Wednesday, October 17, 2007

சமர்ப்பணம்

இந்த நட்சத்திர வார பதிப்புகள் அனைத்தையும் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்ய விழைகின்றேன். அவர் யார் என்பதை இந்த பதிவின் முடிவில் அறிவீர்கள்.

வாழ்க்கையில் ஒரு தூண்டுகோல் என்பது அனைவருக்கும் தேவை. அது பல சமயங்களில் நமக்கு வெளிப்படையாகத் தெரியும். இன்னாராலோ, எதோ ஒண்றினாலோ ஈர்க்கப்பட்டு நாம் சில விஷயங்களைச் செய்து அதில் வெற்றியும் கண்டிருப்போம். சில நேரங்களில் இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு அது எது என்று அறியாமலே செய்திருப்போம்.

எனக்கு அவ்வாறு ஒரு தூண்டுகோல் கிடைத்து.

"ஏன் பாலா, நீங்களும் வலைப்பதிவு எழுதக்கூடாது? சில சமயங்களில் நீங்க விவாதம் செய்யும் போது ஒரு தனிப் பார்வை இருக்கு, உங்க விமரிசனங்கள் சரியாவும் இருக்கு. இதையெல்லாம் நீங்க எழுத்தாக்கினா, உங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கும், பொழுதும் போகும்.."

" இல்லேப்பா! எனக்கு அவ்வளவா எழுத வராது. அதுலேயும் தமிழ்லே தட்டச்சு செய்ய எனக்குத் தெரியாது."

" அடே போங்க சார். எனக்கு மட்டும் தமிழ் தட்டச்சு தெரிஞ்சா நான் செய்றேன்? இப்போ ரொம்ப சுலபமா செய்யலாம். முதல்லே உங்க பேர்லே ஒரு ஃப்ளாக் கிரியேட் பண்ணுங்க. அப்புறம் சும்மா எழுதுங்க. அப்படியே இந்த கதைப் போட்டிக்கும் ஒன்னு எழுதி அனுப்பி வையுங்க..."

சரி, எதுக்கும் இருக்கட்டும்னு சொல்லி ஒரு பதிவுக் கணக்கை ஆரம்பித்து "அங்கீகரிக்கப்பட்ட அத்து மீறல்கள்" ன்னு ஒரு பதிவு போட்டேன்.

http://balablooms.blogspot.com/2006/03/blog-post.html

இரண்டு நாட்கள் கழித்து...

"சார்.. கங்கிராஜுலேஷன்ஸ்...." அவரிடமிருந்து ஒரு ஃபோன்.

"என்னப்பா. என்ன விஷயம்..?"

"உங்க ஃப்ளாக், தினமலர்லே, 'இன்றைய வலைப் பதிவு' பகுதியிலே பிரசுரமாயிருக்கு சார். முதல் பதிவிலேயே ஸ்பாட் லைட்டுக்கு வந்திட்டீங்க சார்.."

தினமலர்லே வந்தது என்னமோ ஒரு எதேச்சையான செயல்தான். இருந்தாலும், என் முதல் பதிவே வந்தது, எனக்கு ஒரு 'கிக்' கைக் கொடுத்தது. தொடர்ந்து எழுத முயற்சித்தேன்.

தேன்கூடு அப்போது சிறுகதைப் போட்டி நடத்தியது. அப்போது தேர்தல் சமயமாதலால் தேர்தலைப் பற்றி ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. நானும் கலந்து கொண்டு "தேர்தல் - 2060" என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.

http://balablooms.blogspot.com/2006/05/2060.html

போட்டியின் முடிவில், தேன்கூடு நிர்வாகத்தினிடமிருந்து ஒரு வாழ்த்துச் செய்தி.

"...உங்கள் கதை நான்காவது சிறந்த கதையாக, இன்னொரு கதையுடன் கூட்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் ஓவியத்தில் பிரசுரமாகும். வாழ்த்துக்கள்.."

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...

மேலும் சில நாட்கள் கழித்து....

நண்பர் ஃபக்குருத்தினிடமிருந்து ஒரு குழும மடல் யாகுவில். "நண்பர் பாலமுகுந்தனின், நுண் வியாபாரயுரிமை (Microfranchising ) பற்றிய பொருளாதாரக் கட்டுரை "பூங்கா" வில் வெளியிடப்பட்டுள்ளது, வாழ்த்துக்கள்..."

http://balablooms.blogspot.com/2007/01/microfranchising-2.html

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் என்னையே, எனக்கு அறிமுகப் படுத்திய பதிவுகள். இவைதான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தன. அதுவே உங்கள் முன் இன்று ஒரு நட்சத்திர பதிவாளனாக என்னை முன்னிருத்தியிருக்கிறது.

இந்த ஊக்கத்தை எனக்கு அளித்தவ்ர் இன்று நம்மிடையே இல்லை. காலத்தின் கோலம் அது. அவர் என்னை விட வயதில் சிறியவர். என்னை uncle என்று அழைத்தவர். ஆனாலும் நான் அவரை என் வலைப்பதிவுலக் குரு என்றுதான் கூறுவேன்.

அவர்தான் தேன்கூடு நிருவனராகவும், 'சாகரன்' என்று வலையுலக நண்பர்களாலும்அறியப்பட்ட கல்யாண்.

இந்த நட்சத்திர பதிப்புக்கள் அனைத்தும் அவருக்கே சமர்ப்பணம்.

http://balablooms.blogspot.com/2007/02/blog-post_13.html

5 comments:

cheena (சீனா) said...

நல்லவர்களை நினைவு கூர்ந்து நன்றி கூறுவது என்பது ஒரு நல்ல பழக்கம். அவருக்கு சமர்ப்பணம் என்பது தங்களின் நன்றி உணர்வைக் காட்டுகிறது. வாழ்த்துகள்

Bala said...

சீனா, வாழ்த்துக்களுக்கு நன்றி..

PPattian : புபட்டியன் said...

நான் சாகரன் மறைந்தபின் தமிழ் வலை உலகிற்குள் வந்தவன். ஆனாலும் அவரைப் பற்றி பல பதிவுகளில் படித்து மறைவுக்காக வருந்தியவன். வாழ்க அவர் புகழ்!

உங்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

///நண்பர் சீனா அவர்கள் சொல்லியது: நல்லவர்களை நினைவு கூர்ந்து நன்றி கூறுவது என்பது ஒரு நல்ல பழக்கம். அவருக்கு சமர்ப்பணம் என்பது தங்களின் நன்றி உணர்வைக் காட்டுகிறது. வாழ்த்துகள்///

வழிமொழிகிறேன்

மாயா said...

//நான் சாகரன் மறைந்தபின் தமிழ் வலை உலகிற்குள் வந்தவன். ஆனாலும் அவரைப் பற்றி பல பதிவுகளில் படித்து மறைவுக்காக வருந்தியவன். வாழ்க அவர் புகழ்! //

உங்களுக்கு நட்சத்திர (*) வாழ்த்துக்கள்