Thursday, June 08, 2006

உனக்காக எல்லாம் உனக்காக.....

அன்று SMS ல் எனக்கு வந்த செய்தி. "...Also nescafe natarajan passed away today evening.......". இதுவே முழு செய்தி அல்ல. மற்ற செய்திகளின் இடையே திணிக்கப்பட்ட ஒரு செய்தி. இரண்டு ரொட்டித் துண்டுகளிடையே சிறை வைக்கப்பட்ட cheese மாதிரி.

என் மனது சற்று உதறியது. இறந்து போன திரு. நடராஜன் எனக்கு ஒன்று விட்ட (ஏன் இரண்டு, மூன்று கூட) மாமா. என் தாய் வழிப் கொள்ளுப் பாட்டியும் அவர் தாய் வழிப் பாட்டியும் cousins. எனவே உறவு முறையில் எட்ட இருந்தாலும், பழகு முறையில் என் தாய்க்கும், அவர் குடும்பத்திற்கும் நெருக்கம். அந்த முறையில் அவரும் எனக்கு பழக்கம். அவருடைய மகன் என் பெண்ணிற்கு பரத நாட்டிய குரு. உதறுதலுக்கு இந்த பந்தம் ஒரு காரணம்.

எனக்கு உடனே ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முந்தியது அது அவரின் கல்யாணம் நடந்த நாள். கும்பகோணம் ராமன் & ராமன் சத்திரம் (வீட்டை சத்திரமாக ஆக்கியிருந்தார்கள்). சற்று பெரிய முற்றம். அதை ஒட்டிய தாழ்வாரத்தில் கல்யாணத்து அன்று மாலை நடக்கும் நலங்கு நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் என் மாமியை பாட சொன்னார்கள். அதன் பின் மாப்பிள்ளை வீட்டு முறை. நீ பாடு, நான் பாடு என்று ஒரே ஏலம். திடீரென்று என் மாமா (மாப்பிள்ளை) பாட ஆரம்பித்தார். "உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக.." என்ற சந்திரபாபு பாட்டை தன் கணீரென்ற குரலில் பாடினார். (இதுதான் காரணமோ என்னவோ தெரியவில்லை, இந்த பாட்டு சந்திரபாபுவின் பாட்டுக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது.) .

இந்த ஒரு சம்பவம் என் மனத்தில் ஒரு பசு மரத்தாணி போல பதிந்து இருந்தது. எனக்கு இந்த கல்யாணத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும், ஏன் நான் என்ன உடை அணிந்திருந்தேன், யார் கூட சென்றேன் (எனக்கு வயது அப்பொழுது 8 - 10 க்குள் இருக்க்கலாம்) என்று எதுவும் சுத்தமாக நினைவில் இல்லை.

எனக்கு இந்த SMS ல் சுறீரென்று உறைத்த மற்ற ஒன்று. சம்பிரதாயமாக இரங்கல் செய்திகள் தெரிவிக்கும்போது வேறு எந்த செய்திகளையும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அந்த செய்தி "...Also nescafe natarajan passed away today evening.......". என்று வந்தது மனதை சற்று குறுகுறுக்கச் செய்தது. இது அனுப்பியவர்களின் குற்றம் அல்ல. காலத்தின் வேகம், தொழில் நுட்பத்தின் கட்டாயம், இன்றைய வாழ்க்கையின் எதார்த்தம்.

எது எப்படி இருந்தாலும் என் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன்

No comments: