Friday, November 10, 2006

உன் சுகம் - என் சுமை (தேன்கூடு-போட்டி)

சுரேஷின் புருவம் விரிந்து, நெற்றி சுருங்கியது. தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தவன், wash basinல் சளியை உமிழ்ந்த போது, அதில் தென்பட்ட சிறிய துளி இரத்தத்தைப் பார்த்ததும் மனம் சற்று துடுக்குற்றான். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வாறுதான் இருந்து வருகிறது. முதலில் அவன் இது தற்செயலாகத்தான் இருக்கும் , இருமலால் தொண்டை ரணமானதால் இந்த இரத்த கசிவு ஏற்படுகிறது போலும் என எண்ணினான். ஆனால் அது தொடரவும், முன்பு கடுகு அளவு தெரிந்த கசிவு, இப்போது ஒரு குங்குமப் பொட்டு அளவு வர ஆரம்பித்ததும் அவனுக்கு ஒரு இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது.

வாயை துடைத்துக்கொண்டு சற்று நிதானமாக நடந்து போய் ஊஞ்சலில் சென்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தான்.

"என்னங்க.... ஏன் சோர்வா இருக்கீங்க? உடம்பு முடியலியா? ..........நீங்களும் இந்த சளி, இருமலாலே ரொம்பத்தான் கஷ்டப்படறீங்க. ...........வேணும்னா கஷாயம் போட்டு தரட்டுமா?.." என அக்கறையோட விசாரித்துகொண்டே அவன் மனைவி வந்தாள்.

சுரேஷின் நிலை பார்த்து மேலும் "....டாக்டர போய் பாருங்கன்னா போக மாட்டேங்கறீங்க. .........ஏன் இன்னிக்கு லீவுதானே...வாங்க டாக்டர்கிட்டே போலாம்..."

"ம்ம்ம்ம்ம்........................சாயங்காலம் போலாம்.." எனக்கூறி அப்படியே சாய்ந்து படுத்தான்.

"சுரேஷ் உங்களுக்கு இந்த இருமல் எத்தனை நாளா இருக்கு? " அவனை பரிசோதித்த டாக்டர் கேட்டார்.

"இருமல் ஒரு 15 நாளா இருக்கு. ஆனா எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படியே இருமலும் வரும். இது ஒன்னு, ஒன்னரை வருஷமா இருக்கு டாக்டர்...."

"...மூச்சு விடும் போது சாதாரணமாய் இருக்கா? இல்லே ஏதாவது சிரமப் படறீங்களா?.."

"....சமயததுலே ஏதோ மூச்சு அடைக்கற மாதிரி இருக்கும். அப்போ கொஞ்சம் மூச்சை இழுத்து வாங்குவேன்.. சரி, இது நெஞ்சுலே இருக்கிறே சளியாலே இருக்குன்னுட்டு விட்றுவேன்.."

"சரி, இந்த medicines எடுத்துக்கோங்க....அப்படியே உள்ளே லேப்லெ போய் sputum sampleம் blood sampleம் கொடுத்துட்டு போங்க. அடுத்த வாரம் வந்து பாருங்க.." என விடை கொடுத்த டாக்டரிடம் "...is there any problem?.." என சற்று கலக்கத்துடன் கேட்டான்.

"No..No.. it is just a routine test. No worry please!!!!......"

சாப்பிட்ட மருந்துகள் சற்று இதம் தந்தாலும், இருமல், சளி தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆயினும் வேலைப்பளு காரணாமாய் அதைப் பற்றி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அந்த வாரம் கழிந்தது. மீண்டும் டாக்டரை பார்க்க சென்றான்.

குசலங்கள் விசாரித்து, மீண்டும் தொண்டை, மார்பு பரிசோதனைகளுக்குப் பிறகு "....sputum and blood examination result வந்துருக்கு. எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. நான் ஒரு டாக்டர் அட்ரஸ் தரேன். நீங்க அவரைப் போய் பாருங்க. அவர் சில டெஸ்ட் எல்லாம் பண்ணுவார். அதுக்கப்பறம் நாம ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்...."

தூக்கி வாரிப் போட்டது சுரேஷிற்கு. "டாக்டர்.. என்ன சொல்றீங்க... Do you mean something serious?..." தொண்டை அடைத்து குரல் கம்மியது.

"No.. No.. நான் இப்போ எந்த முடிவுக்கும் வரலே.. உங்க sputum பரிசோதனை பண்ணினதிலே எனக்கு சில சந்தேகம் இருக்கு. அதுக்காகத்தான் நான் உங்களை அந்த cancer specialist போய் பார்க்க சொன்னேன். அது மட்டுமில்லாமெ சில pathological test எல்லாம் செய்யனும். அதுக்கு பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆன நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். Alarmingஆ ஒன்னும் இல்லே. It is just a precaution...."

வாயடைத்துப் போய் இருந்தாள் சுரேஷின் மனைவி. அவளுக்கு டாக்டர் கூறியது முழுவதும் புரியவில்லை என்றாலும், கணவனின் முகப்போக்கும், டாக்டர் சாந்தப்படுத்தும் விதமாய் கூறிய பதிலும் ஏதோ சீரியஸ் என மட்டும் புரிந்தது. ".. டாக்டர்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு வெறும் சளி, இருமல். இதற்கு போய் எதற்கு cancer specialist, டெஸ்ட் எல்லாம்.." என படபடத்தாள்.

"..அது இல்லம்மா.. டாக்டருக்கு கொஞ்சம் சந்தேகம். அதனாலேதான் இதெல்லாம்.." மனைவியை மேலும் வேற எந்த கற்பனையும் செய்ய விடாமல், அதே நேரம் இந்த பேச்சைத் தொடர விடாமலும் செய்து.." டாக்டர், நான் உங்களுக்கு அப்புறம் போன் செய்றேன்.." என வெளி நடந்தான்..

அவனுக்கே உள்ளூர பயம்தான். அவனும் டாக்டரை அந்த சமயம் தவிர்க்கத்தான் விரு
ம்பினான். Cancer என்கிற விஷயம் பற்றிய விவாதம் மேலும் தொடர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் அவன் மனைவி அவனை விடவில்லை. வீடு வரும் வரையிலும் திரும்ப திரும்ப டாக்டர் ஏன் அப்படி சொன்னார்? அவனுக்கு என்ன சரியில்லை? ஏன் வெரும் சளி, இருமலுக்கு இவ்வளவு test, இவருக்கு என்ன தெரியும், வேற ஒரு டாக்டரை போய் பார்க்கலாமா? என்று தொணதொணவென்று பிடுங்கி எடுத்து விட்டாள். வீடு திரும்பியதும் சுரேஷ் அவளை சமாதானப்படுத்தி, அவளிடம் தனக்கு இருமல் சளியோடு இரத்தம் வருவது பற்றியும், உள்ளூர இருக்கும் பயம் பற்றியும் கூறி, cancer specialistஐ சந்திப்பதுதான் சரி என்றும் விளக்கினான்.

இருவருக்குமே பயம் நெஞ்சை கவ்வியது. உலகமே இருண்டுவிட்டது போல் இருந்தது. டாக்டர் கூறியது போல் எதுவுமே இருக்காது என நம்பத்தான் நினைத்தார்கள். ஆயினும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

"....நான் முன்னாடி செய்த sputum and blood examination report பார்த்தேன். உங்க டாக்டரோட ரிப்போர்ட்டையும் பார்த்தேன். ஒரு MRI scanம், PET scanம் எடுக்கனும். நீங்க நாளைக்கு வரமுடியுமா? Lung Specialist வருவார். ஒரு bronchoscopy எடுக்கனும். இதிலெ கொஞ்சம் வலியிருக்கும். அனெஸ்திசியா கொடுத்துதான் எடுப்போம். நாளைக்கு ஒரு நாள் நீங்க இங்கேயே அட்மிட் ஆகனும்.." என படபடவென்று அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் முடித்தார்.

"அதுக்கு முன்னாடி, நீங்க என்னோட சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. நீங்க புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?.."

"இல்ல டாக்டர். காபி, டீ கூட ரொம்ப குடிக்க மாட்டேன்.."

"What are you Mr Suresh? ..உங்க work environment பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...."

"நான் ஒரு software company யிலே senior executive ஆ இருக்கேன். வேலைப்பளு இருக்கும். Officeயெல்லாம் நல்ல சௌகரியமா இருக்கும். தனி அறை, ஏசி எல்லாம்.. ஆமா டாக்டர், do you suspect the impact of passive smoking?...something like lung cancer?" என்று பட்டென்று தன் மனதில் இத்தனை நாள் உறுத்திக்கொண்டிருந்ததையும், அவ்ர் தன்னிடம் எதிர்பார்த்ததையும் தூக்கிப் போட்டான்.

'Exactly....'

"நானும் அதைத்தான் நினைத்து பயந்தேன் டாக்டர். அலுவலகத்தில் புகை பிடிக்கிறவர்கள் அதிகம். வேலையில் சேர்ந்த இரண்டு, மூன்று வருஷத்திலே புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஆரம்பித்து விடுகிறார்கள், வேலை அழுத்தம் காரணமாய். எனவே எங்கே போனாலும் ஒரே புகை தான், கேண்டினிலும் கூட. நான் அதிகம் meetings attend செய்யனும். அங்கேயும், இதே கதைதான். அதுவும் சிறிய ரூமாயிருப்பதால், ஒரே புகை மூட்டமாயிருக்கும். இதே நிலைதான் நான் முன்பு வேலைபார்த்த அலுவலகங்களிலும். ...............என் பதவியின் மூலமாக, நான் எவ்வளவோ முயற்சி செய்தும், அலுவலகத்தில் anti-smoking policy in work area கொண்டு வர முடியவில்லை. அரசாங்கமே திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது? இந்த சிகரெட் தயாரிப்பவர்களின் லாபி அவ்வளவு எளிதில் இதை விட்டு விடுவார்களா? அமெரிக்கா,கனடா போன்ற மேலை நாடுகளில் இதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளில் தான் இது போன்ற பிரச்சினைகள். இதை ஒரு occupational hazard ஆகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதி இதற்கும் சேர்த்துதான் என்று எண்ணிக்கொள்கிறேன். ஆனால் அது இவ்வளவு தூரத்திற்கு கொண்டு விடும் என்று எதிர் பார்க்கவில்லை....." தன் மனதில் இருந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், கையாலாகத்தனம ஆகிய அனைத்தையும் ஒரேமூச்சில் கொட்டித் தீர்த்தான்.

"....Relax.. relax Mr சுரேஷ்.. கவலைப்படாதீர்கள். Let us wait for the results of the tests...."

ஒரு வாரம் கழித்து.......

"Congratulations...Mr. சுரேஷ். ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்தாச்சு. the symptoms are benign (In a general sense, "benign" means of a mild character that does not threaten health or life.). நீங்க ஒன்னும் பயப்படவேண்டியதில்லை. வெறும் medicine மூலமாகவே சரி பண்ணி விடலாம். நல்ல வேளை நீங்கள் சரியான நேரத்தில் வந்து இருக்கிறீர்கள். இல்லையென்றால் இது வளர்ந்து நுரையீரல் புற்று நோயில் கொண்டு போய் விட்டிருக்கும். Thank God!!!....."

----------------------------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு :

  1. Passive smoking போன்ற மோசமான இலவசம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
  2. Passive Smoking அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் புகையே பிடிக்காதவர்களிடத்தில, passive smoking க்கிற்கு உட்பட்டவர்களுக்கு சாத்தியக்கூறுகள் 24% அதி்கமாய் இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன.
  3. நான் இந்த சிறு கதையில் படிப்பவர் மனம் அதிகம் பாதிக்கக்கூடாது என்பதற்காக benign என முடித்துள்ளேன். ஆனால் என் சக ஊழியர் ஒருவருக்கு passive smokingஆல் Non-small cell lung cancer இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் தற்போது chemotherapy உட்பட மற்ற சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  4. என் தந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர், நுரையீரலில் புகையினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். என் தந்தை இரயில்வேயில் அப்போது cabin station masterஆக வேலை பார்த்து வந்தார். அது சரக்கு இரயில் shunting yard அருகில் இருந்தது. அப்போது நீராவி இஞ்சின் மட்டுமே. அதன் புகையே என் தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
  5. இதில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவ முறைகள் கதைக்காக எழுதப் பட்டது. உண்மைப் பிரயோகம் மருத்துவர்கள் மட்டுமே கூற முடியும்.
  6. சற்றே அதிகமான ஆங்கில வார்த்தைப் பிரயோகத்திற்கு மன்னிக்கவும். கதையின் ஓட்டத்திற்காக அதைத் தவிர்க்க முடியவில்லை.




Sunday, June 18, 2006

நினைவெல்லாம் நான்....

நிலவொளி மொட்டை மாடியை நனைக்க, இதமான காற்று மெல்ல மெல்ல உடலை மஸாஜ் செய்து கொண்டிருந்தது. காற்றில் அசைந்த இலைகள் கச்சேரி ஆரம்பிக்கும் முன் சுருதி சேர்ப்பது போல சலசலத்தது. “வ்வ்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்…….”வாசலில் சென்ற மோட்டர் பைக் சுருதி பேதமாய் இருந்தாலும். அவனது மோன நிலை சற்றும் பாதிக்கப் படவில்லை.

அவன் இப்போது 30 வயது குறைந்திருந்தான். மனது இளமையாயிருந்தது. இது எத்தனை முறை அசை போட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒன்று. நன்கு மேய்ந்த பின்னர், மர நிழலில் சாவகாசமாக படுத்துக் கொண்டு அசை போடும் மாடு போல.

தாமரை இலையில் விழுந்த தண்ணீர் முத்துக்கள் சிறு துளிகளாகி, பின்னர் வழுக்கி ஒடி, இன்னொரு துளியுடன் சேர்ந்து சற்று பெரியதாகி மீண்டும் இன்னொன்றுடன் சேர்ந்து இன்னும் பெரியதாகி கடைசியில் இலையின் நடுவில் பெரியதொரு முத்தாய் இருக்குமே அது போல, நாட்கள் வாரமாய், மாதமாய் உருண்டோடி 30 வருடங்களாகி விட்டன. அந்த நாள்தான் அவனுக்கு வங்கியில் சேர அழைப்பு வந்த நாள். அவன் வாழ்க்கையில் நேர்ந்த மிகப் பெரிய திருப்பு முனை.

தபால்காரரிடமிருந்த பெற்ற கவரை பிரிக்கு முன்பே அவனுக்கு தெரிந்துவிட்டது . ஒரே குதுகலத்துடன் பிரித்து படித்தவுடன் “அம்மா, எனக்கு ஆர்டர் வந்துடுத்து” என்று சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் ஒடினது, அம்மா “என்னடா, என்னடா” என்று ஒரு கை தண்ணீரை எடுத்து எரியும் விறகின் தலையிலே தெளித்து அடுப்பை தணித்து வெளியே வந்து “என்னாடா சொல்றே, எங்கேயிருந்து ஆர்டர் வந்திருக்கு?” என்று கேட்டது, “அம்மா, எனக்கு பேங்க் அலாட் ஆகி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கும்மா. 25தேதிக்குள்ள ஜாய்ன் பண்ணனும். போஸ்டிங் திருநெல்வேலிம்மா” என்று சொன்னதும், “எல்லாம் ஸ்வாமி கிருபை” என்று அம்மா சந்தொஷப்பட்டதும் , சற்று நேரம் கழித்து “ஏண்டா, நம்மூர்லேயே திருச்சிலே வேலை இல்லையாமா?” என்று சற்று அரை மனதாக, பிறந்ததிலிருந்து இது நாள் வரை பிரியாத மகனை பிரியப்போகும் ஏக்கம் கண்ணில் தெரிய கேட்டது எல்லாம் ஏதோ சினிமா பார்ப்பது போல மனதில் வந்தது.

“சரி, சரி, ஸ்வாமிகிட்டே ஆர்டரை வச்சு நமஸ்காரம் பண்ணு. அப்புறம் எடுத்துண்டு போய் அப்பாகிட்டே காமி..”

அப்பா ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர். வீடு ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே. வாசலில் நின்று வேகமாகக் கத்தினால் அப்பாவிற்கு கேட்கும். ஆனால் அதற்கு அவசியமேயில்லை. “என்னடா, ஆர்டர் வந்துடுத்தா? போஸ்ட்மேன் சொன்னார். அதான் புக்கிங் கிளார்க்கை கொஞசம் பார்த்துக்க சொல்லிட்டு ஓடி வந்தேன்” என்றபடியே அப்பா நுழைந்தார். ஆர்டரை வாங்கி படித்துவிட்டு, “போன வாரம் அந்த குருவிக்காரி கை பார்த்து சொன்னது அப்படியே பலிச்சுடுத்துடா, அவளுக்கு தெய்வ வாக்கு…” என்றார். (இவர்கள் ரெகுலராக பயணம் செய்பவர்கள். பிளாட்பாரத்தில் ரயிலுக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில், பிரயாணத்திற்கு வரும் மற்ற பயணிகளிடம் இது மாதிரி ஜோஸ்யம் பார்க்கிறது, கொய்யாப்பழம் விற்பது, தள்ளுபடி விலையில் வேட்டி, புடவை விற்கிறது எல்லாம் நடக்கும். அப்படியே இன்னும் கொஞ்சம் தள்ளு விலையிலோ அல்லது சும்மாவோ, ரயில்வே ஸ்டாஃப்க்கும் கிடைக்கும்.)

எனக்கு பிஸ்ஸி(பிஸிக்ஸ்) படிக்கனும்தான் ஆசை. ஆனா அப்பாதான் என்னை பி.காம் படித்தால் தான் பாங்க் வேலை கிடக்கும் என்று சொல்லி என்னை கல்லூரியில் சேர்த்தார். அப்போது எல்லாம் பாங்க் வேலைன்னா ரொம்ப பெருமை. அப்பாவிற்கு அவருடைய எண்ணம் ஈடேறியதில் மிகவும் சந்தோஷம்.

கல்லூரியை பற்றி எண்ணியதுமே என் மனம் சற்று நின்று, ரிவர்ஸ் கியர் போட்டு இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றது.

என் கல்லூரி படிப்பிற்காகவே, அப்பா ஒரு குக்கிராம ஸ்டேஷனிலிருந்து, திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்திருந்தார். திருச்சி ஒரு மிகப்பெரிய ஊராக காட்சியளித்தது எனக்கு. எங்கள் சொந்தக்காரர் ஒருவர், எல்லா கல்லூரிகளிலும் எனக்கு அப்ளிகேஷன் வாங்கி வந்து கொடுத்து கூடவே, “..நீ ஒன்னும் கவலைப்படாதே, நேஷனல் காலேஜில் நான் உனக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்துடறேன்..” என்று உறுதியளித்து அவ்வாறே வாங்கியும் கொடுத்தார்.

தினமும் ரயிலில் பயணம், காலையும் மாலையும். 9:23 க்கு லால்குடி- திருச்சி பாஸஞ்சர் டவுன் ஸ்டேஷனுக்கு வரும். 9:26க்கு கிளம்பும். வண்டியில் முழுக்க ரயில்வே ஆபீஸில் (திருச்சி ஜங்ஷன் டிவிஷனல் ஆபீஸ் ரொம்ப பெரியது) வேலை செய்பவர்களும், கல்லூரி மாணவ மாணவியரும் தான். டவுன் ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷன், ஸ்ரீரங்கம். இங்குதான் வண்டி நிரம்பும். மாணவியர் அனைவரும் டவுனில் இறங்கி விடுவார்கள். (சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரிக்கும், சாவித்திரி வித்யாசாலாவிற்கும், சில பேர் மட்டும் ஹோலி கிராஸ் கல்லூரிக்கும் நடந்து சென்று விடுவார்கள்). டவுனில் ஏறுபவர்கள் அனைவரும் ரயில்வே ஆபீஸ் அல்லது, ஜமால் முகம்மது கல்லூரி அல்லது தேசிய (நேஷனல்) கல்லூரிக்கு செல்பவர்கள் (எல்லாம் ஆண்கள் ம(ட்டு)டம்).

அதே கம்பார்ட்மெண்ட், அதே நண்பர்கள், அதே பெரிசுகள், அதே இருக்கை. கல்லூரிப் படிப்பை முடித்த நண்பர்கள் மாறலாம். மற்றவை மாறவே மாறாது. ரங்காவும், சக்தியும் என் சீனியர்ஸ். இருவரும் ஸ்ரீரங்கம். வண்டி டவுன் ஸ்டேஷனைத் தாண்டியதும், கதவோரம் வந்து விடுவார்கள். ஒரு சிகரெட, நான்கு உதடுகள். சிகரெட் வாயில் இல்லாத நேரத்தில், ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பற்றி விமர்சனம் நடக்கும். இதில் கூட பயணித்த, மற்றும் உள்ளூர் தேவதைகளும், சில சமயங்களில் தேவாதி தேவர்களும்(தேவதைகளை பெற்றவர்கள்) இடம் பெறுவர்.

ஆனால் டவுனில் ஏறும் நாங்கள் அபாக்கியசாலிகள். நாங்கள் வண்டியில் ஏறும் போதும் அவர்கள் இறங்கும் போதும் கிடைக்கும் அச்சிறு கண நொடிகளே. இதில் எனக்கு இன்னும் கடினம். ஸ்டேஷன் மாஸ்டர் பையன் ஆனதால் அங்கு இருக்கும் எல்லாருக்கும் (அந்த ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள், ரயில் கார்டு, டிரைவர், டி.டி.ஆர், ரயில்வே ஆபீசில் பணி புரிபவர், கடலை விற்பவர் அனைவருக்கும்) என்னைத் தெரியும் (யாரது! கோபாலன் பையனா? என்ன நேஷனலா? நன்னா படி.. என்ன!!!). கப்சிப் என்று பவ்யமாக வண்டி ஏறி சென்று திரும்ப வேண்டியதுதான். சில சமயங்களில் சில பெரிசுகள் கூப்பிட்டு தன் பக்கத்தில் வேற உட்கார்த்தி வைத்துக் கொண்டு விடும். மேலும் திருச்சி எனக்கு புதிது! இந்த தேவ தரிசனம் அதனினும் புதிது!!

இந்த மாதிரியான விஷயங்களில் பால பாடங்கள் முடிந்து சற்று தேறிய நிலையில் இருந்த போது, (இப்போது நான் செயிண்ட் ஜோசப் கல்லூரி. பெண்கள் கல்லூரி வழியாகவும் போகலாம், மலை வாசல் வழியாகவும் போகலாம் ), என் சகோதரி (பெரியம்மாவின் பெண்) வந்து எங்களுடனேயே தங்கி பெண்கள் கல்லூரிக்கு போக ஆரம்பித்தாள். அவ்வளவுதான் . நான் தினமும் நவரத்னங்களை தவிர்த்து , மலை வாசலில் இருக்கும் மாணிக்க வினாயகரைத் தரிசனம் செய்து கொண்டு கல்லூரி செல்லலானேன்.

என் மேல் விழுந்த ஒரு நீர்த்துளி சடாரென்று என் மன வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியது. ஒரு சிறு சிலிர்ப்புக்குப் பிறகு வண்டி பாஸ்ட் பார்வோர்ட்ல் போய் சென்ற வாரத்தில் நின்றது.

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள்.

“ஆமாம்மா. US லே Purdue யுனிவர்சிட்டிலேருந்து ஆஃபர் வந்திருக்கும்மா. ஆகஸ்டுலே காலேஜ் ஆரம்பிச்சுடும்மா..”

“…… இத்தனை வருஷம் உங்கூடவே இருந்துட்டு இப்போ தனியா போகனும்.. ம்ம்ம்ம்ம்ம். ” என்று கூறி நமுட்டு சிரிப்புடன் “ ஏன் நீயும் வாயேன். நான் வீடு எடுத்துதான் தங்க போறேன். நீ வந்தா எனக்கும் சௌகரியமா இருக்கும்…” என்றவனிடம் “” போ..போ.. வேற வேலையில்லை. கொஞ்ச நாள் தனியா இருந்து அவஸ்தைப்படு. சும்மா அம்மா கோண்டா இருக்காதே..” என்று சிணுங்கினாள்.

“ஆனா பாருடா, அந்த கடலங்குடி சரஸ்வதி ஜோஸ்யம் சொன்னா. நீ வந்து நுண்துறை சம்பத்தப்பட்ட படிப்பு தான் படிப்பேன்னா. அதே மாதிரி ஆயிடுத்து பாரேன். சரி, இதை அப்பாக்கு போன்லெ சொல்லிட்டு, இ-மெயிலில் ஆபீஸ் அட்ரசுக்கு பார்வோர்டு பண்ணிடு..”

இது என் மகனுக்கும், மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கோண்டே உள்ளே வந்த நான், விவரங்கள் அறிந்த பிறகு, “என்னவோ போ.. நீ பாட்டுக்கு, இதைப் படிக்கிறேன், அதைப் படிக்கிறேன்னு சொல்றே. எனக்கு ஒன்னும் புரியலே. பெருமாள் கோயில் மாடு மாதிரி தலையாட்டிண்டு இருக்கேன்….”என்று நகர்ந்தேன்.

என்னை யாரோ உலுக்குவது போல் இருந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது, அதற்கு காரணமான என் மனைவி அருகிலிருந்தாள்.

“…என்ன மணி 10:30 ஆகிறது. சாப்பிட வரலையா? ஏன் அதுக்குள்ளே தூக்கம்?..”

“இல்ல! இப்படி எதையோ நினைச்சு யோசனை பண்ணிண்டு இருந்தேனா.. அப்படியே பழசு எல்லாம் நினைவுக்கு வந்தது..” என்றேன்.

“ஒஹோஹோ! என்ன ஆட்டோகிராபோ? “ என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“இல்லே ! இல்லே!! இது தவமாய் தவமிருந்து … “ என்று கூறி எழுந்தேன்.

---------------------------------------------------------------

பின் குறிப்பு : இந்த கதையின் தொடர்ச்சியை என் மகன் இன்னும் 30 வருடம் கழித்து நேனோ குக்கர், மைண்ட் ரீடர் என்றும், தன் பள்ளி, கல்லூரி அனுபவங்களையும்

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள் ..”

என்கிறதுலேயிருந்து ஆரம்பித்து எழுதுவான்……


எனக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் வளர்ந்து, சிதைந்து (மாறிப் ) போய் தான் இருக்கிறேன். எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?


தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்)

Saturday, June 10, 2006

No taxes will be levied in the Jagson Airlines tickets.

ஜாக்சன் விமான சேவையில், டிக்கெட்டில் வரி எதுவும் சேக்க மாட்டாங்களாம்.

ஏன்னா, கட்டபொம்மன்தான் ஏற்கனவே மிரட்டி வெச்சிருக்காரே !!!!

:-) :-)

Friday, June 09, 2006

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டு...

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்றாலே நாடி. நரம்பு எல்லாம் சற்று முறுக்கேறிக் கொள்கிறது. நாம் உலக சந்தையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் மூலமாக அரசு தன் வருவாயை எவ்வளவு பெருக்கிக் கொள்வதிலும், அரசியல் கட்சிகள் தனிப்பட்ட ஆதாயம் தேடுவதிலும் எவ்வளவு முனைப்பாக உள்ளன.

திரு ஜெயசங்கர் மிக நல்ல பதிவை எழுதியிருக்கிறார். http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html

வரி விகிதங்கள் அப்படியே இருக்கின்றன. உலக சந்தையில் விலை ஏற ஏற, அரசுக்கு வரும் Customs and Excise வரிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மேலும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக விதிக்கப்பட்ட Cess, Surcharge and Special duty விலக்கிக் கொள்ளப் படவேயில்லை. (யஷ்வந்த் சின்ஹா போட்ட Special duty அதிகரிப்பட்டதே தவிர குறைக்கவோ எடுக்கப்படவோ இல்லை).

மாநில அரசுகள் விற்பனை வரியையும் குறைத்துக் கொள்ளேவேயில்லை. எதிர் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் மத்திய அரசை குறை கூறி ஒரு அறிவிப்பு இடுத்து சும்மா இருந்து விடு. ஆளூம் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் 'கப்சிப்' என்று இருந்து விடும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே (57% மேலாக) இந்த வி(நி)லைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதல் 5 பட்டியலில் வரும்.

ஏன் அரசுகள் வரி குறைப்பு செய்ய முயலவில்லை? இது மிகக் குறைந்த செலவில் அரசு பெரும் வருமானம். இதைக் குறைத்தால் வேறு விதமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது மிகவும் கடினம் மற்றும் the cost of collecting would be high.

ஆனால் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் நிலைகளைப் பாருங்கள்:

1) West Bengal & Kerala மற்றும் பிற மாநில தேர்தலுக்காக இது வரை இந்த விலை ஏற்றத்தை ஒத்திப் போட்டார்கள் என்றும் இனியும் தள்ளிப் போட முடியாது என்றும் செய்திகள். இது நியாயமான பொருளாதார நடவடிக்கை என்றால் ஏன் முன்பே செய்ய வில்லை? ஓட்டு போய் விடும் என்றுதானே?

2) கம்யுனிஸ கட்சிகள், போராட்டம் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இதில் முழு மூச்சோடு செயல் பட்டார்களா? கம்யுனிஸ கட்சிகள் இந்த ஏற்றத்தை நிஜமாகவே எதிர்கிறார்கள் என்றால், ஏன் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளக் கூடாது?

3) காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை ஏற்றத்ததில் உடன்பாடு இல்லையாம். இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இல்லையா? இதில் ஆதாயம் தேடுவது யார்? சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் அதுவே இந்த எதிர்ப்பு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4) செல்வி.ஜெயலலிதா ஆட்சியின் போது, திரு.கருணாநிதி, மாநில அரசு விற்பனை வரியை குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட சுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். இப்போது திரு.கருணாநிதி அதை ஏன் இன்னமும் செய்யவில்லை? தனக்கு ஒரு நீதி, மற்றவருக்கு வேறொன்றோ?

விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். Demand and Supply. நம் தேவைக்கு குறந்த அளவே நாம் கச்சா எண்ணையை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்கிறோம். ஏன்? நம்மிடம் உள்ள சுத்திகரிப்பு திறனும், அளவும் அவ்வளவுதான். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்பட்டது? இதை பெருக்க எடுத்துகொண்ட முயற்சியென்ன?

சௌதி அரசர் இந்திய விஜயத்தின் போது இதையே சொன்னார். "நாங்கள் அதிக உற்பத்தி மற்றும் / ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் சுத்திகரிப்பு திறன் உயர்த்தப் படவில்லை"

அரசும் அரசியல் கட்சிகளும் சிறிதும் தொலை நோக்கோடு செயல் படவில்லை என்றே தெளிவாகின்றது.

Thursday, June 08, 2006

உனக்காக எல்லாம் உனக்காக.....

அன்று SMS ல் எனக்கு வந்த செய்தி. "...Also nescafe natarajan passed away today evening.......". இதுவே முழு செய்தி அல்ல. மற்ற செய்திகளின் இடையே திணிக்கப்பட்ட ஒரு செய்தி. இரண்டு ரொட்டித் துண்டுகளிடையே சிறை வைக்கப்பட்ட cheese மாதிரி.

என் மனது சற்று உதறியது. இறந்து போன திரு. நடராஜன் எனக்கு ஒன்று விட்ட (ஏன் இரண்டு, மூன்று கூட) மாமா. என் தாய் வழிப் கொள்ளுப் பாட்டியும் அவர் தாய் வழிப் பாட்டியும் cousins. எனவே உறவு முறையில் எட்ட இருந்தாலும், பழகு முறையில் என் தாய்க்கும், அவர் குடும்பத்திற்கும் நெருக்கம். அந்த முறையில் அவரும் எனக்கு பழக்கம். அவருடைய மகன் என் பெண்ணிற்கு பரத நாட்டிய குரு. உதறுதலுக்கு இந்த பந்தம் ஒரு காரணம்.

எனக்கு உடனே ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முந்தியது அது அவரின் கல்யாணம் நடந்த நாள். கும்பகோணம் ராமன் & ராமன் சத்திரம் (வீட்டை சத்திரமாக ஆக்கியிருந்தார்கள்). சற்று பெரிய முற்றம். அதை ஒட்டிய தாழ்வாரத்தில் கல்யாணத்து அன்று மாலை நடக்கும் நலங்கு நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் என் மாமியை பாட சொன்னார்கள். அதன் பின் மாப்பிள்ளை வீட்டு முறை. நீ பாடு, நான் பாடு என்று ஒரே ஏலம். திடீரென்று என் மாமா (மாப்பிள்ளை) பாட ஆரம்பித்தார். "உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக.." என்ற சந்திரபாபு பாட்டை தன் கணீரென்ற குரலில் பாடினார். (இதுதான் காரணமோ என்னவோ தெரியவில்லை, இந்த பாட்டு சந்திரபாபுவின் பாட்டுக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது.) .

இந்த ஒரு சம்பவம் என் மனத்தில் ஒரு பசு மரத்தாணி போல பதிந்து இருந்தது. எனக்கு இந்த கல்யாணத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும், ஏன் நான் என்ன உடை அணிந்திருந்தேன், யார் கூட சென்றேன் (எனக்கு வயது அப்பொழுது 8 - 10 க்குள் இருக்க்கலாம்) என்று எதுவும் சுத்தமாக நினைவில் இல்லை.

எனக்கு இந்த SMS ல் சுறீரென்று உறைத்த மற்ற ஒன்று. சம்பிரதாயமாக இரங்கல் செய்திகள் தெரிவிக்கும்போது வேறு எந்த செய்திகளையும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அந்த செய்தி "...Also nescafe natarajan passed away today evening.......". என்று வந்தது மனதை சற்று குறுகுறுக்கச் செய்தது. இது அனுப்பியவர்களின் குற்றம் அல்ல. காலத்தின் வேகம், தொழில் நுட்பத்தின் கட்டாயம், இன்றைய வாழ்க்கையின் எதார்த்தம்.

எது எப்படி இருந்தாலும் என் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன்

Friday, June 02, 2006

ஆதாயம் தரும் பதவி (Office of Profit)யும் CPMன் நிலையும்.

Parliament (Prevention of Disqualification) Amendment Bill, 2006 ல் குறிப்பிடப்பட்ட 56 வாரியங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இதில் 17 வாரியங்கள் West Bengal ல் உள்ளவை. There is no wonder about the CPM's vested interest in getting this bill passed. இரு வாரங்களுக்கு முன்னர் தான் CPM தற்போது எடுத்து வரும் நிலப்பாடுகளின் தரம் குறித்து மெச்சி எழுதினேன் ( http://balablooms.blogspot.com/2006/05/cpm.html) . என்னை 'அடங்குடா, மவனே!!' என்று கூறி தங்களுக்கு எது நல்லதோ, எந்த விஷயம் தங்களை முன்னிலைப்படுத்துமோ அதில் மட்டும்தான் நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இந்த விஷயத்தில் CPM இன் தோல் உரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்கள் உதித்துள்ள சில பொன்மொழிகளை படியுங்கள்:

“If this state of affairs is allowed to continue, then there are bound to be litigations on a large scale as well as the likely vacation of seats in both Houses of Parliament, which will necessitate the holding of by-elections to fill up these vacancies."

“This would result in a lot of wasteful expenditure and would enforce an unnecessary financial burden upon the nation,” Mr Bharadwaj added. - Decaan Herald - May 17th.

ராய் பரேலியில் நடந்த செலவு தேசிய முன்னேற்றத்திற்காக செலவிடப்பட்டது போலும். இந்த BILL சட்டமாக அமலாக்கப் படாவிட்டால், UPA கவிழ்ந்தாலும் கவிழும். இப்போது தெரிகிறதா, மதிமுகவின் 4 MPக்களின் மகிமை.

“This is the prerogative of Parliament and the state legislatures, they have the powers (to do so),” Karat said.

இது ஜனாதிபதியின் "எல்லா மாநிலங்களுக்கும் ஒப்புதலான ஒரு வறைமுறை" குறித்த ஆலோசனைக்கு பிரகாஷ் கரத்தின் பதில். அகில இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் மேற்கு வங்காள ஹஜ் கமிட்டி மற்றுமே இடம் பெற்றுள்ளன இந்த பட்டயலில். மற்ற மாநில ஹஜ் கமிட்டிகள் என்னவாயிற்று? அதன் பொருப்பாளர்கள் இப்பொழுது MP ஆக இல்லை. அவர்கள் MP க்களானால் அப்பொழுது தனி சட்ட திருத்தம் கொண்டு வரலாம். ஏனென்றால் பாராளுமன்றத்திற்கு வேர வேலை இல்லை பாருங்கள்.

இப்பொழுது பிரகாஷ் கரத் தேர்தல் ஆணயம் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்கிறார். "Questions for Money" scamல் பார்லிமெண்ட் செயல்பட்ட சுறுசுறுப்பின் காரணம் அதில் சம்பத்தப்பட்ட பெரும்பான்மையானோர் BJP என்பதாலும், CPM, CPI சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதினால்தானோ?

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் என்பது போல, இது காங்கிரஸ் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு.

இது சம்பந்தமான "idly vadai" பதிவும் அருமை . http://idlyvadai.blogspot.com/2006/06/111-143.html

Exempted institutions from OoP definition:

1 The TTD Board AP
2 The Bihar State Religious Trust Board BIHAR
3 The Board of Control-A.N Sinha Institute of Social Studies, Patna BIHAR
4 National Advisory Council Central
5 The Society for Self-Employment for Urban Youth Central
6 The Agricultural and Processed Food Products Export Development Authority Central
7 The National Agricultural Co-Operative Marketing Federation of India Ltd Central
8 The Indian Farmers Fertilizers Co-operative Ltd Central
9 The Krishak Bharti Co-Operative Limited Central
10 The National Co-Operative Consumers Federation of India Ltd Central
11 The Aurovile Foundation Central
12 The National Commission of Enterprises in the Unorganised Sector Central
13 The Planning Board (Asiatic Society Central
14 Delhi Rural Development Board Central
15 The Maulana Azad Education Foundation Central
16 The Dr. Amedkar Foundation Central
17 The Research and Information System for the Non-Aligned and other Developing Countries Central
18 The Indira Gandhi National Centre for Arts Central
19 The Indian Institute of Psychometry Central
20 The Indian Council of Cultural Relations Central
21 All India Council for Sports Central
22 The Central Wakf Council Central
23 The Nehru Memorial Museum and Library Central
24 The Jalianwala Bagh Memorial Trust Central
25 The Haj Committee of India Central
26 The Mallickghat Phoolbazar Parichalan Committee Central
27 The Dalit Sena Delhi
28 The Social Justice Trust Delhi
29 The Bahujan Prerna Charitable Trust, Delhi Delhi
30 The Tripura Khadi and Village Industries Board Tripura
31 The UP Development Council UP
32 The Uttar Pradesh Co-operative Bank UP
33 The Uttar Pradesh Pradesh Provincial Co-operative Federation Ltd UP
34 The Uttar Pradesh Co-operative Federation Ltd UP
35 The National Co-Operative Union of India UP
36 UP Krishi and Gram Vikas Bank UP
37 The Uttar Pradesh Co-operative Bank Limited UP
38 The Bahujan Foundation (Charitable Trust, LUCKNOW UP
39 The Irrigation and Flood Control Commission UP
40 The Asansol Durgapur Development Authority WB
41 The Indian Statistical Institute , Kolkotta WB
42 The West Bengal Handicrafts Development Corporation Ltd WB
43 The WB Small Industries Development Corporation Ltd WB
44 The West Bengal Industries Development Corporation Ltd WB
45 The Shantiniketan Sriniketan Development Authority WB
46 Haldia Development Authority WB
47 The WB Minorities Development Finance Corporation WB
48 The Hoogly River Bridge Commissioners WB
49 The West Bengal Fisheries Development Corporation Ltd WB
50 West Bengal State Haj Committee WB
51 The West Bengal Pharmaceutical and Phytochemical Development Corporation Ltd WB
52 The West Bengal Powerloom and Handloom Development Corporation Ltd WB
53 The West Bengal Khadi and Village Industry Society WB
54 Howrah Improvement Trust WB
55 The WB Fisheries Corporation WB
56 The Board of Wakf, WB
WB

Wednesday, May 31, 2006

சார்....போஸ்ட்......

அந்த நிகழ்ச்சி இப்போது நினைவிற்கு வருகிறது. சென்ற வருடம் தீபாவளிப் பண்டிகை. நான்தான் எங்கள் அபார்ட்மெண்ட் சொசைட்டிக்கு செகரட்டரி. பண்டிகையின் போது கார்ப்பொரேஷன் துப்புரவுத் தொழிளாலர்கள், மின் வாரிய கடை நிலை ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள் மற்றும் சில நபர்களுக்கும் தீபாவளி பரிசாக, எல்லோரையும் போலவே நாங்களும், ஒரு சிறு ஊக்கத் தொகை வழங்குவது வழக்கம்.

வழக்கம் போல் சென்ற வருடமும் அவ்வாறே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு லிஸ்ட் தயார் செய்து அதை அபார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்து அனைவருக்கும் பங்கீடு செய்யச் சொல்லியிருந்தேன். பண்டிகை முடிந்து ஒரு வாரம் ஆன பின்னர் காவலாளி என்னிடம் லிஸ்டை கொடுத்து மீதி தொகையையும் கொடுத்தார்.

“ஏன் எவருக்கேனும் கொடுக்க விட்டுப் போய் விட்டதா ?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “இல்லை மேடம். நீங்க சொன்ன மாதிரி எல்லோருக்கும் கொடுத்துட்டேன். ஆனால் நம் தெருவிற்கு வரும் தபால்காரரில் ஒருவர் இந்த அமொவுண்டை வாங்க மாட்டென்னுட்டார்” என்றார்.

“ ஏன், அவர் இன்னும் கூடுதல் தொகை எதிர்பார்க்கிறாரா?”

“இல்லை. இப்போதெல்லாம் அவர் ஊக்கத் தொகை வாங்கறதில்லையாம்”.

“சரி” என்று அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்.டேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எனக்கு அந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்தியது.

இன்று காலை 11 மணி இருக்கும். வாசலில் தபால்காரர் வருகிறாரா எனப் பார்த்து நின்று கொண்டிருந்தேன்.

இந்த எதிர்பார்ப்பு சற்று வித்தியாசமானது. நண்பர்களிடமும், உறவினரிடமும் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது மின்னரட்டை மூலமாகவே தகவல் பறிமாற்றங்கள் முடிந்து விடிகின்றன. கல்யாணப் பத்திரிக்கை போன்ற சில சம்பிரதாயமான ஒரிரு தபால்களே வரும். மற்ற தபால்கள் எல்லாம் Nungai Times, Share brokers mail, Promotion flyers போன்ற junk mail களே.

இன்று நான் காத்திருந்தது அமெரிக்க பல்கலை கழகத்தில் இருந்து என் மகனின் உயர் படிப்பிற்கான admission offer ஐ. ஏற்கனவே மின்னஞ்சலில் admission உறுதி படுத்தப்பட்டு விட்டது. அது தொடர்பான மற்ற ஆவணங்களை தபாலில் அனுப்பவதாக தெரிவித்திருந்தார்கள். இதற்கு முன்னும் ஏணைய பிற பல்கலைகழகங்களில் இருந்து தபால்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த பல்கலைகழகம் அமெரிக்காவின் சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றானாதால், எங்கள் குடும்பத்தில் அனைவரும், இதை மிக ஆவலாக எதிர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தெரு முனையில் தபால்காரரின் தலை தெரிந்தது. உள்ளே அடித்த தொலைபேசியின் மணியையும் உதாசீனப் படுத்திவிட்டு அவர் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வரும் வரை காத்திருந்தேன்.


“கங்கிராஜுலேஷன்ஸ், மேடம். US லேருந்து லெட்டர் வந்து இருக்கு. நிச்சயமா உங்க பையனுக்கு அட்மிஷன் லெட்டராத்தான் இருக்கும்” என்று கூறிய படியே அந்த கவரை என்னிடம் கொடுத்தார்.

“ஆமாமாம். நானும் அந்த கவரத்தான் எதிர் பார்த்துகிட்டிருக்கேன்..” எனக் கூறியபடியே அதை வாங்கினேன்.

“பையனுக்கு வேற யுனிவர்சிடிலேருந்தெல்லாம் கூட வந்திருக்கு போல. எந்த யுனிவர்சிட்டிய செலெக்ட் செஞ்சுருக்கீங்க..” என்றார். மேலும் “இந்த ஸ்டீரெட்லெ 4 , 5 பேருக்கு வந்திருக்கு மேடம். அந்த கோல்டன் மேனார் அபார்ட்மெண்ட்லெ ஒரு பையனுக்கு ஸ்டான்போர்ட் வந்திருக்கு மேடம். உங்களுக்குக் வந்திருக்கிற புர்டியு யுனிவர்சிட்டியும் ரொம்ப நல்ல யுனிவர்சிட்டி மேடம்….” என்றார்.

“ரொம்ப தேங்ஸ். ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த யுனிவர்சிட்டிகளை பத்தி தெரியும்.”

“போன வருஷம், என் பையன் MS படிக்கறதுக்காக இந்த யுனிவர்சிட்டியெல்லாம் பத்தி பேசுவான். அப்புறம் நாந்தான் வருஷா வருஷம் நம்ம தெரு பசங்களுக்கெல்லாம் கவர் கொண்டு வந்து கொடுக்கிறேனே. அப்போ அவங்களோட பேசும் போது கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்”

எனக்கு சற்று வியப்பு கலந்த ஆச்சரியம். தபால்காரரின் மகன் MS ஆ? “என்னங்க. உங்க பையன் MS பண்றாரா? எங்கே? “

“அவனுக்கு ஆஸ்திரேலியாவிலே University of Melbourne லே funding கோட கிடைச்சது மேடம். அதானாலெ அங்கே சேர்ந்துட்டான். ஆச்சு இதோ போன மாதிரி இருக்கு. ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் ஒரு வருஷம். அப்புறம் அங்கேயே வேலை பாக்குறானோ இல்லே எங்கே போறானா…”

“உங்க பையனுக்கு all the best மேடம்…”



பின் குறிப்பு : இது உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதியது.

Saturday, May 27, 2006

நின்றாலும் குற்றம், உட்கார்ந்தாலும் குற்றம்......

ஏன் இந்த விதண்டா(வீண்) வாதமோ தெரியவில்லை. இன்று பார்க்கும் பதிவுகளில்லாம் கழகக் கண்மணிகளின் கடுப்பு தெரிகிறது.

ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை என்றபோது ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கற்பித்தார்கள். இப்போது வந்தபின்பும் ஒரே புலம்பல்.

திரு கருணாநிதியின் மோசமான உதாரணம் தொடரப்படாமல் எதிர்க்கட்சித தலைவர் இன்று சபைக்கு வந்து பேசியும் இருக்கிறார். நான் சபைக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் அறையில் இருந்து சபை நடவடிக்கையை "கேட்டேன்", வரண்டாவில் இருந்து "கவனித்தேன்", (சாலையில் செல்லும் போது நினைத்துப் பார்த்தேன்) என்று சப்பைக் கட்டு கட்டியதற்கு இது எவ்வளோவோ தேவலை.

ஆமாம், இது என்ன புதுவித விளக்கம். ஏழைகளிடம் உள்ள தரிசு நிலங்களை எடுத்து, அதை மேம்படுத்தி பிறகு அவர்களிடம் திருப்பி கொடுப்பார்களாம். இதுதான் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் தரும் திட்டமா? அப்படியென்றால் உங்கள் TV வேலை செய்ய வில்லையென்றால், வசந்த் & கோ வில் மாற்றம் செய்து விடாதீர்கள். திமுக அரசு அதை எடுத்து repair செய்து, இலவச TV கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றி விடும்.

என்னய்யா இது, தலை கால் புரியவில்லை. ok ok இதுதான் அண்ணாயிசம், பெரியாரிசம் போலும்....

சரி, ஏன் நேற்று கலைஞர், தன்னை அதிமுகவினர் தாக்க வந்தபோது "கொல்றாங்க, கொல்றாங்க" என்று கத்த வில்லை. SUN TV Team ரெடியாக இல்லையோ? நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டாரே? அய்யோ பாவம்.

சில பதிவுகளில், ஜெயலலிதா இப்போது கேட்கிறாரே, ஆட்சியில் இருக்கும் போது இவர் என்ன செய்தார்? எனக் கேட்கிறார்கள்.

//இதே விஷயத்தில் அம்மா தனது ஆட்சியில் செய்தது என்ன? இதே 50 லட்சம் ஏக்கர் நிலத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு - பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து பண்ணைகளை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்தார். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இதன் மூலம் சாதித்தது என்ன?// -- சந்திப்பு...

அதை அவர் செய்ததால் தான் இன்று எதிர்கட்சியில் மக்கள் அவரை வைத்திருக்கிறார்கள். பின் ஏன் நீங்களும் அதே தவறை செய்கிறீர்கள்?

// இவர் யாரைக் கேவலப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் நாணயமானவர்கள் என்றால், செலுத்தாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா?.//-- சந்திப்பு...

இது திசை திருப்பும் வாதம். இணையத்தில் சந்திப்புவின் பதிவுகள் நன்றாக இருக்கிறது என்றால் , மற்ற பதிவுகள் எல்லாம் கெட்டவை என்று கூறியதாக அர்த்தமாகுமா? செலுத்தாதவருக்கு தள்ளுபடி என்றால், செலுத்தியவருக்கு இன்னும் அதிகப்படியான ஊக்கம் கொடுக்கவேண்டும்.

By coming to assembly, she has scored a point over her rivals, silenced her critics and revived the norms. The points she expressed were very valid and the Govt. could not provide proper answers.

Wednesday, May 24, 2006

இட ஒதுக்கீடு ஒத்துக்கொள்ளப்பட்டது!....வெற்றி!!.. வெற்றி!!!

அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனது நண்பரும் சக அதிகாரியுமான அவரும் உணர்ச்சி வசப்படவே, இருவரின் குரலும் உயர்ந்தது வெளியில் உள்ளவர்க்கு கேட்டுவிட்டது போலும். நிலமையை உணர்ந்த நாங்கள் இருவரும் நிதானத்திற்கு வந்து, சிறிது நேர மௌனத்திற்கு பின் மீண்டும் எங்கள் வாக்கு வாதத்தை, குரல் தாழ்த்தி தொடர்ந்தோம். ஆனால் இருவருக்கும் கோபம் சற்றும் குறையவில்லை.

இட ஒதிக்கீட்டை பற்றி ஏற்கனவே ரொம்பவும்தான் விவாதித்தாகி விட்டது. இதை நிர்வாகமும் ஒத்துக்கொண்ட பின், கீழ் நிலையில் ஏன் இன்னும் அமுல் படுத்த தயக்கம் என எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. எப்பொழுது போய் கேட்டாலும், இந்த மாதத்தில் இருந்து தொடங்கிவிடுகிறோம், Policy எல்லாம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது, கணக்கீடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இந்த விஷயத்திற்காக பலமுறை நேரில் பேசி, கடிதம் மூலம் நினைவு படுத்தி எல்லாம் செய்தாகி விட்டது.

இன்றைய விவாதம், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததினால் எனக்கு வந்த கோபத்தின் பிரதிபலிப்பே.

"மிக நெருங்கிய நண்பரே, நீங்கள் இந்த விஷயத்தில் இனிமேலும் மெத்தனம் காட்டினால், நான் நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றி முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் உங்கள் பிரிவினரை பாதுகாக்கவும், வளரும் உங்கள் பிரிவின் தேவைக்காகவும் தான் இட ஒதுக்கீட்டு ஆணையை அமுல் படுத்தாமல் இருக்கிறீர்கள் என முறையிடுவேன். பாதிக்கப்படுவது என் பிரிவை சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்து உள்ளார்கள். அவர்கள் என்னை குறை நிவாரணப் பிரிவிற்கு மனு கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் என் நண்பராகப் போய் விட்ட காரணத்தினாலும், இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையாலும், கடைசி முறையாக உங்களிடம் பேச வந்துள்ளேன். ..." இது நான்.

"திரு.............அவர்களே, இட ஒதுக்கீடு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. நீங்கள் கேட்கிற மாதிரி அதை செயல் படுத்தினால், என் பிரிவை சேர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் இது வரை அனுபவித்து வந்த வசதிகள் பறி போய் விடும் , உங்கள் பிரிவினரின் ஆதிக்கத்தை வளர்த்து விடும் என பயப்படுகிறார்கள். எனக்கும் அந்த பயம் உள்ளூர இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினால் அது உற்பத்தித்திறனை குறைத்து விடும் என்றும் பயப்படுகிறேன். இது விஷயமாக நான் ஏற்கனவே மேலிடத்திற்கு எழுதியுள்ளேன். அதற்கு எனக்கு சரியான பதில் வரும் வரையில் நான் எந்த முடிவும் எடுப்பதற்கில்லை, என்னை மன்னிக்கவும்..." இது அவர்.

"OK .. Let me see! .I know what to do hereafter........." எனக் கோபத்தில் நான் வெளியேறும் சமயம், எங்கள் இருவரின் மேலதிகாரியான அவர் வந்தார். அவர் வட நாட்டவர்.

"என்ன இது, நீங்கள் இருவரும் அனுபவத்திலும், வயதிலும் மூத்தவர்கள். இவ்வாறா நடந்து கொள்வது? உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள். நான் சரி பண்ண முடியுமா என பார்க்கிறேன் ...?

உடனே நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கி சொல்லி, முத்தாய்ப்பாக "...this is just a simple space allocation problem. எங்கள் பிரிவில் இருப்பவர் அனைவரும் தணிக்கையாளார்கள். ஊர் ஊராக சுற்றி விட்டு தணிக்கை அறிக்கையை அளிப்பதற்காக தலைமை அலுவலகம் வரும் பொழுதோ, தலைமை அலுவலக வேலைகளை செய்வதற்கோ, எங்களுக்கென்று ஒரு cabin or office இருப்பதில்லை. எங்களுக்கென்று அளித்த இடத்தையும் நண்பர் , கூடி வரும் அவரின் பணியாளர்களின் தேவைக்காக எடுத்துக் கொண்டு விட்டார். I was just arguing about this with him.." என முடித்தேன்.

மேலதிகாரி " Don't worry, I shall make arrangements for your space allocation immediately. For this, don't fight between yourselves. Continue to be friends ...." எனக்கூறி அங்கிருந்து அகன்றார்.

நானும் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் என் இருக்கைக்கு திரும்பினேன்.


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்..........

Monday, May 22, 2006

விவசாயிகள் கடன் ரத்து - இது ஒரு பொருளாதார நடவடிக்கையா?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் மதிப்பு ரூபாய் 6,600 கோடி ஆகும். இந்த செயல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றாலும், பொருளாதார அடிப்படையில் இந்த முடிவு சரியா?

இந்த செயல்பாட்டை அரசியல், சாதி விருப்பு, வெறுப்பு இன்றி விவாதிக்க நண்பர்களை அழைக்கின்றேன்.

நலிந்த விவசாயிகளிக்கு கடன் நிவாரணம் அளிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் பட்ட நஷ்டம் இயற்கை பொய்த்ததாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தாலோ உருவானது. இந்த நஷ்டத்தை கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் ஈடு செய்வதுதான் ஒரே வழியா? வேற வழி ஒன்றும் இல்லையா?

இந்த கேள்வியை அலசும் போது எனக்குள் எழுந்த சில கேள்விகளும், பதில்களும்:

1. கூட்டுறவுக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. ஏன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் (வங்கி என்றே இனி அழைப்போம்) வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வில்லை?

கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் தள்ளுபடி செய்வது சுலபமாகப் போனது. வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் , வங்கிகளும், மத்திய அரசும் இதை அனுமதிக்காது. அவ்வாறு அனுமதித்தால் இந்த தள்ளுபடி மற்ற எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட வேண்டும், இது இயலாத காரியம். (பொதுவாக மத்திய அரசு வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்யும், கடனை செலுத்த அதிக தவணை கொடுக்கும்).

2. அப்படியானால் வங்கிகளில் கடன் வாங்கி, நஷ்டப்பட்டவர்களின் கதி என்ன?

தெரியவில்லை.

3. கூட்டுறவுத்துறை ஒரு தொலை நோக்கோடு உருவாக்கப் பட்ட அமைப்பு. இது ஒரு நுண் கடன் (Micro Credit) அமைப்பு. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்களுக்குட்பட்ட அமைப்பு மூலமாக, சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அது அதிக லாபம் ஈட்டா விட்டாலும், நஷ்டத்தில் இயங்காமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. இவ்வாறு கடன்களை ரத்து செய்தால், அந்த அமைப்புகள் எவ்வாறு தங்கள் செலவீனங்களை ஈடு கட்ட இயலும்?

அரசாங்கம், கடனில் உள்ள மூலதனத்தை (Principal) ஈடு செய்து விடும். அதுவும் பொதுவாக அந்த தொகையை ஒரு மானியமாக கருதி அதை அரசாங்கத்தின் கூடுதல் முதலீட்டாக கருத ஆணையிடும். (that is, the government will instruct the Societies to treat the amount waived as Tier 1 capital and thus increase the investment of the govt in the societies. This is just a book entry and as such there won’t be any additional cash flow into the credit mechanisam). இது எதிர்காலத்தில் கடன் கொள்கையை பாதிக்கும்.

4. இந்த நிவாரணத்தை வேறு எவ்விதமாக வழங்கியிருக்கக் கூடும்?

இது மாதிரி நஷ்டங்களை ஈடு செய்யவே காப்புறுதிக் குழுமங்கள் (Insurance Companies) உள்ளன. அரசாங்கம், விவசாயக் காப்புறுதியை கட்டாயமாக்கி அதற்குண்டான காப்புறுதித் தவணை (Premium)யையும், சிறு மற்றும், மத்திய தர (Small and Marginal) விவசாயிகளின் சார்பாக செலுத்த வேண்டும். காப்புறுதிக் குழுமங்களும் இத்தகைய இழப்பு ஏற்படும் பட்சத்தில், அரசாணையை மதித்து (வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல்), ஈடு செய்ய வேண்டும்.

5. இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

· கடன் தள்ளுபடி என்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாறும். கட்சிகள் சம்பத்தப்பட்ட ஒரு நிலைப்பாடாக இருக்காது.
· கூட்டுறவுத் துறை மேலும் திறம் படுத்தப்படும் (Due to cash circulation).
· கடன் வாங்குபவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் என்றால் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணம் ஏற்படாது.
· கடன் தள்ளூபடியால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை மீண்டும் பொது மக்கள் தலையிலேயே புதிய அல்லது அதிக வரியாக சுமத்த வேண்டிய நிர்பந்ததிற்கு அரசு ஆளாக இருக்காது. காப்புறுதித் தவணைமட்டுமே செலுத்த வேண்டும்.

Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீட்டில் CPM மின் அணுகுமுறை

1) OBC உள்ள Creamy layer ஐச் சேர்ந்தவர்கள் இட ஒதிக்கீட்டில் இருந்து விலக்கப்படவேண்டும்.
2) Forward Community யில் உள்ள பொருளாதரத்தில் பின்னடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் CPM மின் இந்த அணுகுமுறை மிகவும் வரவேற்கத் தக்கதே. இது ஒதுக்கீட்டு முறையை சாதி அணுகுமுறையிலிருந்து, பொருளாதார அடிப்படை அணுகுமுறைக்கு இட்டு செல்லும் பயணத்தின் முதல் மைல் கல்லாகும். இது முதலில் கல்வி நிலையங்களில் அமுல் செய்யப்பட்டு, பின்னர் வேலை வாய்ப்புகளிலும் செயலாக்கப்பட வேண்டும்.

இத்தனை நாள் இருந்து வந்த சாதி வழி ஒதுக்கீடு முறையை மாற்ற அரசுக்கு கிடத்த நல்ல ஒரு சந்தர்ப்பம். இப்போதுள்ள பல சங்கடங்களுக்கு நிரந்தர தீர்வு காண வழி வகுக்கும்.

இப்போது பிரதமர் அமைத்துள்ள நால்வர் சபை, இந்த ஆலோசனையை நாட்டு நலன் கருதி ஏற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பல நல்ல ஆலோசனைகளை அளித்து உள்ளன. பாராட்டுகள்.

Tuesday, May 16, 2006

தேர்தல் - 2060 - ஒரு கற்பனை

தேர்தல் - 2060

ரமேயின் (ரமேஷின் சுருக்கமே ரமே. இக்காலத்தில் பெயர் இரெண்டு எழுத்துக்கு மேல் இருந்தால் ரொம்ப கஷ்டம்) தூக்கம் Public address systeத்தில் வந்த அறிவிப்பால் கலைந்தது. ரமே தினமும் செல்லும் சாலையின் நெரிசல், அரசாங்கத் துறைகளில் இருந்த வரும் தனிப்பட்ட முறையிலான தகவல்கள், உடையும் செய்திகள்(Breaking news) அனைத்தும் இதில் அறிவிக்கப்படும்.

"நண்பர் ரமேஷிற்கு காலை வணக்கம். இன்று தேர்தல் நாள். நீங்கள் 15 வயது பூர்த்தியானவுடன் வாக்களிக்கப் போகும் முதல் தேர்தல். வாக்கு அளிப்பதற்காக உங்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நேரம் 10:15 முதல் 10:30 வரை. இந்த நேரத்தில் உங்கள் கைத்தொடர்பு சாதனம் மூலமாக 956-323-187 எண்ணை தொடர்பு கொள்ளவும். அதன் பின் உங்களுக்கு கொடுக்கப்படும் தகவல் படி நடக்கவும். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் வாக்களிக்கத் தவறினால் அரசியல் அமைப்பின் 98 (c) பிரிவின் 543 வது மாற்றல் படி உங்களின் எரிவாயு ஒதுக்கத்தில் (fuel quota) 10 விழுக்காடு குறைக்கப் படும். உங்கள் வாகன நிறுத்தக் கட்டணம் 10 விழுக்காடு உயர்த்தப் படும். உங்கள் திருமண அனுமதி ஒரு வருடம் ஒத்தி போடப் படும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய பிற செய்திகளை அறிய வேண்டுமானால், www.1000lights.elections.2060.org வலைத்தளத்தில் மேயவும். நன்றி."

இந்த அறிவிப்புதான் ரமேயின் தூக்கத்தை தூரம் போகச் செய்தது. அவனுக்கு இந்த தேர்தல் முறை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் சலுகைகள் பறி போய் விடுமே என்ற பயமும், சுலக்கிற்கு (சுலக்ஷ்ணா) எழுதிக் கொடுத்த ("எனக்கு திருமண அனுமதி வந்த நாளிலிருந்து 3 வருடத்திற்கு உன்னை என் மனைவியாக வசீகரித்துக் கொள்வேன். இல்லையென்றால் .. ப்ளா.. ப்ளா... ப்ளா....") ஒப்பந்தமும் நினைவிற்கு வந்து pocket கணிணியை எடுத்து வைத்து மேய ஆரம்பித்தான்.

தேர்தல் சட்டம் (2025) மற்றும், 2030, 2032, 2040, 2043, 2047, 2051, 2055, 2059 ல் செய்யப்பட்ட திருத்தங்களின் முக்கிய விதிகள்.

1) ஒவ்வொரு தொகுதியும் 1 மில்லியன் (லட்சம், கோடி எண்ணிக்கை முறை BPO வந்த சில வருடங்களிலேயே போய் விட்டது) வாக்காளர்கள் கொண்டது.

2) வாக்களிக்க ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் Junior college வரை படித்து இருக்க வேண்டும்.

3) வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட குழுமங்களாக (registered companies) இருக்க வேண்டும். ( 2047ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்ததின் படி எல்லாத் தொகுதிகளும் தனியார் மயமாக்கப் பட்டுவிட்டன.).

4) வேட்பாளர்கள் கடந்த 3 வருட வர்த்தக நிதி நிலை அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

5) அரசாங்கத்திற்கு அளிக்கும் தொகுதி வருட உறுதித் தொகையின் (Yearly Guarantee Money) மதிப்பை அறிவிக்க வேண்டும்.

6) வென்ற வேட்பாளர்கள், தொகுதியில் உள்ள வர்த்தக மற்றும் தனி மனிதர்களிடமிருந்து ஆளுமை வரி (Governance Tax) வசூலித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூல் ஆனால் அதிலிருந்து ஒரு குறிபிட்ட சதவிகித்தை (அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டது)அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

7) வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களில் இருந்து ஒருவரையோ அல்லது இதில் எவரும் வேண்டாம் என்றால், "ஒருவரும் இல்லை' என்றோ அல்லது தனக்கு பிடித்த ஒரு குழுமத்தையோ பரிந்துரை செய்யலாம்.

8) எந்த வேட்பாளர், வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையில் 50 சத விகிதத்திற்கு மேல் ஆதரவு பெற்றிருக்கிராறோ அவரே அந்த தொகுதியை ஆளுமை செய்ய அனுமதிக்கப் படுவார்.

9) இந்த குழுமங்களின் தொகுதி ஆளுமை, தேர்தலில் வென்ற குழுமங்களினால் தேர்ந்து எடுக்கப்பட்ட 20 நபர் கொண்ட ஒரு மேளாண்மைக்குழுவால் கண்காணிக்கப் படும்.

10) ஒரு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் திறனாய்வு வாக்களிப்பில் இந்த குழுமங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்களாம். பெரும்பான்மை ஓட்டு மூலம் இந்த குழுமங்கள் தொடர்ந்து ஆளவோ இல்லை வேறொரு குழுமத்தை தேர்ந்தோ எடுக்கலாம்.

உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றி அறிய இங்கே கிளிக்கவும்:

1000lights_candidates

1) SUN (Sakalanithi Universal Network) Ltd.,

2) Congress (TAMILNADU) Ltd.,

3) Kollywood Ltd

4) PepsiCola India Ltd.,

5) Reliance Governance Ltd.,

6) Domacratic Company of India Ltd.,

7) Hindutva Group of Companies Ltd.,

8) Communism Corporation Ltd.,

9) None of the above

10) My choice. ...............................

ரமே கைத்தொடர்பில் நேரம் பார்த்து பின் சபித்தான். இன்னும் 15 நிமிடம் இருக்கிறது. இப்போது தொடர்பு கொண்டால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க விடாது. சரியாக 10:15 ஆனதும் கைத்தொடர்பில் 956-323-187 அமுக்கினான்.

"வணக்கம் திரு. ரமேஷ் அவர்களே. வேட்பாளர்கள் பற்றி அறிய எண் 1 ஐ அமுக்கவும். தேர்தல் விதி முறைகளை அறிய எண் 2 ஐ அமுக்கவும். தேர்தல் ஆணயம் பற்றி அறிய எண் 3 ஐ அமுக்கவும். வாக்களிக்க எண் 4 ஐ அமுக்கவும். தொடர்பை துண்டிக்க எண் 9 ஐ அமுக்கவும்" .

4 க்கினான். "உங்கள் திரையில் 1000 விளக்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் தெரியும். உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு எதிரே தெரியும் எண்ணை அமுக்கவும்"

10 க்கினான். "நீங்கள் பரிந்துரைக்கும் குழுமத்தின் பெயரை சொல்லவும்...."

ரமேக்கு கோபமீட்டர் ஏற ஆரம்பித்திருந்தது. "போடா போக்கத்தவங்களா..."

"மன்னிக்கவும். நீங்கள் கூறிய பெயரில் எந்த ஒரு குழுமமும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மீண்டும் வேட்ப்பாளர் எண்ணை அமுக்கவும்.."

9 க்கினான். "உங்கள் தீர்மானம் நிச்சயமா? வேட்பாளர்களில் எவரையும் பிடிக்கவில்லையா? அப்படியானால் மீண்டும் ஒரு முறை அதே எண்ணை அமுக்கவும்.."

மீண்டும் 9. "நீங்கள் இந்த தேர்தலில் பங்கு கொண்டமைக்கு நன்றி. இருப்பினும், உங்கள் முடிவால் ஆளுமை அமைக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். எனவே இந்த அரசாங்கம் உங்கள் திருமண அனுமதியை 6 மாதம் தள்ளி வைதிருக்கிறது. வணக்கம். மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திக்கலாம்..."

கோபமீட்டர் உடைந்தது. "தே..." ஆரம்பித்து சற்று நிறுத்தினான். கைத் தொடர்பு துண்டிக்கப் பெற்றிருக்கிறதா என்று உறுதி செய்தவுடன் "வி.......ங்ளா.."

http://balablooms.blogspot.com



கர்நாடகாவின் தோல்வி........

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விரிவாக்கம் பெங்களூரில் வேண்டாம் : கர்நாடக முதல்வர்
15 மே 2006
ஆதாரம்: வெப் உலகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான இடவசதிகளை பெங்களூரில் அமைத்துக் கொடுக்க முடியாத காரணத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்தை கர்நாடகாவின் பிற பகுதிகளில் அல்லது மற்ற மாநிலங்களில் ஏற்படுத்திக் கொள்ளும்படி கர்நாடக முதல்வர் எச்.டீ. குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், `மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் தொழில்துறையை விரிவாக்க அரசு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அதற்கு தொழில்துறை முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.


பெங்களூரில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகளையும் விளைவுகளையும் ஆராய வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதை அரசு உணர்வதாக கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.


சமீபத்தில் பெங்களூர் அருகில் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தால் கர்நாடகாவில் அமையவிருந்த பேப்சிட்டி (Fabcity) ஆந்திரபிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


News sourced from: http://content.msn.co.in/Tamil/InfoTech/News/0605-15-4.htm

ஒரு பக்கம், முதலீட்டை துரத்தும் மாநிலங்கள். (கொல்கத்தா கூட துரத்துகிறது). மறுபக்கம், இங்கே வராதே, வெளியெ போ என்கிற கர்நாடகா.
திட்டமின்மை, தொலைநோக்கின்மை மற்றும் விழிப்பின்மை காரணாமாக பெங்களூரு திணருகின்றது. இப்பொழுது விட்டால் பிறகு பிடிக்கமுடியுமா?

Friday, April 28, 2006

சாதிகள் இல்லையடி பாப்பா !! பாரதியார் கனவு மெய்ப்பட்டது !!!

இன்றைய செய்தி: நாடார் பேரவை தி.மு.க வை ஆதரிக்கும்.

தமிழக தேர்தலில் எல்லா சாதி சங்கங்களும் தங்கள் ஆதரவை ஏதெனும் ஒரு கட்சிக்கு தெரிவித்து உள்ளன.

இனிமேல் சாதி ஓட்டை தேடி அலைவதிற்கு வேறு ஒரு சாதியும் இல்லை.

பாரதியார் கண்ட கனவில் ஒரு பகுதி நிறைவு பெற்று விட்டது.

Monday, April 17, 2006

தியாகிகளுக்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப் பட்டது.....

இன்று மாலை கூடிய அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறிய இந்த தீர்மானத்தின் மூலமாக, பின் தேதியிட்ட நாளிலிருந்து, மிக உயர்ந்த, தன்னலம் கருதாமல், நாட்டின் முன்னேற்றத்திற்காக தியாகங்கள் செய்த சில குறிப்பிட்ட தியாகிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை, மாதம் ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப் படுவதாக அரசாங்கக் குறிப்பு ஒன்று கூறுகிறது. இதற்கு வருமான வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப் படுவதாக, இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

இது குறித்த பேட்டி ஒன்றில் நிருபர்கள் "ஏழ்மையில் வாடும் கட்சித் தலைவர் அவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்குமா ?" எனக் கேட்டனர்.

அதற்கு ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர், "இந்த அறிவிப்பு எந்த ஒரு தனி நபரையும் முன்னிறுத்தி செய்யப்படவில்லை. எனினும், தனக்கு வந்த மந்திரி சபையின் தலைவர் பதவி, தான் வகித்த மன்ற உறுப்பினர் பதவி, தேசியக் குழுவின் தலைமைப் பதவி, மற்றும் பல தலைமைப் பதவிகள் ஆகியவற்றை, தன்னலம் கருதாமல், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்த அவரைத் தவிர, வேறு யாருக்கு அந்த தகுதி உண்டு" என பதில் கூறினார்.

-------
கவனிக்க: இந்த கற்பனைக்கும், இன்று வந்த திருமதி சோனியா காந்தியின் நிதி நிலை ஒப்புமை (financial declaration) க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

Sonia Gandhi owns no car and the money she holds in cash is a meagre Rs 20,000.

But she does have an ancestral house in her country of origin Italy and its worth Rs 13 lakh.

The total worth of Gandhi's jewellery is Rs 21.66 lakh.

Shas lent Rs 5,04,394 to her daughter Priyanka Gandhi Vadra. Has Rs 85,338 in her savings account in UCO Bank and Rs 20 lakh in fixed deposit in the same bank.

She owns Rs 12 lakh in RBI bonds and Rs 52,800 in UTI, besides holding ten shares of Maruti Technical Services Pvt Ltd, whose worth was not quoted in the declaration.

Also, she owns 500 shares of Western India Tanneries, her declaration said without quoting their value.

Thursday, April 06, 2006

தமிழகத் தேர்தல் 2006 - கட்சிகளின் நிலைப்பாடுகள்.

2006 - தமிழக தேர்தலில், கட்சிகளின் உண்மையான நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன.

  1. முக்கிய கட்சிகளின் கட்டுக்கோப்புகள் கலகலக்கத் தொட்ங்கியுள்ளன. இது மிக அதிக அளவில் வேட்பாளர் அதிருப்தி / மாற்றங்கள் என செய்யப்படுவதிலிருந்து தெரிகிறது. சற்று முந்தைய காலங்களில் வேட்பாளர் அறிவிப்புகள் முழுவதுமாக ஒத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இப்பொழுதோ, ஆர்ப்பாட்டங்கள், மறியல், தலைமை நிலையப் படையெடுப்பு, ராஜினாமா, கட்சித் தாவல் போன்றவை நிகழ்கின்றன. இதனால், வேட்பாளர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது கட்சித் தலைமை, தொண்டர்களிடமிருந்து தொலைவில் இருக்கும் நிலைமையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இது கட்சிகளின் வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.
  2. கட்சிகள் ஏகாதிபத்திய முறையில் செயல் படுகின்றன. (தி.மு.க வில் கூடி முடிவு எடுப்பது போல தோன்றினாலும், திரு. கருணாநிதியின் முடிவே இறுதியானது). அ.தி.மு.க வில் இரண்டாம் மட்ட தலைவர்களே இல்லை. இன்றைய இரண்டாம் நிலைத் தலைவர், நாலை கடைநிலைத் தொண்டனுக்கும் கீழே தள்ளப் படுவார். தி.மு.க வில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இரண்டாம் நிலைத் தலைவர்களே. அவர்கள் எத்தனை யுகங்களானாலும் தலைவர் பதவியை எட்டி பிடிக்க முடியாது. குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.
  3. தி.மு.க என்றும் இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி இடுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை. இது அரசியல் காலச் சக்கரத்தில் தி.மு.க. வின் இறங்கு முகத்தை காட்டுகிறது.
  4. 82 வயதில் திரு. கருணாநிதி தான் இன்னும் தலைவராக, முதல்வராக முன்னிலை படுத்தப் படுகிறார். இன்றைய இந்தியாவில் முன்னேறி வரும் எந்த துறையை எடுத்துக்கொண்டாளும், இளைய தலைமுறையினரே தலைமைப் பொறுப்பில் இறுக்கின்றனர். ஏனெனில் புதிய சிந்தனைகளும், துணிர்ந்து முடிவு எடுக்கும் திறணும் அவர்களுக்கெ இருக்கும். வயதான தலைவர்கள் சில நிர்ப்பந்தகளுக்கு (நன்றி உணர்வு, பாசம், பிரதி பலன்...) கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள். (பா.ஜ.க சென்ற 10 ஆண்டுகளில் முன்னேறியதின் காரணம், இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைத்ததுதான். ஆனால், மீண்டும் திரு.அத்வாணி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தான் அது வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது). இவர்களது அனுபவம் இளைய தலைமுறையினரை வழி நடத்தி செல்ல உதவ வேண்டுமெ தவிர, அவர்களே எக்காலத்திற்கும் தலைவராக இருக்க அல்ல.
  5. எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, 2004 மக்களவைத் தேர்தலில் நன்கு படித்த இளைஞ்சர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். ஆனால், தமிழக 2006 தேர்தலில் இது போன்ற எவ்வளவு வேட்பாளர்களை கழகக் கட்சிகள் நிறுத்தியுள்ளன? இளையவர்கள் என்றால் தலைவர்களின் வாரிசுகள் என்றே இங்கே அர்த்தம்.
  6. தேர்தல் வாக்குறுதிகளில் தொலை நோக்கு சிந்தனை எள்ளவும் இல்லை. இன்னும் தமிழக வாக்களர்களை கையேந்தி, பிச்சை எடுக்கும் மனிதர்களாகவே இக்கட்சிகள் பார்க்கின்றன. "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" - இது மேடை பிரசாரத்திற்கு மட்டுமெ. மற்ற நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகள் "இல்லை என்று சொல்லடா! கையேந்தி நில்லடா!!" மட்டுமே. இலவச நிலம், TV, வேட்டி, சேலை, நிவாரண நிதி இத்யாதி, இத்யாதிகள். ஏன் இக்கட்சிகள் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (வெறும் வேலை வாக்குறுதி மட்டும் அல்ல - குறிப்பிட்ட விதமான திட்டங்கள்), கட்டமைப்பு வசதிகள், புதிய சார் நகரங்கள் (Township), சுகாதார வசதிகள், பயண வசதிகள் பற்றி எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை?

Tuesday, April 04, 2006

ஏன் இந்த அவசரம்?

தேர்தல் ஆணையம் ராய் பரேலி தொகுதியில் மே 8 தேதியில் இடைத்தேர்தலை நடத்த ஆணை பிறப்பித்து உள்ளது. இது சாதரணமான ஒரு அறிவிப்பு போல தோண்றினாலும், நிகழ்ச்சி தொடர்வுகள் சற்று வித்தியாசமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

  1. 14ம் மக்களவையின் ஏழாவது அமர்வு பிப்ரவரி முதல் மே வரை.
  2. இந்த தொடர் கடந்த 22ம் தேதி மார்ச் மாதம், 10ம் தேதி மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
  3. திருமதி. சோனியா காந்தி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை 23ம் தேதி ராஜினாமா செய்தார் (அதாவது, கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்ட பின்னர்.)
  4. இப்பொழுது தேர்தல் ஆணையம் (ராஜினாமா செய்த 13 நாட்களுக்குள்) இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. தேர்தல் தேதி மே 8. முடிவு அறிவுக்கும் நாள் மே 11.
  5. மீண்டும் மக்களவை கூடும் தேதி மே 10.
  6. திருமதி. சோனியா காந்தி மீண்டும் தேர்ந்து எடுக்கப் படுவது திண்ணம்.
  7. மே 11 அல்லது மே 12ல் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
  8. ஆக திருமதி. சோனியா காந்தி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மக்களவை செல்ல மாட்டார்.

இது மாதிரி, இவ்வளவு குறுகிய நாட்களில் முன்னர் எப்பொழுதாவதாவது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப் பட்டுள்ளதா? இப்பொழுது ஏன் இந்த அவசரம்?

ஏற்கனவே தேர்தல் தலைமை அதிகாரி திரு. நவீன் சாவ்லா, காங்கிரசிற்கு வேண்டப்பட்டவர் என்று ஒரு குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இந்தச் செயல் அதை நிரூபணம் செய்யாதா?

திருமதி. சோனியா காந்தி இன்னும் ராஜிவ் காந்தி பவுண்டேஷன் தலைமை பதவியை ராஜினாமா செய்ய வில்லை குறிப்பிடத் தக்கது.......

Monday, April 03, 2006

தேர்தல் பற்றிய என் கண்ணோட்டங்கள் # 1

ஜனநாயகத்தில், தேர்தல் என்பது மிக முக்கிய ஒரு அம்சமாகும். ஆனால், கட்சி அரசியலில், இந்த தேர்தல் சில சமயங்களில் எள்ளி நகையாடப் படுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்திய சோனியா காந்தியின் ராஜினாமா நாடகம். இதன் பாதிப்பும், என்னுள் நீண்ட காலமாக தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்புமே, இந்த பதிப்பு.
  1. தேர்தல் அறிக்கைகள் ஓரு சாசனம் (Charter) ஆகும். இவை மக்களுக்கு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அளிக்கும் ஒரு உறுதிமொழி. இந்த உறுதிமொழிகளை, தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் / சட்டசபையில் எடுக்கும் உறுதிமொழிக்கு சமமானதாக கருத நினைப்பதற்கு, விதி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் (அப்போது தான் இந்த, எல்லொருக்கும் TV, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி போன்ற பம்மாத்து வாக்குறுதிகளை கட்சிகள் அளிக்காது).
  2. எந்த ஒரு உறுப்பினரும் மரணம் அடைந்தலோ, உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ, அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடாது. முன்பு நடந்த தேர்தலில் இவருக்கு அடுத்த படியாக ஓட்டு வாங்கிய வேட்பாளரை மன்ற உறுப்பினராக ஆக்க வேண்டும். இதற்கு அவர் , முன்னவர் வாங்கிய ஓட்டில் குறைந்த பட்சமாக 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொகுதிக்குள் வரும், District Magistrate அல்லது District Collector ஐ நியமன உறுப்பினராக செய்ய வேண்டும். இந்த உறுப்பினர்கள் அடுத்த தேர்தல் வரை பதவி வகிக்கலாம்.
  3. ஆட்சி அமைத்த கட்சிகள், ஆண்டிற்கு ஒரு முறை, தேர்தல் வாக்குறுதி பற்றிய முன்னேற்ற தகவல் அறிக்கை (Progress Report) ஒன்றை பொது மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  4. ஆண்டு தோறும், சட்ட மன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் (நெருங்கிய உறவினர்கள் உட்பட) சொத்து மற்றும் வருமான அறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  5. சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த பட்சம் 80% கூட்டத் தொடர்களில் பங்கு பெற்றிருக்க வேண்டும். (இந்த வெறும் கையெழுத்து போடும் பாவ்லா வேலையெல்லாம் கூடாது. ஆக்க பூர்வமான பங்கேற்பு வேண்டும்).
  6. தன் தொகுதிக்குள் நடக்கும் அரசு அமைப்பு கூட்டங்களில் (திறப்பு விழாக்கள் அல்ல. Distrcit Consultative Committee போன்ற அமைப்புகள்), 80% கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாது.
  7. எந்த ஒரு தனி நபரும் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் சட்ட/ பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட கூடாது. வாழ்நாளில் 8 முறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
  8. திரும்பப் பெரும் உரிமை வேண்டும் (இது ஏற்கனவே விவாதத்தில் உள்ளது).

இன்னும் வரும்................

Thursday, March 23, 2006

அங்கீகரிக்கப் பட்ட அத்து மீறல்கள் # 2

திருமதி சோனியா காந்தி தன் பாராளுமன்ற தொகுதியையும், தேசிய ஆலோசனைக் குழு தலைமைப் பொறுப்பையும் ராஜினாமா செய்தது ஏதோ ஒரு மாபெரும் தியாகம் செய்தது போல் விவாதிக்கப் பட்டு வருவது, இன்றைய தினத்தின் மாபெரும் கேலிக்கூத்து ஆகும்.

திருமதி ஜெயா பச்சனின் பதவி பறிக்கப்பட்ட பொழுது, சப்தம் போடாமல் இருந்த காங்கிரஸ், இன்று அந்த நிலமை தன் தலைவிக்கு வரும் பொழுது, சட்டத்தை திருத்த முயற்சி மேற்கொண்டது. தனி நபருக்கு சாதகமாய் சட்டத்தைத் திருத்த முயற்சி மேற்கொண்ட செயலை எதிர்க் கட்சிகள் ஆட்சேபிக்க எத்தனிக்கும் சமயம், தன் பதவிகளை ராஜினாமா செய்து, தியாகம் செய்தது போல் ஒரு மாயையை திருமதி. சோனியா ஏற்படுத்தியுள்ளார்.

இவர் மேலும், தான் மீண்டும் ராய் பரேலி தொகுதியில் போட்டியிடப் போவதாய் அறிவித்து உள்ளார். காங்கிரஸ் செய்த தவற்றின் காரணமாய் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த நிகழ்வு இல்லை. மீண்டும் ஒரு முறை தேர்தல், மக்கள் வரிப் பணத்தில் ஏன் நடத்த வேண்டும்? இந்த தேர்தலின் முழு செலவையும் ஏன் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இவ்வகையான தேர்தல் மாற்றங்களை ஏன் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கக் கூடாது?

நாம், சோம்னாத் சாட்டர்ஜி மற்றும் பிற உறுப்பினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, March 16, 2006

அங்கீகரிக்கப் பட்ட அத்து மீறல்கள்.

இன்றைய - 16/3/2006 "newindpress.com" ல் படித்த 2 செய்திகள்.

செய்தி 1:
EC shunts out Chennai Commissioner of Police:

The Election Commission has issued orders for transferring Chennai police commissioner R Natraj for making a statement in support of Chief Minister J Jayalalithaa, ‘‘who will be a candidate in the forthcoming Assembly election’’.......

காவல் துறை முற்றிலும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை. அதில் மாநகரக் காவல் மிக முக்கியமான ஒரு பிரிவாகும். அதன் தலைமை அதிகாரி தகுதி, அனுபவம் மற்றும் மிகப் பல ஆலோசனைகளுக்குப் பிறகு நியமிக்கப் படுகிறார். இதற்கான கட்டமைப்பு அரசாங்கத்திடமே உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் (ஜெயலலிதா ஒரு வேட்பாளராக இருக்கக் கூடும்) அவரை மாற்றம் செய்துள்ளது. அந்த பதவிக்கு வேறொருவரை நியமிக்கப் போகிறது. ஆணையத்தின் நோக்கம் தேர்தல் நல்ல முறையில் நடை பெற வேண்டும் - அவ்வளவே. இந்த இடைப்பட்ட 2 மாதங்களில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்தால் அதற்கு கவலை இல்லை. யாருக்கும் பதிலும் சொல்ல வேண்டியதில்லை.

இந்த அளவுக்கு ஆணையம் நாடாண்மை (governance) யில் தலையிட முடியுமன்றால், பேசாமல் ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்து விட்டு பின்னர் சட்டசபை தேர்தல்களை நடத்தலாம். அது மிகப்பல தேர்தல் முறைகேடுகளை தடுக்கும்..

செய்தி 2:

Mullaiperiyar dam issue:

"......
The Kerala Irrigation and Water Conservation (Amendment) Bill passed in Thiruvananthapuram seeks to grant new powers to the Dam Safety Authority prosed under the original Act. As per the provisions of the Bill, the Authority, a body of dam and legal experts, could direct the custodian of a dam to suspend functioning of, or even decommission of a dam. In the case of Mullaiperiyar Tamil Nadu is the custodian of the dam...."

உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை கூறியது. உடனே கேரள அரசாங்கம் சட்ட மாற்றம் செய்து அந்த தீர்ப்பை திருத்தி எழுத முயற்சி செய்திருக்கிறது. இந்தியன், இந்தியனின் நலம் என்பது போய், தன் மொழி மக்கள், அவர்தம் நலம் என்று எப்போதே வந்து விட்டது. இப்பொது தன் சாதி, தன் குடும்பம் மட்டுமே பிரதானம் என்கின்ற நிலை வந்து விட்டது. இந்தியாவின் கட்டுக் கோப்பு வேகமாக குலைகின்றதோ என்கின்ற பயம் எனக்குள் வந்தது. நான் ஒரு இந்தியன் என்கின்ற எண்ணம் "கார்கில்" வரும் போது மட்டுமே வரும் போலும்......