நடைபாதையில் நேராக நடக்க முடியாது. பக்கவாட்டிலேதான் நடந்து (ஊர்ந்து) சென்று நீங்கள் விரும்பும் கடைக்கு செல்லவோ அல்லது அந்த நடைபாதை கடைகளிலோ உங்களுக்குக் தேவையானவற்றை வாங்கவோ முடியும். ஆயினும் நீங்கள் செல்வது 5 அடி அகலமான நடைபாதையில்தான். பின் ஏன் பக்கவாட்டில் நடக்கவேண்டும்? விடை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆக்கிரமிப்பு. நடைபாதைகளை ஆக்கிரமித்து இருக்கும் கடைகள். எனக்கு பாண்டி பசாரில் நேர்ந்த அனுபவம்தான் இந்தப் பதிவை எழுதத் தோண்றியது.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அம்மா, தாயே, அய்யா என்று பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் பிச்சைக்காரர்களா? இல்லை. அவர்கள் ஒரு மூலையில் ஒண்டி அல்லது இங்கும் அங்கும் நடந்து பிழைப்பை நடத்துகிறார்கள். தினமும் பூ வியாபாரம் செய்து (பத்து ரூபாய்க்கு நான்கு முழம் என்று கூவி அழைத்து, கிட்டே போனதும், மூன்று முழம்தான், வாய் தவறி தப்பாய்க் கூறி விட்டேன் என்று சொல்லி, இரண்டேகால் முழம் அளந்து) பிழைக்கும் பூக்காரியும் இல்லை. கைகுட்டை, காலனிகள், மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்கும், நடைபாதை வியாபாரியா? அவர் ஒரளவிற்கு ஆக்கிரமிப்பு செய்தாலும், கடை நிலை வாழ்க்கை வாழும் அவர்களுக்கு அரசாங்கம் வேறு வசதிகள் செய்து தராததினால் அவர் நடைபாதையை சொந்தம் கொண்டாடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். பின்னே யார்?
அங்கே பெரிய பெரிய கடைகள் வைத்து, பாண்டி பசாரில் ஆரம்பித்து, பின்னாலே இருக்கும் தெரு வரை நீண்டிருக்கும் கடைகளில் சாமான்களை நிரப்பி வியாபாரம் செய்து வரும் மிகப்பெரிய வியாபாரிகள்தான்.
இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் (தரை நிலை மட்டும்தான், மாடிகள்அடுத்துக் கொள்ளப்படவில்லை) கடை பரப்பி வியாபாரம் செய்யும் இவர்களுக்கு, சாமான்கள் அடுக்கி வைக்கவும், விற்ற சாமான்களை, வாடிக்கையாளர்களுக்கு கட்டிக் கொடுக்கவும் கடையில் இடமில்லையாம். நடைபாதையை 3 அடிக்கும் அதிகமாக வளைத்துப் போட்டு அங்கேதான் இதெல்லாம் செய்கிறார்கள் ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற வியாபாரிகள். ஏன் இந்த வேலையை எல்லாம் கடைக்குள் இருக்கும் இடத்திற்குள் செய்ய முடியாதா? அதனால் என்ன வியாபாரம் கெட்டுப் போய்விடுமா? அல்லது நஷ்டம்தான் வந்து விடுமா?
அதே சமயம், கடைக்கு எதிரில் இருக்கும் சாலையில், உங்கள் காரை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள் கடை வேலையாட்கள். அது முன் அனுமதி பெற்ற நிறுத்தத் தளமாக (parking area) இருந்தாலும் நீங்கள் அங்கே நிறுத்த முடியாது. "எங்க சாமான் ஏற்றி வரும் வேன் வரும்" என்று சாக்கு போக்கு சொல்லி விரட்டி விடுவார்கள்.
அன்று எனக்கு சற்று கோபம் வந்து அந்த ஊழியர்களிடம் சத்தமும் போட்டேன். நடைபாதையிலிருந்த சில பாலிமர் நாற்காலிகளை வேண்டுமென்றே காலால் தட்டியும் விட்டேன். ஆனால் எதற்கும் பதில் பேசாமல், அந்த ஊழியர் அவற்றை எடுத்து சரி செய்து வைத்து, தன் பணியை மீண்டும் தொடர்ந்தார்.
தன் சுயநலத்திற்காக, பொதுச் சொத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் இந்த பிச்சைக்கார கனவான்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? இது அங்கே இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? இதனால் அங்கு ஏற்படும் மக்கள் நெருசடிகள் தவிர்க்கப்படும் அல்லவா? ஜேப்படி போன்ற குற்றங்கள் குறையும் அல்லவா? உச்சநீதிமன்றம் தில்லியில் செய்த மாதிரி "கடைஅ(உ)டைப்பு " உத்தரவு போட்டால்தான் இவர்கள் விழித்தெழுவார்களா? சுயமாக, தான் செய்ய வேண்டிய கடமையை காவல் துறை மறந்து போய்விட்டதா? சில மாதங்களுக்கு முன் ஒரு தினப்பத்திரிக்கையில் படித்த செய்திதான் நினைவிற்கு வருகிறது. சென்னையில் தி,நகர் காவல் நிலையத்தில் பணி புரியத்தான் அதிக விலையாம், சுமார் 15 இலட்சம். இப்பொழுது தெரிகிறது ஏன் இந்த விலையென்று.
2 comments:
நீங்க சொல்லி இருப்பது மிகவும் சரி. சிறுவியாபாரிகளை காட்டிலும் பெரிய பெரிய கடை முதலாளிகள் தான் பெரிய அளவில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறார்கள் :((..
உங்கள் பிரச்சினையை டிராபிக் ராமசாமியிடம் சொல்லுங்கள். எல்லாம் தானாகவே சரிவரும்.
Post a Comment