Saturday, January 12, 2008

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth) பிரமிப்புகளின் தொடர்ச்சி:

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth)

பிரமிப்புகளின் தொடர்ச்சி:

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

இரண்டாவது பிரமிப்பு தாய்லாந்தில் நிகழ்ந்தது. இம்முறை விடுமுறையில் குடும்பத்துடன், தாய்லாந்து பயணம் மேற்கொண்டோம். அதில் ஒரு பகுதியாக பாட்டையா சென்றிருந்தோம். கிடைத்த ஒரு அரை நாள் இடைவெளியின் போது எதேச்சையாக ஹோட்டல் லாபியில் உள்ள டூர் டெஸ்க்கில் ஒரு போட்டோவைப் பார்த்தோம். உடனே அதற்கான வழியைக்கேட்டுத் தெரிந்து கொண்டு டாக்ஸி பிடித்துச் சென்றோம்.

அதைப்பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் ‘மயன் மாளிகை’ என்று வர்ணித்தாலே போதும் (ஏன் அது மயனையே கூட நாணித் தலை குனிய வைத்திருக்கும்).  நம் புராதன கதைகளில் வர்ணிக்கப்பட்டது போலவும், சில தந்திரங்கள் நிறைந்த திரைப்படங்களிலும் பார்த்திருப்போமே அது போலவும் ஒர் அற்புதமான அமைப்பு அது. பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று. இப்படியும் ஒரு கட்டுமானம் இருக்க முடியுமா? இதுவும் மனிதனால் சாத்தியமா, இது பூமியா, இல்லை இந்திர லோகமா? என்று ஆச்சரியப்பட வைத்த ஒரு மரக் கோவில்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான ஆச்சரியங்களையும், அற்புதங்களையும் கலந்து ஒரு புது வடிவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்கோவில்.

‘உண்மையின் சரணாலயம்’ இந்தப்பெயர் அதற்கு முற்றிலும் தகும். கலைத்திறனுக்கும், கற்பனை வளத்திற்கும் நம்மை முற்றிலும் சரணடைய வைக்கும் இடம். ஒரு பக்கம் அழகான கடற்கரை. மற்றொரு பக்கம் சற்று உயர்ந்த மரங்களடர்ந்த சோலை, இடையில் இந்த சரணாலயம். அந்தி சாயும் சூரியனின் கிரணங்களினால் குளிப்பாட்டப்பட்டு, கடல் அலைகளினால் தாலாட்டப்பட்டு, சோலைத் தென்றலால் வருடப்பட்டு, ஆகா நாம் இங்கேயே இருந்து விட மாட்டோமா, அங்கு வடித்திருக்கும் தேவர்களுடன் ஐக்கியமாகி விட மாட்டோமா என்று எண்ணத் தோண்றும்.

அப்படித் தங்கி விட்டால், புத்தருடன் புதிர் விளையாட்டு விளையாடலாம், புத்த துறவிகளுடன் வாதம் புரியலாம், கிருஷ்ணருடன் கொஞ்சி விளையாடலாம், சிவனை சீண்டிப் பார்க்கலாம், நாராயணனை நலம் விசாரிக்கலாம், பிரம்மாவிடம் பாடம் கேட்கலாம், பஞ்ச பூதங்களுடன் பல்லாங்குழி ஆடலாம், நர்த்தகிகளுடன் நடனம் புரியலாம், தேவர்களுடன் ஒடிப்பிடித்து விளையாடலாம், குதிரைகளில் ஏறி சீறிப் பாயலாம், யானைகளில் பவனி வரலாம். அப்படி, மரத்தினாலான சிற்பங்கள் ஒவ்வொன்றும், உயிருள்ளவை போலத் தோன்றும்.

சற்றுக் களைப்படைந்து கால்நீட்டி அந்த மரத்தரையில் சாய்ந்து உச்சி முகட்டைப் பார்த்தால், அந்த மரச் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த அந்த சிற்பிகளின் கைகளுக்கு தங்கக் காப்பு அணிவிக்கத்தான் தோன்றும்.

DSC00513

 DSC00514 DSC00516 DSC00517 DSC00520

DSC00524 DSC00526

DSC00528 DSC00533 DSC00554DSC00551

 

கிழக்கு ஆசியாவின் மதங்களை சங்கமிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது இக்கோவில். 1981 ல் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 5 லிருந்து 8 வருடம் ஆகும் என்கிறார்கள், இதைக் கட்டை முடிக்க. அஸ்திவாரம் வரைக்கும்தான் இரும்பும் சிமெண்ட்டும். அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் முழுவதும் முழுக்க முழுக்க மரத்தினாலேயே செதுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தேக்கு மரங்கள். சிற்பங்கள் அருகிலுள்ள தொழிற்கூடத்தில் சிற்பிகளால் செதுக்கப்பட்டு பின்னர் கோவிலில் பொருத்தப்படுகின்ரன. சுமார் 100க்கும் மேற்பட்ட சிற்பிகள் வேலை செய்து வருகிறார்கள். இதற்கு கருத்து வடிவம் கொடுத்து செயல்களை ஆரம்பித்தவர் திரு. குன் லெக் என்கிற கோடீஸ்வரர். சில வருடங்களுக்கு முன் அவர் இயற்கை எய்தினாலும், கோவில் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன.

இந்திய, சீன, தாய் மற்றும் கேமர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு வாயில்களும் ஒவ்வொரு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வாயில் இந்திய, இந்து கலாச்சாரத்தையும், இன்னொரு வாயில் சீன புத்த கலாசாரத்தையும், மூன்றாவது வாயில் லாவோஸ், கம்போடியா கலாச்சாரத்தையும், பிரதான வாயில் தாய் கலாச்சாரத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

இக்கோவிலின் முக்கிய நோக்கமே, மேற்கத்திய கலாசாரமும், தொழில் நுட்பமும் நம்மை ஆக்கிரமித்து, நம் கலாசாரத்தையும், ஆன்மீக வழிமுறைகளையும், நற்பண்புகளையும் சீரழித்து வருவதை தடுத்து, வரும் சந்ததியினருக்கு அதை உணர்த்தவே என்கிறார்கள்.

உண்மையின் சரணாலயம் இயற்கையின் ஏழு படைப்பாளிகளை பிரதிபலிக்கிறது. வெளி, பூமி, தாய், தகப்பன், சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களே அவை.

மிக உயரமான மத்திய கோபுரத்தின் உயரம் 105 மீட்டர். அதன் உச்சியில் கல்கி பகவான் குதிரையின் மீது இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. புத்த சமயப்படி கல்கி, புத்தரின் ஐந்தாவது கடைசி அவதாரமாம்.

ஒரு வாயிலில் தாய், தந்தையருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அழகாக சிற்பங்களினால் செதுக்கியுள்ளார்கள். சயனத்தில் இருக்கும் விஷ்ணுவும், நர்த்தனம் புரியும் சிவனும், நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனங்களின் மீதிலும், கிருஷ்ணாவதார சிருங்கார காட்சிகளும், மகிஷாசுர மர்த்தினியின் சிலையும், மஹாயான போதித்துவத்தை பிரதிபலிக்கும் காட்சிகளும் மிகவும் அழகாக உள் மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பிரம்மாவிற்காக ஒரு தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அங்குலமும், மரச் சிற்பங்களால் நிரப்பப் பட்டுள்ளது.

நாம் கற்களில் வடிக்கப்பட்ட சிலைகளை இந்தியாவில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் மரத்தில் இவ்வளவு தத்ரூபமாக வேறு எங்கும் வடித்ததில்லை. கைத்திறனுக்கும், கலைத்திறனுக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டு. உலக அதிசயங்களில் முதன்மையான ஒன்றாக பாவிக்கப்பட வேண்டியதிற்கான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கலைக்கூடம்.

ஏனே தெரியவில்லை, இன்னும் இது அமைக்கப்பட்ட சுற்றுலாக்களில் (oraganized tours) இது இடம் பெறவில்லை. பாட்டையா சென்று, இதைப் பார்க்காமல் திரும்பினால், பாட்டையா சென்ற பயனே இல்லை.

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

Thursday, January 10, 2008

இரண்டு ஆச்சரியப்பட வைக்கும் அதிசயங்கள். - முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

கடந்த மாதம் இரு சுவையான, ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள். ஒன்று தாய் நாட்டில், மற்றொன்று தாய்லாந்தில். இரண்டு விதமான கோவில்கள், இரண்டுமே தனித்தன்மையுடன் கூடிய, கலை நயம் பொருந்திய அற்புதங்கள். ஒன்று செல்வச் செழிப்புடன் கூடிய கலைத்திறனை வெளிப்படுத்தியது. மற்றொன்று கலைத் திறனையும், கைவேலைப்பாட்டையும் மிகப் பிரமாண்டமாக வெளிப்படுத்தியது. என் அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.

முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

சமீபத்தில், மிகப் பிரமாண்டமாக பேசப்பட்ட, தமிழ்நாட்டில், வேலூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பொற்கோவில். பல ஆண்டு காலமாக கட்டப்பட்டு வந்த இக்கோவில் பற்றிய யாதொரு செய்தியும், ஊடகங்களிலோ, பொது மக்களாலோ பெரிதும் பேசப்படாமலே, சென்ற செப்டம்பர் மாதம் முதல் வழிபாட்டிற்காக பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பல நூறு கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலை பற்றிய செய்திகளை எப்படி அவ்வளவு ரகசியமாய் வத்திருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். கோவிலின் பிரதான வாயில் செல்லும் வரையில் அது எப்படி இருக்கும் என ஊகிக்க முடியவில்லை, ஏனென்றால் அடர்ந்த சோலைகளும், மரங்களும் அக்கோவிலை மறைத்து விடுகின்றன. பிரதான வாயில் சென்றதும்தான் அதன் பரிமாணமும், பிரமாண்டமும் தெளிவடைகின்றது. கோவில் என்னவோ சிறியதுதான் – அம்மன் வாசம் செய்யும் கர்ப்பக்கிரகம், அதன் முன்னிலையில் ஒரு சன்னிதி, மற்றும் இரண்டாம் நிலையில் இன்னொரு சன்னிதி, அவ்வளவுதான். மொத்தமே 1000-1500 சதுர அடிதான். ஆனால் அதன் அமைப்பு, சுற்றுப்புற சூழல் எல்லாம் அது என்னவோ, மிகப் பிரமாண்டமான ஒரு கோவிலைப் போல தோற்றமளிக்கச் செய்கிறது.

 

GT1

 

GT2

GT3

GT4

GT5

GT6

GT7

GT8

GT9

GT10

GT11

(கோவிலின் உள்ளே, கேமராவும் வீடியோவும் அனுமதிக்கப்படாததால், வலையில் கிடைத்த புகைப்படங்களைப் பதித்திருக்கிறேன்)

இது வரையில், தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவிலேயே அப்படி ஒரு சூழலில் கோவில் கட்டப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் ( இங்கே நான் தங்கத்தைக் குறிப்பிடவில்லை, சூழலைத்தான் குறிப்பிடுகிறேன்). கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம். பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தோட்டங்களும், செயற்கையாக அமைக்கப்பட்ட 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியும், கருங்கற்கலால் ஆன சிலைகளும், பின்னனியில் தெரியும் மலைகளும், நீங்கள் உள்ளே நுழைந்த உடனேயே உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லாமல், பரவசம் அடையச் செய்கிறது.

பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க ஒரு பெரிய கூடம் 7 தடுப்புகளாக தடுக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் சுமார் 300 அமரக்கூடிய அளவிற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க வரிசையில் அனுப்படுகிறார்கள். கோவிலின் வெளிப் பிரகாரம் ஆறுகோண நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும், மத்தியில் உள்ள கோவிலுக்கும் சுமார் 100 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த இடைப்பிரதேசத்தில் புல்வெளிகளும், பூந்தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளம் நடந்தால்தான், பொற்கோவிலை அடைய முடியும். (வயதானவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி உள்ளது. ஒரு சிறு தொகைக்கு அதில் கோவில் ஊழியர்களே பக்தர்களை அழைத்துசென்று தரிசனம் செய்வித்து விட்டு கொண்டு விடுகிறார்கள். அந்தப்பணமும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குத்தான் செல்கிறது).

இந்தப்பாதையில் சுற்றி வரும்போது, சூரியனின் கிரணங்கள் கோவிலின் தங்கக் கோபுரத்திலும், மண்டபத்திலும் பட்டு தகதகவென ஜொலிக்கிறது. கோவிலை அடைந்ததும் ஒரு வட்டமான ஒரு சிறு பிரகாரம். இந்தப்பிரகாரத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் இடையே ஒரு அகழி போன்ற அமைப்பு, தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. இந்தத் தடாகத்தில் விழும் தங்கக்கோபுரத்தின் நிழலும், சூரியக்கிரணங்களின் பிரதிபலிப்பும் நம்மை சற்று நிலை தடுமாறத்தான் செய்கின்றன.

இத்தனை அருகில், அவ்வளவு தங்கத்தகடுகள் போர்த்தப்பட்ட கோபுரத்தையும் மண்டபத்தையும், தூண்களையும், சிற்பங்களையும் பார்க்கும் போது, கடவுளையும் சற்று மறந்து, ‘ஆ’வென வாயைப் பிளக்கத்தான் தோன்றுகிறது.

தரிசனம் முடிந்து வாயிலுக்குத் திரும்பும் வழியில் செயற்கை நீறுற்றுகளும் நீர் வழிகளும், கிருஷ்ணாராஜ சாகர், பிருந்தாவன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக செல்லும் போது பிரமாண்டமும், பிரமிப்பும் நம்மை முட்டுவதால், தெய்வ தரிசனத்தில் மனம் அவ்வளவு லயிக்கவில்லை. ஆனாலும் இயற்கை ததும்பும் சூழலில் சுமார் ஒண்ணரை மணி நேரம் காலார நடந்து வந்தது ஒரு புத்துணர்ச்சியையும், தெம்பையும் கொடுக்கத்தான் செய்தன. பௌர்ணமி நிலவில் இக்கோவிலின் அழகு இன்னும் பன்மடங்கு இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உண்மைதான், தன்னிலவு, தங்கக்கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கத்தான் செய்யும்.

இக்கோவில், வரும் நாட்களில், சென்னை சுற்றுப்பயண நிகழ்சிகளில் ஒரு இடம் பிடித்து விடும். கோவில் நிர்வாகமும், கூட்டத்தை சமாளிக்க பலவித முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள். இக்கோவில் தமிழ்நாட்டின் திருப்பதியாக பிரகாசிக்கும்.

(பி.கு :: இவ்வளவு செலவழித்து தங்கத்தில் கோவில் தேவையா, அந்தப்பணத்தை வேறு பல விடையங்களில் செலவழித்து மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கலாமே என்கிற தொனியோடு வருகிற பின்னூட்டங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னைப் பொருத்தவரையில் இது ஒரு விதமான அனுபவம், அதிசயம். பார்த்தேன், ரசித்தேன், பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்)

இரண்டாவது அனுபவம், 10 நாட்களிலேயே தாய்லாந்தில் கிடைத்தது. அதைப் பற்றி வரும் பதிவில்.

வந்தாச்சு, வந்தாச்சு .. டாடாவின் 'நேனொ' பொது மனிதனின் ஒரு லட்சம் ரூபாய் கார்

தில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்பிஷனில், இன்று திரு ரத்தன் டாடா, டாடா நிறுவனத்தினரின் பொது மக்களின் காராகிய ஒரு லட்சம் ரூபாய் காரை அறிமுகப்படுத்தினார். இதன் பெயர் 'நேனோ'. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட, இந்தக் கார் 4  அல்லது 5 பேரை ஏற்றிச்செல்ல முடியும்.

விமர்சகர்களுடைய எதிர்மறையான கருத்துக்களையும், தொழில் முறை போட்டியாளர்களின் எதிர் வாதங்களையும் (குறிப்பாக சுசுகியின்) முறியடித்து இந்த அறிமுகம் நடந்தது.  அந்த மேடையிலேயே இந்தக் காரின் விலை ரூபாய் ஒரு லட்சம் என்றும் அறிவித்தார்.

முற்றிலும் இந்தியத் தயாரிப்பான இந்தக் கார், மேலை, மற்றும் ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.