சூழும் கரும் மேகங்கள்
சமயம் நெருங்கி வந்துவிட்டது போல் இருக்கிறது. ஆம், தேர்தலுக்கான சமயம் கனிந்து விட்டது போல் தோன்றுகிறது. தலைவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போதும், பத்திரிக்கைகளில் வரும் ‘கிசு-கிசு’க்களை வைத்தும், மக்களவைக்கு இடைத்தேர்தல் வரும் நாள் அதிக தொலைவில் இல்லை.சோனியா காந்தியின் நேற்றைய பேச்சு, சற்று கடுமையாகவே உள்ளது, அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், காங்கிரஸுக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிரியும் கூட என்று சற்று கடுமையாகவே சாடியுள்ளார். உடனே இடது சாரிகள், காங்கிரஸ் தேர்தல் பேச்சு பேச ஆரம்பித்து விட்டது என்றும், அவ்வாறு இடைத்தேர்தல் வந்தால் அதற்கு காங்கிரஸ் தான் முழுக் காரணம் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதாவது இடது சாரிகளின் உச்ச குரலுக்கு காங்கிரஸ் சமாதானம் சொன்ன நிலை போய், காங்கிரஸின் அதிரடிக்கு, இடது சாரிகள் விளக்கம் சொல்லும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
இதைத் தவிர, லல்லு தன் கட்சியினரிடம் தேர்தலுக்குத் தயாராகுமாறு சொல்லியுள்ளார். பவாரும், லல்லுவும் சேர்ந்து கூட்டணி பற்றி, சோனியாவிடம் பேசியதாக செய்திகள் வேறு வந்தன. அதில் திமுக, கூட்டணியில் தொடர்ந்தால், மற்ற கட்சிகளுக்கு வட மாநிலங்களில் நேரக்கூடிய இழப்புக்கள் பற்றி பேசியதாகவும் தெரிகிறது.
திமுகவும், கூட்டணி கட்சிகளின் (பாமக, இடது சாரிகள்) தரும் தொல்லையிலிருந்து தப்பிக்க, தமிழ் நாட்டிலும் சட்டசபைக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து, இடைத்தேர்தல் கொண்டு வரலாமா என்று யோசிப்பதாகச் செய்திகள் தமிழ் ஊடகங்களில் வந்தன.
அண்டைய கர்நாடகத்தில், தேர்தல் வந்தே விட்டது என்று சொல்லலாம். காங்கிரஸ், ஆட்சி உரிமை கேட்காமல், ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யக் கோரியுள்ளது. காங்கிரஸின் தயவும் இல்லாமல், பாஜபாவின் ஆதரவும் போய், ஏன் JD(S)ன் 12 MLA க்கள், குமாரசாமி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனது ஆகிய எல்லாவற்றையும், கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜனாதிபதி ஆட்சி நிச்சயம் என்றே தோன்றுகிறது. தேவ கவுடா, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார் போல இருக்கிறது. (குமாரசாமி இன்று மாலை ராஜினாமா செய்வார் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன).
ஆக NDTV பிராணாய் ராய்க்கம் மற்ற தொலைகாட்சிகளுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். கருத்துக்கணிப்பும், அரசியல் நிலை அலசல்களும், வெவ்வேறு கட்சியினரை நேரடியாக மோத விட்டும், air time நிரப்பி விடலாம். இன்னும் சில நடிகர்கள் கட்சிகளில் சேரலாம், சேர்ந்தவர்கள் கட்சி மாறலாம்.
புது உறவுகள், புது பிணக்கங்கள் உருவாகலாம், எதிரிகள் நண்பர்களாய், தோழர்கள் துரோகிகளாய் மாறும் காலம்.
சூழ்வது மழைக் கால மேகமா? அல்லது வெறும் மூட்டமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment