Saturday, October 20, 2007

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம்.

பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்கும் மாறினோம்/ மாறிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்கள் தேவையானது மட்டுமில்லாமல், நல்லதும் கூட . இவ்வாறாகத்தான் மாற்றங்கள் நம்மீது திணிக்கப் படுகின்றன.

இந்தியாவின் இன்றைய நிலைக்கு வித்திட்டவர்களில், ராஜிவ் காந்திக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இன்னும் பல பேர்கள் இருப்பார்கள், ஆனாலும் என்னளவில் அவர் மிக முக்கியமானவர். சாம் பிட்ரோடா போன்ற வல்லுனர்களை பக்கத்தில் வைத்துககொண்டு அவர் தொலைத் தொடர்பில் தினித்த மாற்றங்களின் பயனைத்தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா ஒரு இளமையான நாடு. இங்குள்ள மக்கள் தொகையின் சராசரி வயது 35-40க்குள்தான். அதனால்தான் இங்கு வளர்ச்சியின் அதிர்வுகளைக் காண முடிகிறது. இந்த இளமைத் துடிப்பான நாடை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல, துடிப்பான திட்டங்கள் தேவை, அவ்வாறான திட்டங்கள் வரும் போது, அதற்கான ஆதரவுகள் பெருக வேண்டும். இன்னும் பத்தாம் பசலித்தனமான கருத்தக்களையும், எண்ணங்களையும் கூறிக்கொண்டு அவற்றிற்கு முட்டுக் கட்டை போடுவது சரியல்ல. அத்திட்டங்களில் சற்று பாதகங்களிருப்பின் அதற்கு மாற்று, அத்திட்டங்களை கிடப்பில் போடுவது அல்ல, மாற்றுக்களை ஆராய்வதுதான்.

உதாரணமாக, நாம் இரு விடையங்களை ஆராய்வோம். முதலில் அணுசக்தி ஒப்பந்தம். நமக்கு மிக அத்தியாவசியத் தேவை எரிபொருள். அது நம் நாட்டில் அரிதானதொன்று. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் எரிபொருட்களின் விலையோ ( நேற்று கச்சா எண்ணையின் விலை $ 90 ஒரு பேரலுக்கு) உச்சாணிக் கொம்பிலிருக்கிறது. இந்த நிலையில், அணு சக்தியை எரி பொருள் தேவைக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? இன்னும் எதற்காக பொதுவுடைமை வாதிகள் அமெரிக்கா, அமெரிக்கா என்று கூக்குரலிடவேண்டும். தொழில் நுட்பம், மூலதனம், கச்சாப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றனவோ அங்கேதானே போய் வாங்க வேண்டும். அரிதான பொருட்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா? சற்று கடினமான விலையை கொடுக்கத்தான் வேண்டியி்ருக்கும். சரி, கூக்குரலெழுப்பும் இவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் ஆதரவை ஆளும் கட்சிக்கு கொடுத்து விடுகிறார்களா? தங்கள் ஆதரவு மிக முக்கியம் என்பதினாலேயே, எவ்வளவு அலைக்கழிக்கிறார்கள். அதுவே ஆளும் கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்த உடன்பாடு இத்தனை நேரம் கையெழுத்தாகியிராதா? இந்த கூச்சல், முடக்கல் எல்லாம் எதற்காக? நான் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்ளவா, இல்லை என்னால் உன்னை முடக்க முடியும் என்று முட்டி முயர்த்தவா?

அடுத்து சில்லறை வியாபாரத்தில் பெரு குழுமங்கள் நுழைவதை எதிர்ப்பது. நாட்டில் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் தனி மனிதனின் தேவைக்காகத்தான். அப்படியென்றால் அவை அனைத்தும் சில்லரை வணிகம்தான். 90 விழுக்காடு பொருட்களை குழுமங்கள்தான் தயாரித்து வருகின்றன. அவை அனைத்தையும் இனி தனி நபர்கள்தான் தயாரிக்க வேண்டும், சிறு வியாபாரிகள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தலாமா?. இனிமேல் சிமெண்ட் தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்ற வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தலாமா?

சரி, முன்னர் தனி நபர்கள் சிறு சிறு கடைகள் நடத்தி கறிகாய் வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது பழமுதிர்சோலை (சென்னை போன்ற இடங்களில்) என்று கடை ஆரம்பித்து பலதரப்பட்ட காய்கறி, கனிகளை ஒரே இடத்தில், குறைவான விலைக்கு விற்பதை இவர்கள் ஏன் குறை கூறுவதில்லை? பார்க்கப்போனால், பழமுதிர்சோலைகளின் கடைப் பரப்பளவை விட, ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் கறிகாய், கனிகள் விற்பதற்காக ஒதுக்கியிருக்கும் இடத்தின் பரப்பளவு கம்மிதான். மொத்தக் கொள்முதல் செய்து, இடைத்தரகர்களை ஒழித்து, குறைவான விலையில் கொடுப்பதை எதிர்த்தும் ஒரு போராட்டம். இவ்வாறுதான் கணிணி உபயோகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள், பல பேருக்கு வேலை போய் விடுமென்று. ஆனால் நடந்தது என்ன, பல நூறு மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுதான் கண்கூடாகக் கண்ட உண்மை.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பதென்ன? மாற்றங்கள் தேவையில்லை என்று கூறி நம்மை முந்திய நிலைக்கு இட்டுச்செல்லும் போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்குத் தேவை இளமையான, அடுத்த 20, 40 ஆண்டுகளில் என்ன தேவை என்பதை எதிர்நோக்கித் திட்டமிடும் தலைவர்கள்தான். சிமெண்ட்டை ரேஷன் கடைகளில் கொடு என்று கோஷம் போடுகிற தலைவர்கள் அல்ல. ஞானி விகடனில் எழுதிய முறை வேண்டுமானால் சிலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் கருத்தில் குறையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது அப்படியே வாஜ்பேயிற்கும், அத்வானிக்கும், தேவ கவுடா, அர்ஜுன் சிங் போன்ற பலருக்கும் (அரசுக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தி்ண்ணைக் கட்டிலில் இருப்பவர்களுக்கும) பொருந்தும்.


3 comments:

கையேடு said...

திரு. பாலா அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய நட்சத்திரப் பதிவுகள் நன்றாக உள்ளன.
ஆனால், இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துக்களுடன் மாறுபடுகிறேன்.
மாற்றம் வேண்டும் என்பதிலோ அல்லது மாற்றங்கள் தாமதாக ஆங்காங்கே தொடங்கி பின்னர் ஒரு முழுமையடையும் என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

எனது பின்னூட்டம் இந்த அணுசக்தி பற்றியது.. ஆற்றல் தேவை இன்னும் 15 ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதி இன்னும் 15 ஆண்டுகளில் நாட்டின் ஆற்றல் தேவையில் 8% அணுஆற்றல் மூலம் பெறப்படும் என்பதுதான்.

நீங்கள் கூறியிருப்பது போல் சர்வதேச மதிப்பீடுகளில் இந்தியாவிடம் தற்போது யுரேனியம் தாதுக்கள் இல்லவே இல்லை என சொல்லலாம். அப்படியாயின் முழுக்க முழுக்க கையேந்த வேண்டிய ஒரு ஆற்றல் வழிமுறையை மேலும் மேலும் பெருக்க நினைப்பது, எத்தகைய மாற்றத்தைத் தரும்?

சரி ஒருவேளை அவசர தேவை என்பதாலோ அல்லது அவசியத்தேவை என்பதாலோ நாம் தற்போது இறக்குமதி செய்வதாகக் கொள்வோம், அப்படியாயின் இன்னும் புதிதாக 9 அணு உலைகளுக்கான திட்டப்பணிகள் மூலம், இந்தியா மேலும் மேலும் மூலப்பொருள் இல்லாத ஒரு ஆற்றல் வழிமுறையைத்தானே அதிகப்படுத்த நினைக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் ஆற்றல் தேவை இன்னும் 8 மடங்காகலாம், அப்போது இதைவிட அவசர மற்றும் அவசிய தேவை இருக்கலாம், அப்படியாயின் இந்த யுரேனியம் தாதுவையோ அல்லது (யுரேனியத்துடன், ஒப்பிட்டால் அதிக அளவில் இருக்கும்)இந்தியாவிலிருக்கும் தோரியம் தாதுவையோ இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்த முடியும்.


ஒருவேளை இந்தியாவிற்கு யுரேனியம் தாது தற்போது இன்றியமையாதது என்றால், உலக யுரேனியத் தாதுக்களின் தரம் மற்றும் ஏற்றுமதி அளவு ஆகியவற்றில் முதலிடத்தில் இருக்கும் கனடாவிடம் தானே இவ்வுடன்படிக்கையை ஏற்படுத்த முயற்சித்திருக்கவேண்டும். அதைவிடுத்து 13 வது இடத்தில் இருக்கும் இந்தியா ஏன் 8 வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் உடன்படிக்கை கொள்ளவேண்டும்?? இது ஒரு விவாத சந்தேகம்தான்.. முக்கியமான வேறு சில அரசியல் காரணிகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

உடன்படிக்கையில் அமெரிக்கா இருந்தாலும் சரி உருசியா இருந்தாலும் சரி ஆற்றல் மற்றும் எரிபொருள் ஆகியவற்றில் தன்னிறைவையடைய வேண்டுமானால் மூலப் பொருள் இல்லாத ஒரு ஆற்றல் வழிமுறையை மென்மேலும் அதிகப்படுத்துவது எத்தகைய ஒரு மாற்றத்திற்கு வழிகோலும்.

மாற்றங்கள் தேவை ஆனால் எத்தகைய மாற்றங்கள் நம்மை வளர்த்தெடுத்து அனைவரையும் செழிக்கச் செய்யும் என்பதையும் சேர்த்தே சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இல்லையெனில், “மாறுங்கள், இல்லயெனில் மடிந்து போவீர்கள்” என்பதைவிட “மாறுங்கள் இல்லையெனில் கொல்லப்படுவீர்கள்” என்ற நிலைதான் நீடிக்கும்.

இந்திய அணு உலைகளின் தரம் மற்றும் அணுஆற்றல் துறையின் மெத்தனப் போக்கு பற்றி ஒரு தனிபதிவே எழுதலாம் (எழுதியுமிருக்கிறேன்).

Bala said...

நண்பர் கையேடு அவர்களுக்கு,
தங்களில் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்கள் கருத்துக்களுக்கு மறுப்பேதுமில்லை. என் ஆதங்கமெல்லாம், மாற்று வழி சொல்லாமல், முட்டுக்கட்டை போடும் சந்தர்ப்ப வாதிகளை பற்றிதான். நாங்களும் மாறமாட்டோம், மாறவும் விடமாட்டோம் என்று அழும்பு பண்ணும் இவர்களைத்தான் நான் மடிந்து போ (தர்க்க ரீதியாக) என்கிறேன்.

நற்கீரன் said...

உங்கள் கருத்தை பொதுவாக ஏற்றாலும், எவ்வகையான மாற்றங்கள், எவ்வளவு வேகமான மாற்றங்கள் என்பதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும்.

Nazi Germany இல் நிகழ்ந்த மாற்றங்களுக்கெல்லாம், கேள்வி கேட்காமல் இதே மாதிரி ஒத்துப்போனதால்தான் பேரழிவுகள் நடந்தது.

மாற்றங்கள் அனைத்தும் நன்மைகே என்று நீங்கள் குறிக்க விடாலும், அப்படியான ஒரு தொனி தென்படுகின்றது. எனது மோலோட்டமான வாசிப்போ தெரியவில்லை.

மேலும், மாற்றங்களுக்கும் ஒரு முறை இருக்கின்றது. வணிக உலகத்தில் கூட old or legacy technology கட்டம் கட்டமாகத்தான் phase out செய்வார்கள். அதே போல, பெரிய வணிகங்கள் சிறு வியாபாரிகளை take over செய்யும் பொழுது, அதில் ஈடுபட்டிருக்கும் பல இலட்ச மக்களின் வாழ்க்கையையும் புரிந்து செய்ய வேண்டும். தமது பக்க இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு செய்வது நல்லதல்ல.