Thursday, November 08, 2007

தீபாவளி தொல்லைக் காட்சிகள் - 1

காலையில் மங்கள நாதத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடங்கின. ஜெயாவின் வேலூர் ஸ்ரீபுரம் பற்றிய தொகுப்பு மிக அருமை. விடியலில் எடுத்த படப்பிடிப்பு மனத்தைக் கொள்ளை கொண்டது.

பின்னர் 6:30 க்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் பழமை சங்கீதம் பற்றிய நிகழ்ச்சிகள், கலைஞரைத் தவிர. சன் - நித்யஸ்ரீ கர்நாடக சங்கீதத்தில் தமிழ்ப் பாடல்கள் , ஜெயா - சுகன்யா ராம்கோபால் நடத்திய லய ராக சங்கமம், பஞ்ச கன்னிகைகள் கடம், மிருதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று புது விதமான ஒரு ஆர்கெஸ்ட்ரா. ஸ்டார் விஜயில் ஹரிஹரனின் ஹார்மோனியம், கஜல், கிடார், தபேலா,  சரோட் என்று வடக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளோடு சங்கீத சங்கமம். கலைஞரில் மட்டும் டாக் ஷோ சத்யராஜோடு, சினிமா தான் வாழ்வின் ஆரம்பமும், முடிவும் என்று.

7:00 மணிக்கு கலைஞரிலும், சன்னிலும் கிட்டத்தட்ட ஒரே நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீகாந்தும், அவர் மனைவி வந்தனாவும் பேட்டி காணப்பட்டார்கள், தலை தீபாவளி தம்பதியாம். கடந்த சில மாதங்களாக வேறு சில காரணங்களுக்காக தொலக்காட்சிகளும், ஊடகங்களிலும் தோன்றியவர்கள் இன்று ஜோடியாக சேர்ந்து வந்தது ஒன்றை நன்றாக நினைவு படுத்தியது. விட்டுக்கொடுத்தல் இருந்தால், வாழ்வில் நலம் பெறலாம் என்பதுதான் அது. ஆனால் அது எப்படி ரெண்டு தொலைக்காட்சிகளும் ஒரே நிகழ்ச்சி. இன்னிக்கு மீண்டும் 'கில்லி' யாட்டமா? போகப்போகத்தான் தெரியும்.

7:30க்கு பொதிகையில் சொர்ணமால்யாவின் 'வந்தாள் மகாலக்ஷ்மி' பரத நாட்டியம். சொர்ணமால்யாவின் முதல் நாட்டிய நிகழ்ச்சியாம். ஹரிபிரசாத்தின் சாரீரம் ரொம்பவும் நன்றாக இருந்தாலும், சொர்ணமால்யாவின் சரீரம் ரொம்ப சங்கடம் கொடுத்தது. இவர் உடம்பு மெலிதாக இருந்த காலத்தில் ஆட வந்திருக்க வேண்டும். இவ்வளவு ரெட்டை நாடியான உடம்பை வைத்துக் கொண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டார். சிகப்புக் கலரில் உடை கண்ணை கூச வைத்தது. ஜெயாவும், சன்னும் சினிமா நிகழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டார்கள், நதியாவும், விஷாலும். ஸ்டார் விஜய் 7:00 மணிக்கே புது பாடல்களை ஆரம்பித்து விட்டனர். இனிமே இன்னிக்கு முழுசும் குத்தாட்டம்தான்.

No comments: