இந்த நட்சத்திர வார அனுபவம் ஒரு சுகம்.
ஒரு வாரம் முகப்பில் நின்று, opening batsman போல நிதானமாக ஆடும் ஆட்டம்.
கண்ணாடி முன் நின்று, தலையை இப்படிக் கோதி, அப்படி வாரி, பக்கவாட்டில் பார்த்து, உதட்டை சுழற்றி, சட்டையை சரி செய்து, இன்று நான் அழகாக இருக்கிறேனா என்று பார்ப்பது போல், எப்பொழுது தமிழ்மணத்தைத் திறந்தாலும், தன்னைத்தானே அழகு காணும் ஆரவாரம்.
தன் வருகைப் பதிவில் எவ்வளவு எண்ணிக்கை கூடியிருக்கிறது, எவ்வளவு பேரை ஈர்த்திருக்கிறோம், யார் யார் மறு மொழியிட்டார்கள் என்று தனக்கு கிடத்த அங்கீகாரத்தைப் பற்றிய ஒரு பரிசீலனை, நித்தம், நித்தம்.
“வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த பூமியில் நமக்கு இடமேது..” என்று எண்ணியோ என்னவோ, பலர் வந்து பார்த்து, ரசித்து (?) மட்டும் போயினர், சிலர், “உள்ளேன் ஐயா..” சொல்லிவிட்டுப் போனார்கள்.
3000த்திற்கு மேல் வரவு, என்னைப் பொருத்தமட்டில் ஒரு வாரத்தில் (சொல்லப் போனால் 5 நாட்களில்) மிக அதிகம், உயர்ந்த பட்ச மரியாதை. (நான் என்ன இட்லி வடையா, டோண்டுவா இல்லை லக்கிலுக் கா, இதற்கு மேல் எதிர்பார்க்க?) வந்தவர்கள் அனைவருக்கும் வந்தனம்.
மறுமொழியிட்டவர்கள் அனைவருக்கும, பதில் கருத்துக்களை ஒரு தனிப் பதிவாக வரும் வாரத்தில் போடுவேன்.
திட்ட மேலாண்மை (Project Management) பற்றிய கட்டுரைத்தொடர் தொடரும்.
என் புரிதலில் ஏற்பட்ட குறையினாலும், வெளியுர் செல்லும் படியான சூழ்நிலையினாலும், முதல் 2 நாட்களுக்கு பதிவுகள் ஏதும் இட முடியவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
எனக்கு என்னை அறியத் தந்து, பிறருக்கும் அறிமுகப்படுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் வணக்கங்களும், நன்றியும்.
3 comments:
நட்சத்திர வாரத்தில் பல்சுவை பதிவுகளை தந்தமைக்கு பாராட்டுக்கள் !
ஐந்த் நாட்களில் அதிகம் பேர் வருகை தந்த தங்கள் பதிவுகள் பாராட்டத்தக்கவை. வாழ்த்துகள். தொடர்க . ஆதரவைத் தக்க வைத்துக் கொள்க
கெடச்ச வார ஒவருல மொத ரெண்டு பந்த தவற விட்டாலும்,மத்த எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிச்சியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்.
Post a Comment