Wednesday, May 24, 2006

இட ஒதுக்கீடு ஒத்துக்கொள்ளப்பட்டது!....வெற்றி!!.. வெற்றி!!!

அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனது நண்பரும் சக அதிகாரியுமான அவரும் உணர்ச்சி வசப்படவே, இருவரின் குரலும் உயர்ந்தது வெளியில் உள்ளவர்க்கு கேட்டுவிட்டது போலும். நிலமையை உணர்ந்த நாங்கள் இருவரும் நிதானத்திற்கு வந்து, சிறிது நேர மௌனத்திற்கு பின் மீண்டும் எங்கள் வாக்கு வாதத்தை, குரல் தாழ்த்தி தொடர்ந்தோம். ஆனால் இருவருக்கும் கோபம் சற்றும் குறையவில்லை.

இட ஒதிக்கீட்டை பற்றி ஏற்கனவே ரொம்பவும்தான் விவாதித்தாகி விட்டது. இதை நிர்வாகமும் ஒத்துக்கொண்ட பின், கீழ் நிலையில் ஏன் இன்னும் அமுல் படுத்த தயக்கம் என எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. எப்பொழுது போய் கேட்டாலும், இந்த மாதத்தில் இருந்து தொடங்கிவிடுகிறோம், Policy எல்லாம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது, கணக்கீடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இந்த விஷயத்திற்காக பலமுறை நேரில் பேசி, கடிதம் மூலம் நினைவு படுத்தி எல்லாம் செய்தாகி விட்டது.

இன்றைய விவாதம், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததினால் எனக்கு வந்த கோபத்தின் பிரதிபலிப்பே.

"மிக நெருங்கிய நண்பரே, நீங்கள் இந்த விஷயத்தில் இனிமேலும் மெத்தனம் காட்டினால், நான் நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றி முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் உங்கள் பிரிவினரை பாதுகாக்கவும், வளரும் உங்கள் பிரிவின் தேவைக்காகவும் தான் இட ஒதுக்கீட்டு ஆணையை அமுல் படுத்தாமல் இருக்கிறீர்கள் என முறையிடுவேன். பாதிக்கப்படுவது என் பிரிவை சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்து உள்ளார்கள். அவர்கள் என்னை குறை நிவாரணப் பிரிவிற்கு மனு கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் என் நண்பராகப் போய் விட்ட காரணத்தினாலும், இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையாலும், கடைசி முறையாக உங்களிடம் பேச வந்துள்ளேன். ..." இது நான்.

"திரு.............அவர்களே, இட ஒதுக்கீடு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. நீங்கள் கேட்கிற மாதிரி அதை செயல் படுத்தினால், என் பிரிவை சேர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் இது வரை அனுபவித்து வந்த வசதிகள் பறி போய் விடும் , உங்கள் பிரிவினரின் ஆதிக்கத்தை வளர்த்து விடும் என பயப்படுகிறார்கள். எனக்கும் அந்த பயம் உள்ளூர இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினால் அது உற்பத்தித்திறனை குறைத்து விடும் என்றும் பயப்படுகிறேன். இது விஷயமாக நான் ஏற்கனவே மேலிடத்திற்கு எழுதியுள்ளேன். அதற்கு எனக்கு சரியான பதில் வரும் வரையில் நான் எந்த முடிவும் எடுப்பதற்கில்லை, என்னை மன்னிக்கவும்..." இது அவர்.

"OK .. Let me see! .I know what to do hereafter........." எனக் கோபத்தில் நான் வெளியேறும் சமயம், எங்கள் இருவரின் மேலதிகாரியான அவர் வந்தார். அவர் வட நாட்டவர்.

"என்ன இது, நீங்கள் இருவரும் அனுபவத்திலும், வயதிலும் மூத்தவர்கள். இவ்வாறா நடந்து கொள்வது? உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள். நான் சரி பண்ண முடியுமா என பார்க்கிறேன் ...?

உடனே நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கி சொல்லி, முத்தாய்ப்பாக "...this is just a simple space allocation problem. எங்கள் பிரிவில் இருப்பவர் அனைவரும் தணிக்கையாளார்கள். ஊர் ஊராக சுற்றி விட்டு தணிக்கை அறிக்கையை அளிப்பதற்காக தலைமை அலுவலகம் வரும் பொழுதோ, தலைமை அலுவலக வேலைகளை செய்வதற்கோ, எங்களுக்கென்று ஒரு cabin or office இருப்பதில்லை. எங்களுக்கென்று அளித்த இடத்தையும் நண்பர் , கூடி வரும் அவரின் பணியாளர்களின் தேவைக்காக எடுத்துக் கொண்டு விட்டார். I was just arguing about this with him.." என முடித்தேன்.

மேலதிகாரி " Don't worry, I shall make arrangements for your space allocation immediately. For this, don't fight between yourselves. Continue to be friends ...." எனக்கூறி அங்கிருந்து அகன்றார்.

நானும் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் என் இருக்கைக்கு திரும்பினேன்.


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்..........

1 comment:

Anonymous said...

:-)