Wednesday, May 31, 2006

சார்....போஸ்ட்......

அந்த நிகழ்ச்சி இப்போது நினைவிற்கு வருகிறது. சென்ற வருடம் தீபாவளிப் பண்டிகை. நான்தான் எங்கள் அபார்ட்மெண்ட் சொசைட்டிக்கு செகரட்டரி. பண்டிகையின் போது கார்ப்பொரேஷன் துப்புரவுத் தொழிளாலர்கள், மின் வாரிய கடை நிலை ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள் மற்றும் சில நபர்களுக்கும் தீபாவளி பரிசாக, எல்லோரையும் போலவே நாங்களும், ஒரு சிறு ஊக்கத் தொகை வழங்குவது வழக்கம்.

வழக்கம் போல் சென்ற வருடமும் அவ்வாறே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு லிஸ்ட் தயார் செய்து அதை அபார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்து அனைவருக்கும் பங்கீடு செய்யச் சொல்லியிருந்தேன். பண்டிகை முடிந்து ஒரு வாரம் ஆன பின்னர் காவலாளி என்னிடம் லிஸ்டை கொடுத்து மீதி தொகையையும் கொடுத்தார்.

“ஏன் எவருக்கேனும் கொடுக்க விட்டுப் போய் விட்டதா ?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “இல்லை மேடம். நீங்க சொன்ன மாதிரி எல்லோருக்கும் கொடுத்துட்டேன். ஆனால் நம் தெருவிற்கு வரும் தபால்காரரில் ஒருவர் இந்த அமொவுண்டை வாங்க மாட்டென்னுட்டார்” என்றார்.

“ ஏன், அவர் இன்னும் கூடுதல் தொகை எதிர்பார்க்கிறாரா?”

“இல்லை. இப்போதெல்லாம் அவர் ஊக்கத் தொகை வாங்கறதில்லையாம்”.

“சரி” என்று அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்.டேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எனக்கு அந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்தியது.

இன்று காலை 11 மணி இருக்கும். வாசலில் தபால்காரர் வருகிறாரா எனப் பார்த்து நின்று கொண்டிருந்தேன்.

இந்த எதிர்பார்ப்பு சற்று வித்தியாசமானது. நண்பர்களிடமும், உறவினரிடமும் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது மின்னரட்டை மூலமாகவே தகவல் பறிமாற்றங்கள் முடிந்து விடிகின்றன. கல்யாணப் பத்திரிக்கை போன்ற சில சம்பிரதாயமான ஒரிரு தபால்களே வரும். மற்ற தபால்கள் எல்லாம் Nungai Times, Share brokers mail, Promotion flyers போன்ற junk mail களே.

இன்று நான் காத்திருந்தது அமெரிக்க பல்கலை கழகத்தில் இருந்து என் மகனின் உயர் படிப்பிற்கான admission offer ஐ. ஏற்கனவே மின்னஞ்சலில் admission உறுதி படுத்தப்பட்டு விட்டது. அது தொடர்பான மற்ற ஆவணங்களை தபாலில் அனுப்பவதாக தெரிவித்திருந்தார்கள். இதற்கு முன்னும் ஏணைய பிற பல்கலைகழகங்களில் இருந்து தபால்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த பல்கலைகழகம் அமெரிக்காவின் சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றானாதால், எங்கள் குடும்பத்தில் அனைவரும், இதை மிக ஆவலாக எதிர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தெரு முனையில் தபால்காரரின் தலை தெரிந்தது. உள்ளே அடித்த தொலைபேசியின் மணியையும் உதாசீனப் படுத்திவிட்டு அவர் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வரும் வரை காத்திருந்தேன்.


“கங்கிராஜுலேஷன்ஸ், மேடம். US லேருந்து லெட்டர் வந்து இருக்கு. நிச்சயமா உங்க பையனுக்கு அட்மிஷன் லெட்டராத்தான் இருக்கும்” என்று கூறிய படியே அந்த கவரை என்னிடம் கொடுத்தார்.

“ஆமாமாம். நானும் அந்த கவரத்தான் எதிர் பார்த்துகிட்டிருக்கேன்..” எனக் கூறியபடியே அதை வாங்கினேன்.

“பையனுக்கு வேற யுனிவர்சிடிலேருந்தெல்லாம் கூட வந்திருக்கு போல. எந்த யுனிவர்சிட்டிய செலெக்ட் செஞ்சுருக்கீங்க..” என்றார். மேலும் “இந்த ஸ்டீரெட்லெ 4 , 5 பேருக்கு வந்திருக்கு மேடம். அந்த கோல்டன் மேனார் அபார்ட்மெண்ட்லெ ஒரு பையனுக்கு ஸ்டான்போர்ட் வந்திருக்கு மேடம். உங்களுக்குக் வந்திருக்கிற புர்டியு யுனிவர்சிட்டியும் ரொம்ப நல்ல யுனிவர்சிட்டி மேடம்….” என்றார்.

“ரொம்ப தேங்ஸ். ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த யுனிவர்சிட்டிகளை பத்தி தெரியும்.”

“போன வருஷம், என் பையன் MS படிக்கறதுக்காக இந்த யுனிவர்சிட்டியெல்லாம் பத்தி பேசுவான். அப்புறம் நாந்தான் வருஷா வருஷம் நம்ம தெரு பசங்களுக்கெல்லாம் கவர் கொண்டு வந்து கொடுக்கிறேனே. அப்போ அவங்களோட பேசும் போது கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்”

எனக்கு சற்று வியப்பு கலந்த ஆச்சரியம். தபால்காரரின் மகன் MS ஆ? “என்னங்க. உங்க பையன் MS பண்றாரா? எங்கே? “

“அவனுக்கு ஆஸ்திரேலியாவிலே University of Melbourne லே funding கோட கிடைச்சது மேடம். அதானாலெ அங்கே சேர்ந்துட்டான். ஆச்சு இதோ போன மாதிரி இருக்கு. ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் ஒரு வருஷம். அப்புறம் அங்கேயே வேலை பாக்குறானோ இல்லே எங்கே போறானா…”

“உங்க பையனுக்கு all the best மேடம்…”



பின் குறிப்பு : இது உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதியது.

Saturday, May 27, 2006

நின்றாலும் குற்றம், உட்கார்ந்தாலும் குற்றம்......

ஏன் இந்த விதண்டா(வீண்) வாதமோ தெரியவில்லை. இன்று பார்க்கும் பதிவுகளில்லாம் கழகக் கண்மணிகளின் கடுப்பு தெரிகிறது.

ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை என்றபோது ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கற்பித்தார்கள். இப்போது வந்தபின்பும் ஒரே புலம்பல்.

திரு கருணாநிதியின் மோசமான உதாரணம் தொடரப்படாமல் எதிர்க்கட்சித தலைவர் இன்று சபைக்கு வந்து பேசியும் இருக்கிறார். நான் சபைக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் அறையில் இருந்து சபை நடவடிக்கையை "கேட்டேன்", வரண்டாவில் இருந்து "கவனித்தேன்", (சாலையில் செல்லும் போது நினைத்துப் பார்த்தேன்) என்று சப்பைக் கட்டு கட்டியதற்கு இது எவ்வளோவோ தேவலை.

ஆமாம், இது என்ன புதுவித விளக்கம். ஏழைகளிடம் உள்ள தரிசு நிலங்களை எடுத்து, அதை மேம்படுத்தி பிறகு அவர்களிடம் திருப்பி கொடுப்பார்களாம். இதுதான் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் தரும் திட்டமா? அப்படியென்றால் உங்கள் TV வேலை செய்ய வில்லையென்றால், வசந்த் & கோ வில் மாற்றம் செய்து விடாதீர்கள். திமுக அரசு அதை எடுத்து repair செய்து, இலவச TV கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றி விடும்.

என்னய்யா இது, தலை கால் புரியவில்லை. ok ok இதுதான் அண்ணாயிசம், பெரியாரிசம் போலும்....

சரி, ஏன் நேற்று கலைஞர், தன்னை அதிமுகவினர் தாக்க வந்தபோது "கொல்றாங்க, கொல்றாங்க" என்று கத்த வில்லை. SUN TV Team ரெடியாக இல்லையோ? நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டாரே? அய்யோ பாவம்.

சில பதிவுகளில், ஜெயலலிதா இப்போது கேட்கிறாரே, ஆட்சியில் இருக்கும் போது இவர் என்ன செய்தார்? எனக் கேட்கிறார்கள்.

//இதே விஷயத்தில் அம்மா தனது ஆட்சியில் செய்தது என்ன? இதே 50 லட்சம் ஏக்கர் நிலத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு - பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து பண்ணைகளை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்தார். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இதன் மூலம் சாதித்தது என்ன?// -- சந்திப்பு...

அதை அவர் செய்ததால் தான் இன்று எதிர்கட்சியில் மக்கள் அவரை வைத்திருக்கிறார்கள். பின் ஏன் நீங்களும் அதே தவறை செய்கிறீர்கள்?

// இவர் யாரைக் கேவலப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் நாணயமானவர்கள் என்றால், செலுத்தாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா?.//-- சந்திப்பு...

இது திசை திருப்பும் வாதம். இணையத்தில் சந்திப்புவின் பதிவுகள் நன்றாக இருக்கிறது என்றால் , மற்ற பதிவுகள் எல்லாம் கெட்டவை என்று கூறியதாக அர்த்தமாகுமா? செலுத்தாதவருக்கு தள்ளுபடி என்றால், செலுத்தியவருக்கு இன்னும் அதிகப்படியான ஊக்கம் கொடுக்கவேண்டும்.

By coming to assembly, she has scored a point over her rivals, silenced her critics and revived the norms. The points she expressed were very valid and the Govt. could not provide proper answers.

Wednesday, May 24, 2006

இட ஒதுக்கீடு ஒத்துக்கொள்ளப்பட்டது!....வெற்றி!!.. வெற்றி!!!

அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனது நண்பரும் சக அதிகாரியுமான அவரும் உணர்ச்சி வசப்படவே, இருவரின் குரலும் உயர்ந்தது வெளியில் உள்ளவர்க்கு கேட்டுவிட்டது போலும். நிலமையை உணர்ந்த நாங்கள் இருவரும் நிதானத்திற்கு வந்து, சிறிது நேர மௌனத்திற்கு பின் மீண்டும் எங்கள் வாக்கு வாதத்தை, குரல் தாழ்த்தி தொடர்ந்தோம். ஆனால் இருவருக்கும் கோபம் சற்றும் குறையவில்லை.

இட ஒதிக்கீட்டை பற்றி ஏற்கனவே ரொம்பவும்தான் விவாதித்தாகி விட்டது. இதை நிர்வாகமும் ஒத்துக்கொண்ட பின், கீழ் நிலையில் ஏன் இன்னும் அமுல் படுத்த தயக்கம் என எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. எப்பொழுது போய் கேட்டாலும், இந்த மாதத்தில் இருந்து தொடங்கிவிடுகிறோம், Policy எல்லாம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது, கணக்கீடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இந்த விஷயத்திற்காக பலமுறை நேரில் பேசி, கடிதம் மூலம் நினைவு படுத்தி எல்லாம் செய்தாகி விட்டது.

இன்றைய விவாதம், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததினால் எனக்கு வந்த கோபத்தின் பிரதிபலிப்பே.

"மிக நெருங்கிய நண்பரே, நீங்கள் இந்த விஷயத்தில் இனிமேலும் மெத்தனம் காட்டினால், நான் நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றி முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் உங்கள் பிரிவினரை பாதுகாக்கவும், வளரும் உங்கள் பிரிவின் தேவைக்காகவும் தான் இட ஒதுக்கீட்டு ஆணையை அமுல் படுத்தாமல் இருக்கிறீர்கள் என முறையிடுவேன். பாதிக்கப்படுவது என் பிரிவை சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்து உள்ளார்கள். அவர்கள் என்னை குறை நிவாரணப் பிரிவிற்கு மனு கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் என் நண்பராகப் போய் விட்ட காரணத்தினாலும், இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையாலும், கடைசி முறையாக உங்களிடம் பேச வந்துள்ளேன். ..." இது நான்.

"திரு.............அவர்களே, இட ஒதுக்கீடு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. நீங்கள் கேட்கிற மாதிரி அதை செயல் படுத்தினால், என் பிரிவை சேர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் இது வரை அனுபவித்து வந்த வசதிகள் பறி போய் விடும் , உங்கள் பிரிவினரின் ஆதிக்கத்தை வளர்த்து விடும் என பயப்படுகிறார்கள். எனக்கும் அந்த பயம் உள்ளூர இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினால் அது உற்பத்தித்திறனை குறைத்து விடும் என்றும் பயப்படுகிறேன். இது விஷயமாக நான் ஏற்கனவே மேலிடத்திற்கு எழுதியுள்ளேன். அதற்கு எனக்கு சரியான பதில் வரும் வரையில் நான் எந்த முடிவும் எடுப்பதற்கில்லை, என்னை மன்னிக்கவும்..." இது அவர்.

"OK .. Let me see! .I know what to do hereafter........." எனக் கோபத்தில் நான் வெளியேறும் சமயம், எங்கள் இருவரின் மேலதிகாரியான அவர் வந்தார். அவர் வட நாட்டவர்.

"என்ன இது, நீங்கள் இருவரும் அனுபவத்திலும், வயதிலும் மூத்தவர்கள். இவ்வாறா நடந்து கொள்வது? உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள். நான் சரி பண்ண முடியுமா என பார்க்கிறேன் ...?

உடனே நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கி சொல்லி, முத்தாய்ப்பாக "...this is just a simple space allocation problem. எங்கள் பிரிவில் இருப்பவர் அனைவரும் தணிக்கையாளார்கள். ஊர் ஊராக சுற்றி விட்டு தணிக்கை அறிக்கையை அளிப்பதற்காக தலைமை அலுவலகம் வரும் பொழுதோ, தலைமை அலுவலக வேலைகளை செய்வதற்கோ, எங்களுக்கென்று ஒரு cabin or office இருப்பதில்லை. எங்களுக்கென்று அளித்த இடத்தையும் நண்பர் , கூடி வரும் அவரின் பணியாளர்களின் தேவைக்காக எடுத்துக் கொண்டு விட்டார். I was just arguing about this with him.." என முடித்தேன்.

மேலதிகாரி " Don't worry, I shall make arrangements for your space allocation immediately. For this, don't fight between yourselves. Continue to be friends ...." எனக்கூறி அங்கிருந்து அகன்றார்.

நானும் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் என் இருக்கைக்கு திரும்பினேன்.


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்..........

Monday, May 22, 2006

விவசாயிகள் கடன் ரத்து - இது ஒரு பொருளாதார நடவடிக்கையா?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் மதிப்பு ரூபாய் 6,600 கோடி ஆகும். இந்த செயல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றாலும், பொருளாதார அடிப்படையில் இந்த முடிவு சரியா?

இந்த செயல்பாட்டை அரசியல், சாதி விருப்பு, வெறுப்பு இன்றி விவாதிக்க நண்பர்களை அழைக்கின்றேன்.

நலிந்த விவசாயிகளிக்கு கடன் நிவாரணம் அளிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் பட்ட நஷ்டம் இயற்கை பொய்த்ததாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தாலோ உருவானது. இந்த நஷ்டத்தை கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் ஈடு செய்வதுதான் ஒரே வழியா? வேற வழி ஒன்றும் இல்லையா?

இந்த கேள்வியை அலசும் போது எனக்குள் எழுந்த சில கேள்விகளும், பதில்களும்:

1. கூட்டுறவுக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. ஏன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் (வங்கி என்றே இனி அழைப்போம்) வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வில்லை?

கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் தள்ளுபடி செய்வது சுலபமாகப் போனது. வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் , வங்கிகளும், மத்திய அரசும் இதை அனுமதிக்காது. அவ்வாறு அனுமதித்தால் இந்த தள்ளுபடி மற்ற எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட வேண்டும், இது இயலாத காரியம். (பொதுவாக மத்திய அரசு வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்யும், கடனை செலுத்த அதிக தவணை கொடுக்கும்).

2. அப்படியானால் வங்கிகளில் கடன் வாங்கி, நஷ்டப்பட்டவர்களின் கதி என்ன?

தெரியவில்லை.

3. கூட்டுறவுத்துறை ஒரு தொலை நோக்கோடு உருவாக்கப் பட்ட அமைப்பு. இது ஒரு நுண் கடன் (Micro Credit) அமைப்பு. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்களுக்குட்பட்ட அமைப்பு மூலமாக, சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அது அதிக லாபம் ஈட்டா விட்டாலும், நஷ்டத்தில் இயங்காமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. இவ்வாறு கடன்களை ரத்து செய்தால், அந்த அமைப்புகள் எவ்வாறு தங்கள் செலவீனங்களை ஈடு கட்ட இயலும்?

அரசாங்கம், கடனில் உள்ள மூலதனத்தை (Principal) ஈடு செய்து விடும். அதுவும் பொதுவாக அந்த தொகையை ஒரு மானியமாக கருதி அதை அரசாங்கத்தின் கூடுதல் முதலீட்டாக கருத ஆணையிடும். (that is, the government will instruct the Societies to treat the amount waived as Tier 1 capital and thus increase the investment of the govt in the societies. This is just a book entry and as such there won’t be any additional cash flow into the credit mechanisam). இது எதிர்காலத்தில் கடன் கொள்கையை பாதிக்கும்.

4. இந்த நிவாரணத்தை வேறு எவ்விதமாக வழங்கியிருக்கக் கூடும்?

இது மாதிரி நஷ்டங்களை ஈடு செய்யவே காப்புறுதிக் குழுமங்கள் (Insurance Companies) உள்ளன. அரசாங்கம், விவசாயக் காப்புறுதியை கட்டாயமாக்கி அதற்குண்டான காப்புறுதித் தவணை (Premium)யையும், சிறு மற்றும், மத்திய தர (Small and Marginal) விவசாயிகளின் சார்பாக செலுத்த வேண்டும். காப்புறுதிக் குழுமங்களும் இத்தகைய இழப்பு ஏற்படும் பட்சத்தில், அரசாணையை மதித்து (வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல்), ஈடு செய்ய வேண்டும்.

5. இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

· கடன் தள்ளுபடி என்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாறும். கட்சிகள் சம்பத்தப்பட்ட ஒரு நிலைப்பாடாக இருக்காது.
· கூட்டுறவுத் துறை மேலும் திறம் படுத்தப்படும் (Due to cash circulation).
· கடன் வாங்குபவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் என்றால் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணம் ஏற்படாது.
· கடன் தள்ளூபடியால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை மீண்டும் பொது மக்கள் தலையிலேயே புதிய அல்லது அதிக வரியாக சுமத்த வேண்டிய நிர்பந்ததிற்கு அரசு ஆளாக இருக்காது. காப்புறுதித் தவணைமட்டுமே செலுத்த வேண்டும்.

Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீட்டில் CPM மின் அணுகுமுறை

1) OBC உள்ள Creamy layer ஐச் சேர்ந்தவர்கள் இட ஒதிக்கீட்டில் இருந்து விலக்கப்படவேண்டும்.
2) Forward Community யில் உள்ள பொருளாதரத்தில் பின்னடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் CPM மின் இந்த அணுகுமுறை மிகவும் வரவேற்கத் தக்கதே. இது ஒதுக்கீட்டு முறையை சாதி அணுகுமுறையிலிருந்து, பொருளாதார அடிப்படை அணுகுமுறைக்கு இட்டு செல்லும் பயணத்தின் முதல் மைல் கல்லாகும். இது முதலில் கல்வி நிலையங்களில் அமுல் செய்யப்பட்டு, பின்னர் வேலை வாய்ப்புகளிலும் செயலாக்கப்பட வேண்டும்.

இத்தனை நாள் இருந்து வந்த சாதி வழி ஒதுக்கீடு முறையை மாற்ற அரசுக்கு கிடத்த நல்ல ஒரு சந்தர்ப்பம். இப்போதுள்ள பல சங்கடங்களுக்கு நிரந்தர தீர்வு காண வழி வகுக்கும்.

இப்போது பிரதமர் அமைத்துள்ள நால்வர் சபை, இந்த ஆலோசனையை நாட்டு நலன் கருதி ஏற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பல நல்ல ஆலோசனைகளை அளித்து உள்ளன. பாராட்டுகள்.

Tuesday, May 16, 2006

தேர்தல் - 2060 - ஒரு கற்பனை

தேர்தல் - 2060

ரமேயின் (ரமேஷின் சுருக்கமே ரமே. இக்காலத்தில் பெயர் இரெண்டு எழுத்துக்கு மேல் இருந்தால் ரொம்ப கஷ்டம்) தூக்கம் Public address systeத்தில் வந்த அறிவிப்பால் கலைந்தது. ரமே தினமும் செல்லும் சாலையின் நெரிசல், அரசாங்கத் துறைகளில் இருந்த வரும் தனிப்பட்ட முறையிலான தகவல்கள், உடையும் செய்திகள்(Breaking news) அனைத்தும் இதில் அறிவிக்கப்படும்.

"நண்பர் ரமேஷிற்கு காலை வணக்கம். இன்று தேர்தல் நாள். நீங்கள் 15 வயது பூர்த்தியானவுடன் வாக்களிக்கப் போகும் முதல் தேர்தல். வாக்கு அளிப்பதற்காக உங்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நேரம் 10:15 முதல் 10:30 வரை. இந்த நேரத்தில் உங்கள் கைத்தொடர்பு சாதனம் மூலமாக 956-323-187 எண்ணை தொடர்பு கொள்ளவும். அதன் பின் உங்களுக்கு கொடுக்கப்படும் தகவல் படி நடக்கவும். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் வாக்களிக்கத் தவறினால் அரசியல் அமைப்பின் 98 (c) பிரிவின் 543 வது மாற்றல் படி உங்களின் எரிவாயு ஒதுக்கத்தில் (fuel quota) 10 விழுக்காடு குறைக்கப் படும். உங்கள் வாகன நிறுத்தக் கட்டணம் 10 விழுக்காடு உயர்த்தப் படும். உங்கள் திருமண அனுமதி ஒரு வருடம் ஒத்தி போடப் படும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய பிற செய்திகளை அறிய வேண்டுமானால், www.1000lights.elections.2060.org வலைத்தளத்தில் மேயவும். நன்றி."

இந்த அறிவிப்புதான் ரமேயின் தூக்கத்தை தூரம் போகச் செய்தது. அவனுக்கு இந்த தேர்தல் முறை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் சலுகைகள் பறி போய் விடுமே என்ற பயமும், சுலக்கிற்கு (சுலக்ஷ்ணா) எழுதிக் கொடுத்த ("எனக்கு திருமண அனுமதி வந்த நாளிலிருந்து 3 வருடத்திற்கு உன்னை என் மனைவியாக வசீகரித்துக் கொள்வேன். இல்லையென்றால் .. ப்ளா.. ப்ளா... ப்ளா....") ஒப்பந்தமும் நினைவிற்கு வந்து pocket கணிணியை எடுத்து வைத்து மேய ஆரம்பித்தான்.

தேர்தல் சட்டம் (2025) மற்றும், 2030, 2032, 2040, 2043, 2047, 2051, 2055, 2059 ல் செய்யப்பட்ட திருத்தங்களின் முக்கிய விதிகள்.

1) ஒவ்வொரு தொகுதியும் 1 மில்லியன் (லட்சம், கோடி எண்ணிக்கை முறை BPO வந்த சில வருடங்களிலேயே போய் விட்டது) வாக்காளர்கள் கொண்டது.

2) வாக்களிக்க ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் Junior college வரை படித்து இருக்க வேண்டும்.

3) வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட குழுமங்களாக (registered companies) இருக்க வேண்டும். ( 2047ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்ததின் படி எல்லாத் தொகுதிகளும் தனியார் மயமாக்கப் பட்டுவிட்டன.).

4) வேட்பாளர்கள் கடந்த 3 வருட வர்த்தக நிதி நிலை அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

5) அரசாங்கத்திற்கு அளிக்கும் தொகுதி வருட உறுதித் தொகையின் (Yearly Guarantee Money) மதிப்பை அறிவிக்க வேண்டும்.

6) வென்ற வேட்பாளர்கள், தொகுதியில் உள்ள வர்த்தக மற்றும் தனி மனிதர்களிடமிருந்து ஆளுமை வரி (Governance Tax) வசூலித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூல் ஆனால் அதிலிருந்து ஒரு குறிபிட்ட சதவிகித்தை (அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டது)அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

7) வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களில் இருந்து ஒருவரையோ அல்லது இதில் எவரும் வேண்டாம் என்றால், "ஒருவரும் இல்லை' என்றோ அல்லது தனக்கு பிடித்த ஒரு குழுமத்தையோ பரிந்துரை செய்யலாம்.

8) எந்த வேட்பாளர், வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையில் 50 சத விகிதத்திற்கு மேல் ஆதரவு பெற்றிருக்கிராறோ அவரே அந்த தொகுதியை ஆளுமை செய்ய அனுமதிக்கப் படுவார்.

9) இந்த குழுமங்களின் தொகுதி ஆளுமை, தேர்தலில் வென்ற குழுமங்களினால் தேர்ந்து எடுக்கப்பட்ட 20 நபர் கொண்ட ஒரு மேளாண்மைக்குழுவால் கண்காணிக்கப் படும்.

10) ஒரு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் திறனாய்வு வாக்களிப்பில் இந்த குழுமங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்களாம். பெரும்பான்மை ஓட்டு மூலம் இந்த குழுமங்கள் தொடர்ந்து ஆளவோ இல்லை வேறொரு குழுமத்தை தேர்ந்தோ எடுக்கலாம்.

உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றி அறிய இங்கே கிளிக்கவும்:

1000lights_candidates

1) SUN (Sakalanithi Universal Network) Ltd.,

2) Congress (TAMILNADU) Ltd.,

3) Kollywood Ltd

4) PepsiCola India Ltd.,

5) Reliance Governance Ltd.,

6) Domacratic Company of India Ltd.,

7) Hindutva Group of Companies Ltd.,

8) Communism Corporation Ltd.,

9) None of the above

10) My choice. ...............................

ரமே கைத்தொடர்பில் நேரம் பார்த்து பின் சபித்தான். இன்னும் 15 நிமிடம் இருக்கிறது. இப்போது தொடர்பு கொண்டால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க விடாது. சரியாக 10:15 ஆனதும் கைத்தொடர்பில் 956-323-187 அமுக்கினான்.

"வணக்கம் திரு. ரமேஷ் அவர்களே. வேட்பாளர்கள் பற்றி அறிய எண் 1 ஐ அமுக்கவும். தேர்தல் விதி முறைகளை அறிய எண் 2 ஐ அமுக்கவும். தேர்தல் ஆணயம் பற்றி அறிய எண் 3 ஐ அமுக்கவும். வாக்களிக்க எண் 4 ஐ அமுக்கவும். தொடர்பை துண்டிக்க எண் 9 ஐ அமுக்கவும்" .

4 க்கினான். "உங்கள் திரையில் 1000 விளக்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் தெரியும். உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு எதிரே தெரியும் எண்ணை அமுக்கவும்"

10 க்கினான். "நீங்கள் பரிந்துரைக்கும் குழுமத்தின் பெயரை சொல்லவும்...."

ரமேக்கு கோபமீட்டர் ஏற ஆரம்பித்திருந்தது. "போடா போக்கத்தவங்களா..."

"மன்னிக்கவும். நீங்கள் கூறிய பெயரில் எந்த ஒரு குழுமமும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மீண்டும் வேட்ப்பாளர் எண்ணை அமுக்கவும்.."

9 க்கினான். "உங்கள் தீர்மானம் நிச்சயமா? வேட்பாளர்களில் எவரையும் பிடிக்கவில்லையா? அப்படியானால் மீண்டும் ஒரு முறை அதே எண்ணை அமுக்கவும்.."

மீண்டும் 9. "நீங்கள் இந்த தேர்தலில் பங்கு கொண்டமைக்கு நன்றி. இருப்பினும், உங்கள் முடிவால் ஆளுமை அமைக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். எனவே இந்த அரசாங்கம் உங்கள் திருமண அனுமதியை 6 மாதம் தள்ளி வைதிருக்கிறது. வணக்கம். மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திக்கலாம்..."

கோபமீட்டர் உடைந்தது. "தே..." ஆரம்பித்து சற்று நிறுத்தினான். கைத் தொடர்பு துண்டிக்கப் பெற்றிருக்கிறதா என்று உறுதி செய்தவுடன் "வி.......ங்ளா.."

http://balablooms.blogspot.com



கர்நாடகாவின் தோல்வி........

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விரிவாக்கம் பெங்களூரில் வேண்டாம் : கர்நாடக முதல்வர்
15 மே 2006
ஆதாரம்: வெப் உலகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான இடவசதிகளை பெங்களூரில் அமைத்துக் கொடுக்க முடியாத காரணத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்தை கர்நாடகாவின் பிற பகுதிகளில் அல்லது மற்ற மாநிலங்களில் ஏற்படுத்திக் கொள்ளும்படி கர்நாடக முதல்வர் எச்.டீ. குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், `மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் தொழில்துறையை விரிவாக்க அரசு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அதற்கு தொழில்துறை முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.


பெங்களூரில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகளையும் விளைவுகளையும் ஆராய வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதை அரசு உணர்வதாக கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.


சமீபத்தில் பெங்களூர் அருகில் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தால் கர்நாடகாவில் அமையவிருந்த பேப்சிட்டி (Fabcity) ஆந்திரபிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


News sourced from: http://content.msn.co.in/Tamil/InfoTech/News/0605-15-4.htm

ஒரு பக்கம், முதலீட்டை துரத்தும் மாநிலங்கள். (கொல்கத்தா கூட துரத்துகிறது). மறுபக்கம், இங்கே வராதே, வெளியெ போ என்கிற கர்நாடகா.
திட்டமின்மை, தொலைநோக்கின்மை மற்றும் விழிப்பின்மை காரணாமாக பெங்களூரு திணருகின்றது. இப்பொழுது விட்டால் பிறகு பிடிக்கமுடியுமா?