Tuesday, June 19, 2007

அப்துல் கலாமிற்கே என் ஓட்டு! உங்கள் ஓட்டு யாருக்கு?

குள்ள நரித்தனமான அரசியல்

ஏன் மேதகு அப்துல் கலாம் இரண்டாம் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படக்கூடாது? UPA மற்றும் பிற எதிர்ப்பாளர்கள் கூறும் கடந்த கால மரபு நிலைப்பாடு ஒருவரே இரண்டு முறை ஜனாதிபதியாக வரத் தேவையில்லை.

பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகளின் சுயநலத்தனமான பேச்சு. இவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முதன் மந்திரியாகவோ, பிரதம மந்திரியாகவோ வரலாமாம், ஆனால் ஜனாதிபதி மட்டும் இரண்டாம் முறை பதவி வகிக்கக்கூடாதாம்.

5 முறை முதலமைச்சர் ஆக ஒருவருக்கு தகுதியும் ஆசையும் இருந்து அதற்கான விழாக்கள் எடுத்துகொள்பவர்களும், ஒரு தலைமுறை முழுக்க ஒரு மாநிலத்தை தொடர்ந்து முதலமைச்சராய் ஆண்டவர்களும், 80க்கு மேல் வயதாகியும், நான் இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று கூறி இன்னமும் தன்னை பிரதமர் பதவிக்கு தகுதியானவாராய் காட்டிக் கொள்பவர்களும், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், இன்னமும் ராஜ்ய சபை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப் பட்டு பிரதமர் பதவியும் வகித்துக் கொண்டு இருப்பவர்களும் இருக்கும் போது, தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் அந்தப்பதவியில் திறம்பட செயலாற்றியிருந்தவர், மக்களால் பல கருத்துக்கணிப்புகளிலும் ஆதரிக்கப்பட்டவர், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பு நிலை இல்லாதவர், மக்களோடு ஒன்றி, பல மக்கள் நலத்திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்தவர், ஏன் இரண்டாம் முறை அதே பதவியில் நீடிக்கக்கூடாது?

அரசியலமைப்பு சட்டத்தில் அவ்வாறு ஒன்றும் கூறப்படவில்லையே! அவ்வாறே அதில் கூறியிருந்தாலும் அதை மாற்றுவது என்ன கடினமா? ஆதாயம் தரும் பதவி சட்ட திருத்த மசோதாவை எவ்வளவு வேகமாக, தங்களுக்கு சாதகமாக இவர்கள் நிறைவேற்றினார்கள்.

இவர்கள் கூறும் ஜனாதிபதிக்கு தேவையான மற்ற அம்சங்கள் என்னன்ன?

  • அரசியலமைப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும் அப்துல் கலாம் 2002ல் தேர்ந்தெடுக்கப்படும் போது, இந்த தேவை எங்கே காற்று வாங்கப்போயிருந்தது? அப்போது அவர்கள் அப்துல் கலாமை ஒரு இஸ்லாமியராக மட்டும்தான் பார்த்தார்கள். சிறுபான்மையினரின் ஒட்டு தேவையாயிருந்தது, எனவே ஆதரித்தார்கள். அரசியலமைப்பு அறிவு ஒரு முக்கிய அம்சம் என்றால் ஒரு தலை சிறந்த, உச்ச நீதி மன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கறிஞரையோ அல்லது நீதியரசரையோதான் இவர்கள் நியமனம் செய்ய வேண்டும். எப்பொழுதோ சாதாரண சிவில்/ கிரிமினல் வழக்கறிஞராயிருந்தவரை எப்படி நியமிக்கலாம். எப்படியிருந்தாலும் சட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஜனாதிபதி, அவர் எவ்வளாவு பெரிய அரசியல் சட்ட மேதையாயிருந்தாலும், சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கப் போவதில்லை, பின் ஏன் இந்த நிர்ப்பந்தம்?
  • அரசியல் நுண்ணறிவு வேண்டும் இந்தத் தேவையும் 2002ல் இல்லை, இப்போது திடீரென கை, கால் முளைத்து வந்து விட்டது. இதை எப்படி அர்த்தம் செய்ய வேண்டுமென்றால், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல் படத் தெரிந்திருக்க வேண்டும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவைப்படும் போது ஆளுனர் ஆட்சி அமல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து புது அரசாங்கம் அமையும் நிலையில், தன்னை நியமித்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அந்த கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். தன்னை நியமித்த கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் எல்லா தகிடு தத்தங்களையும் கண் மூடி, காது, வாய் பொத்தி (காந்தீய வழியில்?) பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நடக்கும் பொன்விழாக்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் வந்து பொன்னாடை போர்த்தியிருக்க வேண்டும்.

இன்று UPAவால் ஜனாதிபதி பதவிக்காக யார் யார் பெயரெல்லாம் அடி பட்டது? பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், சிவ்ராஜ் பாட்டில். இவர்கள் மூவரும் ஆளும் கட்சியின் மந்திரி சபை உறுப்பினர்கள். பிரதம மந்திரிக்கும், சோனியா காந்திக்கும் கட்டுப்பட்ட பதவியில் இருந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் எவ்வாறு தனித்தன்மையோடு ஜனாதிபதியாக செயல் பட முடியும்? பண்ணையார் ஒருவர் தன் கீழ் வேலை பார்க்கும் ஒருவரை ஊர்த்தலைவராக ஆக்கி அவரைத் தன் போக்கில் ஆட்டி வைப்பது போலல்லவா இருந்திருக்கும். நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை, அது நாம் செய்த புண்ணியம்.

அரசியல்வாதியே ஜனாதிபதியாக வந்தாலும் அவர் துடிப்பான அரசியலில் (active politics) இருந்து விலகி ஒரு 5 அல்லது 10 ஆண்டு காலம் கழிந்த பின்னரே (cooling period) அவரை ஜனாதிபதவிக்கு முன் மொழியும் நிலை வர வேண்டும். பணி செய்பவர், ஒரு குழுமத்திலிருந்து விலகி போட்டிக் குழுமத்தில் சேர ஒப்பந்தத் தடை இருப்பது போல.

திருமதி. பிரதீபா பாட்டில் நல்லவராகவே இருக்கலாம், வல்லவராகவும் செயல் படலாம். ஆனால் அவர் பெயர் எப்போது இந்த பதவிக்கு அடிபட்டது? வேறு எவரும் கிடைக்காத நிலையில் முன்மொழியப்பட்டது. ஏதோ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தங்கள் வாழ்நாளின் இலட்சியம் போலவும் அதனாலேயே இவர் பெயரை முன் மொழிந்ததாகவும் வாய்ப்பந்தல் போடுகிறார்களே, இவர்களை என்ன சொல்வது? ஏன் தியாக தீபம் முதல் தேர்வாக இவரைத் தெரிவு செய்ய வில்ல? தன் கட்சியைச் சார்ந்த இவரை ஏன் மறந்து போனார்?

சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தும் இவர்கள் தங்களை சாமர்த்தியசாலிகள் என்று நினைத்துக் கொள்ளலாம், மக்களுக்குத் தெரியும் இவர்கள் யாரென்று.

1 comment:

Anonymous said...

எங்க ஓட்டு இரட்டை இலைக்கே