இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் பிரச்சினை
இராஜஸ்தானில் தற்போது நடந்தேறிய போர்க்களம் அரசியலில் இருப்போருக்கும் ஏனைய மற்றவருக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஒரு பெரிய பாதக விளைவுக்கான அடிக்கல்லாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினை தற்போது ஏற்படுத்திய விளைவுகள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்:
- 26 பேர் பலி
- இராஜஸ்தானில் ஆளும் பா.ஜ ..ப அரசாங்கம் கவிழும் நிலை.
- தில்லி மற்றும் இராஜஸ்தானில் பொது வாழ்க்கை ஸ்தம்பிப்பு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு (பஸ் எரிப்பு ) சேதம்.
- "நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்" என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்து.
- "மீனா" சமுதாயத்தினர் போரட்டத்தில் குதித்து மேலும் சிக்கல் ஏற்படக்கூடிய நிலை.
குஜ்ஜர்களின் கோரிக்கைதான் என்ன?
தாங்கள் இப்பொழுது அட்டவணைப்பட்டிருக்கும் நிலையில் இருந்து இன்னும் தாழ்த்தப்பட வேண்டும். அவர்கள் இராஜஸ்தானில் தற்பொழுது மற்ற பின்தங்கிய வகுப்பில் (OBC) அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து பழங்குடிகளாக (ST) அறிவிக்கப் பட வேண்டும். இதுவே போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது இன்னும் தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கபட வேண்டும். ஏனென்றால் மற்ற பின்தங்கிய வகுப்பில் பல சாதியினர் இடம் பெற்று விட்டதால், இவர்களுக்கு சலுகைகள் கிடப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.
ஆனால் இந்த கோரிக்கைக்கு "மீனா " சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏன்? இதுவரை "மீனா " சமுதாயத்தினர் மட்டுமே இதுவரையில் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டு அதனால் கிடக்கும் சலுகைகளை ஏகபோக உரிமையுடன் அனுபவித்து வருகிறார்கள். குஜ்ஜர்களும் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டால், ஏகபோக உரிமை போய்விடும். முதலில் இந்த இரு சமுதாயத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பின்னர் அரசுடன் மோதலாக உருவானது.
குஜ்ஜர்களின் பின்னனி
இவர்கள் பழங்குடிகள் என்பதில் சந்தேகமில்லை. ருஷ்யாவில் ஒரு பகுதியில் இருந்து ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், கைபர் பாஸ் வழியாக இந்தியாவை வந்தடைந்தவர்கள். 5 அல்லது 6 ம் நூற்றாண்டில் குஜராத்திற்கு குடியேறி பின்னர் அங்கிருந்து மத்திய இந்தியாவிலும் இமாலய மலைப்பகுதிகளிலும் குடியேறினவர்கள். இன்று இவர்கள் இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இராஜஸ்த்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரகாண்டம், தில்லி, மஹாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் பாக்கிஸ்தானிலும் உள்ளார்கள். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மஹராஷ்ட்டிராவில் இவர்கள் பிராம்மண சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் இவர்களை பழங்குடிகள் என்றும், இராஜஸ்த்தான், மத்தியப்பிரதேசம் இவர்களை மற்ற பின் தங்கிய வகுப்பினராகவும் அறிவித்துள்ளார்கள்.
போராட்டத்தின் பின்விளைவுகள்:
குஜ்ஜர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கக்கூடும். பழங்குடியினராகவும் அறிவிக்கப்படலாம். இதனை முன் மாதிரியாகக் கொண்டு ஏனைய சமுதாயத்தினரும், மேலும் தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றக்கோரி அட்டவணை திருத்தம் கோரலாம். இதனால் மேலும் மோதல்களும், கலவரங்களும் வரலாம். தமிழ்நாட்டில் நாம் இத்தகைய கலவரங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம்.
எந்த அட்டவணையிலும் இல்லாதவர்கள் மற்ற பின்தங்கிய வகுப்பினராய் அடையாளம் காட்டிக் கொள்ள விழையலாம். அங்கே கூட்டம் அதிகமானால், மற்ற பின்தங்கிய வகுப்பினர், மிகப் பின்தங்கிய வகுப்பினராய் மாற்றிக்கொள்ள விரும்பலாம். மிகப் பின்தங்கிய வகுப்பினர் மேலும் சலுகைகளைப்பெற பழங்குடியினாராய் மாற ஆசைப்படலாம்.
பட்டியலில் சேர்ந்த எவரும் பட்டியலை விட்டு வெளி வந்து தாங்கள் முன்னேறி விட்டோம் என்று கூறிக் கொள்ளப் போவதில்லை. இதில் அந்த சமுதாயத்தை குறை கூற முடியாது, குறை கூறுவதிலும் அர்த்தம் இல்லை. பட்டியல்தான் கழு கொம்பு என்றாகி விட்டபின் அதை விட யாருக்கு மனது வரும். ஆனால் பட்டியல் மூலமாக சலுகைகள் பெற்று வளர்ந்தபின், அந்த கழு கொம்பை இல்லாதவருக்குக் கொடுத்து அவரையும் முன்னேறச் செய்யாமல், இந்த சமுதாயங்களை சேர்ந்த தனிப்பட்டவர்கள் அதை அடி கொம்பாக பயன்படுத்தும் போதுதான் கலவரங்கள் மூள்கின்றன.
- சமுதாயத்தில் தங்களை மேலும் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாவே காட்டிக் கொண்டும், இன்னும் கீழ்நிலைக்கு மாற்றக்கோரி போரட்டங்கள் செய்யும் நிலைக்கு நம் மக்களை (ஏ)மாற்றியவர்கள் யார்?
- ஓட்டு வங்கியை மட்டும் மனத்தில் வைத்து அதற்காகவே சட்டங்கள் இயற்றி மக்களை இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையையே விரும்பச் செய்யும் நிலைக்கு தள்ளியவர்கள் யார்?
- தன்மான உணர்ச்சியை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு நம் மக்களை இட்டுசென்றவர்கள் யார்?
இந்த கேள்விகளுக்கு நம் அனைவருக்கும் விடை தெரியும்.
உங்கள் உள்மனதில் எழும் விசனங்களுக்கு, விமோசனம் ஏதெனும் உண்டா? இன்னும் எவ்வளவு உயிர் பலி கொடுப்போம்? எவ்வளவு பஸ்கள் எரிப்போம்? எத்தனை நாட்கள் கடை அடைப்பு செய்வோம்? எவ்வளவு சாதிக்கட்சிகள் உருவாவதை பார்க்கப் போகிறோம்?
1 comment:
சனநாயகம் [சாதி பாகுபாடு/ கட்சி] என்ற பெயரில் நாடு தாழ்த்தப்பட்டுக்கொண்டு போகிறது.
_______
CAPitalZ
ஒரு பார்வை
Post a Comment