Thursday, June 12, 2008

சமுதாயச் சீரழிவுகள்

கடந்த சில நாட்களாக கேள்விப்படும் செய்திகள்,  தொண்மை வாய்ந்த, வளர்ந்த செழிப்பான நாகரீகம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் நமது நாகரீகம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையை எட்டியிருக்கிறது என்பதை தெளிவு படுத்தும். அறியாமையை விலக்கி, பகுத்தறிவோடு கூடிய உணர்தலை புகட்டக்கூடிய கல்வியறிவு பெற்ற சிலர் எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்துள்ளார்கள் என்று அறியும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

மனைவியும், கணவரும் டில்லி அருகில், நொய்டாவில்  பல் மருத்துத் துறையில் இருப்பவர்கள்.  கணவர், தன் 14  வயது மகளை கொலை செய்திருக்ககூடும் என்று காவல்துறை கருதி அவரை சிறையில் வைத்துள்ளது.

நன்கு படித்த, பல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்யும், நான்கு மென்பொருள் பொறியாளர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மிரட்டி பணம் பறித்தார்கள் என்கிற குற்றத்திற்காக பெங்களூருல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தன் பழைய காதலனை, புதிய காதலனோடு சேர்ந்து சதி செய்த கொன்ற குற்றத்திற்காக, MBA படித்துக் கொண்டிருந்த மாணவிக்கும் மாணவனுக்கும் புனாவில் உள்ள நீதி மன்றம், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தன் உடன் வேலை பார்த்த விமான உபசரிப்பு பெண் ஊழியரை,  தங்கும் விடுதியின் அறையில் கொலை செய்த குற்றத்திற்காக,  சக விமான செலுத்துநர்(co-pilot), மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் சகோதரியைக் காதலித்த குற்றத்திற்காக, காதலனைக் கொன்ற வழக்கில், யாதவ் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தில்லி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும், கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்தவை. ஊடகங்கள் மூலமாக பெரிதாக விவாதிக்கப்பட்டதால் அறியப்பட்டவை. இக்குற்றங்களில் சம்பத்தப் பட்டவர் அனைவரும், மத்திய தர வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள். நல்ல படிப்பறிவு  பெற்றவர்கள். கல்வியறிவை, தன் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை நெறித்திறனை மேம்படுத்த உபயோகப்படுத்தாமல், நெறி கெட்டு மற்றவர்களின் உயிரைப் பறிப்பதற்கு உபயோகப்படுத்தும் இந்த சமுதாயப் பதர்களை, சட்டங்கள் மிக அதிகபட்ச தண்டனை வழங்கி, சமுதாய மேன்மைக்கு மேலும் பங்கம் வராமல் காக்க வேண்டும்.

Tuesday, May 27, 2008

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
தில்லி, நொய்டா சிறுமி கொலை வழக்கில், ஊடகங்களின், குறிப்பாக தொலைக்காட்சிகளின் போக்கு மிகவும் அநாகரிகமானது. எள்ளளவு கூட மனதாபிமானம் இல்லாமல், அச்செய்தியை கூறு போட்டு, கூப்பாடு கூவி விற்று, தங்களின் ‘Air time’ நிரப்பிக் கொண்டதுமில்லாமல், ‘TRP rating’கை உயர்த்தவும் உபயோகப்படுத்திக் கொண்டது. தொலைக்காட்சிகள், வேட்டை நாய் போல் தேடித் தேடி, துருவித் துருவி, தெருவில் போவோர் வருவோர் அனைவரையும் பேட்டி கண்டு, , காவல் துறையினரை ஒரு முனைப்போடு செயல் பட முடியாமல் வைத்து விட்டன.

காவல் துறை வழக்கில் கவனம் செலுத்தாமல், பேட்டி கொடுப்பதிலும், அறிக்கை விடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். வழக்கு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே காவல் துறை அதிகாரி மாற்றப்படுகிறார். இத்தனைக்கும் அவர் செய்தது என்ன? ஃபாரன்ஸிக் அறிக்கை வந்த பிறகுதான் திட்ட வட்டமாக எதுவும் கூற முடியும். அதற்கு ஓரிறு வாரங்கள் ஆகலாம் என்றார். அதில் ஒன்றும் தவறில்லையே? முறையாக ஒரு வழக்கை நடத்தினால்தான் அதில் தவறின்றி முடிவெடுக்க முடியும். இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒரு வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடத்த முடியுமா?

அவருக்குப் பின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி என்ன பேட்டி கொடுக்கிறார்? அந்த சிறுமியும், வீட்டில் உதவியாளாராக இருந்தவரும் இருந்த நிலை கண்டிக்கத் தக்கதாக (‘objectionable’) இருந்ததாகவும், ஆனால் அதே சமயம், அவர்கள் தன்னிலை (compromising) தவறி இல்லை என்றும் பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன திரைக்கதை வசனகர்த்தாவா, கதை எழுத? இந்த வார்த்தைகளின் விளைவுகள் தெரியாமல் பிரயோகப்படுத்தலாமா? அதுவும் SSP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள்? இவர்கள் பேட்டி கொடுக்கும் நேரத்தை வழக்கில் செலுத்தியிருந்தால், சிறுமியின் மரணத்திற்கான காரண, காரியங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

ஊடகங்கள் இச்சம்பவத்தை ஒரு “கௌரவக் கொலை (Honor killing)” என ஒரு புது அடைமொழி கொடுத்து வர்ணிக்கின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானில் ஒன்று அறியாத பலரை தவறுதலாகக் கொன்றதற்கு, அமெரிக்கர்கள் கூறிய “collataeral damage” என்கிற வர்ணணை போல, சிறிதும் ஈவு இரக்கமின்றி எப்படி இவர்களால் இப்படிக் கூறமுடிகின்றது. இவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள் இல்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?
காவல்துறையினர் கூறும் ஒரு முக்கிய தடையம் என்ன தெரியுமா? ஹரித்துவாரில், ஈமக் கிரியை நடத்தும் இடத்தில், சிறுமியின் அப்பா, மரணம் இரவு 2 மணிக்கு நடந்ததாக பதிவு செய்துள்ளாராம். ஆனால் விசாரணையின் போது காலை 6 மணிக்குத்தான் தனக்கு மரணம் பற்றி தெரியும் என்றாராம். சம்பவம் நடந்த நேரமும், தெரிந்த நேரமும் வித்தியாசமாக இருக்கலாமே? இதில் என்ன தடையம் கிடைத்திருக்கக்கூடும். இந்த விதமான கோமாளித்தனமான விதத்தில் தான் விசாரணை செல்கிறது.

போதாதற்கு, உடன் பணி புரியும் பெண் மருத்துவருடன் தகாத உறவு என்று ஒரு குற்றச் சாட்டு. இனி அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் கூடுமான வரை எதிர் பாலர் இல்லாத அலுவலகத்தில் தான் பணி செய்ய வேண்டும். நம் போதாத காலம், ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால், இது மாதிரிதான் நம் மானமும் பறிபோகும். தமிழகக் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கஞ்சா எடுப்பதைப்போல, இந்த தகாத உறவு, வடக்கத்திய பாணி போலும்.

இதில் முக்கியமாக இந்த சிறுமியின் மானத்தை விலை போட்ட இந்த தொலைக்காட்சிகளும், காவல் துறையும், துச்சாதனனை விடக் கொடியவர்கள். ஊடகங்கள், பிணம் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி கழுகுகளும், வல்லூறுகளும் அதை கொத்திக் கிளறி பிண்டத்தை வாறி இறைக்குமோ, அப்படி பால் வடியும் முகம் கொண்ட சிறுமியை, பச்சிளம் மாறாத ஒரு குழந்தையை சின்னா பின்னப் படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்கள் அனைவரும், தத்தம் தொழிலில், நன்கு படித்து, அனுபவம் பெற்றவர்கள். செய்தியை மக்களுக்கு எப்படி அளிக்க வேண்டும் என்று அறிந்தவர்கள். ஒரு துர்மரணச் செய்தியை எப்படி வியாபாரமாக மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை.

இதில் என்ன ஒரு அலங்கோலம் என்றால், 25ம் தேதி ஊடகங்களின் முக்கிய செய்தி கர்நாடக தேர்தல் நிலவரம் ஆகும். கல்யாணப் பந்தி முடிந்து எச்சில் இலைகள் குப்பைத்தொட்டியில் விழும் போது எப்படி தெரு நாய்கள், பக்கத்து தொட்டியிலிருந்து அடித்து, பிடித்து இன்னொரு குப்பைத் தொட்டிக்குத் தாவுமோ அப்படித் தாவி தேர்தல் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தனர். கேட்டால் இதுதான் இதழியல் (journalism) என்பார்கள், வெட்கம் கெட்டவர்கள்.

இந்நிகழ்வுகளில், பாரட்டப்பட வேண்டியவர்கள் மத்திய மந்திரி திருமதி ரேணுகா சவுத்திரியும் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளும்தான். ஒரு சிறுமியை தவறாக சித்தரித்து களங்கப்படுத்தியதற்காகவும், அவர் பெயரைக் கூறி அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் juvenile சட்டங்களின் படி காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தொலக்காட்சிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, May 05, 2008

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்

சென்ற வெள்ளிக்கிழமை (மே மாதம் 2 ம் தேதி) பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய ஒரு கருத்தரங்கம் ரியாத், சௌதி அரேபியாவில் நடை பெற்றது. அதில் நான் வாசித்தளித்த கட்டுரை.
........

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்
(கோ. பாலமுகுந்தன்)

மேதகு இந்தியத் தூதர் அவர்களுக்கும், எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஏனைய பெரியோர்களுக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

பாவேந்தரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், எனக்கும் ஒரு பங்களித்து, சந்தர்ப்பம் தந்துதவிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் நன்றி.

ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இந்த பாடலை ஒலி பரப்பி என் உரையை வாசிக்கிறேன்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தில் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா
அறமிதென்றும் மறமிதென்றும் யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா..”

இதயத்தின் வலிக்கு இசையை அழைத்தவன். வன்முறையை நீக்கி, ஏழ்மையைக் களைவதற்கு தமிழை துணைக்கு அழைத்தவன். கல்வி புகட்ட வள்ளுவனை ஆசானாய் ஏற்றவன். தமிழே மூச்சாய், தாரக மந்திரமாய், தரணியெங்கும் தழைத்தோங்க சங்க நாதமிட்டவன்.

பாவேந்தர் பற்றி பேசும் போது இயற்கையுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பை மறக்க முடியுமா? புரட்சிக் கவிஞரின் மறு பக்கம் என்று சொல்லக் கூடிய வகையிலே அவர் இயற்கையை வர்ணித்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ ஒரு தெவிட்டாத தேன். மங்காத ஒளி. வர்ணனைகள் காட்சிகளை கண் முன் கொண்டு நிறுத்தும். கை கோர்த்து நடத்திச் செல்லும்.

அவற்றிலிருந்து சில வர்ணணைகளை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடற்கரையை, தினம் வந்து போகும் காதலர்கள் பதித்த கால் தடங்களால் வரையப்பட்ட ஒரு பெரிய புள்ளிக் கோலம் என்று வர்ணிக்கும் கவிஞர்கள் மத்தியில், அதை ஒரு மணல் மெத்தையென்றும், அங்கே மேவும் நீர் அலைகளை, கல்விக் கூடத்தில் பாடம் பயிலும் இளைஞர்களின் எழுச்சி மிகு பூரிப்பிற்கு ஒப்பிடுவதும் இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.
…..
கடல் ஆர்ப்பரித்த முழக்கத்தை இசையாய் வரித்த வாணர் இவர்.
“கடல் நீரும் நீல வானும் கை கோக்கும்!
அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை;
அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்து இன்பத்தை
வடிக்கின்ற புலவன்!
தம்பி, வண்கடற் பண் பாடல் கேள்”
அதனால் தான் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..” என்று ஏங்கினானோ?
….
‘அழகு’ என்றாலே கவிஞர்களுக்கு எப்போதும் ஒரு பரவசம்தான். அழகைக் கண்டால் ‘ஆடாத மனமும் உண்டோ?’ அழகை ஒரு பெண்ணாகவே பாவிக்கும் கவிஞர்கள் தான் இந்தப் புவியில் உண்டு. சுப்பு ரத்தினம் இதற்கு விதி விலக்கா? ஆனால் என்ன, மற்றவர்கள் மங்கையை (அழகை) நிலவில், இரவில் அதன் ஒளியில் கண்டனர். இவர் கதிரவனின் இளம் காலைக் கதிரில் கண்டார். கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் கண்டார்.

தென்றலை திகட்டாமல் வர்ணிக்கும் வள்ளல் இவர். “தென்றல் வந்து என்னைத் தொடும். சத்தமின்றி முத்தம் இடும்” என்றார் ஒரு கவிஞர். இவரும் அவ்வாறே தென்றலின் குறும்பை வர்ணிக்கிறார். “பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை” என்று. குழந்தையின் நெற்றியில் விழும் சிறு குழலை அசைந்தாட்டி, மழலையை சிலிர்க்க வைக்கும் தென்றலைப் போற்றுகிறார்.
“கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்தனங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள், தமிழைத் தந்தாள்,
தமிழ் எனக்கு அகத்தும், தக்கத் தென்றல் நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேண் அன்றோ?” என்று தென்றலுக்கு தலை வணங்கி நன்றி சொல்கின்றார்.
….
குமுத மலரை பெரும்பாலான கவிகள், காதலியின் இதழ்களுக்கும், கண்ணிற்கும் ஒப்பிடுகையில், “கரிய பாம்பின் தலைகள் போல நிமிர்ந்திருந்த தாமரை சிற்றரும்புகள்” என்று சற்று பயம் ஏற்படும் வண்ணம் வர்ணித்தாலும், உடனே அடுத்த வரியிலேயே “மங்கைமார் செங்கை ஏந்தி அணி செய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போல” என்று தாமரை மொட்டை, ஒளிச்சுடருடன் ஒப்பிடுகிறார்.

மயிலைப் பற்றி இவர் யாது கூறுகின்றார்? “மயிலே! நீயும் பெண்களும் ஒருவருகொருவர் சமம் தான், நடையின் ஒயிலிலாகட்டும், மெல்லிய இடையிலாகட்டும், வண்ணத் தோன்றலிலாகட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் நிகர்தான். ஆனால் ஒன்றில் மட்டும் வேறுபடுகிறீர்கள். கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க உனக்கு நீள் கழுத்து அளித்தாள் இயற்கை அன்னை. ஆனால் பெண்களுக்கோ, அயலான் வீட்டில், அறையில் நடப்பதை எட்டிப்பார்க்காதிருக்க குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்’’’ என்று கூறி
“இங்கு வா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக! “ என்று வம்பிற்கு இழுக்கிறார்.
….
கானகத்தைப் பற்றி இவர் வர்ணனையில் ஒரு காட்சி:
பெட்டைக் கோழியைத் தேடி ஒடும் காட்டுச் சேவலின் சிறகுகள் பட்டு, செடி கொடிகளில் படர்ந்திருந்த கொசுக் கூட்டங்கள் உயரப் பறக்குமாம். அவ்வாறு அவை பறக்கும் போது கரு மேகங்களை ஒத்திருக்குமாம். உடனே கான மயில்கள், கார் மேகங்கள் தான் வந்து விட்டன என்று மகிழ்ந்து தன் தோகைகளை விரித்து ஆடத் துவங்குமாம். அந்த மகிழ்ச்சியான ஆட்டத்தில் சுழன்று, சுழன்று தரையிலிருந்தும், மரக் கிளைகளிலிருந்தும் ஆடும்போது, தோகைகள், மரக்கிளைகளில் இருக்கும் தேன் கூடுகளின் மேல் பட்டு அந்தக் கூடுகள் உடைந்து அதிலிருந்து தேன் வழியுமாம். அந்தத் தேனுக்காகத் தவமிருக்கும் கரடி, வழியும் தேனைக் குடித்தபடி, மயிலுக்கு நன்றி கூறுமாம்.
ஆகா!! என்ன ஒரு கற்பனை வளம். கேட்கும் போதே காட்சி கண் முன் முப்பரிமாணத்துடன் தெரிகின்றதோ?
….
நதியைப் பற்றியும், நதியில் வரும் புனல் பற்றியும் இவர் பார்வையே அலாதி. வறண்ட நதியில் இருக்கும் மணற்துகள்களை, உதிர்ந்த தாழம்பூவின் பொடிகளுக்கு ஒப்பிடுகிறார். விளை நிலங்கள் நடுவே இருக்கும் வறண்ட நதியில் வானவில்லைக் காண்கிறார். பெருஞ்சிங்கமொன்று அறைந்தால், எப்படி ஒரு மத யானை, பலமாக பெரும் சப்தத்துடன் கீழே விழுமோ அவ்வாறு வந்தது வெள்ளம் என்கிறார். கரையோர மரங்கள், தன் கிளைகளிருந்து பூக்களை சொரிந்து வெள்ளத்தை வரவேற்றன வென்றும், உழவுப் பெருமக்கள், தம் நோய் தீர்ந்தது, வறுமை ஒழிந்தது என்று ஆடிப்பாடினரென்றும், அதனைக் கண்டு, எப்படி ஆனந்தக் கூத்தாடும் தம் மக்களைக் கண்டு ஒரு தாய் பேருவகை கொள்வாளோ அவ்வாறு அந்த நதியன்னை, அசைந்து அசைந்து பெருமிதத்துடன் சென்றாள் என்று முடிக்கிறார்.
….
கானலைப் பற்றி பாவேந்தர் கூறியதை உங்களுடன் பகிர்ந்து என் உரையை முடிக்கிறேன். இது பாலை வாழ் நமக்கும் சாலப் பொருந்தும்.
“வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல்எழுப்பும்!
கானலில் நான்நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லைஅங்கே!
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா (து)- எடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

திடுக்கென விழித்தேன் –நல்ல
சீதளப் பூஞ்சோலை”

ஆம்! விழித்தெழுந்தேன் !! பாவேந்தர் புகழ் பாடும், நல்லெண்ணம் கொண்ட பெருந்தகையார் நடுவில், தமிழே சுவாசம் என்று பூத்துக் குலுங்கும் இச்சோலையிலே.

நன்றி, வணக்கம்.

***************


அரங்கேறிய நிகழ்வு:

பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.

முன்னிலை: மேதகு இந்தியத் தூதர் , திரு.பரூக் மரைக்காயர் அவர்கள்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்

Tuesday, April 22, 2008

சொர்க்கத்தின் வாசற்படி…….

சொர்க்கத்தின் வாசற்படி…….

 

அது ஒரு மாலைப்பொழுது. சுமார் 7 மணி இருக்கும். தொலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "….கிருஷ்ணமூர்த்தி மாமா is no more. அரை மணி நேரம் முன்னாடி ஆச்சாம். நட்டு மாமாதான் கூட இருந்தாராம்…" என்று சொல்லி நிறுத்தினாள் என் சகோதரி. சமாசாரத்தைக் கிரகிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இந்த இழப்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அது நிகழும் போது, உள்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல. சதையும் இரத்தமுமாய் இருந்த ஒரு உறவு, திடீரென இல்லை, இனி வெறும் சடலம். சில மணி நேரங்களுக்குப் பிறகு வெறும் நினைவுகள்தான் என்பது எளிதில்  சீரணிக்கமுடியாத ஒன்று. எங்கள் மாமா, கடந்த ஒரு வருடமாகவே ஆஸ்பத்திரியும், வீடுமாய் மாறி மாறி வசித்துக்கொண்டிருந்தார். கடந்த முறை அவரைப்பார்த்த போது, இவர் இன்னும் ஓரிறு மாதங்கள்தான் இருப்பார் என்று நினத்தேன். அவர் படும் சிரமங்களைப் பார்த்த போது, எல்லோரும் மேலும் மேலும் வாழப் பிரார்த்திக்க, நான் இவர் பட்ட துன்பங்கள் போதுமென்று சீக்கிரம் விடை பிரியவே பிரார்த்தித்தேன். எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இந்தச் சம்பவம் நடந்த சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு…

 

முன்னிரவு நேரம். உறங்கப்போய் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். தொலைபேசி அழைத்து தூக்கத்தைக் கலைத்தது. நாடு, மக்களை விட்டு விட்டு, பிழைப்பைத்தேடி வெளியூரில் இருக்கும் எனக்கு, இரவில் தொலைபேசி அடித்தாலே மனத்தில் எப்போதும் ஒரு கலக்கம் வந்துவிடும். பதற்றத்துடன் எடுத்தேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "…நாந்தான் பேசறேன்.. அண்ணா passed away. இப்போதான் ஒரு மணி நேரம் ஆச்சு. அவர் ஏற்கனவே கிளம்பி போயாச்சு. நான் மத்தவங்க எல்லாம், காலைலே ஃப்ளைட்லே போறோம்.". இதுவும் என் அதே சகோதரி. இறந்தவர்  சகோதரியின் பெரிய மைத்துனர். அவர் பெயரும் கிருஷ்ணமூர்த்திதான். என்னால் வேறு எதுவும் பதில் பேச முடியவில்லை. குரல் நெஞ்சடைக்க, "அப்படியா.. பாவம். ரொம்ப கஷ்டப்பட்டாரா கடைசியிலே?" . "கொஞ்சம் தேறிண்டுதான் வந்தது. நினைவு கூட அப்பப்ப வந்து போச்சு. சரி, தப்பிச்சுடுவார்னு நினச்சோம். இப்படியாகும்ன்னு எதிர்பார்க்கலே…" . "மன்னிக்கு என்னோட வருத்தத்தை சொல்லு. பாட்டி இதை எப்படி எடுத்துக்கப் போறான்னுதான் தெரியலே. Take care of them." தொலைபேசியை துண்டித்தேன். தலையணையை எடுத்து சுவற்றில் அண்டை கொடுத்து சற்று நிமிர்ந்தவாறு உட்கார்ந்தேன். அதிகாலையில், பூஜைக்காக மலர் பறிக்க மாடி பால்கனிக்கு சென்று, எட்டிப் பறிக்கையில், கால் தவறி கீழே விழுந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரி வாசத்திற்குப்பின் வந்த முடிவு. எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இறந்த என் மாமா கிருஷ்ணமூர்த்திக்கு வயது 71 இருக்கும். பார்க்க ஆஜானுபாகுவாக, சிவந்த மேனியுடன், உயரமாக இருப்பார். எங்கள் சின்ன வயதில், அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வருகிறார் என்றாலே சப்த நாடியும் ஒடுங்கி, கூடத்தில் ஒரு மூலையில் போய் பதுங்கிக் கொள்வோம். ஆனால் ரொம்ப அன்பானவர். கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றிருந்த சிறுவர்களையெல்லாம், இரண்டு வில் வண்டிகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொள்ளிடத்திற்கு அழைத்துச் சென்று, முட்டியளவே தண்ணீர் இருந்த அந்த ஆற்றில் போட்ட ஆட்டம், நாற்பது ஆண்டுகளாகியும், இன்னும் மறக்க வில்லை. அவருடன் பிறந்தவர்கள் 6 பேர் ( இரண்டு சகோதரர்கள், நான்கு சகோதரிகள்). வாரிசுகளில் நான்காவது, ஆனாலும், மூத்த ஆண்மகன். எனவே அவர் பேச்சுக்கு குடும்பத்திலே எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். எப்போதும் தும்பைப்பூ போல வெள்ளை வெளேரென்ற எட்டு முழ வேட்டியுடன், புஜம் வரை மடித்து (சுருட்டி, சுருட்டி) விடப்பட்ட முழுக்கை சட்டையுடன் தான் காட்சியளிப்பார். இடுப்பு வேட்டியில் சொருகி வைக்கப்பட்ட பொடி டப்பா. சர்ர்ர்ர்ரெண்று எடுத்து உறியும் போது அவர் அடையும் ஆனந்தம் இருக்குமே.. அடடா.. (சிறு வயதில், ஒரு சமயம் அவருக்குத் தெரியாமல் ஒரு சிட்டிகையை எடுத்து உறிஞ்சி, அந்தப் பொடி, ரொம்ப எஜமான விசுவாசத்துடன் நம்மை போட்டுக் கொடுத்தது வேறு விஷயம்).

 

இறந்த அண்ணா என்கிற கிருஷ்ணமூர்த்தி, சின்னவர்களால் 'அண்ணா' என்றும், மற்றவர்களால் 'அம்பி' என்றும் அழைக்கப்பட்டவர். வயது 70க்கும் மேல். சிவந்த மேனியுடன் சாதாரண உயரத்துடன் இருப்பார். முகத்தில் சாந்தம் வாசம் புரியும். குரல் அதிராது. ரொம்ப அன்பானவர். சிறு குழந்தையாகட்டும், வயதில் முதிர்ந்தவராகட்டும், யார் வந்தாலும், அவருடன் சிறிது நேரம் செலவிடாமல் இருக்க மாட்டார். குடும்பத்தில் மூன்றாவது வாரிசு என்றாலும் மூத்த ஆண்மகன். உடன் பிறந்தவர்கள் 6 பேர் (மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள்). சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை தன் தலை மேல் தாங்கியவர். அவர் பேச்சுக்கு குடும்பத்தில் மறு வார்த்தை இருந்ததில்லை. எப்பொழுதும் அரைக்கை சட்டை, வெள்ளை வெளேரென்று வேட்டி. நெற்றியில் சந்தனக் கீற்று. தினமும் பூஜை முடிக்காமல் வெளியில் கிளம்ப மாட்டார்.

 

என் மாமா ஒன்றும் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளையோ சரித்திரங்களையோ படைக்கவில்லை. மாறாக அவரிடமிருந்த சில பழக்க வழக்கங்களே அவருக்கு எமனாய் அமைந்தன. ஆனால் அவரால் எவருக்கும் ஒரு துன்பமும் நேர்ந்ததில்லை. எவரையும் கடிந்து பேசியதில்லை. எப்போழுது போனாலும் புன்முறுவலுடன் அவர் வரவேற்கும் பாணியே அலாதி. எவரையும் தன் வயப்படுத்தக்கூடிய சாதுர்யம். ஈடு பட்ட விஷயங்களில் அவரின் அறிவும், புத்திக்கூர்மையும் அசாதாரணம். வாய்ப்பும், நேரமும் அமையாததினால், பிரகாசிக்க வில்லை. "..ஏய் ஜெயராமா, வந்திருக்கிறது என் மருமான். அவன் ஒரு வீடு கட்றான். அதுக்கு மரம் பாக்கத்தான் வந்திருக்கோம். நல்ல சீஸண்டு மரம் இருக்கா?.... ".  "…..என்ன கிருஷ்ணமூர்த்தி, நீ போய் என்ன கேக்கிறியே. போய்ப்பாரு பின்னாடி. நிறைய இருக்கு. உனக்கு எது வேணுமோ அத மார்க் பண்ணிட்டுப் போ. கார்பெண்டரை விட்டு ஸைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிக் கொடுக்கிறேன்.." என் வீட்டில் உள்ள ஒவ்வொரு நிலையும், வாசல், சன்னல் கதவுகளும் என்றென்றும் அவர் புகழ் பாடும். "....கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு அக்கவுண்ட்ஸை சரி பார்க்கச் சொல். அதுக்கப்புறம் ஆடிட்டர்கிட்டே கொடுக்கலாம்…" ஆடிட்டரை விட இவரின் வரவு செலவு பதியலில், திருப்தி அடந்த முதலாளி. ஆனால், தான் சம்பாத்தித்த சொத்துக்களை கணக்கில் வைத்துக்கொள்ளாமல், செலவழித்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் நின்றார்.

 

அண்ணா கிருஷ்ணமூர்த்தி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை, தாய் மாமனுடன் சேர்ந்து தன் தலையில் சுமந்து அனைவரையும் ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கியவர். பிறர் பாரத்தை தன் பாரம் போல் கருதி தன்னலம் பாராமல் உழைத்தவர். தான் ஈட்டிய அனைத்தையும்  பிறருக்கு கொடுத்து கடைசி வரைக்கும் தனக்கு என்று ஒன்றுமே இல்லாமல் வாழ்ந்தவர்.

 

அன்று ஈமக்கிரியை நடக்கும் தினம். தெருவெங்கும் அடைத்து உற்றார்களும், உறவினர்களும், நண்பர்களும், தெரிந்தவர்களும், தெரியாதவர்களும். சகோதரிகளின் மகன்களும், மகள்களும் தத்தம் துணையோடு, தனக்கு தொட்டிலிட்டு, நெல்லில் பெயர் எழுதியதையும், தன்னை தட்டாமாலை சுற்றியதையும், தோளில் தூக்கி வைத்து விளையாடிய அதே மாமன், திருமணத்தின் போது தன் தோள் மேல் தூக்கி மாலை மாற்றியதையும் நினைவு கூர்ந்து, அம்மான் சீர் செய்த மாமனுக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். சகோதரிகள், தத்தம் வீடுகளில் நடந்த நல்லது கெட்டது நிகழ்வுகளில் முதல் ஆளாய் நின்று முழுச் சுமையையும் தல் தலை மேல் போட்டுக்கொண்டு உழைத்த, தனக்கு பொங்கலுக்கும், கார்த்திகைக்கும் வருடா வருடம் சீர் செய்த உடன் பிறப்புக்கு அஞ்சலி செலுத்தி அழுது கொண்டிருந்தனர். துணையைப்பிரிந்த மனைவியோ, வாழ்வே ஒரு கேள்விக்குறியாய் மாறியதே என்று அழக்கூடத் தோன்றாமல் சூன்யப் பார்வைப் பார்த்து, சொல்வார் சொல்வதை, ஒரு நடைப்பிணம் போல் செய்து கொண்டிருந்தார். நினைவுகள் மனதில் ஒரு நிழற்படமாய் ஓட, பிரிவின் துயரம் பின்னனியில் சோக கீதமாய் ஒலிக்க, அனைவருடைய மனமும் மௌனமாய் அழுது கொண்டிருந்தன. ஆனால், சம்பிரதாயங்களும், சடங்குகளும், மனதின் வலிக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று தத்தம் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தன.

 

அன்று மேலுலகத்தில் வேதங்களில் சொல்லப்படும் கடைசித் தீர்ப்பு நாள். கணக்காயர் வந்து அமர்ந்தார். கணக்கர்கள் தத்தம் பதிவேடுகளோடும் அனைவரைப் பற்றிய குறிப்புக்களோடும் தயாராக வத்திருந்தனர். கணக்காயர் ஆரம்பித்தார்.

"கணக்கர்களே! உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், நான் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். இங்கே வந்திருக்கும் இறந்தவர்களின் இதயங்களை நாம் ஒரு மெல்லிய இறகோடு எடையில் ஒப்பிடுவோம். வாழும் காலத்தில் பாவங்கள் செய்த மனிதர்களின் இதயம் அந்த பாவ மூட்டையோடு வந்திருந்தால், அதை தராசுத் தட்டில் இடும் போது, இறகு இருக்கும் தட்டை விட அதிக பளு உள்ளதாக இருக்கும். அதனால், அது கீழே இறங்கும். அந்த மனிதர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவர். ஆனால் இதயம், இறகை விட இலேசாக இருந்து, இறகு வைத்திருக்கும் தட்டு, கீழே இறங்கினால், அவர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவர். "

 

ஒவ்வொருவரைப்பற்றிய குறிப்பும் படிக்கப்பட்டு, இதயங்கள் எடை போடப்பட்டு அவர்கள் எங்கு செல்லத் தகுதியானவர்களோ அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

'அம்பி' என்கிற 'அண்ணா' கிருஷ்ணமூர்த்தியின் முறை வந்தது. குறிப்பு படிக்கப்பட்டது. "இவர் வாழ்க்கையில் தனக்கென வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்தார். கர்ணன் எப்படி தன்னுடன் ஒட்டிப் பிறந்த கவச, குண்டலங்களை, கண்ணன் தானமாக கேட்ட போது தயங்காமல் வாரி வழங்கினானோ, அதே போல தன் உடல் உறுப்பை, தன் இளவல் உயிர் வாழ வழங்கிய உத்தமர்…….." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டில் இட்டனர். இறகு வைத்திருக்கும் தட்டு அதிக பளு காரணமாக கீழே இறங்கியது. "…இவர் சொர்க்கத்திற்கு செல்வாராக.." கணக்காயர் கட்டளையிட்டார்.

 

மாமா கிருஷ்ணமூர்த்தியின் முறை. "இவர் வாழ்ந்த வாழ்க்கை நெறி முறை குடும்பத்தினராலும், மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தன் துயரங்களை மறக்க, இவர் தேர்ந்தெடுத்த வழி சரியானதல்ல என்றாலும், இவர் வாழ்க்கை ஒரு எதிர்முறைப் பாடமாக அவர் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் செயல் பட்டது. இதன் மூலமாக பலருக்கு சரியான வாழ்க்கை நெறியை அவர் கற்றுத் தந்துள்ளார்...." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டிலிட்டனர். இரண்டு தட்டுக்களும் மேலும் கீழும் ஏறி இறங்கின.

 

முடிவில் இரண்டு தட்டுக்களின் ஆட்டங்களும் அடங்க, தராசு முள் சம நிலையில் நின்றது.

.

.

.

.

.

.

.

"…இவரும் சொர்க்கத்திற்கு செல்வாராக.."


Wednesday, April 09, 2008

உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

உச்ச நீதி மன்றம் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதிக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. பின் தங்கிய வகுப்பினருக்கான 27 விழுக்காடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  ஆனால்,  பொருளாதார நிலையில் முன்னிலையில் ( creamy layer) உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு  இந்த இட ஒதிக்கீடு கிடையாது என்றும் தெளிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீட்டை ஒரு கால வரைக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 05, 2008

இன்னுமொரு ‘காவிரி’

இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தி
“The central leadership of the party, however, had adopted a cautious approach on Friday saying the state units of the party in Karnataka and Tamil Nadu were free to take their own stands in the matter”

தேர்தல் வந்து விட்டது. எஸ்.எம். கிருஷ்ணாவை கவர்னர் பதவிலிருந்து விலகச் செய்து, தேர்தல் குழுவின் தலைவராக போட்டதின் காரணமே, எப்பாடு பட்டாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதுதான். அல்வா மாதிரி வந்து மடியில் விழுந்த ஒகனேக்கல் விவகாரத்தை விட்டு விடுவார்களா? எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று அலையும் காங்கிரஸ் கட்சிக்கு, கொள்கை என்று ஒன்று உண்டா என்ன? கொள்கையே இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை. பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதுதான் அவர்கள் வழி. கர்நாடகாவில், தண்ணீர் கொடுக்காதே என்பார்கள், தமிழ்நாட்டில் தண்ணீருக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள். மானம் கெட்ட நிலை. என்ன செய்வது? இதுவரை வாய்மூடி மௌனியாக இருந்த நம்மூர் சில்லுண்டித் தலைவர்களெல்லாம் ஆ, ஊ வென்று கர்நாடகாவை திட்டித் தீர்க்கலாம். அப்போழுதுதானே இங்குள்ள ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட முடியும். இது காங்கிரசின் பச்சோந்தித் தனம்.

ஊரே பற்றி எறியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தானாம். அது போல, இவ்வளவு அமர்க்களம் நடைபெற்ற போதும், ‘மௌன’ மோஹன சிங் தன் அதரங்களிலிருந்து ஒரு முத்துக் கூட உதிர்க்க வில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு காங்கிரஸ் மத்திய மந்திரியும் வாயைத் திறக்கவில்லை. ஒரு மத்திய அரசாங்கம் இருக்கிறது, அதற்கு முறையிடுவோம் என்று இஙகேயுள்ள ஆளும் கட்சி நினைக்கவில்லை. மாறாக, சோனியாவிற்குத்தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 10, ஜன்பத் தான் உன்மையில் நாட்டை ஆள்வது.

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகாவில் தேர்தல் முடிந்து ஒரு அரசாங்கம் அமையும் வரை பொருத்திருப்போம் என்று முடிவெடுத்துள்ளது, தற்போதைய நிலைக்கு ஒரு தற்காலிகமான செயல் என்றாலும், கர்நாடாகாவில் எந்த கட்சியின் அரசு வந்தாலும் அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இந்தப் பிரச்சினையை ஊதி, ஊதிப் பெரிசாக்கினவரே பாஜபாவின் எதியுரப்பாதான். குமாரசாமி சத்தியமாக அரசு அமைக்கப் போவதில்லை. கிருஷ்ணாவின் நிலை தான் நன்றாக தெரியும். கூட்டாட்சி வந்தால் இன்னும் இடியாப்பச் சிக்கல்தான். அப்படியிருக்க, எப்படி வரப்போகும் அரசு இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு சாதகமாக முடிவெடுக்கும்.

ஆக மொத்தத்தில். இன்னுமொரு ‘காவிரி’ உருவாகிவிட்டது. ஒப்பந்தம் போட்டு 10 ஆண்டுகள். நடமுறைப் படுத்த இன்னும் எத்தனை தலை முறைகளோ? ஆனாலும், எல்லாக் கட்சிகளுக்கும் வெற்றி. தொடக்க விழாதான் கொண்டாடி ஆயிற்றே. எனவே சாதனைப் பட்டியலில் இன்னுமொரு எண்ணிக்கை அதிகரிக்கும். கர்நாடக அரசியல் கட்சிகள், தத்தம் வெற்றி என்று பறை சாற்றிக் கொள்ளும்.

வடநாட்டில் எதிர்ப்பென்றால், அங்கே ஒட்டுப் பெறுவதற்காக இங்கே சேதுக் கால்வாய்த் திட்டம் நிறுத்தப்படும். கர்நாடகாவில் தேர்தல் என்றால், ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் தள்ளி வைக்கப்படும். கேரளாவில் கூச்சல் போட்டால், முல்லைப் பெரியாறு மல்லாக்கப் படுத்துவிடும். ஆந்திராவில் அமளி என்றால், கிருஷ்ணாவும் கோவிந்தாவாகி விடும்.

தேசிய நோக்கு இல்லாத இவர்களை எப்படி நாம் தேசியக் கட்சிகள் என்று கூற முடியும்? இனி வரும் தேர்தல்களில், தேசியக் கட்சிகளை ஒட்டு மொத்தமாகப் புறப்பணிப்பதுதான், நாம் இவர்களுக்குத் தரும் தண்டணையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியலில் நிர்வாகமும் இல்லை, மத்திய அரசுக்கு ஆண்மையும் இல்லை.

இது என் நூறாவது பதிவு. ஆயினும் இதைப் பதியும் பொழுது எனக்கு எந்தவொரு உவகையும் இல்லை. மிகுந்த சங்கடத்துடன்தான் பதிகிறேன்.

Wednesday, April 02, 2008

இந்தியாவின் கிரிக்கெட் Highlights Package

சென்னை ஆட்டத்தின் போது, சேவாகின் ஆட்டத்தை பற்றிக் கேட்ட போது, ராகுல் திராவிட் சொன்னது " அவர் ஆட்டத்தைப் பார்த்தது ஒரு Highlights Package ஐப் போல இருந்தது.

இன்று முழு இந்திய அணியும் ஆடிய ஆட்டம் இன்னுமொரு Highlights Package ஐப் போல அவ்வளவு சுருக்கமாக இருந்தது. என்னதான் இருந்தாலும்                     20-20 champion அல்லவா, அதான் 20 over லியே ஆட்டத்தை முடித்துக் கொண்டு விட்டார்கள்.

என்னடா, விடுமுறை நாளிலே 12:00 மணிக்க (saudi time) ஒரு meeting போகணுமே,  இந்திய ஆட்டத்தை முழுக்க பார்க்க முடியாதே என்றிருந்த எனக்கு அந்த குறையை வைக்காமல் செய்த இந்திய அணியினருக்கு என் நன்றி.