Wednesday, May 31, 2006

சார்....போஸ்ட்......

அந்த நிகழ்ச்சி இப்போது நினைவிற்கு வருகிறது. சென்ற வருடம் தீபாவளிப் பண்டிகை. நான்தான் எங்கள் அபார்ட்மெண்ட் சொசைட்டிக்கு செகரட்டரி. பண்டிகையின் போது கார்ப்பொரேஷன் துப்புரவுத் தொழிளாலர்கள், மின் வாரிய கடை நிலை ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள் மற்றும் சில நபர்களுக்கும் தீபாவளி பரிசாக, எல்லோரையும் போலவே நாங்களும், ஒரு சிறு ஊக்கத் தொகை வழங்குவது வழக்கம்.

வழக்கம் போல் சென்ற வருடமும் அவ்வாறே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு லிஸ்ட் தயார் செய்து அதை அபார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்து அனைவருக்கும் பங்கீடு செய்யச் சொல்லியிருந்தேன். பண்டிகை முடிந்து ஒரு வாரம் ஆன பின்னர் காவலாளி என்னிடம் லிஸ்டை கொடுத்து மீதி தொகையையும் கொடுத்தார்.

“ஏன் எவருக்கேனும் கொடுக்க விட்டுப் போய் விட்டதா ?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “இல்லை மேடம். நீங்க சொன்ன மாதிரி எல்லோருக்கும் கொடுத்துட்டேன். ஆனால் நம் தெருவிற்கு வரும் தபால்காரரில் ஒருவர் இந்த அமொவுண்டை வாங்க மாட்டென்னுட்டார்” என்றார்.

“ ஏன், அவர் இன்னும் கூடுதல் தொகை எதிர்பார்க்கிறாரா?”

“இல்லை. இப்போதெல்லாம் அவர் ஊக்கத் தொகை வாங்கறதில்லையாம்”.

“சரி” என்று அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்.டேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எனக்கு அந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்தியது.

இன்று காலை 11 மணி இருக்கும். வாசலில் தபால்காரர் வருகிறாரா எனப் பார்த்து நின்று கொண்டிருந்தேன்.

இந்த எதிர்பார்ப்பு சற்று வித்தியாசமானது. நண்பர்களிடமும், உறவினரிடமும் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது மின்னரட்டை மூலமாகவே தகவல் பறிமாற்றங்கள் முடிந்து விடிகின்றன. கல்யாணப் பத்திரிக்கை போன்ற சில சம்பிரதாயமான ஒரிரு தபால்களே வரும். மற்ற தபால்கள் எல்லாம் Nungai Times, Share brokers mail, Promotion flyers போன்ற junk mail களே.

இன்று நான் காத்திருந்தது அமெரிக்க பல்கலை கழகத்தில் இருந்து என் மகனின் உயர் படிப்பிற்கான admission offer ஐ. ஏற்கனவே மின்னஞ்சலில் admission உறுதி படுத்தப்பட்டு விட்டது. அது தொடர்பான மற்ற ஆவணங்களை தபாலில் அனுப்பவதாக தெரிவித்திருந்தார்கள். இதற்கு முன்னும் ஏணைய பிற பல்கலைகழகங்களில் இருந்து தபால்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த பல்கலைகழகம் அமெரிக்காவின் சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றானாதால், எங்கள் குடும்பத்தில் அனைவரும், இதை மிக ஆவலாக எதிர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தெரு முனையில் தபால்காரரின் தலை தெரிந்தது. உள்ளே அடித்த தொலைபேசியின் மணியையும் உதாசீனப் படுத்திவிட்டு அவர் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வரும் வரை காத்திருந்தேன்.


“கங்கிராஜுலேஷன்ஸ், மேடம். US லேருந்து லெட்டர் வந்து இருக்கு. நிச்சயமா உங்க பையனுக்கு அட்மிஷன் லெட்டராத்தான் இருக்கும்” என்று கூறிய படியே அந்த கவரை என்னிடம் கொடுத்தார்.

“ஆமாமாம். நானும் அந்த கவரத்தான் எதிர் பார்த்துகிட்டிருக்கேன்..” எனக் கூறியபடியே அதை வாங்கினேன்.

“பையனுக்கு வேற யுனிவர்சிடிலேருந்தெல்லாம் கூட வந்திருக்கு போல. எந்த யுனிவர்சிட்டிய செலெக்ட் செஞ்சுருக்கீங்க..” என்றார். மேலும் “இந்த ஸ்டீரெட்லெ 4 , 5 பேருக்கு வந்திருக்கு மேடம். அந்த கோல்டன் மேனார் அபார்ட்மெண்ட்லெ ஒரு பையனுக்கு ஸ்டான்போர்ட் வந்திருக்கு மேடம். உங்களுக்குக் வந்திருக்கிற புர்டியு யுனிவர்சிட்டியும் ரொம்ப நல்ல யுனிவர்சிட்டி மேடம்….” என்றார்.

“ரொம்ப தேங்ஸ். ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த யுனிவர்சிட்டிகளை பத்தி தெரியும்.”

“போன வருஷம், என் பையன் MS படிக்கறதுக்காக இந்த யுனிவர்சிட்டியெல்லாம் பத்தி பேசுவான். அப்புறம் நாந்தான் வருஷா வருஷம் நம்ம தெரு பசங்களுக்கெல்லாம் கவர் கொண்டு வந்து கொடுக்கிறேனே. அப்போ அவங்களோட பேசும் போது கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்”

எனக்கு சற்று வியப்பு கலந்த ஆச்சரியம். தபால்காரரின் மகன் MS ஆ? “என்னங்க. உங்க பையன் MS பண்றாரா? எங்கே? “

“அவனுக்கு ஆஸ்திரேலியாவிலே University of Melbourne லே funding கோட கிடைச்சது மேடம். அதானாலெ அங்கே சேர்ந்துட்டான். ஆச்சு இதோ போன மாதிரி இருக்கு. ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் ஒரு வருஷம். அப்புறம் அங்கேயே வேலை பாக்குறானோ இல்லே எங்கே போறானா…”

“உங்க பையனுக்கு all the best மேடம்…”



பின் குறிப்பு : இது உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதியது.

No comments: