வட நாட்டிலே, குறிப்பாக குஜராத்திலே, நவராத்திரியும் டாண்டியா ஆட்டமும், நகமும் சதையும் மாதிரி. அது துர்கை, அரக்கனை கொன்றதை நினைவு படுத்தும் ஒரு கொண்டாட்டம். அது மட்டுமல்லாமல், கிருஷ்ணனின் ராச லீலையைக் கொண்டாடும் ஒரு வைபவம்.
டாண்டியா ஆட்டம் ஆட, தசரா கூட்டமும் கூட
குஜராத் குமரிகள் ஆட, காதலன் காதலியைத் தேட
குமரி(ரன்)களும், குழந்தைகளும் உற்சாகத்துடன், கையில் கோல் எடுத்து ஆடும் போது, துள்ளாத மனமும் துள்ளும். மிக அற்புதமாக, சிருங்கார பாவத்தை எடுத்துக் காட்டும். சுற்றி, சுற்றி வந்து ஒருவருக்கு ஒருவர் கையில் உள்ள கோலாட்டக் குச்சிகளை சுழற்றி, சுழற்றி அடித்து வட்டமாக ஆடும் ஆட்டம் மிக அழகானது. இந்த பாரம்பரிய நடனம், இன்னும் நீத்துப் போகாமல், சொல்லப் போனால் இன்னும் விரிவாகப் பல பேரால் ஆடப்பட்டு வருகிறது.
கோலாட்டம் என்றாலே என் நினைவுக்கு வருவது சிறு வயதில் பார்த்த பின்னல் கோலாட்டம் தான். எங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணங்களில் ( நான் சொல்வது 40 வருடங்களுக்கு முந்தி.... அடடா என் வயதைக் கண்டு பிடிக்க ஒரு க்ளூ கொடுத்து விட்டேனே!!), கல்யாண கோலாகலத்தின் மூண்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.
உத்தரத்தில் கயிறு கட்டி, இரு முனைகளிலும் ஒவ்வொரு குச்சியைக் கட்டி, கிட்டத்தட்ட 10 பேர் ஆடுவார்கள். அழகாக முன்னும் பின்னும் ஆடி, அந்த கயிறுகளை பின்னல்களாக கோத்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்ப ஆடி, அந்த பின்னலை அவிழ்ப்பார்கள். மிகவும் லாகவமாகவும், அழகாகவும் இருக்கும். இப்பொழுது இந்த ஆட்டம் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
மீண்டும் டாண்டியாவிற்கு வருவோம். குஜராத்தின் பாரம்பரியமான இது, இப்போது நாட்டின் எல்லா மூலைகளுக்கும் சென்று விட்டது. இளைஞர்களைக் கவரும் இந்த ஆட்டம், குறிப்பாக பெரும் நகரங்களில் ரொம்ப பிரபலம். சொல்லப் போனால் 'தேசி டிஸ்கோ' வாகக் கூட ஆகி விட்டது.
ஆனால் இந்த ஆட்டத்திற்கு ஒரு கருமை சூழ்ந்த பின் பக்கம் உருவாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இதில் ஈர்க்கப்படும் இளைஞர்கள் மிகவும் தவறான எண்ணத்துடன் பழகி, உறவு முறை வைத்துக் கொள்கிறார்கள் எனவும், இது பல நேரங்களில் கருத்தரிக்கும் நிலைக்கும் கொண்டு செல்லப் படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. டாண்டியா முடிந்த இரண்டு/மூன்று மாதங்களில், பெரும் அளவில், இளம் பெண்களுக்கு கருச் சிதைவுகள் நிகழ்த்தப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன் படித்த ஒரு செய்தி. பெற்றோர்கள் டாண்டியா போது தங்கள் பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, தனியார் துப்பு நிறுவனங்களை நாடுகிறார்கள். இந்த நிறுவனங்கள் ஒரு இரவு கண்காணிக்க ரூபாய் 2,500- 15,000 வரை வாங்குகிறார்களாம். இவர்களும் நாட்டியங்களில் பங்கு கொள்வது போல் போய், துப்பு துலக்குகிறார்களாம்.
சிறார்களுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களை டாண்டியா நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தடை போடத் தடுக்கிறது. எங்கே கொடுத்த சுதந்திரமே, அவர்களின் எதிர்காலத்தை பாழ் படுத்திவிடுமோ என்கிற பயம், துப்பு பார்க்க வைக்கிறது.
6 comments:
ஆஹா! இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சுனையான கொண்டாட்டங்கள்! நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்தக்கோலாட்ட நிகழ்ச்சி,- முகூர்தத்திற்கு அடுத்த நாள் பெண்ணை வழியனுப்பும் போது நடப்பது,- புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.அதற்கான அந்தப் புகைப்படமும் அற்புதம்!
பின்னல் கோலாட்டம் முதல் முறையாக கேள்வி படுகிறேன். நல்ல பதிவு!!!
//பின்னல் கோலாட்டம் முதல் முறையாக கேள்வி படுகிறேன். நல்ல பதிவு!!!//
நானும்தான்.
நாம் நம் குழந்தைகளுக்கு வழங்கும் கட்டற்ற சுதந்திரம் சில சமயங்களில் பிரச்னையாகிறது. கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.ஆட்டாம் அருமை - ஆட வேண்டியது தான். தடுமாற்றத்தைத் தடுக்கVஏண்டும்.
//குஜராத் குமரிகள் ஆட, காதலன் காதலனைத் தேட//
தற்செயலான பிழைதானா? அல்லது கால மாற்றத்தைக் குறித்த எச்சரிக்கையா?
ரத்னேஷ்,
அது பிழைதான். சரி செய்து விட்டேன்.
ஆனாலும் நீங்கள் குறித்தவாறு, காலத்தின் கோலம், அதுவும் நடக்கும்.
Post a Comment