விசித்திரமான படுக்கை நண்பர்கள் (Strange bedfellows)
மத்தியிலும், மாநிலத்திலும், நிகழும் அரசியல் காட்சிகளைக் காணும் பொழுது, இதைக்கண்டு சிரிப்பதா, இல்லை அழுவதா என்று தெரியவில்லை. நாம், பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சியிலிருந்து, கூட்டுக்கட்சிகள் ஆட்சிக்கு வந்து, தற்பொழுது சிறுபான்மை எண்ணிக்கை உள்ள ஒரு கட்சி ஆள்வதையும் அதற்கு சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையிலும் உள்ளோம்.
வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகள், தாங்களே ராஜாக்கள் போலவும், ஆளும் சிறுபான்மை கட்சி தங்கள் சேவகர்கள் போல நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது தாங்களே மறைமுகமாக ஆட்சி நடத்த வேண்டும் என்று விழைகிறார்கள். இடது சாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியினரின் தற்போதைய நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று ஏதோ தியாகம் செய்வதைப் போல் காட்டிக்கொண்டு, ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மந்திரி சபையில் இடம் பெற்றால், முக்கிய பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை மந்திரி சபைக் கூட்டங்களிலே எழுப்பலாம். ஆனால், மந்திரி சபையில் இடம் பெறாமல், எல்லா முடிவுகளையும், அரசாங்கம் சேரா அமைப்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டதிலும், தேநீர் விருந்திலும், தங்களுடன் அரசு கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசாங்கத்தை விட ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக தங்களை காட்டிக்கொள்ள விழைகிறார்கள்.
பிரதிநிதிகள் எண்ணிக்கையில் எண்கள் குறைவாக இருந்தாலும், அந்த என்ணிக்கையே பெரும்பான்மைக்கு இட்டு நிரப்பும் எண்ணிக்கையாக இருப்பதால், இவர்கள் கை ஓங்கியே இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகும் போது தான் "முடிவெடுக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது", "வேண்டுமானல் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும்" என்று முதன் மந்திரியும், பிரதம மந்திரியும் அறிக்கை விடும் அளவிற்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் செய்யும் மக்கள் நலத்திட்டங்களில் இவர்களும் குளிர் காய்ந்து கொள்கிறார்கள். அதே சமயம், மிகவும் நெருடலாக இருக்கும் திட்டங்களில் அரசுக்கு எதிர் குரல் கொடுத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கவும் முனைகிறார்கள்.
இந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்கு, ஆளும் கட்சிகளே காரணம். சேரா நட்பால் விளைந்த வினையை அவர்கள் தானே அனுபவிக்க வேண்டும். தவளைக்கும், எலிக்கும் ஏற்பட்ட நட்பு போல, இந்த நட்பு எத்தனை காலத்திற்கு நீடிக்கும்? இடது சாரிகளும், காங்கிரசும் எந்த விதத்தில் உத்தமமான நண்பர்கள், பா.ஜ.பா விற்கு எதிரிகள் என்பதைத் தவிர?
Building a website is a piece of cake.
Yahoo! Small Business gives you all the tools to get online.
No comments:
Post a Comment