Friday, June 22, 2007

கணுப்பிடி வைத்து காக்கா விரட்டும் காவல்துறை.

கணுப்பிடி வைத்து காக்கா விரட்டும் காவல்துறை.

தைப்பொங்கல் கழிந்த மறு நாளில், சகோதரர்களின் நலனுக்காக, புகுந்த வீடு சென்ற பெண்டிர், மஞ்சள் இலையில் கரும்பு, பழங்கள், கலவை சாதங்களை பரிமாறி காக்கைகளுக்கு வைப்பார்கள். காக்கைகளும் சுற்றம் கூவி அழைத்து உண்ணும். கணுப்பிடி வைப்பதே காக்கைகள் உண்ணத்தான்.

நம் ஊரில் நடப்பது என்ன? தங்க நாற்கரம் திட்டத்தில் நான்கு வழிப்பாதைகளை, எதிர் வரும் வண்டிகளுடன் மோதிடாமல் இருக்க தடைகள், உள்ளூர் தேவைக்கான சேவைச் சாலை, எதிர்புறம் மாறிச் செல்ல வளைவு வழி ஆகியவற்றுடன் மிக நேர்த்தியாக அமைத்து, நாம் விரைவாகவும், தடங்கல் இன்றியும் வசதியாகச் செல்ல வழி செய்து கொடுத்தும், நாம் அதன் பயனை அடைய முடியாது. ஏன்?

காரணம் நம் போக்குவரத்து காவல் துறை மற்றும் வழித்தடத்தில் உள்ள காவல் துறையினர்.

ஐந்து கிலோமீட்டர்களுக்கு ஒரு முறையாவது, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை சில்க்ஸ் போன்ற கடைகளின் பெயர் தாங்கி நிற்கும் தற்காலிகத் தடைகளை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து, வளைந்து, வளைந்து செல்லுமாறு காவல் துறையினர் வைத்திருப்பார்கள். எதற்காக இந்த வேகத்தடைகள்? நெடுவழிச்சாலைகளின் நோக்கமே துரிதப் பயணந்தானே? இவைகள் உள்ளூர்ச் சாலைகள் நெடுஞ்சாலையில் சந்திக்கும் இடங்களில் இருந்தால் பரவாயில்லை. நோக்கம் விபத்து தவிர்க்க என்று வைத்துக்கொள்ளலாம். துரிதப் பயணம் கூடாதென்று கங்கணம் கட்டிக்கொண்டு, தேவையில்லாத இடங்களில், விளக்கு வெளிச்சம் இல்லாத இடங்களில் கூட இவ்வாறான தடைகளை வைத்து காவல் துறையினரே விபத்திற்கு வழி வகுக்கிறார்கள். இதை நான் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலும் அனுபவித்தேன், சென்னை - பெங்களூரு சாலையிலும் அனுபவித்தேன்.

நீங்கள் திண்டிவனம்-கும்பகோனம் சாலையில் சென்றால், அறுவடை சமயங்களில் வேறு விதமான வேகத்தடைகளை சந்திப்பீர்கள். அறுவடை செய்த கதிர்களை சாலையில் போட்டு, சாலையை ஒரு வழிப்பாதையாகவே மாற்றியிருப்பார்கள். இவர்களுக்கு களத்துமேட்டை விட தார் சாலைகள்தான் தானியம் பிரிக்க சிறந்த இடம். சில இடங்களில் காவல் நிலையம் முன்பே கூட இவ்வாறு பார்த்திருக்கிறேன். நீங்கள் கதிர்களின் மேல் வண்டியை செலுத்திவிடுவீர்கள் என்று தற்காப்பாக பெரிய பெரிய கற்களை வேறு வைத்திருப்பார்கள். உள்ளூர்க் காவலும் இதை கண்டு கொள்ளாது.

1 comment:

nayanan said...

//விளக்கு வெளிச்சம் இல்லாத இடங்களில் கூட இவ்வாறான தடைகளை வைத்து காவல் துறையினரே விபத்திற்கு வழி வகுக்கிறார்கள்
//

சாலை விதயங்களில் அரசாங்கங்களின் அட்டகாசம் ஒருபுறம்
என்றால் இவர்களின் அட்டகாசம் மறுபுறம்.

நிறைய பட்டறிந்து நொந்து போய் எழுதியிருக்கீங்க போலிருக்கு :-)

சாலைகளின் நடுவே முக்கால் அடி உயர
வேகத்தடை மேடுகளை விட்டு விட்டீர்கள். அதில் விதிப்படி பூச வேண்டிய வெள்ளைக் கோடுகளை
மிச்சப் படுத்திவிடுவார்கள் ;)

இராத்திரி என்ன - பகலிலேயே அதில் ஏறிய பிறகுதான் அது மேடு என்று தெரியும் :)

மரங்கள் அடர்ந்த
சாலையில் பகலில் போனால் இது தெரியவே தெரியாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்