Monday, June 11, 2007

போர்டுக்கு ஃபோர்டு வச்ச ஆப்பு

போர்டுக்கு ஃபோர்டு வச்ச ஆப்பு

இந்திய கிரிக்கெட் போர்டுக்கு இதை விட பெரிய அடி எதுவும் இருக்க முடியாது. கிரஹாம் ஃபோர்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கோச் ஆக அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தனக்கு அந்த பதவி வேண்டாம் எனவும், கென்ட் கவுண்டி கிரிக்கெட் கிளப்பிற்கு கோச்சாக தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் தெரிவித்து விட்டார்.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக பணபலம் உடையதும், கோச்சிற்கு அதிக சம்பளம் கொடுக்கும் போர்டுகளில் ஒன்றானதுமான இந்திய கிரிக்கெட் போர்டு, கோச்சை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தடுமாறி விட்டது. இதற்கு 7 பேர் கொண்ட ஒரு உயர் மட்டக் (மட்டமான) குழு வேறு. இவர்கள் ஃபோர்டை தெரிவு செய்த முறையைப் பாருங்கள்.

  • கிரிக்கெட் போர்டு உறுப்பினர் ஒருவர், யார் இந்த போர்டு? அடுத்தது ஃபெராரி, மெர்சிடிஸ், டொயொடொ எல்லோரும் வருவாங்க போல இருக்கே? என்று கிண்டலடித்தாராம்.
  • கோச் வேலைக்கு அதிக விண்ணப்பங்கள் வராததாலும், கிரிக்கெட் போர்டு ஒரு சில பெயர்களையே விவாதித்துக் கொண்டிருந்ததாலும், விளையாட்டு வீரர்கள், தாங்களாகவே கோச்சை தேடினார்களாம்.
  • இந்திய அணிக்கு கோச் தெரிவு செய்ய 7 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தாலும், பல பிரபலங்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை சிபாரிசு செய்தார்களாம்.
  • கிரஹாம் ஃபோர்டு முதலில் முறையாக கோச் பதவிக்கு விண்ணப்பித்ததாக சிலரும், அவர் விண்ணப்பிக்கவேயில்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.
  • கிரஹாம் ஃபோர்ட், இந்திய போர்டு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே, கோச் பதவிக்கு விண்ணப்பித்தாராம்.
  • கிரஹாம் ஃபோர்டுக்கு கவுண்டி கிரிக்கெட் ஆடும் பல இந்திய வீரர்களின் ஆதரவு இருந்ததாம்.முக்கியமாக டிராவிட்டின் ஆதரவு.
  • ஒரு அரைமணி நேர பவர்பாயிண்ட் பிரசன்டேஷனில் கிரஹாம் ஃபோர்ட் தெரிவு செய்யப்பட்டார். அதாவது, முடிவு ஏற்கனேவே எடுக்கப்பட்ட நிலையில், பிரசன்டேஷன் ஒரு சடங்கு.
  • கெண்ட் கவுண்டி கிரிக்கெட் கிளப்பைப் பொருத்தவரை, கிரஹாம் ஃபோர்ட், கோச் பற்றிய விவரங்களறிய மட்டுமே சென்னை சென்றாராம், அவருக்கு கிளப்புடன் ஒப்பந்தம் செப்டம்பர் 2008 வரை இருக்கிறதாம்.
  • ஜான் எம்புரியை கூப்பிட்டதின் காரணம் உப்புக்கு சப்பாணி. இரண்டு மூன்று பேரிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டார் என்று உலகுக்கு காண்பிப்பதற்காகவே.
  • டேவ் வாட்மோர் தெரிவு செய்யப்படாதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் பற்றிய பங்களாதேஷ் வீரர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் (தற்போதைய தொடரின் போது கூறப்பட்டது) என்றும் கூறப்படுகிறது,
  • ஆனால், அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக, பங்களாதேஷ் ஒப்பந்தம் முடிவடையும் முன்னதாகவே, இந்திய ஒப்பந்தத்தை நம்பி, அதையும் இழந்தார் வாட்மோர்.
  • கோச்சிற்கான அடிபட்ட பெயர்களில் அர்ஜுன ரணதுங்கேவின் பெயரும் இருந்தது, கவாஸ்கரின் சிபாரிசினால்.

கிரஹாம் ஃபோர்டு வராததின் காரணம் கையிலிருக்கும் ஒப்பந்தமா அல்லது கிரிக்கெட் பந்து கணக்காக ஊடகங்கள், பழம் வீரர்கள், ஆடிக்கொண்டிருக்கும் வீரர்கள், வர்ணனையாளர்கள், மற்றும் ரசிகர்கள் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு பவுண்டரியும், சிக்ஸருமாய் பந்தாடப்போகும் நிலையைக் கண்டு பயந்தா என்பதுதான் தெரியவில்லை. கிரெக் சேப்பல் பட்ட பாடு எவரையுமே ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க செய்யும்.

No comments: