Thursday, June 28, 2007

சிவாஜி (The Fuss)., ரஜினி (The Bussssssssss)

சிவாஜி (The Fuss)., ரஜினி (The Bussssssssss)

அப்பாடா, எங்க ஊர்லேயும் ஒரு வழியா ரிலீஸ் ஆயி, வார விடுமுறையை நல்லா எஞ்சாய் பண்ணலாம்னு உக்கார்ந்தேன். 3 மணி நேரம் கழிச்சு பார்த்தா ஏதோ ஸ்டில் போட்டோஸ் எல்லாம் slide show பாத்த மாதிரி இருந்திச்சு. 6 மணி நேரத்துக்கு மேல வந்த படத்தை கத்திரி போட்டு 3 மணி நேரத்துக்கு கொண்டு வந்ததாலே இருக்குமோ என்னமோ. அதுலே எங்க ஊரு எடிட்டர் கை வரிசை வேற.

அண்ணாமலைல 50 சதவீதமும் இல்லே, படையப்பால பாதியும் இல்லே. இது ரஜனிக்கு. முதல்வன்ல 3 லே ஒரு பங்கும் இல்லே, இந்தியன்ல இஞ்சித்தும் இல்லே, இது சங்கருக்கு. நான் பேசினது கதையயப் பத்தி இல்லே (அதத்தான் எல்லாரும் சூடம் கொளுத்தி,அப்பிடி ஒன்னும் இல்லவே இல்லேனு சத்தியம் பண்ணிட்டாங்களே) ரஜனியோட நடிப்பும், சங்கரோட டைரக்ஷனும்.

என்னடா இது, எதிர்மறை விமர்சனம் பண்ணாத்தான் எடுபடும்னுட்டு, பன்றானேன்னு நினைச்சுக்கக் கூடாது. மொட்டை சிவாஜி ஒன்னுதான் இதுலே புதுசு. ஆர்ட் டைரக்டர் செட்டு போட்டுட்டு இருந்த நேரத்தில யோசிச்சிருந்தாக்கூட ஒரு நல்ல கதை (சுஜாதா சொல்ற மாதிரி 'தாட்' இல்லே 'நாட்') கிடைச்சிருக்கும்.

'கறுப்புப்பணம்' என்கிற பெயரிலே 60களில் கண்ணதாசன் நடிச்சு ஒரு படம் வந்தது. அது கூட நல்லாயிருந்துச்சு. அது என்னய்யா, கறுப்புப் பணம்ன்னா அதை அப்படியா கையாளுவாங்க? பல மாடிக் கட்டடிடத்திலே ஓடு போட்ட கூரைக்கு அடியிலே, சாக்குக்குள்ளே, ஆட்டோ சீட்டுக்கு அடியிலேன்னா பணத்தை வச்சிருப்பாங்க? ரொம்ப சின்னப் புள்ளத்தனமா இல்லே இருக்கு...46,000 கோடி ரூபாய் வெளிநாட்டுலேருந்து வருதாம். நம்ம நாட்டு சட்டங்களெல்லாம் குப்பைன்னு சொல்றதோட இல்லாமே, வெளிநாட்டிலேருந்து ஒரே ஒரு டிரஸ்டுக்கு அவ்வளவு அனுப்ப முடியற அளவுக்கு அவங்க சட்டமும் குப்பைதான் சொல்ற போது நாம கொஞ்சம் காதை தொட்டுப் பார்த்துக்கறது நல்லது. இருக்கா இல்ல வாடிப்போயிடுச்சுன்னு பார்த்துக்கிறதுக்கு.


சிவாஜி கணேசன்,எம்ஜிஆர், கமலஹாசன், ஏன் தன்னோட படங்கள்ளேருந்தும் சீனையெல்லாம் சுட்டுப் போட்டு, கவுண்டமணி, வடிவேலு பேசின டயலாகையெல்லாம் காப்பியடிச்சு ( பாட்டெல்லாம் கூட நல்லா கவனிச்சுப் பார்த்தோம்னா பழைய சில பாடல்கள் ஞாபகம் வரும்) போட்டதுக்கு title credits கொடுத்திருக்கனும்.

துட்டு செலவழிச்சதுலே ஹிந்தி 'தேவதாஸ்' க்கும் மேலே போயிடுச்சுன்னு சொன்னாங்க. பின்ன இருக்காதா. ஒவ்வொரு ஸ்டில்ஷாட்டுக்கும் ஒரு செட் பொட்டா செலவு ஆகாதா? ஆனா தேவதாஸ்லே அந்த வீடு செட் என்ன கிராண்ட்? இங்கே கண்ணுலே நிக்கரது கண்ணாடி மாளிகை மட்டும்தான்.

இவ்ளோ Fuss பண்ணிக்கிட்ட அளவுக்கு ஒன்னுமில்லே. இது BOSS இல்லே, வெறும் (busssssssss) புஸ்ஸுதான்.

(பி.கு. நானும் ஒரு வலைப்பதிவர்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சிவாஜியப் பத்தி ஒரு பதிவு போட்டு தகுதியை புதுப்பிச்சுட்டேன்.)

Friday, June 22, 2007

கணுப்பிடி வைத்து காக்கா விரட்டும் காவல்துறை.

கணுப்பிடி வைத்து காக்கா விரட்டும் காவல்துறை.

தைப்பொங்கல் கழிந்த மறு நாளில், சகோதரர்களின் நலனுக்காக, புகுந்த வீடு சென்ற பெண்டிர், மஞ்சள் இலையில் கரும்பு, பழங்கள், கலவை சாதங்களை பரிமாறி காக்கைகளுக்கு வைப்பார்கள். காக்கைகளும் சுற்றம் கூவி அழைத்து உண்ணும். கணுப்பிடி வைப்பதே காக்கைகள் உண்ணத்தான்.

நம் ஊரில் நடப்பது என்ன? தங்க நாற்கரம் திட்டத்தில் நான்கு வழிப்பாதைகளை, எதிர் வரும் வண்டிகளுடன் மோதிடாமல் இருக்க தடைகள், உள்ளூர் தேவைக்கான சேவைச் சாலை, எதிர்புறம் மாறிச் செல்ல வளைவு வழி ஆகியவற்றுடன் மிக நேர்த்தியாக அமைத்து, நாம் விரைவாகவும், தடங்கல் இன்றியும் வசதியாகச் செல்ல வழி செய்து கொடுத்தும், நாம் அதன் பயனை அடைய முடியாது. ஏன்?

காரணம் நம் போக்குவரத்து காவல் துறை மற்றும் வழித்தடத்தில் உள்ள காவல் துறையினர்.

ஐந்து கிலோமீட்டர்களுக்கு ஒரு முறையாவது, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை சில்க்ஸ் போன்ற கடைகளின் பெயர் தாங்கி நிற்கும் தற்காலிகத் தடைகளை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து, வளைந்து, வளைந்து செல்லுமாறு காவல் துறையினர் வைத்திருப்பார்கள். எதற்காக இந்த வேகத்தடைகள்? நெடுவழிச்சாலைகளின் நோக்கமே துரிதப் பயணந்தானே? இவைகள் உள்ளூர்ச் சாலைகள் நெடுஞ்சாலையில் சந்திக்கும் இடங்களில் இருந்தால் பரவாயில்லை. நோக்கம் விபத்து தவிர்க்க என்று வைத்துக்கொள்ளலாம். துரிதப் பயணம் கூடாதென்று கங்கணம் கட்டிக்கொண்டு, தேவையில்லாத இடங்களில், விளக்கு வெளிச்சம் இல்லாத இடங்களில் கூட இவ்வாறான தடைகளை வைத்து காவல் துறையினரே விபத்திற்கு வழி வகுக்கிறார்கள். இதை நான் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலும் அனுபவித்தேன், சென்னை - பெங்களூரு சாலையிலும் அனுபவித்தேன்.

நீங்கள் திண்டிவனம்-கும்பகோனம் சாலையில் சென்றால், அறுவடை சமயங்களில் வேறு விதமான வேகத்தடைகளை சந்திப்பீர்கள். அறுவடை செய்த கதிர்களை சாலையில் போட்டு, சாலையை ஒரு வழிப்பாதையாகவே மாற்றியிருப்பார்கள். இவர்களுக்கு களத்துமேட்டை விட தார் சாலைகள்தான் தானியம் பிரிக்க சிறந்த இடம். சில இடங்களில் காவல் நிலையம் முன்பே கூட இவ்வாறு பார்த்திருக்கிறேன். நீங்கள் கதிர்களின் மேல் வண்டியை செலுத்திவிடுவீர்கள் என்று தற்காப்பாக பெரிய பெரிய கற்களை வேறு வைத்திருப்பார்கள். உள்ளூர்க் காவலும் இதை கண்டு கொள்ளாது.

Wednesday, June 20, 2007

மதுரை மேற்கு இடைத்தேர்தல் தள்ளிப்போடப்படலாம்

மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறிய பல சம்பவங்கள் நடப்பதால், தேர்த்ல ஆணையம் ஜுன் 26ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலை தள்ளிப்போடலாமாவெனயோசித்து வருகிறது, இது பற்றிய முடிவு வியாழக்கிழமை எடுக்கப்படும்.
நன்றி :: newindpress.com

Tuesday, June 19, 2007

அப்துல் கலாமிற்கே என் ஓட்டு! உங்கள் ஓட்டு யாருக்கு?

குள்ள நரித்தனமான அரசியல்

ஏன் மேதகு அப்துல் கலாம் இரண்டாம் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படக்கூடாது? UPA மற்றும் பிற எதிர்ப்பாளர்கள் கூறும் கடந்த கால மரபு நிலைப்பாடு ஒருவரே இரண்டு முறை ஜனாதிபதியாக வரத் தேவையில்லை.

பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகளின் சுயநலத்தனமான பேச்சு. இவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முதன் மந்திரியாகவோ, பிரதம மந்திரியாகவோ வரலாமாம், ஆனால் ஜனாதிபதி மட்டும் இரண்டாம் முறை பதவி வகிக்கக்கூடாதாம்.

5 முறை முதலமைச்சர் ஆக ஒருவருக்கு தகுதியும் ஆசையும் இருந்து அதற்கான விழாக்கள் எடுத்துகொள்பவர்களும், ஒரு தலைமுறை முழுக்க ஒரு மாநிலத்தை தொடர்ந்து முதலமைச்சராய் ஆண்டவர்களும், 80க்கு மேல் வயதாகியும், நான் இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று கூறி இன்னமும் தன்னை பிரதமர் பதவிக்கு தகுதியானவாராய் காட்டிக் கொள்பவர்களும், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், இன்னமும் ராஜ்ய சபை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப் பட்டு பிரதமர் பதவியும் வகித்துக் கொண்டு இருப்பவர்களும் இருக்கும் போது, தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் அந்தப்பதவியில் திறம்பட செயலாற்றியிருந்தவர், மக்களால் பல கருத்துக்கணிப்புகளிலும் ஆதரிக்கப்பட்டவர், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பு நிலை இல்லாதவர், மக்களோடு ஒன்றி, பல மக்கள் நலத்திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்தவர், ஏன் இரண்டாம் முறை அதே பதவியில் நீடிக்கக்கூடாது?

அரசியலமைப்பு சட்டத்தில் அவ்வாறு ஒன்றும் கூறப்படவில்லையே! அவ்வாறே அதில் கூறியிருந்தாலும் அதை மாற்றுவது என்ன கடினமா? ஆதாயம் தரும் பதவி சட்ட திருத்த மசோதாவை எவ்வளவு வேகமாக, தங்களுக்கு சாதகமாக இவர்கள் நிறைவேற்றினார்கள்.

இவர்கள் கூறும் ஜனாதிபதிக்கு தேவையான மற்ற அம்சங்கள் என்னன்ன?

 • அரசியலமைப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும் அப்துல் கலாம் 2002ல் தேர்ந்தெடுக்கப்படும் போது, இந்த தேவை எங்கே காற்று வாங்கப்போயிருந்தது? அப்போது அவர்கள் அப்துல் கலாமை ஒரு இஸ்லாமியராக மட்டும்தான் பார்த்தார்கள். சிறுபான்மையினரின் ஒட்டு தேவையாயிருந்தது, எனவே ஆதரித்தார்கள். அரசியலமைப்பு அறிவு ஒரு முக்கிய அம்சம் என்றால் ஒரு தலை சிறந்த, உச்ச நீதி மன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கறிஞரையோ அல்லது நீதியரசரையோதான் இவர்கள் நியமனம் செய்ய வேண்டும். எப்பொழுதோ சாதாரண சிவில்/ கிரிமினல் வழக்கறிஞராயிருந்தவரை எப்படி நியமிக்கலாம். எப்படியிருந்தாலும் சட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஜனாதிபதி, அவர் எவ்வளாவு பெரிய அரசியல் சட்ட மேதையாயிருந்தாலும், சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கப் போவதில்லை, பின் ஏன் இந்த நிர்ப்பந்தம்?
 • அரசியல் நுண்ணறிவு வேண்டும் இந்தத் தேவையும் 2002ல் இல்லை, இப்போது திடீரென கை, கால் முளைத்து வந்து விட்டது. இதை எப்படி அர்த்தம் செய்ய வேண்டுமென்றால், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல் படத் தெரிந்திருக்க வேண்டும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவைப்படும் போது ஆளுனர் ஆட்சி அமல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து புது அரசாங்கம் அமையும் நிலையில், தன்னை நியமித்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அந்த கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். தன்னை நியமித்த கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் எல்லா தகிடு தத்தங்களையும் கண் மூடி, காது, வாய் பொத்தி (காந்தீய வழியில்?) பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நடக்கும் பொன்விழாக்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் வந்து பொன்னாடை போர்த்தியிருக்க வேண்டும்.

இன்று UPAவால் ஜனாதிபதி பதவிக்காக யார் யார் பெயரெல்லாம் அடி பட்டது? பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், சிவ்ராஜ் பாட்டில். இவர்கள் மூவரும் ஆளும் கட்சியின் மந்திரி சபை உறுப்பினர்கள். பிரதம மந்திரிக்கும், சோனியா காந்திக்கும் கட்டுப்பட்ட பதவியில் இருந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் எவ்வாறு தனித்தன்மையோடு ஜனாதிபதியாக செயல் பட முடியும்? பண்ணையார் ஒருவர் தன் கீழ் வேலை பார்க்கும் ஒருவரை ஊர்த்தலைவராக ஆக்கி அவரைத் தன் போக்கில் ஆட்டி வைப்பது போலல்லவா இருந்திருக்கும். நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை, அது நாம் செய்த புண்ணியம்.

அரசியல்வாதியே ஜனாதிபதியாக வந்தாலும் அவர் துடிப்பான அரசியலில் (active politics) இருந்து விலகி ஒரு 5 அல்லது 10 ஆண்டு காலம் கழிந்த பின்னரே (cooling period) அவரை ஜனாதிபதவிக்கு முன் மொழியும் நிலை வர வேண்டும். பணி செய்பவர், ஒரு குழுமத்திலிருந்து விலகி போட்டிக் குழுமத்தில் சேர ஒப்பந்தத் தடை இருப்பது போல.

திருமதி. பிரதீபா பாட்டில் நல்லவராகவே இருக்கலாம், வல்லவராகவும் செயல் படலாம். ஆனால் அவர் பெயர் எப்போது இந்த பதவிக்கு அடிபட்டது? வேறு எவரும் கிடைக்காத நிலையில் முன்மொழியப்பட்டது. ஏதோ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தங்கள் வாழ்நாளின் இலட்சியம் போலவும் அதனாலேயே இவர் பெயரை முன் மொழிந்ததாகவும் வாய்ப்பந்தல் போடுகிறார்களே, இவர்களை என்ன சொல்வது? ஏன் தியாக தீபம் முதல் தேர்வாக இவரைத் தெரிவு செய்ய வில்ல? தன் கட்சியைச் சார்ந்த இவரை ஏன் மறந்து போனார்?

சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தும் இவர்கள் தங்களை சாமர்த்தியசாலிகள் என்று நினைத்துக் கொள்ளலாம், மக்களுக்குத் தெரியும் இவர்கள் யாரென்று.

Sunday, June 17, 2007

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !!!

சவுதி தலைநகர் ரியாத் வாழும் முனைவர் திரு மாசிலாமணி அவர்களின் உன்னத கண்டுபிடிப்பான புற்றுநோய் கண்டறியும் முறை (Masila's cancer detector) புற்றுநோய் சம்பத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இன்னொரு மைல்கல் என்று கூறலாம்.

புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பது என்பது பலருக்கும் சற்று முற்றிய நிலையில் தான் தெரியும்.காரணம், சாதாரண மருத்துவ மனைகளில் அதனை கண்டறியும் திறன் அல்லது உபகரணங்கள் இருப்பதில்லை. மருத்துவர்கள் சந்தேகப்பட்டு pathalogical பரிசோதனை செய்த பின்தான் தாங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கல்வியறிவு உள்ளவர்களுக்கே தெரிய வரும். கல்வியறிவில்லாத மற்றும் ஏழை மக்களுக்கு அதற்கும் வசதியில்லாமல், முற்றிய நிலையில் மருத்துவமும் செய்ய இயலாமல் முடிவை எதிர்நோக்கி இருக்கும் நிலைதான் பெரும்பாலும் இருக்கும். அத்தகைய நிலையை மாற்ற வந்த ஒரு வரப்பிரசாதம் தான் முனைவர் திரு மாசிலாமணியின் கண்டுபிடிப்பு. 10 வருட முயற்சிக்குப்பின் இந்த கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ள இவருடன், இவர் புதல்வரும், ஆராய்ச்சியாளருமாகிய முனைவர் திரு.மாசிலாமணி இள்ங்கோவனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த முறை மூலமாக செலவேயில்லாமல் ஒரு மனிதரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் கொணடே ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க முடியும். அதாவது ஒரு புற்றுநோய் மருத்தவமனைக்கோ அல்லது தனித்தன்மை (specialised) பரிசோதனைக்கூடங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை. உங்கள் ஊரில் இருக்கும் primary health center களிலேயோ அல்லது சிறு பரிசோதனைக்கூடங்களிலேயோ இந்த சோதனையை செய்து கொள்ளலாம்.

http://www.hindu.com/2006/01/05/stories/2006010510990200.htm

http://www.cytotrontreatment.com/redherringcancer.pdf

இந்த சோதனை, ஒளிக்கதிர் (laser) வீச்சு மூலம் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் செலுத்தி அதிலிருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளை கணிணியில் பதிவு செய்து, புற்றுநோய் மூலக்கூறுகளை கண்டறியும் முறையாகும். இதற்கான காப்புரிமையை இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளில் பெற்றுள்ளார். இது பற்றி அவர் பெற்ற காப்புரிமையின் சுருக்கம்:

An apparatus for optical analysis of body fluids for cancer detection comprising: a light source for generating light rays,(incoherent lamp or laser) an excitation wavelength determination means, a grating for receiving optical rays from the body fluids, said optical rays being received at right angles to the optical rays incident on the said body fluids, an optical conversion means for receiving optical rays of from the said grating and converting the said optical rays to electrical signals, a computer for receiving and processing said the electrical signals. And the technique and process of the following preparing the blood and urine samples and their extracts. obtaining emission excitation and synchronous spectra. ratio fluorometry to identify the spectral signature of cancer specific molecules such as Porphyrin, Billurubin, Billiverdin, Riboflavin, Tryptophane, NAD(P)H etc. evaluating pre-malignant, early and advanced stages of cancer of any etiology.

(http://www.freepatentsonline.com/20060170928.html)

http://www.freshpatents.com/Masila-s-cancer-detector-based-on-optical-analysis-of-body-fluids-dt20060803ptan20060170928.php

முனைவர் திரு மாசிலாமணியின் இந்த கண்டுபிடிப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினரால் (ICMR), அகில இந்திய மருத்துவக்கழகம் (All India Institute of Medical Sciences) தில்லி, மற்றும் குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், அகமதாபாத் மூலமாக பலதரப்பட்ட பரிசோதனகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மத்திய சுகாதார அமைச்சகத்தின் அழைப்புக்கிணங்க ICMR இந்த சோதனகளை செய்து, 26 மே, 2007ல் தகுதிச் சான்றிதழையும் வழங்கியுள்ளது. இவரின் முயற்சிக்கு இந்திய ஜனாதிபதி மேதகு திரு அப்துல் கலாமின் பாராட்டும் ஆதரவும் கிடைத்துள்ளது.

இவர் இதன் பயனை ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஒரு சமுதாய சேவையாக செய்ய திட்டமிட்டுள்ளார். கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளார். இதன் முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தில் சூலை மாதம் 12ம் தேதி முதல் 19 வரை, பெரியபட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழும் இந்தியரின் உதவி கொண்டு, முதல் முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒரு உலகளாவிய சேவையாக செய்யும் பொருட்டு அடுத்த முகாம் பங்களா தேசத்தில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது.

http://www.yahind.com/articles/directory.php?id=127

திருச்சியை சேர்ந்த GVN Institute of Medical Science and Hospital இந்த சேவையை தொடங்கவுள்ளது.

இந்த புற்றுநோய் சோதனையை, ஒரு கட்டாய சோதனையாக பள்ளி சிறார்களுக்கும்,மருத்துவ முகாம்களிலும், வேலையில் சேர்வதற்கான மருத்துவ சான்றிதழ் சோதனைகளிலும் மற்றும் வருடாந்தர மருத்துவ சோதனைகளிலும் சேர்க்கப் பட வேண்டும். ஏனென்றால் முன் தடுத்தலே, நோய் கண்டு குணப்படுத்துதலை விட முக்கியம்.

58 வயதாகும் முனைவர் திரு மாசிலாமணி, ஒளிக்கதிர் இயல்பியலில் முனைவர் (Ph.D in Laser Physics) பட்டம் வாங்கியது Indian Institute of Technology, Madras லிருந்து.இவர் அண்ணா பல்கலையில் ஒளிக்கதிர் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் தற்பொழுது சவுதியில் அரசர் சவுத் பல்கலையில் ஒளிக்கதிர் இயல்பியல் பேராசிரியராக இருக்கிறார்.

http://www.iitmadras.org/news/2006/jan02C/

இவரும் இவர் புதல்வர் முனைவர் திரு மாசிலாமணி இளங்கோவன் அவர்களும் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வருகைதரும் பேராசிரியர்களாக (Visiting Professors of the School of Bio-Medical Sciences) நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானத்தில் மட்டுமல்லாமல், தமிழில் மிக ஈடுபாடு கொண்டவர். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்படும் எழுத்துக்கூடத்தில் மிக முக்கிய பங்காற்றி வருபவர். தற்போது தாக்கம் தந்த தமிழர்கள் என்கிற தலைப்பில் அவர் கண்ணோட்டத்தில் தலை சிறந்த 10 தமிழர்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஒரு புத்தகமாக வெளி வரவுள்ளது.

இவர் துணைவியார் திருமதி விஜயலச்சுமியும் ஒரு எழுத்தாளரே. இவரது புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முனைவர் திரு மாசிலாமணியின் கண்டுபிடிப்பு தமிழர்களையும், இந்தியர்களையும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புற்றுநோய் கண்டறியும் சாதனம் உலக மக்கள் அனைவரையும், காலனின் தூதனாகிய புற்றுநோயை புறந்தள்ளி செவ்வனே வாழச் செய்யும்.

இந்த விஞ்ஞானிகளுக்கு தமிழ் சமுதாயம் உள்ளிட்ட மக்கள் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அவர்கள் பல்லாண்டு வாழ, மேலும் சீர்பணிகள் பல செய்திட வாழ்த்துவோம், போற்றுவோம், வணங்குவோம்.

கேப்பையிலே நெய் வழியிதுன்னா கேக்கறவனுக்கு புத்தி இல்லாமயா போயிடும்

ஐயோ.. இந்த கூத்த பாருங்கடா!! அரசாங்கமே ஊழல் அரசியல் வாதிங்களை தண்டிக்க வழி செய்யுமாம். கேப்பையிலே நெய் வழியிதுன்னா கேக்கறவனுக்கு புத்தி இல்லாமயா போயிடும்.

அதாவது மக்களவைத்தலைவரும் ராஜ்யசபைத்தலைவரும் MPங்க மேல நடவடிக்க எடுக்கறதுக்கும், சட்டசபைத்தலைவர் MLA மேலே நடவடிக்க எடுக்கறதுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம். இதுக்கான ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா வரப்போர தொடர்லே தாக்கல் செய்வாங்களாம்.

இந்த திருத்த மசோதா எதனாலேங்கறீங்க? 1993 லே JMM MP க்களை நரசிம்ம ராவ் காசு கொடுத்து வாங்கினாருள்ள, அதுலெ 1998ம் வருஷம் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை அமல் படுத்த போறங்களாம். சிரிப்பா இல்லே? 5 வருசம் கழிச்சு வந்த தீர்ப்புக்கு, அனுமதி கொடுக்கறதுக்கான சட்ட திருத்தமே 10 வருஷம் ஆச்சின்னா, இன்னும் டைட்டா சட்டம் போடனும்ன்னா எத்தனை வருஷம் ஆவும்? டைட்டா சட்டம் வேணுமின்னா பக்கத்லே இருக்ற carpenter ஐ தேடி போவ வேண்டியதுதான்.

இதிலே பாருங்க ஒரு வேடிக்க. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பிலே லஞ்சம் வாங்கறது அஃபிசியல் டுயுடி இல்லேங்கறதாலெ, சட்டசபை தலைவரோட முன் அனுமதி வாங்கத் தேவையில்லன்னு தீர்ப்பு கொடுத்திருக்கு. அப்பறம் எதுக்கு இந்த சட்ட திருத்தம், சும்மா உப்புக்கு சப்பாணிக்குன்னுட்டு.

ஆனா இதையெல்லாம் மீறி உத்தரபிரதேச கவர்னரு, தாஜ் வளாக ஊழல் வழக்கில மாயாவதி அம்மா மேலே கேஸ் போட CBIக்கு அனுமதி தர மாட்டேன்னாரே?

என்னிக்காவது ஆளும் கட்சி MP, MLA மேலே வழக்கு போட ஆளும் கட்சியாலே நியமிக்கப்பட்ட சபைத்தலைவரு அனுமதி கொடுப்பாரா? யாராவது சொந்த செலவுலே சூனியம் வச்சுப்பாங்களா? எதிர்க்கட்சி MP, MLA ன்னா, சும்மா கிடச்சா சித்தப்பாக்கு ரெண்டுன்னுட்டு உடனே கொடுப்பாங்க.

அரசியலுக்கு வரதே நாலு காசு பாக்கத்தானே! அடி மடியிலேயே கை வக்க வுட்டுடுவாங்களா?

Saturday, June 16, 2007

Oct 2 - மகாத்மா பிறந்த நாள் - உலக அகிம்சை தினமாக அறிவிப்பு.

Oct 2 - மகாத்மா பிறந்த நாள் - உலக அகிம்சை தினமாக அறிவிப்பு.

ஐ.நா. பொதுக்குழு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளது. இந்திய வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிமுகப்படுத்திய தீர்மானத்தை ஐ.நா. சபை நிறைவேற்றியது.

எல்லா அரசாங்கங்களையும், ஐ,நா, விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும, இந்த நாளை, பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது இந்தியாவிற்கும், இந்திய சித்தாந்தங்களுக்கும் உலக அரங்கில் கிடைத்த இன்னொரு வெற்றி.

NDTV யின் முட்டாள்தனமான கேள்வி.

NDTV யின் முட்டாள்தனமான கேள்வி.

பிரதிபாபாட்டீலிடம் NDTV நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார். "..நீங்கள் ஒரு 'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதியாக இருப்பீர்கள் என்று கூறுகிறார்களே....." .

என்ன ஒரு அறிவு பூர்வமான கேள்வி. அவர் என்ன அந்த கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தாரா என்ன? ("ஆமாம்" என்று சொல்லியிருந்தால் வெல்வது அதோ கதிதான் என்பது பாட்டீலுக்குத் தெரியாதா.) அல்லது ஜனாதிபதி பதவி அவ்வளவு கேலிக்குரியதாகப் போய்விட்டதா?

ஒரு சிலர் இருந்திருக்கலாம், ஆனால் பதவியே அப்படித்தான் என்று எள்ளி நகையாடுவதைப் போல கேள்வி கேட்பதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? சுடச்சுடச் செய்திகளுக்காக கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்பதை பத்திரிக்கை / டிவி நிருபர்கள் நிறுத்தவேண்டும்.

Friday, June 15, 2007

கலைஞர் நழுவ விட்ட வாய்ப்பு

கலைஞர் ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டார். அவர் சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தால் ஒரே கல்லில் ஒரு கூடை மாங்காய்களை அள்ளியிருக்கலாம். இடது சாரி கட்சிகள் இந்த விஷயத்தில ஒரு முன் மாதிரி காண்பித்திருந்தும், அவ்வாறு சிந்திக்கத் தவறி விட்டார்.

மேற்கு வங்காளத்தில் கம்யுனிஸ்டு ஆட்சிக்கு எதிராக இருக்கும் கட்சி காங்கிரஸ்தான். அதன் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி. ஜனாதிபதி தேர்தலுக்கு 6 மாத காலமாக சோம்னாத் சாட்டர்ஜி பெயர் அடிபட்டுக்கொண்டிருந்தாலும், அவர் பெயரை வழி மொழியாமல், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தந்தது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். காங்கிரசுக்கு ஆதாயம் பண்ணின மாதிரியும் ஆச்சு. அதே சமயம் மே.வங்காளத்தில் அதன் கையை ஒடித்து அதன் பலத்தையும் சற்று குறைச்ச மாதிரியும் ஆச்சு, பிரணாப் முகர்ஜியையும் அரசியலில் இருந்து ஓரம் கட்டின மாதிரியும் ஆச்சு என்று பல்நோக்கு திட்டம் ஒன்று தீட்டியது. ஆனால் காங்கிரஸ் அதன் வலையில் விழாமல், விழித்துக்கொண்டு தப்பித்துக்கொண்டது. இடையே மற்றொரு எதிர் சக்தியான மம்தா பானர்ஜியை மேஜைக்கு கூப்பிட்டு நந்திகிராம் விவகாரத்தில் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு தன் இமேஜை மேலும் வளர்த்துக் கொண்டது. இவை இரண்டும் மிக நன்றாக யோசித்து செய்யப்பட்ட இமேஜ் பில்டிங் நடவடிக்கைகள்.

40, 40 என்று கூறிக்கொண்டிருக்கும் கலைஞரின் பலம் மத்திய அரசில் இன்னும் அதிகம். ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில்அவர் ஒரு சூத்திரதாரியாகவே முன்னிருத்தப்பட்டார்.

அவருக்கு தினம் தினம் அறிக்கை கொடுத்து குடைச்சல் கொடுத்துகொண்டிருக்கும் இருவரில் ஒருவரை பிரபோஸ் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? யோசனை செய்து பாருங்கள்!!

முதலில் மருத்துவர் ஐயா. தோழமைக் கட்சியாக இருந்து கொண்டு, இவர் தினமும் விடும் அறிக்கையைப் பார்த்தால் இவர் நோக்கம் வேறு ஏதோ போலத்தான் தோண்றுகிறது. பேசாமல் இவரை ஜனாதிபதி பதவிக்கு பிரபோஸ் செய்திருந்தால், தலைவலியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும்.

இதைவிட இப்போது பிரதிபா பாட்டிலை பிரபோஸ் செய்து முதல் பெண் ஜனாதிபதி, பெண்களுக்கு 33% சதவீதம் ஒதுக்கீட்டிற்கு முன்னோடி என்றெல்லாம் பேசியதை, ஜெயலலிதாவை பிரபோஸ் செய்து இதே பேச்சை பேசியிருக்கலாம். இதனால் என்னவெல்லாம் அனுகூலங்கள் கிடைத்திருக்கும் பாருங்கள்:
 • பெண்கள் இட ஒதிக்கீட்டில் முன்னோடியாக செயல் பட்டவர். ராஜ்ய சபைக்கு பெண்ணையும், ஜனாதிபதி பதவிக்கு எதிரியையும் அனுப்பி வைத்தவர்.
 • அன்பின் அடையாளம், பண்பின் முன்னோடி என்று விகடனில் தலையங்கம். (கூடவே முன்பு எழுதிய தலையங்கத்திற்கு மன்னிப்பு).
 • என் உள்ளத்தில் 'குடி' கொண்டவர், எனவே அவரை மாளிகையில் 'குடி' வைத்தேன் என்று பேட்டி கொடுக்கலாம்.
 • திமுகவை தமிழகத்தின் ஒரே கட்சியாகியிருக்கலாம்.
 • கத்தியின்றி, ரத்தமின்றி, ஆள்படையின்றி, தேர்தலின்றி மைனாரிட்டியை மெஜாரிட்டியாக்கியிருக்கலாம்.
 • ஸ்டாலினை உடனே முதல் மந்திரியாக்கிருக்கலாம்.
 • அஞ்சா நெஞ்சனை அஞ்சாமல் துணை முதலவராகவோ, கட்சித் தலைவராகவோ ஆக்கியிருக்கலாம்.
 • வைகோவை ஈழத்திற்கே அனுப்பியிருக்கலாம்.
 • சத்தியமூர்த்தி பவனை கலைஞர் டிவியின் ஆஃபீசாக மாற்றியிருக்கலாம்.
 • ஜெயா டிவியும் ஜெயபேரிகை கொட்டியிருக்கும்.
 • சின் (sin) புரிந்த சன் டிவியை சிம்(sim) கார்டு சைஸுக்கு கொண்டு வந்து சின்னா பின்னமாக்கியிருக்கலாம்
 • மூண்றாவது அணி மூச்சு, பேச்சில்லாமல் மூலையில் போய் உட்கார்ந்திருக்கும்.
 • ஜனாதிபதி மாளிகை, கொடநாட்டிற்கே குடி பெயர்ந்திருக்கும்.
 • எண்பதின் பவர் கண்டு எண்ணுலகமும் வியந்திருக்கும்.
 • எதிரியையும் பண்போடு மதித்த அன்பாளர், சாணக்கியனையும் வென்ற ராஜாதி ராஜ தந்திரி, தங்கத் தாரகையை தலைநகருக்கு தந்த தன்னிகரில்லா தாராளன், வஞ்ஞம் விஞ்ஞிய நெஞ்சான், தில்லி கொண்ட திராவிடன், 40ஐ வைத்து நாடாண்ட நாயகன், கலியுகத்தின் கிங் மேக்கர் என்று சென்னை முழுவதும், பல சைஸ் விணைல் போஸ்டர்களில் அழகாக சிரிக்கலாம்.
"மணி எட்டாச்சு.. இன்னும் என்ன தூக்கம், ஆஃபிஸ் போக வேண்டாம், எழுந்திருடா தூங்கு மூஞ்சி.... "

என்று சத்தம் கேட்டு பேந்த பேந்த விழித்து எழுந்து தயாரானேன், அலுவலகம் செல்ல.

Wednesday, June 13, 2007

ஜெயலலிதாவின் மேல் நடவடிக்கை - உயர்நீதி மன்றம்.

ஜெயலலிதாவின் மேல் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் குப்புசாமி் தொடர்ந்த பொதுநல வழக்கில், செல்வி.ஜெயலலிதா 2001 சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்ள பொய்யான தகவல்கள் காரணாமாக அவர்மேல் இந்திய பீனல் கோடு செக்ஷன் 177ன் படி தகுந்த நடவடிக்கையெடுக்கக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த போதிலும், இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக சாடியுள்ளது.

பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்றும், அவர்களே விதி முறைகளை மீறும் போது, அவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாதென்றும் செல்வி ஜெயலலிதாவை கடுமையாக இடித்துக் கூறியுள்ளது

Sufficient material for EC to act against Jayalalithaa: HC

Wednesday June 13 2007 16:55 IST


Monday, June 11, 2007

போர்டுக்கு ஃபோர்டு வச்ச ஆப்பு

போர்டுக்கு ஃபோர்டு வச்ச ஆப்பு

இந்திய கிரிக்கெட் போர்டுக்கு இதை விட பெரிய அடி எதுவும் இருக்க முடியாது. கிரஹாம் ஃபோர்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கோச் ஆக அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தனக்கு அந்த பதவி வேண்டாம் எனவும், கென்ட் கவுண்டி கிரிக்கெட் கிளப்பிற்கு கோச்சாக தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் தெரிவித்து விட்டார்.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக பணபலம் உடையதும், கோச்சிற்கு அதிக சம்பளம் கொடுக்கும் போர்டுகளில் ஒன்றானதுமான இந்திய கிரிக்கெட் போர்டு, கோச்சை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தடுமாறி விட்டது. இதற்கு 7 பேர் கொண்ட ஒரு உயர் மட்டக் (மட்டமான) குழு வேறு. இவர்கள் ஃபோர்டை தெரிவு செய்த முறையைப் பாருங்கள்.

 • கிரிக்கெட் போர்டு உறுப்பினர் ஒருவர், யார் இந்த போர்டு? அடுத்தது ஃபெராரி, மெர்சிடிஸ், டொயொடொ எல்லோரும் வருவாங்க போல இருக்கே? என்று கிண்டலடித்தாராம்.
 • கோச் வேலைக்கு அதிக விண்ணப்பங்கள் வராததாலும், கிரிக்கெட் போர்டு ஒரு சில பெயர்களையே விவாதித்துக் கொண்டிருந்ததாலும், விளையாட்டு வீரர்கள், தாங்களாகவே கோச்சை தேடினார்களாம்.
 • இந்திய அணிக்கு கோச் தெரிவு செய்ய 7 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தாலும், பல பிரபலங்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை சிபாரிசு செய்தார்களாம்.
 • கிரஹாம் ஃபோர்டு முதலில் முறையாக கோச் பதவிக்கு விண்ணப்பித்ததாக சிலரும், அவர் விண்ணப்பிக்கவேயில்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.
 • கிரஹாம் ஃபோர்ட், இந்திய போர்டு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே, கோச் பதவிக்கு விண்ணப்பித்தாராம்.
 • கிரஹாம் ஃபோர்டுக்கு கவுண்டி கிரிக்கெட் ஆடும் பல இந்திய வீரர்களின் ஆதரவு இருந்ததாம்.முக்கியமாக டிராவிட்டின் ஆதரவு.
 • ஒரு அரைமணி நேர பவர்பாயிண்ட் பிரசன்டேஷனில் கிரஹாம் ஃபோர்ட் தெரிவு செய்யப்பட்டார். அதாவது, முடிவு ஏற்கனேவே எடுக்கப்பட்ட நிலையில், பிரசன்டேஷன் ஒரு சடங்கு.
 • கெண்ட் கவுண்டி கிரிக்கெட் கிளப்பைப் பொருத்தவரை, கிரஹாம் ஃபோர்ட், கோச் பற்றிய விவரங்களறிய மட்டுமே சென்னை சென்றாராம், அவருக்கு கிளப்புடன் ஒப்பந்தம் செப்டம்பர் 2008 வரை இருக்கிறதாம்.
 • ஜான் எம்புரியை கூப்பிட்டதின் காரணம் உப்புக்கு சப்பாணி. இரண்டு மூன்று பேரிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டார் என்று உலகுக்கு காண்பிப்பதற்காகவே.
 • டேவ் வாட்மோர் தெரிவு செய்யப்படாதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் பற்றிய பங்களாதேஷ் வீரர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் (தற்போதைய தொடரின் போது கூறப்பட்டது) என்றும் கூறப்படுகிறது,
 • ஆனால், அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக, பங்களாதேஷ் ஒப்பந்தம் முடிவடையும் முன்னதாகவே, இந்திய ஒப்பந்தத்தை நம்பி, அதையும் இழந்தார் வாட்மோர்.
 • கோச்சிற்கான அடிபட்ட பெயர்களில் அர்ஜுன ரணதுங்கேவின் பெயரும் இருந்தது, கவாஸ்கரின் சிபாரிசினால்.

கிரஹாம் ஃபோர்டு வராததின் காரணம் கையிலிருக்கும் ஒப்பந்தமா அல்லது கிரிக்கெட் பந்து கணக்காக ஊடகங்கள், பழம் வீரர்கள், ஆடிக்கொண்டிருக்கும் வீரர்கள், வர்ணனையாளர்கள், மற்றும் ரசிகர்கள் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு பவுண்டரியும், சிக்ஸருமாய் பந்தாடப்போகும் நிலையைக் கண்டு பயந்தா என்பதுதான் தெரியவில்லை. கிரெக் சேப்பல் பட்ட பாடு எவரையுமே ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க செய்யும்.

Friday, June 08, 2007

பாண்டி பசாரின் அவலம்

நடைபாதையில் நேராக நடக்க முடியாது. பக்கவாட்டிலேதான் நடந்து (ஊர்ந்து) சென்று நீங்கள் விரும்பும் கடைக்கு செல்லவோ அல்லது அந்த நடைபாதை கடைகளிலோ உங்களுக்குக் தேவையானவற்றை வாங்கவோ முடியும். ஆயினும் நீங்கள் செல்வது 5 அடி அகலமான நடைபாதையில்தான். பின் ஏன் பக்கவாட்டில் நடக்கவேண்டும்? விடை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆக்கிரமிப்பு. நடைபாதைகளை ஆக்கிரமித்து இருக்கும் கடைகள். எனக்கு பாண்டி பசாரில் நேர்ந்த அனுபவம்தான் இந்தப் பதிவை எழுதத் தோண்றியது.

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அம்மா, தாயே, அய்யா என்று பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் பிச்சைக்காரர்களா? இல்லை. அவர்கள் ஒரு மூலையில் ஒண்டி அல்லது இங்கும் அங்கும் நடந்து பிழைப்பை நடத்துகிறார்கள். தினமும் பூ வியாபாரம் செய்து (பத்து ரூபாய்க்கு நான்கு முழம் என்று கூவி அழைத்து, கிட்டே போனதும், மூன்று முழம்தான், வாய் தவறி தப்பாய்க் கூறி விட்டேன் என்று சொல்லி, இரண்டேகால் முழம் அளந்து) பிழைக்கும் பூக்காரியும் இல்லை. கைகுட்டை, காலனிகள், மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்கும், நடைபாதை வியாபாரியா? அவர் ஒரளவிற்கு ஆக்கிரமிப்பு செய்தாலும், கடை நிலை வாழ்க்கை வாழும் அவர்களுக்கு அரசாங்கம் வேறு வசதிகள் செய்து தராததினால் அவர் நடைபாதையை சொந்தம் கொண்டாடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். பின்னே யார்?

அங்கே பெரிய பெரிய கடைகள் வைத்து, பாண்டி பசாரில் ஆரம்பித்து, பின்னாலே இருக்கும் தெரு வரை நீண்டிருக்கும் கடைகளில் சாமான்களை நிரப்பி வியாபாரம் செய்து வரும் மிகப்பெரிய வியாபாரிகள்தான்.

இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் (தரை நிலை மட்டும்தான், மாடிகள்அடுத்துக் கொள்ளப்படவில்லை) கடை பரப்பி வியாபாரம் செய்யும் இவர்களுக்கு, சாமான்கள் அடுக்கி வைக்கவும், விற்ற சாமான்களை, வாடிக்கையாளர்களுக்கு கட்டிக் கொடுக்கவும் கடையில் இடமில்லையாம். நடைபாதையை 3 அடிக்கும் அதிகமாக வளைத்துப் போட்டு அங்கேதான் இதெல்லாம் செய்கிறார்கள் ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற வியாபாரிகள். ஏன் இந்த வேலையை எல்லாம் கடைக்குள் இருக்கும் இடத்திற்குள் செய்ய முடியாதா? அதனால் என்ன வியாபாரம் கெட்டுப் போய்விடுமா? அல்லது நஷ்டம்தான் வந்து விடுமா?

அதே சமயம், கடைக்கு எதிரில் இருக்கும் சாலையில், உங்கள் காரை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள் கடை வேலையாட்கள். அது முன் அனுமதி பெற்ற நிறுத்தத் தளமாக (parking area) இருந்தாலும் நீங்கள் அங்கே நிறுத்த முடியாது. "எங்க சாமான் ஏற்றி வரும் வேன் வரும்" என்று சாக்கு போக்கு சொல்லி விரட்டி விடுவார்கள்.

அன்று எனக்கு சற்று கோபம் வந்து அந்த ஊழியர்களிடம் சத்தமும் போட்டேன். நடைபாதையிலிருந்த சில பாலிமர் நாற்காலிகளை வேண்டுமென்றே காலால் தட்டியும் விட்டேன். ஆனால் எதற்கும் பதில் பேசாமல், அந்த ஊழியர் அவற்றை எடுத்து சரி செய்து வைத்து, தன் பணியை மீண்டும் தொடர்ந்தார்.

தன் சுயநலத்திற்காக, பொதுச் சொத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் இந்த பிச்சைக்கார கனவான்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? இது அங்கே இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? இதனால் அங்கு ஏற்படும் மக்கள் நெருசடிகள் தவிர்க்கப்படும் அல்லவா? ஜேப்படி போன்ற குற்றங்கள் குறையும் அல்லவா? உச்சநீதிமன்றம் தில்லியில் செய்த மாதிரி "கடைஅ(உ)டைப்பு " உத்தரவு போட்டால்தான் இவர்கள் விழித்தெழுவார்களா? சுயமாக, தான் செய்ய வேண்டிய கடமையை காவல் துறை மறந்து போய்விட்டதா? சில மாதங்களுக்கு முன் ஒரு தினப்பத்திரிக்கையில் படித்த செய்திதான் நினைவிற்கு வருகிறது. சென்னையில் தி,நகர் காவல் நிலையத்தில் பணி புரியத்தான் அதிக விலையாம், சுமார் 15 இலட்சம். இப்பொழுது தெரிகிறது ஏன் இந்த விலையென்று.

Wednesday, June 06, 2007

இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் பிரச்சினை

இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் பிரச்சினை

இராஜஸ்தானில் தற்போது நடந்தேறிய போர்க்களம் அரசியலில் இருப்போருக்கும் ஏனைய மற்றவருக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஒரு பெரிய பாதக விளைவுக்கான அடிக்கல்லாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினை தற்போது ஏற்படுத்திய விளைவுகள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்:

 • 26 பேர் பலி
 • இராஜஸ்தானில் ஆளும் பா. .. அரசாங்கம் கவிழும் நிலை.
 • தில்லி மற்றும் இராஜஸ்தானில் பொது வாழ்க்கை ஸ்தம்பிப்பு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு (பஸ் எரிப்பு ) சேதம்.
 • "நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்" என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்து.
 • "மீனா" சமுதாயத்தினர் போரட்டத்தில் குதித்து மேலும் சிக்கல் ஏற்படக்கூடிய நிலை.

குஜ்ஜர்களின் கோரிக்கைதான் என்ன?

தாங்கள் இப்பொழுது அட்டவணைப்பட்டிருக்கும் நிலையில் இருந்து இன்னும் தாழ்த்தப்பட வேண்டும். அவர்கள் இராஜஸ்தானில் தற்பொழுது மற்ற பின்தங்கிய வகுப்பில் (OBC) அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து பழங்குடிகளாக (ST) அறிவிக்கப் பட வேண்டும். இதுவே போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது இன்னும் தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கபட வேண்டும். ஏனென்றால் மற்ற பின்தங்கிய வகுப்பில் பல சாதியினர் இடம் பெற்று விட்டதால், இவர்களுக்கு சலுகைகள் கிடப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

ஆனால் இந்த கோரிக்கைக்கு "மீனா " சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏன்? இதுவரை "மீனா " சமுதாயத்தினர் மட்டுமே இதுவரையில் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டு அதனால் கிடக்கும் சலுகைகளை ஏகபோக உரிமையுடன் அனுபவித்து வருகிறார்கள். குஜ்ஜர்களும் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டால், ஏகபோக உரிமை போய்விடும். முதலில் இந்த இரு சமுதாயத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பின்னர் அரசுடன் மோதலாக உருவானது.

குஜ்ஜர்களின் பின்னனி

இவர்கள் பழங்குடிகள் என்பதில் சந்தேகமில்லை. ருஷ்யாவில் ஒரு பகுதியில் இருந்து ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், கைபர் பாஸ் வழியாக இந்தியாவை வந்தடைந்தவர்கள். 5 அல்லது 6 ம் நூற்றாண்டில் குஜராத்திற்கு குடியேறி பின்னர் அங்கிருந்து மத்திய இந்தியாவிலும் இமாலய மலைப்பகுதிகளிலும் குடியேறினவர்கள். இன்று இவர்கள் இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இராஜஸ்த்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரகாண்டம், தில்லி, மஹாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் பாக்கிஸ்தானிலும் உள்ளார்கள். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மஹராஷ்ட்டிராவில் இவர்கள் பிராம்மண சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் இவர்களை பழங்குடிகள் என்றும், இராஜஸ்த்தான், மத்தியப்பிரதேசம் இவர்களை மற்ற பின் தங்கிய வகுப்பினராகவும் அறிவித்துள்ளார்கள்.

போராட்டத்தின் பின்விளைவுகள்:

குஜ்ஜர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கக்கூடும். பழங்குடியினராகவும் அறிவிக்கப்படலாம். இதனை முன் மாதிரியாகக் கொண்டு ஏனைய சமுதாயத்தினரும், மேலும் தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றக்கோரி அட்டவணை திருத்தம் கோரலாம். இதனால் மேலும் மோதல்களும், கலவரங்களும் வரலாம். தமிழ்நாட்டில் நாம் இத்தகைய கலவரங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

எந்த அட்டவணையிலும் இல்லாதவர்கள் மற்ற பின்தங்கிய வகுப்பினராய் அடையாளம் காட்டிக் கொள்ள விழையலாம். அங்கே கூட்டம் அதிகமானால், மற்ற பின்தங்கிய வகுப்பினர், மிகப் பின்தங்கிய வகுப்பினராய் மாற்றிக்கொள்ள விரும்பலாம். மிகப் பின்தங்கிய வகுப்பினர் மேலும் சலுகைகளைப்பெற பழங்குடியினாராய் மாற ஆசைப்படலாம்.

பட்டியலில் சேர்ந்த எவரும் பட்டியலை விட்டு வெளி வந்து தாங்கள் முன்னேறி விட்டோம் என்று கூறிக் கொள்ளப் போவதில்லை. இதில் அந்த சமுதாயத்தை குறை கூற முடியாது, குறை கூறுவதிலும் அர்த்தம் இல்லை. பட்டியல்தான் கழு கொம்பு என்றாகி விட்டபின் அதை விட யாருக்கு மனது வரும். ஆனால் பட்டியல் மூலமாக சலுகைகள் பெற்று வளர்ந்தபின், அந்த கழு கொம்பை இல்லாதவருக்குக் கொடுத்து அவரையும் முன்னேறச் செய்யாமல், இந்த சமுதாயங்களை சேர்ந்த தனிப்பட்டவர்கள் அதை அடி கொம்பாக பயன்படுத்தும் போதுதான் கலவரங்கள் மூள்கின்றன.

 • சமுதாயத்தில் தங்களை மேலும் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாவே காட்டிக் கொண்டும், இன்னும் கீழ்நிலைக்கு மாற்றக்கோரி போரட்டங்கள் செய்யும் நிலைக்கு நம் மக்களை (ஏ)மாற்றியவர்கள் யார்?
 • ஓட்டு வங்கியை மட்டும் மனத்தில் வைத்து அதற்காகவே சட்டங்கள் இயற்றி மக்களை இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையையே விரும்பச் செய்யும் நிலைக்கு தள்ளியவர்கள் யார்?
 • தன்மான உணர்ச்சியை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு நம் மக்களை இட்டுசென்றவர்கள் யார்?

இந்த கேள்விகளுக்கு நம் அனைவருக்கும் விடை தெரியும்.

உங்கள் உள்மனதில் எழும் விசனங்களுக்கு, விமோசனம் ஏதெனும் உண்டா? இன்னும் எவ்வளவு உயிர் பலி கொடுப்போம்? எவ்வளவு பஸ்கள் எரிப்போம்? எத்தனை நாட்கள் கடை அடைப்பு செய்வோம்? எவ்வளவு சாதிக்கட்சிகள் உருவாவதை பார்க்கப் போகிறோம்?