Tuesday, March 04, 2008

தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

“Paid back with the same coin” என்கிற பழமொழி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பொருந்தும். கிரிக்கெட் விளையாட்டில் “mental disintegration” என்கிற ஒரு பிரயோகத்தைக் கண்டு பிடித்தவர்கள் அவர்களே. மைதானத்தில் எதிரணி ஆடும் போது, சள சள வென்று பேசி அவர்களின் முனைப்பாட்டைக் கலைத்தும், எதிரணி வீரர்களைப் பற்றி ஏளனமாகப் பேசி அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கி அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி எளிதில் அவர்களை “out” ஆக்கியும் , மற்றும் சில கீழ்த்தரமான உத்திகளை கையாண்டும் தங்களை சிறந்த விளையாட்டு வீரர்கள் என முன்னிறுத்தி வந்தார்கள். இதை பெரிய உத்தி என்றும், தாங்கள் விளையாட்டை மிகவும் உத்வேகமாக ஆடுபவர்கள் என்றும் வேறு பீற்றிக் கொண்டார்கள்.

ஆனால், இன்று அவர்களின் இந்த உத்தியே அவர்களுக்கு குழி பறித்து விட்டது. சிட்னியில் சட்னி ஆக ஆரம்பித்தவர்களை, இன்று ப்ரிஸ்பேனில், பிரித்து காயப் போட்டுவிட்டார்கள், இந்திய வீரர்கள்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தவர்களுக்கு செய்ய நினைத்த “mental disintegration”ஐ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டு விட்டார்கள். ஹர்பஜன் சொல்லாத வார்த்தையை சொன்னதாக சொல்லி அசடு வழிந்தார்கள். இது அத்தனைக்கும் சிகரம் போன்றது, கும்ப்ளேயின் வர்ணணைதான் “only one team played the game in proper spirit”. இந்த ஒரு வர்ணணையில் அன்று கீழே விழுந்தவர்தான் பாண்டிங்கும் அவரது சகாக்களும், இன்று வரைக்கும் எழுந்திருக்கவேயில்லை. சள, சள வென்று பேசாமல், லொட லொட வென்று உளறாமல், ஒரே வாக்கியத்தில் ஒட்டு மொத்த குழுவையும் அடித்து போட்டதில் “mental disintegration” ஆனது ஆஸ்திரேலிய வீரர்கள் தான், இந்திய வீரர்கள் இல்லை.

மாத்யு ஹேடன், ரேடியோவில் ஹர்பஜனைப் பற்றி உளறி வைக்க, அவருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவே ஆப்பு வத்தது. அக்கிளை சொறிந்தால் கூட, அங்கிளுக்கு ஜுரம் வந்தது. ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் கடந்த 2 மாதமாக செய்து வந்த ஒரே பஜனை ஹர்’பஜன்’ தான். இன்று மைதானத்தில் அம்மணமாக ஓடி வந்த பார்வையாளரை அடித்து வீழ்த்திய காரணத்திற்காக, சைமாண்ட்ஸ் மீது நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம். இனிமேல் கிரிக்கெட்டை, ஒரு விளையாட்டக ஆடுவார்கள் என எதிர் பார்ப்போம்.

இந்திய வீரர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டியதில் (எதிர்மறையாக விமர்சனம் செய்து), ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும், பத்திரிக்கை நிருபர்களுக்கும் முக்கிய பங்குண்டு. நாம் அனைவரும் அவர்களுக்கு இதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்

வெளிநாட்டில், பெருவாரியான பத்திரிக்கைகளும், ஆட்டம் பார்க்க வந்த பார்வையாளர்களும் இந்திய வீரர்களை ஏதோ காலனி ஆதிக்கம் செய்ய வந்தவர்களைப் போல பாவித்து, எதிர்த்து வந்த போதிலும், இளஞ் சிங்கங்கள், பயமறியாது, எதிரிக் கோட்டையினில் புகுந்து அடித்து வீழ்த்தி, சாகசம் செய்து விட்டார்கள்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டுமல்ல, நம் அனைவரின் ஆசிகளும் உண்டு.