Tuesday, February 13, 2007

சாகரன் என்கிற கல்யாணின் மறைவு....

11ம் தேதி மதியம் 1:15க்கு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபொழுது, மாடிப்படியில் என்னுடன் நின்று உரையாடிய சாகரன் என்கிற கல்யாண், மாலை 4 மணிக்கு இல்லை. கல்யாண், சாகரனாய் அவதாரம் எடுப்பதற்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். என் இளைய சகோதரன் வயதானாலும், எனக்கு ஒரு குரு போன்றவர். என்னை இந்த வலையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

சென்ற வியாழனன்று (8ம் தேதி) இருவரும் தேன்கூட்டின் அடுத்த நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது "சுடர் தொடர் விளையாட்டு" பற்றி என்னுடைய கருத்துக்ளையும் கூறினேன். சுடரை ஏற்றி வைத்து அதன் ஜோதியில் ஐக்கியமானாரே. ஐயகோ! இதைவிட காலத்தின் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியுமோ?

கடந்த 8 வருடங்களாக அவரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அருகிலிருந்து பார்த்து வந்தவன் இன்று அவரின் பூத உடலை பார்க்கும் நிலையையும் அடைந்தேனே.

சாகரத்தில் என்றேனும் அலைகள் ஓயுமோ? ஆயினும் இன்று சாகரம் அடங்கிப் போனதே.

நான் வலை பதிய ஆரம்பித்த புதிதில், என் வலைப்பதிவு ஒன்று தினமலரில் பிரசுரிக்கப்பட்டதும் உடனே தொலைபேசியில் எனக்கு வாழ்த்துக்கூறி என்னை ஊக்கப்படுத்தியவர். அதேபோல் நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரை இனையப்பத்திரிக்கைகளுக்கு அவரே அனுப்பி அது "பூங்கா"வில் பிரசுரிக்கப்பட்டவுடன் எனக்கு முதன் முதலில் தெரிவித்து வாழ்த்து சொன்னவரும் அவர்தான். இன்று அவரின் மறைவுக்கே இரங்கல் தெரிவிக்கும் நிலையை என்ன சொல்ல?

அவர் முதன்முதலில் ரியாதிற்கு வந்தபோது விமானநிலையம் சென்று அழைத்து வந்த நானே இன்று அவரை இக்கோலத்தில் வழியனுப்பும் துர்பாக்கியசாலியானேனே.

அவரின் துணைவியாரையும் அவர்களின் அன்பு குழந்தையின் பிஞ்சு முகத்தையும் பார்க்கும் போது "காலா! உனை நான் சிறு புல்லெனெ மதிக்கிறேன்: என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" - பாரதியின் அதே ஆத்திரம் எனக்கும் வருகிறது. எது என்ன ஒரு வயதா கொண்டு செல்ல? சாதிப்பவர்களை சோதிக்கும் இது என்ன சாத்திரம்?

சகோதரனாக, நண்பணாக, ஆசானாக என்னை ஆக்கிரமித்த ஒரு மனிதர் அவர். அவர் இன்று இல்லை என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்த மாடிப்படி தினமும் 4 தடவையாவது அவரை எனக்கு நினவு படுத்தும்.

8 comments:

சிவபாலன் said...

மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வு!

அவருடைய குடும்பத்தார் இந்த மீளா துயரிலிருந்து வெளிவர மனவலிமை கிடைக்கட்டும்.

VSK said...

:(((((

SurveySan said...

என்னய்யா கொடுமை இது.

:(

நடப்பவை நன்மைக்கே என்று தேற்றிக் கொள்ள நினைத்தாலும், இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது யார் நன்மைக்கு?

காலா! உனை நான் சிறு புல்லெனெ மதிக்கிறேன்: என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!

துளசி கோபால் said...

கல்யாண்-சாகரனைப்பற்றி வரும் ஒவ்வொரு பதிவுவையும் படிக்கும்போதும் மனம் கனத்துப்போய்
கண்ணீர் வழிகிறது.

அவரின் குடும்பத்திற்கு எந்தவிதமான ஆறுதலைச் சொல்ல முடியும்?
(-:

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப சோகம். இந்தியாவுக்குச் சென்றுவிட்டாரா?

Sundar Padmanaban said...

வலியை உணரமுடிகிறது பாலா. எனது கண்ணீரஞ்லிகள்.

சில வேளைகளில் சிலவற்றை என்னதான் முயன்றாலும் எந்த விதத்திலும் நியாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆறாத ரணமாக மாறாத வடுவாக நிலைத்து நின்றுவிடும்.

காலம் தான் மருந்து என்ற பம்மாத்து வார்த்தைகள் சொல்லாமல் இந்தத் துயர நிகழ்வைத் தாங்கக்கூடிய மனஉறுதியை அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் அருளட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

துயருடன்
சுந்தர்

Bala said...

நேற்று இரவு கல்யாணின் துணைவியாரும், குழந்தையும் கிளம்பி இன்று(14/2/2007) அதிகாலை சென்னை சென்றடைந்தார்கள். ரியாதில், கல்யாண் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றே (14/2/2006) அனுப்பி வைக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. அவ்வாறாயின் நாளை காலை சென்னை வந்து அடைவார். இறைவன் இதற்காகவாவது அவருக்கு ஆசி புரியட்டும்.

வீட்டு முகவரியும் தொலைபேசி எண்களும் மற்றும் இறுதிச் சடங்கு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள
http://djanakiraman.googlepages.com/

Nandhakumar BALA said...

Dear Mr BALA,

My deep condolences ....
You are not mentioned how kalyan died, and i was searching in your profile to find out your e mail id.
i could n't. Nandhakumar.B
nand1972@gmail.com