Thursday, October 18, 2007

'கவடை' பாலு

நான் இந்த பதிவில் ஒரு கதா பாத்திரத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்தப்போகிறேன். அவன்தான் 'கவடை' பாலு.

இது என்ன மசால் வடை, மெது வடை மாதிரி கவடைன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும். அது கதை, வசனம், டைரக்ஷன் என்கறதோட சுருக்கம்தான்.

என்னா ஒவ்வொரு நாடகத்துக்கும் அவன்தான் முழுப் பொறுப்பு. அது கூடவே அவன் வேற நடிச்சாகனும். முக்கிய கதாபாத்திரத்தை அவனை விட்டா யாரும் பண்ண முடியாதுன்னு அவனுக்கு ஒரு எண்ணம்.  அவனுக்கு நாடகங்களில் நடித்து அனுபவம் இருந்ததால் அவன் தன்னை விட வேற யாரும் நன்றாக செய்ய முடியாது என்று நினைத்தான்.

டயலாக் எல்லாம் பக்கம்,பக்கமா எழுதுவான். எழுதறதுக்கு வெள்ளைப் பேப்பர் வாங்க காசு கிடைக்காது. அப்பா கொடுக்க மாட்டார். ஆனாலும் அவன் சிறிதும் சளைக்க மாட்டான். அப்பொழுதெல்லாம், அந்த ஊர் திரையரங்குகளில் (கூரைக் கொட்டாய்) வரும் படங்களுக்கு ஒரு மாட்டு வண்டியில் வந்து கூம்பு ஸ்பீக்கர்  வைத்து விளம்பரம் செய்வார்கள். அப்பொழுது பிட் நோட்டிஸ் வினியோகம் நடக்கும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, ஒரு கத்தை நோட்டீஸ் வாங்கி வருவான். கலர் கலராக நோட்டீஸ் இருக்கும். அதன் பின் பக்கம்தான் ஸ்கிரிப்ட் எழுதுவான்.

ஸ்கிரிப்ட் ரெடியானதும், ஸ்டேஜ் செட்டிங்தான். நடிகர், நடிகையர் செலெக்ஷன்ல்லே எல்லாம் ஒரு பிரச்சினையும் இருக்காது. அந்த தெருவில் இருக்கும் எல்லோரும் அவனிடம் பிச்சையெடுக்காத குறையாக வந்து கேட்பார்கள். அவனும் ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு அவர்களுக்கு பாத்திரங்கள் கொடுப்பான். ஆனால் அவர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஸ்டேஜ் செட்டிங் போன்ற விஷயங்களில் அவனுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்.

எல்லார் வீட்டிலேருந்தும் மர பெஞ்சுகள் கொண்டு வரப்படும். அதுதான் ஸ்டேஜ். வாசலில் இருக்கும் மைதானத்தில் அவை வரிசைப்படுத்தப்படும். பார்வையாளர்கள் எல்லாம் தரையில் தான் உட்கார வேண்டும். ஸ்பான்சர்களுக்கு மாத்திரம் ஸ்டீல் சேர். அதுவும் அவர்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரப்படும்.

இப்போ ஸ்டேஜ்  ரெடி. அடுத்தது ஸ்கிரீன் செட்டிங்ஸ். மூங்கில் கம்புகள் எல்லாம் நட்டு, எல்லார் வீட்டிலெருந்தும் பவானி ஜமக்காளங்கள்  கொண்டு வரப்படும்.  அது கருப்பு கலர்லே,  சிகப்பு பார்டர் போட்டு  இருக்கும் (விடியற் காலையிலே வரும் குடுகுடுப்பைக் காரன் போர்த்திக் கொண்டு வருவானே, அதேதான்). அதை சைட்லேயும் மேலேயும் போட்டு ஸ்டேஜ் ரெடியாகும். பையனின் சிரத்தையைப் பார்த்து அப்பா, அலுவலகத்திலேருந்து சில நபர்களை அனுப்புவார். அவர்கள்தான் கம்புகள் நட்டு, படுதாவை விரித்து ரெடி பண்ணிக் கொடுப்பார்கள்.

அப்போதெல்லாம்,  அந்த ஊர்லே கரெண்ட் கிடையாது. அரிக்கேன் விளக்குதான். அந்த விளக்குலேதான் முழு நேர நாடகமும் நடக்கும். ரெண்டு, மூணு விளக்குகள் மேடையில் தொங்க விடப்படும்.

பெரும்பாலும் நாடகங்கள் ராஜா தர்பார் ஸீனாக இருக்கும், இல்லா விட்டால் போலீஸ், திருடன் கதையாக இருக்கும்.

நாடகம் முடிந்தவுடன், அவன் பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவான். அத்துடன் அன்றைய நிகழ்ச்சி முடிந்து விடும்.

ஜாக்கி ஷான் படத்திலே வர மாதிரி, 'Behind the scene' குறிப்புகள்.

ஒரு நாடகம் முடிந்தவுடன் அவனுக்கு 'கவடை' பட்டமும் அந்த வயசுலேயேதான் கொடுத்தாங்க. கொடுத்தவர் பக்கத்து வீட்டுக்கார மாமா.

அவன் நாடக எக்ஸ்பிரீயன்ஸ் எப்படின்னா, ஸ்கூல் நாடகத்திலே தர்பார் சீன்லே காவல்காரனா நின்னதுதான். ஆரம்பம் முதல்லே, கடைசி வரையும் நின்னதுனாலே டிராமாவிலே ரொம்ப நேரம் நடிச்சேம்பான்.

மொத்த ஸ்கிரிப்டெல்லாம், பிட் நோட்டிஸ்லெ 10 பக்கம்தான் இருக்கும். அதுலேயும் அவன் பேசற டயலாக் தான் ரொம்ப நேரம் இருக்கும்.

மொத்த நாடகமே அரைமணி நேரம்தான் ஒருக்கும், அதுக்குதான் இவ்வளவு பில்டப்.

ஆடியன்ஸ் ஒரு 15 பேர்தான் இருப்பாங்க. அங்கே இருக்கும் வீடே 8 தான். (திருவெண்ணை நல்லூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் ஸ்டாஃப் காலனி)

அவனுக்கு ஒரு பாட்டும் முழுசா தெரியாது. ரெண்டு, ரெண்டு வரிதான் தெரியும். எல்லா பாட்டையும், தொடர்ச்சியா பாடுவான். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்'  எங்க வீட்டுப் பிள்ளை (அப்போது தான் ரிலீஸ் ஆனது)  படப் பாட்டுதான் எப்போதும் முதல் பாட்டு.

எனக்கு, இவனை ரொம்ப சின்ன வயதிலேயே தெரியும். சின்ன வயதுன்னா, நிஜமாகவே சின்ன வயதுதான். 9, 10 வயசுலேயே.

ஒரு முக்கிய குறிப்பு:

அந்த 'கவடை'  பாலு வேற யாருமில்லே...நான் தான்.. ஹிஹி...ஹிஹி...ஹி

2 comments:

Anonymous said...

This is about the blog" Kavadai Baalu".

WHile the author vividly narrated his child hood pranks what he forgot was his kith and kin who had helped him get that title. His younger and more energeic brother was his close companion giving him his ideas on how to construct the stage and screen drops. Excellent read!!

cheena (சீனா) said...

மலரும் நினைவுகள் யாராலும் இனிய இளமைக்கால நினைவுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது