Thursday, October 18, 2007

கானல் நீர் சத்தியப் பிரமாணங்கள்

அன்று விடுமுறை நாள். ஒரு முடி திருத்தகத்திற்கு சென்றிருந்தேன். அவர் கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால், மண் வாசனை காரணமாக எப்போழுதும் அவரிடமே முடி திருத்தச் செல்வேன். ஊர் நலன்களைப் பற்றி விசாரித்துக் கொண்டே, அவர் பணி தொடர்ந்தது. கடையில் வேறே யாரும் இல்லாததால் சற்று நெருக்கமான உரையாடலாகத் தொடர்ந்தது.

"என்னமோ போங்க.. ரெண்டு வருஷம், ரெண்டு வருஷம்ன்னு சொல்லியே, ரொம்ப வருஷம் ஆயிடுச்சு.... " இது நான்.

"இதுதான் பொழப்புன்னு ஆனதுக்கப்பறம் இதை பத்தி ஏன் சார் நாம அலுத்துக்கனும். இந்த தடவ ஊர் போயிருந்தபோது, சொந்தமா  கும்மோணத்திலேயே தொழில் செய்யலாமுன்னு பார்த்தேன். கடை போட இடம், செலவு எல்லாம் கணக்குப் போட்டு பார்த்தேன். ரொம்ப ஒன்னும் மிஞ்சாது போல இருந்தது. என்னோட ஃப்ரெண்ட்ஸையும் கலந்து பேசினேன். அவங்க எல்லோரும், இருக்கிற இடத்திலே, பாக்கிற தொழிலை முடிச்சு, நிம்மதியா வந்து சேரு. இங்கே தொழில் ஆரம்பிச்சீன்னா, ஒன்னும் பெரிசா நிக்காது, வரவும் செலவும் சரியாப் போயிடும்ன்னாங்க. சரின்னுட்டு, லீவு முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்."

தொடர்ந்தார். "அன்னிக்கு நம்ம ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர், அவர் சொந்தக்காரப் பையனை கொண்டு வந்து விட்டுட்டுப் போனார். அவன் என்கிட்டே கேட்ட முத கேள்வி - நீங்க எத்தனை நாளா இங்கெ இருக்கீங்கன்னுதான் - நான் இருபது வருஷமா இருக்கேன்னு சொன்னதும் 'அய்யோ, இருபது வருஷமாவா இங்கே இருக்கீங்க, எப்படி?' ன்னு வாயடச்சுப் போயிட்டான். ஏதோ ஹார்ட் அட்டாக் வந்தது போல இருந்தான்.

நான் பதிலேதும் சொல்லாமல், என் காரியத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் விடாப்பிடியாக, அது எப்படி இருபது வருஷம் இருக்கிறீங்க? என்று பதில் கிடைக்காமல் விடமாட்டேங்கற மாதிரி கேட்டான்."

"சரி, தம்பி, நீங்க ஏன் இங்க வந்தீங்க, பொழைக்கறதுக்கு, ஊர்லே வேலை ஏதும் கிடைக்கலியா?"

"இல்லீங்க, வீட்லே கொஞ்சம் கடன் தொல்லை. அப்றம், ரெண்டு தங்கைங்க, அவங்க கல்யாணத்துக்கு காசு வேணும், அதான் இங்கே வந்தேன்"

"சும்மா டைரெக்டா விசா கிடச்சு வந்தீங்களா, இல்லே காசு கொடுத்து வந்தீங்களா?"

"காசு கொடுத்துத்தான் வந்தேன்"

"அந்த காச எடுக்க எவ்வளவு நாளாகும்?"

"ஒரு ஒண்ணு, ஒண்ணரை வருஷத்திலே எடுத்துடுவேன்"

"அப்றம் உங்க தங்கச்சிங்க கல்யாணம், குடும்ப கடன் எப்படி அடைப்பீங்க?"

"கடனை ஒரு வருஷத்லே அடைச்சுடலாம். அப்றம் மூத்தவளை ரெண்டு வருஷத்லே கல்யாணம் கட்டிக் கொடுத்திடலாம். அடுத்தவளுக்கு அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் ஆவும்"

"இடையிலே, ஒங்களுக்கும் நல்லது ஒன்னு நடக்குமில்லே, அதுக்கும் சேக்கனுமில்லே?"

"ஆமாம்."

"சரி இதெல்லாம், கணக்கு போடுங்க, எத்தனை வருஷமாச்சு"

"7, 8 வருஷமாயிடும்"

"இப்படித்தான் நானும் இங்கே வந்தேன். நாம என்ன எஞ்சினியரும், டாக்டருமா படிச்சுட்டு இங்கே வந்திருக்கோம். நாம திரும்பி போனாலும் அங்கே இதே வேலைதானே? அங்கே போய் செய்றதுக்கு, இங்கேயே செய்றேன். வேற வழி தெரியல்லே. நீங்க வேற தொழில் கத்துக்கிட்டு அங்கே போய் செய்ய முடியும்ன்னா, ஒரு வேளை சீக்கிரம் போவலாம்" என்று அவர்கள் உரையாடலை சொன்னார்.

"அப்டித்தாங்க எல்லோருக்கும். இதோ போயிடுவோம், இதோ போயிடுவோம்னு எல்லோரும் சொல்றோம், ஆனா ஏதொ ஒரு கடமையோ, சுமையோ இல்லேன்னா ஒரு பயமோ வந்து போக முடியலே. கடைசியிலே, அங்கே போய் பண்ணப் போறதை, இங்கேயே செய்துட்டு, பேசாம ஊர்லே போய் ரிடையர் ஆகி செட்டிலாகிடுவோம் ன்னுதான் எண்ணத் தோணுது"

சத்தியப் பிரமாணங்கள், "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று டீக்கடைகளில் எழுதி வைத்திருப்பார்களே அது மாதிரியே ஆகி விட்டன.

3 comments:

ஆயில்யன் said...

//நீங்க எத்தனை நாளா இங்கெ இருக்கீங்கன்னுதான் - நான் இருபது வருஷமா இருக்கேன்னு சொன்னதும் 'அய்யோ, இருபது வருஷமாவா இங்கே இருக்கீங்க, எப்படி?' ன்னு வாயடச்சுப் போயிட்டான். ஏதோ ஹார்ட் அட்டாக் வந்தது போல இருந்தான். //

நானும் கூட இங்கு வந்த புதிதில் கண்ணில் படும் தமிழ்நாட்டு ஆட்களிடம் முதலில் கேட்ட கேள்வி,ஆனால் யாரிடம் விளக்கத்தை கேட்டதில்லை! இப்போது உணர்ந்துகொண்டேன் அதற்கான காரணங்களை

cheena (சீனா) said...

புரிகிறது பாலா - என் செய்வது - நாம் நினைக்கும் படி நடக்க முடியவில்லையே - சூழ்நிலைகள் - சந்தர்ப்பங்கள் சரியாக அமையும் வரையில் நம் விருப்பங்கள் தள்ளிப் போடப்படுகின்றன.

Thamizhan said...

ஆறுதலாக இல்லாவிட்டாலும் நாலு வார்த்தைகள்.
ஏழாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் வாழும் தமிழர்களும் பேசும் வசனம்,எப்போது ஊருக்குப் போவது என்பது தான்.
குழந்தைகள்,பேரக் குழந்தைகள் எல்லோரும் வந்ததும் தான் "யாதும் ஊரே யாவருங் கேளிர்" நன்கு புரியும்.

எங்கிருந்தாலும் நீ வாழ்க என் உற்றார் உறவினர் சொல்வது காதில் விழுகிறதே!