சென்ற முறை விடுமுறையில் ஊர் சென்றிருந்த போது, அடிக்கும் வெய்யில் தாங்காமல் எங்காவது குளம், குட்டையைத் தேடிப் போய் சுகமாக, எருமை மாடு போல் ஊற வேண்டும் போல இருந்தது. தமிழ் நாடே வெய்யிலின் உக்கிரத்தில் வரண்டு போய் கிடந்தது. எங்கே போவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் எங்களுக்கு உதித்த இடம் புலிகட் ஏரி என்று சொல்லப்படும் பழவேற்காடு ஏரி. சென்னையிலிருந்து சுமார் 30 கல் தொலைவில், கொல்கொத்தா நெடுஞ்சாலையில், ஸ்ரீஹரிகோட்டா அருகில் அமைந்துள்ளது.
உண்மையில் அது ஏரி இல்லை. ஒரு Lagoon. கடல் ஒரு சிறு முகத்துவாரம் வழியாக உள்வாங்கி ஒரு ஏரி போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இடையில் அழகான சிறு தீவுகள். சவுக்குத் தோப்புகளும், மணல் மேடுகளும் நிறைந்த திட்டுக்கள். ஒரு கலங்கரை விளக்கம். தீவுகளில் வசிக்கும் மக்கள் படகில் பயணிக்கும் காட்சி. ஒரு தீவில் இருக்கும் கோயிலுக்கு, நேர்த்திக்காகச் செல்லும் பக்தர்கள்.
அந்த இடத்திற்கு சென்றாலே ஒரு ரம்மியமான சுழ்நிலை. அது ஒரு மீன்பிடி துறைமுகமாதலால் அங்கு அடிக்கும் அந்த கவுச்சி வாசம் முதலில் எங்களுக்கு குமட்டிக் கொண்டு வந்தாலும், ஏரியில் சற்று உள்ளே சென்றவுடன் இயற்கையன்னை எங்களை முழுவதும் ஆட்கொண்டாள்.
அது ஒரு பறவைகள் சரணாலயமும் கூட. பருவ காலங்களில் பறவை பார்ப்பவர்களுக்கு அது மிகச் சிறந்த இடம் என்று கூறினார்கள். நாங்கள் சென்றது வெய்யில் காலமாதலால் அவ்வளவாக பறவைகள் இல்லை. இருந்தாலும் சில பறவைகளைப் பார்த்தோம்.
அந்த திட்டுக்களுக்கு செல்ல மீன்பிடி படகுகளில்தான் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது அங்கே செலவிட வேண்டும். அப்போதுதான் அந்த சூழலை முழுமையாக ரசிக்க முடியும். Picnic செல்லும் போது எப்படிப் போவோமோ அப்படித் தேவையான திண்பண்டங்களையும், விளையாட்டு சாதனங்களையும் வீட்டிலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். பழவேற்காடு ஒரு குக்கிராமம். சென்னைக்கு இவ்வளவு அருகிலிருந்தும், நகரத்தின் பாதிப்புகள் அங்கு அவ்வளவு இல்லை. அதிக பட்சம் டீ, பஜ்ஜி, வடை கிடைக்கும். மீன்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.
தோராயமாக 500 ரூபாயில், ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பெரும்பாலும் முன்னிரவுகளிலோ அல்லது இரவுகளிலோதான் மீன்பிடிக்க செல்வார்களாம். எனவே பகல் வேளைகளில் படகுகள் கிடைக்கும். ஒரு படகில் 10 பேர் சாதாரணமாக செல்லலாம்.
நாங்கள் சென்றது ஒரு சவுக்கு மரங்கள் அடர்ந்த ஒரு திட்டுக்கு. பொசுக்கும் வெய்யிலிலும், சுகமான கடற்காற்று, அந்தத் தோப்புக்குள் நுழைந்ததுமே எங்களை வரவேற்றது. ஆட்டம், பாட்டம் என கும்மாளங்கள் முடிந்த பின், சிற்றுண்டிக் கடை விரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கே வந்து மோதும் கடலைகளில் விளையாடினோம்.
பின்னர் முகத்துவாரத்திற்குப் பயணம், அந்தப் படகிலேயே தொடர்ந்தது. அங்கு சென்றடையும்வரை அந்த முகத்துவாரம் கண்ணில் படவேயில்லை. அந்த மணல் திட்டு மறைந்து, கடல் பகுதி கண்ணில் பட்ட போது ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவேயில்லை. அதுவரையில் சிறு, சிறு சலனங்களுடன் மட்டுமே இருந்த ஏரி, சடாரென்று சல சலவென்ற சத்ததுடன் வங்காள விரிகுடாவில் கலந்தது. அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக கரையைத் தொடும் காட்சி மிக அற்புதம். மெரினாவில் சற்று தூரம் மட்டுமே அலைக்குள் செல்ல முடியும். இங்கே கரை ஆழமில்லை, சுமார் 100 மீட்டர் தூரம் வரை நீச்சல் தெரியாதவர்களும் அலைகளுக்குள் செல்லலாம். கடற்கரையும் மிகவும் அழகாக, செயற்கையான கட்டிடங்களோ, பொருட்களோ இல்லாமல், தூய்மையாகவும், அமைதியாகவும் இருந்தது. கிளிஞ்சல்களும், கூடுகளும் ஏராளமாக கிடைத்தன. ‘மியாமிய விட இது சூப்பர் பா…’ என் மகனின் ஆனந்தக் கூத்தாட்டம். பிள்ளைகள் ஒரே களியாட்டம். அந்த வாரம் அடித்த வெயிலுக்கு சேர்த்து வைத்து கடலில் குதியாட்டம் போட்டார்கள்.
அந்தி சாயும் நேரத்தில் கரை திரும்பினோம். பாதி வழியில், படகின் டீசல் தீர்ந்தது. நாங்கள் சற்று பயந்த வேளையில், எங்கள் மீனவநண்பனின் உதவியாக வந்த சிறு பையன் சடாரென்று ஏரியில் குதித்தான். அவன் மார்பளவே தண்ணீர். அவன் கையால் படகைத் தள்ள ஆரம்பித்தான். உடனே சிறார்களும் குதித்துத் தள்ள ஆரம்பித்தார்கள். ஒரு மாட்டு வண்டி ஒரு தீவிலிருந்து கரைக்கு கடந்து சென்றது.
கரை சேர்ந்து, மீனவ நண்பனுக்கு நன் றி சொல்லிவிட்டு, அடுத்த நாள் வெய்யில் எவ்வளவு உக்கிரம் இருக்குமோ என பயந்து கொண்டே வீடு திரும்பினோம்.
எங்கள் அதிர்ச்சி என்னவென்றால், இவ்வளவு அழகான ஒரு இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை ஒரு வசதி கூட செய்து கொடுக்கவில்லை. கழிப்பிடங்களோ, உணவு சாலைகளோ எதுவும் இல்லை. ஒரு விதத்தில் பார்க்கும் போது இவர்களின் சோம்பேறித்தனமும் நல்லதுக்கே என்று கூடத் தோண்றியது. இல்லாவிடில், இதுவும் ஒரு வியாபார சந்தையாகி விட்டிருக்கும். கேளிக்கைகள் என்கிற பெயரில், வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
1 comment:
ஒரு பொழுது போக்கு பயணக் கட்டுரை - சிறு சிறு தகவல்களைக் கூட விடாமல் தந்திருப்பது பாராட்டத் தக்கது. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் மலை வாசஸ்தலம் அல்லது கடற்கரைகள், ஏரிகள், தீவுகள் என்பது போன்ற இடங்களெல்லாம் மனதில் தோன்றும். பழவேற்காடு ஏரி என்பது அவற்றில் சிறந்தது
Post a Comment