Tuesday, November 27, 2007

அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா

அன்று வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்தேன். கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் விமான நிலையம், எப்பொழுதும் போல இருந்தது. டாக்சியிலிருந்து இறங்கி, போர்டிங் கார்டு வாங்கி, லக்கேஜ் செக் இன் செய்து, இமிகிரேஷன் கிளியெரென்ஸ் முடித்து, உங்கள் விமானம் புறப்படும் லவுஞ் வரைக்கும் கண்ணை மூடிக்கொண்டு சென்று விடலாம். எந்த மாற்றமும் இல்லை என்பதற்கு ஒரே அடையாளம், விரிந்திருந்த கார்ப்பெட் தான். அதே விரிப்பு. அதன் உண்மையான நிறம் மங்கி, காப்பி, டீ, பெப்ஸி கரைகளும், மற்ற கறைகளும் பட்டு,கறுப்பாக இருந்தது. உள்ளே தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த செடிகளும், மரங்களாகாமல், அப்படியே செடிகளாகவே (!!!) இருந்தன.

அங்கிருந்த நீரூற்றைப் பார்த்ததும், “அட்லீஸ்ட் இந்த தண்ணியையாவது மாத்திருப்பாங்களா?” என்ற சந்தேகம்தான் என்னில் எழுந்தது. உடனே என் மனைவி, “ஒரே ஒரு சேஞ்ச் பண்ணியிருக்காங்க. விமானப் புறப்பாட்டிற்காக காத்திருக்கிற இடத்தில, ஒன்னிரண்டு ஃபாஸ்ட் புட் கடைங்க வந்திருக்கு பாருங்க..” என்றாள்.

கூட இருந்த நண்பன், “..அது சரி. அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. பத்து வருஷத்திலே நிலா மட்டும் மாறிடுச்சா என்ன?..” என்று லொள்ளடித்தான்.

வழக்கம் போலவே விமானத்தில் ஏற அனுமதிக்கும் நேரத்தில், ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் 300க்கும் மேற்பட்ட பயணிகளை அடுத்த கேட்டுக்கு வரச் சொன்னார்கள், இத்தனைக்கும் இரண்டு அமர்விடங்களுக்கும் ஒரே பொதுவான கேட் தான் இருக்கிறது. அந்த அதிகாரி, இந்த வாசல் கதவிற்கு பதிலாக அந்த கதவைத் திறந்தால் போதும். அவர் ஒரு இரண்டு அடி மட்டுமே நகர வேண்டும். ஆனால் 300க்கும் மேற்பட்டவர்களை இங்கிருந்து அங்கு அலைக் கழித்தார். நம்மவர்களும், இந்த விமானம் நம்மை விட்டு விட்டு மேலே எழும்பாது என்று நன்றாக தெரிந்திருந்தும், எங்கே இடம் கிடைக்காமல் போய் விடுமோவென்று என்று எண்ணியோ என்னவோ, திபு திபுவெனெ அங்கிருந்து இங்கு ஒடி வந்தார்கள்.

இது ஒவ்வொரு முறையும் நடக்கும், நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை வைட்டிங் லவுஞ்சிலிருந்து பார்த்ததால், ஏன் இப்படி நடக்கிறது என யோசித்தேன். பின்னர்தான் இதன் காரணம் புலப்பட்டது. புறப்பாடு கேட் எண்ணை அராபியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். ஆங்கில எண் ஒரு கதவின் மேலும், அராபி எண் இன்னொரு கதவின் மேலும் எழுதியிருந்தது. நம் மக்கள் (அவர்கள் அராபி எண்ணை அறிந்திருந்தாலும்) ஆங்கில எண் எழுதிய கதவு இருக்கும் லவுஞ்சில் சென்று அமர்ந்து விடுகிறார்கள். போர்டிங் பாஸ் செக் செய்து உள்ளே அனுமதிப்பவரோ இந்த ஊர் ஆசாமி. அவர் சரியாக, அராபி எண் எழுதியிருக்கும் கதவருகே வந்து உள்ளே செல்ல அனுமதிக்கிறார். அதனால்தான் இந்த குழப்பம்.

அப்பொழுது கண்ட இன்னொரு காட்சி, என் மனதை என்னவோ செய்தது. 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு கேட்டிலிருந்து இன்னொரு கேட்டிற்கு வரிசையாக இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் 25லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து அவர்கள் ஸீலங்காவை சேர்ந்தவர்கள் என்று கண்டு கொண்டேன். மற்ற தோற்றங்களை வைத்து அவர்கள், இங்கே பணிப்பெண்களாக பணி புரிபவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

குடும்ப நன்மைக்காக, வளமான வாழ்க்கைக்காக ஆண்கள், தனியாகவோ அல்லது குடும்பத்தாரோடு புலம் பெயர்வதென்பது வேறு. பெண்கள் தனியாக புலம் பெயர்வதென்பது வேறு. படித்த பெண்கள் தனியாக வெளிநாடுகளில் சென்று பணி புரிகிறார்கள். அவர்களையும், இவர்களையும் ஒப்பிடக்கூடாது. இந்தக் காட்சி ஏன் என்னை இவ்வாறாக சிந்திக்கத் தூண்டியெதென்றால், சில நாட்களுக்கு முன் படித்த ஒரு செய்திதான்.

ஒரு பெண், 13 வருடங்களுக்கு முன், பணிப்பெண் வேலைக்கு இங்குள்ள ஒரு குடும்பத்தால் அழைத்து வரப்பட்டார். வந்த சில மாதங்களைத் தவிர, அவருக்கு எந்த வித ஊதியமும் கொடுக்கப்படவில்லை. அவரால் ஊரிலிருக்கும் தன் குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல விதமான சித்திரவதைகளுக்கு ஆளான பின்னர், அவர் அந்த வீட்டிலிருந்து தப்பித்து ஸீலங்கா தூதரகத்தில் போய் அடைக்கலமானார். பின்னர் அங்கிருந்து அவர் ஒரு புகலிடம் இல்லாதோருக்கான ஆதரவகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், அவரை அழைத்து வந்த, அவருக்குப் பொறுப்பான அந்த அராபியக் குடும்பத்தலைவர் இறந்து போய்விட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கியை பெற வழியேதும் இல்லாமல் போய் விட்டது. இதை அறிந்த கவர்னர், அந்த சம்பள பாக்கியைத் தான் தருவதாக ஒத்துக்கொண்டு 53,000 ரியால் அளித்தார்.

இவற்றை எடுத்துக்கொண்டு அந்தப்பெண்மணி, தன் ஊரை அடைந்தார். அவரிடமிருந்து இந்தனை நாள் எந்தவித தகவலும் இல்லை என்பதால், அவர் குடும்பத்தார், அவர் இறந்து விட்டதாக கருதியுள்ளார்கள். அவரைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்தப் பெண்மணி இன்று அந்த ஊரில் ஒரு பணக்காரப் பெண்மணி (கிட்டத் தட்ட 15.50 இலட்சம் ஸீலங்கா ரூபாய் 1 SAR = 29.50 Lankan Rupee).

குறிப்பிட்ட விமான நிலையம் = ரியாத், சௌதி அரேபியா.

1 comment:

பாச மலர் / Paasa Malar said...

வாயில் எண் குழப்பத்துக்குக் காரணம் இப்போது புரிகிறது..அடுத்த முறை சரியான வாயிலில் செல்ல வெண்டும்..ஒவ்வொரு முறையும் இந்த எண் மாறுவதன் மர்மம் இப்போது புரிகிறது...கார்ப்பெட் விஷயம் சீக்கிரம் கவனித்தார்கள் என்றால் நல்லது...