்கத் தவறாதீர்கள்.

நேற்று மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் என் மகள் ரொம்ப excited ஆக இருந்தாள்.

"அப்பா இன்னிக்கு ஒரு donar body வந்ததுப்பா. பாவம் ரொம்ப சின்ன வயசு, ஒரு 40 அல்லது 45 வயசுதான் இருக்கும் போல இருக்கு. செக்க செவேல்னு நிறம். தலை மயிரெல்லாம் கன்னங்கரேல்னு இருக்கு. மூஞ்சியெல்லாம் கருகருன்னு தாடி. well built body, ஒன்னும் accident மாதிரி தெரியல்லே, பாக்க பாவமாயிருந்ததுப்பா" என்றாள்.

"எதுக்கு ஒங்க காலேஜுக்கு வந்தது? ஆஸ்பத்திரிக்குத்தானே கொண்டு போயிருக்கனும்" னு
கேட்டேன்.

"இல்லேப்பா, அங்கே எல்லா formalities ம் முடிஞ்சு தான் இங்கே கொண்டு வந்தாங்க. இங்கேயிருந்து cadaver well க்கு போகும்..." சடாரென்று விளித்தல் உயர்திணையிலிருந்து அஃறிணைக்கு மாறியது.

"Cadaver well ன்னா என்னது அது, Mortuary யா? "

"இல்லே, இல்லே, ஒரு பெரிய tank லே, formalin solution யை ரொப்பி அதுலே காலேஜுக்கு வர்ற donar body யை போட்டு decompose ஆகாம preserve பண்ணி வச்சிருக்கும். பிணத்துக்குள் இருக்கும் இரத்தம் கட்டியா உறைஞ்சு போயிடும். உடல் உறுப்புகள் எதுவும் சேதமடையாமல் இருக்கும். அப்புறம் எப்போ தேவையோ அப்போ பரிசோதனைகூடத்துக்கு எடுத்து வந்து நாங்க dissect பண்ணி தெரிஞ்சுப்போம். முழு உடலும் இருக்கும், இல்லே கை கால் அப்படின்னு தனித் தனியா உறுப்புகளும் இருக்கும்....."

"You know one thing dad... this is the place where the dead teaches the living. எங்களுக்கு cadaver ஒரு விதத்தில் கடவுள் மாதிரி. நாங்கள் இதை பிணம் என்று சொல்ல மாட்டோம். எபோதுமே cadaver என்றுதான் சொல்லுவோம்"

எனக்கு உடனே வசூல்ராஜா MBBS படம்தான் ஞாபகம் வந்தது. கமல் பிணம் சரியா தெரியலைன்னு எட்டி பார்க்கும் போது, அந்த விரிவுரையாளர், "பிணம்னு சொல்லாதே, cadaver ன்னு சொல்லு" ங்கிற காட்சி.

Berkeley யில் உள்ள University of California வில், cadaver ஐ நன்கு ஆராய்ந்து முடித்த பின், இறந்தவருக்கு பிரார்த்தனை அஞ்சலி செய்து பின்னர் அடக்கம் செய்வார்களாம். மற்றுமொரு பல்கலையில் cadaver களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் முதற்பெயர் கொண்டே அழைக்கவேண்டும் என்றும், அஃறிணையில் குறிப்பிடக் கூடாதென்றும் விதி இருக்கிறது. மற்ற கல்லூரிகளில் எவ்வாறோ தெரியவில்லை.

அவருடய வாழ்க்கையைப் படி, இவருடைய வாழ்க்கையைப் படி என்றுதான் கூறக் கேட்டிருக்கிறோம். நீ என்னையே படி என்று கூறி, இறந்தவுடன் தன் உடலை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில், தானமாகக் கொடுத்து, இறந்தும் வாழும் அந்த உத்தமர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஒரு மருத்துவ மாணவன் இந்த உத்தமர்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை கீழே காணலாம்.

Our Lady of the Tank

Our lady of the tank,
in this graveless state,
Your flesh did not go quite the way of all,
Though wet and wrinkled we all will fall.

From the obstetrician to the mortician,
We travel a trivial time,
Proudly putting reason to rhyme,
Germ to term, virgin to carcass.

The sickle swings, the scalpel scrapes,
As through your greasy gift we sift,
Gross whole of petty parts,
Decayed in chunks, displayed in charts.

This breast, where a warm mouth cuddled,
Now lies alone in a chemical puddle.
As does your brain, plucked and pickled.

Your universe of cells, each of molecules
Submits to the ingracious exploration of fools,
Where solid blood awaits within your shredded heart,
Where food oozed through the intestinal mess
To the lumen at the end of the tunnel.

Do your sunken eyes despise
Our semester of eternity?

Does your complexity disguise
The hand of some paternity?

Do we fall to creation's temptation, or find
That God is truly just, a very long time?

When in the hour of reckoning we danced
In the ballroom of the living and the dead,
By tag and timer tested,
Your last patience we requested,
And having filled in all the blanks,
I whispered in your empty skull my empty thanks.

Peter Draper, second year student
UIC College of Medicine


பின்குறிப்பு : நீங்கள் கவிதையை மட்டுமே படித்தீர்களென்றால், சற்று முன் சென்று உரையாடலையும் படிக்கவும். கவிதையின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

Tuesday, February 06, 2007

The Majestic - திரை விமர்சனம்.

தொலைக்காட்சியில் "The Majestic" படம் பார்த்தேன். இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது . காரணம் கதை சொல்லப் பட்டிருக்கும் விதமும், பின்புலத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய அழகான, அன்பு மட்டுமே நிறைந்த ஒரு community மற்றும் சன்னமாக இழையொடிய ஆனால் ஆழமாக படமாக்கப்பட்ட ஒரு காதலும் ஆகும்.

இந்தப்படம் 2001ல் வெளியானது போலும். Jim Carrey கதாநாயகனாக நடித்த படம்.

நாயகன் திரைக்கதை எழுதுபவன். திடீரென்று அவன் மீது, கம்யுனிஸ்டுகளுக்கு சாதகமாக வேலை செய்பவன் என்று குற்றச்சாட்டு விழுந்து, அவனை Studio வேலை நீக்கம் செய்துவிடுகிறது. வருத்தமடைந்த அவன் கார் ஓட்டிக் கொண்டு ஒரு பாலத்தில் செல்லும் போது, குறுக்கே ஓடி வரும் எலிக்காக (?) திடீரென்று நிறுத்தும் போது கார் நிலை தடுமாறி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் நதியில் காருடன் கவிழ்ந்து விழுகிறான்.

கண் விழித்துப் பார்க்கும் போது ஒரு கடற்கரையில் கிடக்கிறான். ஒரு பெரியவர் அவனை அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்து மருத்துவம் பார்க்கிறார். அப்போதுதான் அவனுக்கும் மற்றவர்களுக்கும், அவனுக்கு பழையன எதுவுமே எதுவுமே நினைவில்லை என்று தெரிகிறது. அந்த ஊர் ஒரு சிறிய ஊர். பெரும்பாலான குடும்பங்களில் ஒரு சோகம். அந்த வீட்டு ஆண்மகன் / கள் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு உயிரிழந்து இருப்பர். அவ்வாறு தன் மகனை இழந்த ஒரு பெரியவர் நாயகனைப் பார்த்ததும் தன் மகன் தான் வந்து விட்டான் எனக் கூறி அழைத்து சென்று விடுவார். ஏனென்றால் அவர் மகன் லுயுக், நாயகன் மாதிரியே இருப்பது தான். லுயுக்கின் காதலியும், நாயகன்தான் லுயுக் என்று நம்புகிறாள். அந்த ஊர் மேயரும, ஊர் மக்களும், திரும்பி வந்த லுயுக்கிற்கு ஒரு வரவேற்பு விருந்து அளிக்கின்றனர். அதில் கலந்து கொண்ட லுயுக்கின் பியானோ டீச்சர், அவன்தான் தன் முதன்மையான மாணவன் என்றும் அவன் மிக நன்றாக வாசிக்கும் பழைய பாடலை பாடச் சொல்லி அவனுக்கு பழைய சம்பவங்களை நினைவு கூற முயற்சிப்பார். ஆனால் லுயுக் ராக் சங்கீதம் வாசிப்பான். அது போலவே பலரும் அவனுக்கு பழைய சம்பவங்களை நினைவு படுத்த முயற்சிப்பார்கள்.

ஆனால் நாயகியின் தந்தைக்கு மட்டும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். லுயுக்கிற்கு காணாமல் போன சமயத்தில் திருமணம் ஆகி அவனுக்கு அது இப்பொழுது மறந்து போய், தன் மகளை மணந்து கொண்ட பின்னர் நினவு திரும்பி வந்தால் அப்போது தன் மகளின் கதி என்ன என எண்ணி பயப்படுவார். ஆனாலும், நாயகனும் லுயுக்கின் காதலியும் நெருக்கமாகப் பழகுகின்றனர். அவள், அவனை தான் லுயுக்கிடன் சென்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்குவாள்.

லுயுக்கின் தந்தை 'The Majestic' என்று ஒரு தியேட்டரை முன்னர் நடத்தி வந்தார். லுயுக் போரில் இறந்து போய் விட்டான் எனத் தெரிந்தபோது துக்கத்தில் அந்த தியேட்டரை மூடி விட்டார். லுயுக்கின் வருகைக்குப் பிறகு லுயுக் மற்றும் ஊர் மக்கள் உதவியோடு, அந்த தியேட்டரை மீண்டும் புணர்ப்பித்து, படங்கள் திரையிடுகிறார். அப்போது நாயகன் திரைக்கதை எழுதிய ஒரு திரைப்படம் அதே தியேட்டரில் திரையிடப்படுகிறது. அதன் வசனங்களைக் கேட்ட நாயகனுக்கு பழைய நினைவுகள் திரும்பி வருகின்றன. படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே லுயுக்கின் தந்தையும் மாரடப்பு வந்து இறந்து போய் விடுகிறார். நாயகன், லுயுக்கின் காதலியிடம் தன் நிலையை விளக்கி சொல்ல, அவள் அதிர்ச்சியடைந்து அவனை விட்டு விலகி விடுகிறாள்.

இதற்கிடையில், கடற்கரையில் ஒதுங்கியிருந்த ஒரு காரை புலனாய்வு செய்ய, அது நாயகனுடையதுதான் என்றும் தெரிய வந்து பெடரல் ஏஜென்ஸி அவனை தேச விரோத கொள்கையுடையவன் என்று குற்றம் சாட்டி கைது செய்கிறது. அவன் கம்யுனிஸ சித்தாந்தம் கொண்டவன் அல்ல என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேடபதாயில்லை. அவனுடய வக்கீல், ஒரு முன்வரையப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றில் கையெழுத்து இடச் சொல்கிறார். அதில், தற்போது கம்யுனிஸ சித்தாந்தங்களிலிருந்து விடு பட்டு விட்டதாகவும், மேலும் சில நபர்களை பெயர் குறிப்பிட்டு காட்டிக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அதில் கையெழுத்து இட்டால் அவன் விடுதலையாகலாம் என்றும் அவர் கூறுகிறார். நீண்ட மனக்குழப்பத்திற்கு பிறகு அவன் அதற்கு ஒப்புக் கொள்கிறான். அதில் லுயுக்கின் காதலிக்கு ஒப்புதல் இல்லை. அவனை வாதாட சொல்கிறாள். ஆனல் அவன் மறுத்து விடுகிறான். அவனை அவ்வளவு தூக்கி வைத்து கொண்டாடிய அந்த ஊர் அவனை இப்போது தூற்றுகிறது. அவன் போகும்போது லுயுக்கின் காதலி அவனுக்கு அமெரிக்க அரசியலமைப்பு புத்தகம் ஒன்றையும் லுயுக் தனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தையும் கொடுக்கிறாள்.

அவன் விசாரணை செய்யப்படும்போது, அவன் அந்த முன்வரையப்பட்ட கடிதத்தை விசாரணையின் போது சமர்ப்பிக்க முடியாமல் தவிக்கிறான். மிகத்துணிவோட, தான் கம்யுனிஸவாதி இல்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு தன் மீது வேண்டுமென்றே போடப்பட்டதென்றும், இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை கொடுக்கச் சொல்லி தான் நிர்பந்திக்கப் பட்டதாகவும் எடுத்துக் கூறுகிறான். இந்த விசாரணை நேரடியாக ஒலி/ஒளி பரப்பப்படுகிறது. முடிவில் அவன் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பாகிறது.

அவன் லுயுக்கின் காதலிக்கு தான் ஊருக்கு வருவதாகவும், லுயுக்கின் கடிதத்தையும் அந்த புத்தகத்தையும் திருப்பிக் கொடுக்க விழைவதாகவும், தன்னை ஸ்டேஷனில் வந்து சந்திக்குமாறும், அப்படி அவள் வராவிட்டால், ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஒப்படத்து சென்று விடுவேன் என்றும் கடிதம் எழுதுகிறான். ஆனால் அவன் அந்த ஊரை சேர்ந்ததும், ஊர் மக்கள் கூடி அவனை மீண்டும் ஆர்ப்பாட்டமாக வரவேற்கிறார்கள். லுயுக்கின் காதலியும் அவனை விரும்பி ஏற்றுக் கொள்கிறாள்.

Jim Carrey யின் நடிப்பு ரொம்ப கச்சிதம். லுயுக்கின் காதலியாக வரபவரும் நன்றாக நடித்திருந்தார்.

திரைக்கதையை பார்க்கும் போது சமயத்தில் ஒரு மசாலா தமிழ்ப் படத்தை நினைவு படுத்தினாலும், மொத்ததில் மன நிறைவை கொடுத்தப்படம்.

Monday, February 05, 2007

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 419 டிம்சி தண்ணீர் தர நடுவர் மன்றம் தீர்ப்பு.


மூன்று நீதிபதிகளைக் கொண்டு 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடத்தப்ப்ட்ட காவிரி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது. தீர்ப்பில் தமிழகத்திற்கு 419 டி்மசி தண்ணீரு, கர்நாடகத்திற்கு 270 டி்ம்சி தண்ணீரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளா அரசு 30 டிம்சியும், புதுச்சேரி 7 டிம்சியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர்.

Friday, February 02, 2007

KISS பற்றிய சில விவரங்கள்

KISS பற்றிய சில விவரங்கள்

 • யாருக்கு, எங்கே, எப்போழுது, ஏன், எதற்கு என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவும்
 • சம்பத்தப்பட்டவர்களுடன் தனி அறையில் இருக்கவும்.
 • எதிரிலிருப்பவரின் கவனத்தை ஈர்க்கவும்
 • என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லவும்
 • ரொம்ப குறைந்த நேரமும், அதே சமயம் அதிக நேரமும் எடுத்துக்கொள்ள கூடாது
 • முக்கியமான பாகத்தில் கவனம் இருக்க வேண்டும்
 • எதிரிலிருப்பவர் மீண்டும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது முகவரியையோ கொடுக்கவும்.
 • இந்த சமயத்தில், இந்த விஷயங்களில் நன்கு பரிச்சயமுள்ள நபர்களை கூடவே வைத்துக்கொள்ளவும்.
என்ன? என்ன? கடைசி பாயிண்டைப் படித்ததும் ஒரே ஷாக்கா ஆயிடுச்சா? பின்ன நீங்க வேற ஏதோ கற்பனையிலே படிச்சா அப்படித்தான் இருக்கும்.

இது அத்தனையும் "Press Release" கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை. இதன் ஆங்கில மூலம் கீழே.

K.I.S.S (Keep It Short and Simple)

 • Use the 5Ws, Who, What, Where, Why and When to organize your message
 • Deliver the press release in a closed room
 • Begin with attention getting headline
 • Make the message clear and concise
 • Ideally less than one page, not too long and too short
 • Emphasis sould be made on important part of your message
 • Inlcude the contact information of the person whom the press can contact
 • Have personnel trained in Public Relations accompany you.

Thursday, February 01, 2007

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 3
இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களும், தன்னார்வு நிறுவனங்களும் எவ்வாறு நுண் வியாபார உரிமையை மேம்படுத்துகின்றன என்று சென்ற பாகத்தில் பார்த்தோம்.

சீனா இந்த யுக்தியை பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை கண்டதாகக் கூறப்படுகிறது. Consumer goods and Toys ல் சீனா உலக சந்தையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது இதன் மூலமாகக் கூட இருக்கலாம்.

நிச்சயமாக அரசாங்கம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் நுண் வியாபார உரிமையை ஊக்கப்படுத்த இன்னும் அதிக சலுகைகளை அளிக்கலாம். அரசு இலவச சலுகைகளை அளிப்பதை விட்டு விட்டு, அந்தப் பணத்தில் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். 2000 அல்லது 3000 ரூபாய்க்கு தொலக்காட்சிப் பெட்டி வழங்குவதற்கு பதிலாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் கல்வி கற்றுத் தந்து அந்த குடும்பம் என்றென்றும் நலமாக வாழ வழி செய்திருக்கலாம். நிலங்களை இலவசமாக தருவதற்கு பதிலாக, அந்த பயனாளிகள் அனைவரையும் சேர்த்து, கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, அந்த சங்கங்களின் மூலமாக அதே நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து மேம்பட வழி செய்திருக்கலாம்.

“கொசுக்களினால் பரவும் நோயைத் தடுக்க கொசு வலை கொடுக்காதே, சுகாதார மையம் அமைத்து சுற்றுப்புற சூழலை ஒழுங்குபடுத்து”.

இலவசங்கள் வியாதியை தற்போதைக்கு நீக்குகின்றன. ஆனால் அதன் காரிய காரணங்களை போக்குவதில்லை.


இந்த நுண் வியாபார உரிமை யுக்தியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது, அரசும் கண்டிப்பாக நடத்தக்கூடாது. அரசு இத்தகைய செயல்திட்டங்களை செயல்படுத்தும் போது வெற்றி பெறுவது இல்லை. அதற்கு காரணம், அரசியல்வாதிகளின் குறிக்கீடு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு. உதாரணத்திற்கு,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தங்கள் மொத்தக் கடன் தொகையில் 1% DRI(Differential rate of interest) scheme ல் அளிக்க வேண்டும் என்று 1977க்கு முதலே (ஏனெனில் நான் வங்கியில் சேர்ந்தது 1977ல்) உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ரூபாய் 4500 வியாபார மூலதனத்திற்காகவும் (Fixed assets) ரூபாய் 1500 வியாபாரப் பொருட்கள் கொள்முதல் (Working capital) செய்வதற்கும் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. இந்த கடனுக்கு வட்டி 4% மட்டுமே. இன்று கூறப்படும் நுண்கடன், எப்பொழுதோ இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு அமல் செய்யப்பட்டு வந்துள்ளது. இதன் மூலமாக ஒரு சிலர் பயனடைந்தாலும், இந்த் திட்டம் எத்தனை பேரை வறுமைக் கோட்டிற்கு மேல கொண்டு சென்றதென எனக்குத் தெரியாது.

இதே போல் மிக நல்ல திட்டம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டம் (Integrated Rurald Development Programme). ஆனால் இதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அதிக அளவில் பயன் அளிக்கவில்லை. 5000 பேர் இருக்கும் ஊரில் கிட்டத்தட்ட 3000 கறவை மாடுகள், 2000 ஆடுகள், 500 முடிதிருத்தும் கடைகள், 500 உணவகங்கள் ஆகியவைகளுக்கு சுற்று வட்டாரத்திலுள்ள 2 அல்லது 3 வங்கிகள் நிதிஉதவி வழங்கியிருக்கும். ஓரே நபர் 2 வங்கிகளில் இருந்து கடன் வாங்கியிருப்பார். அட ! அந்த பணம் அவருக்கு சென்றிருந்தால்தான் பரவாயில்லையே ! அவர் பொருளாதார ரீதியில் முன்னுக்கு வந்திருப்பாரே. அது சென்ற இடமெல்லாம், ப்ளாக் டெவெலப்மெண்ட் ஆபிசருக்கும் அந்த ஏரியா MLA/MP க்கும் தான். அதில் ரொம்ப அழகாக சுருட்ட "லோன் மேளா" என்கிற திட்டம் போட்டது ஜனார்தன் பூஜாரி என்கிற மத்திய இணை நிதி அமைச்சர்தான்.


இந்தியாவில் நுண்கடன் வசதி அளிப்பதற்கான கட்டுமான வசதிகள் ஏற்கனவே உள்ளன. கிராமிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள்/ வங்கிகள், நில மேம்பாட்டு வங்கிகள், அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (rozgar yojana), மானியத் திட்டங்கள் (subsidy schemes), கிராமப் புற வரையிலான அரசு நிறுவனங்கள் (block development offices), ஆகிய அனைத்தும் இருந்தும், ஏன் நம்மால் வேலை வாய்ப்பு வசதிகளை “அதிக அளவில்” பெருக்க முடியவில்லை? இந்த திட்டங்கள்/செயல் பாடுகள் வெறும் ஓட்டு பெருவதற்கான திட்டங்கள் தானா? அல்லது இதில் உள்ள குறைபாடுகள் என்ன? ஆனால் தனியார் முயற்சியால் தொடங்கப்படும் திட்டங்கள் பெருமளவு வெற்றி பெருவதன் காரணம்? உதாரணமாக,


 • சுனாமி நிவாரணத் திட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டி கொடுத்துவிட்டன. ஆனால் அரசு எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுத்தது? இருவருடைய வலிமையையும் ஒப்பிடும்போது வெற்றி சதவிகிதம் எவ்வளவு?
 • குஜராத் அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கு அரசு காரணமா? அல்லது அதில் முனைப்பட்ட கூட்டுறவு சங்கமா?
 • லிஜ்ஜத் பப்பட்டின் வெற்றிக்கு யார் காரணம்?
 • மும்பை டப்பாவாலா பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். (மதிய உணவு பெட்டியை, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காலையில் பெற்று, அதை உரிய நேரத்தில், மும்பையில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கும் தனி நபர்களிடம் சேர்த்து, பின்னர் காலி பெட்டியை சேகரித்து வீட்டில் கொண்டு சேர்க்கும் பணி). வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள். 99.9999% சதவிகிதம் சரியான வெற்றி. கணிணி இன்றி, படிப்பறிவு இன்றி, இயந்திர மயமாக்கல் இன்றி. Six Sigma தர நிர்ணயத்தில், உலக மதிப்பீட்டார்களின் கணிப்பில் ஒரு அதிசயம். இதில் அரசின் பங்கு 0.00001% கூட இல்லை.
 • அரசு பங்கு பெற்றாலும், தன் பங்கை நிதி உதவியுடன் நிறுத்தி நிர்வாகத்தை தன்னாட்சியாக செயல் பட வழிவகுத்தால் அந்த திட்டங்கள் குறித்த இலக்கில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உதாரணம்: கொங்கன் இரயில்வே, டெல்லி மெட்ரோ
எனக்குத் தோண்றிய சில நுண் வியாபார உரிமை யுக்திகள்:
 • ஆசிரியர்கள் வேலைக்குத் தகுதியான பட்டம் பெற்ற பல வேலையில்லா பட்டதாரிகளின் மூலமாக கிராம மற்றும் சிறு நகரங்களில், மாலை வேலைகளில், அங்குள்ள பள்ளிகளில் பயிலும் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனிக்கல்வி அளித்தல்.
 • அதே போல், பள்ளி வசதிகள் இல்லாத கிராமங்களில், பள்ளி செல்ல வசதியில்லாத (பொருளாதார அல்லது தொலை தூரம்) சிறார்களுக்கு கல்வி அறிவு அளித்தல் – திண்ணைப் பள்ளிக்கூடம். இந்த திட்டங்களை தனியார் நிறுவனங்கள் (Aptech, NIIT) மூலமாக அரசு செயல் படுத்தலாம்.
 • ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவ கூடங்கள் (Health centers) , மருந்தகங்கள் போன்றவற்றை, அப்பல்லோ போன்ற மருத்துவ மனைகள் ஏற்படுத்தலாம். அரசு நடத்தும் primary health center களின் நிலை என்ன என்று நம்மில் பலருக்குத் தெரியும்.
 • BSNL/VSNL போன்ற நிறுவனங்கள், புறநகர் பகுதிகளில் தனியார் தொழில் முனைவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் சேவைகளை இப்போதுள்ள அளவிலிருந்து (PCO விற்கும் மேம்பட்ட) இன்னும் அதிகரிக்கலாம். இணைய மையம், நடமாடும் தொலை தொடர்பு மையங்கள் போன்றவை. சமீபத்தில் Airtel நிறுவனம் மும்பை டப்பாவாலாக்களின் மூலம் தனது pre-paid recharge voucher விற்பனையை துவக்கியுள்ளது. (http://economictimes.indiatimes.com/Airtel_hires_Dabbawallahs_as_salesmen/articleshow/1501785.cms)
 • Food-world, Nilgiris போன்ற பிரபல நிறுவனங்கள் சுகாதாரணமான முறையில் தயாரிக்கப்படும் சிறு/குறுந்தீனி பண்டங்கள்/ உணவுப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யலாம்.
 • பிரபல விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களை நேரடியாக பயிற்றுவிக்கப்பட்ட முனைவர்கள் மூலம் வாடகை மையங்கள் அமைத்து வேலை வாய்ப்பு வழங்கலாம்.

மேற்கூறியவற்றில் பல இப்பொழுதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறன. ஆனால் அவை நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பில் இல்லை, பல இடைத்தரகர்கள் மூலமாக உபயோகிப்போர்களை வந்தடைகின்றன. இதனால் விலையும் அதிகம். நிறுவனங்கள் நேரடியாக செயல் படுத்தும்போது நுண் வியாபார உரிமை முறை செயல் படுத்தப்படுகின்றது. விலையும் குறைய வாய்ப்புண்டு.

இதுவும் ஒரு வகையான வெளிக்கொள்முதல் (outsourcing ன் தமிழாக்கம் சரியா?) தான். தயாரிப்பாளர்களின் தயாரிப்பு மற்றும் வியாபார செலவுகள் குறையும், பரந்த வேலை வாய்ப்பு உண்டாகும்.

நண்பர்களே, இந்த மூன்று பாகங்களில் நான் கூறிய அனைத்தும் வலையில் மேய்ந்த போது எனக்குக் கிடத்தவை மற்றும் என் சுய அலசல்கள். நான் இந்த துறையில் முன்னோடியோ, அனுபவசாலியோ அல்ல.


இந்த தொடர் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நீங்களும் உங்களுக்குத் தோண்றிய நுண் வியாபார உரிமை வாய்ப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.


Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2 ஐ படிக்கநன்றி….