Saturday, March 03, 2007

சமர்த்துக் குழந்தை

சமர்த்துக் குழந்தை

“சரி.. சரி.. போனா போகட்டும். இதிலே உனக்கு ஒரு காயமும் படாத வரைக்கும் நிம்மதி. அப்பறம் இதிலே உம்மேலே ஒரு தப்பும் இல்லே. உனக்கு பின்னாடி வந்து உன் கார் மேலே இடிச்ச அவன் மேலேதான் தப்பு..இன்னும் ஏன் இப்படி ஒரே அழுமூஞ்சியா இருக்கே?...”

“அது சரி..உங்களுக்கு என்ன.. ஏதோ வாய் புளிச்சுதோ, மாங்காய் புளிச்சுதோன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. எனக்குல்ல தெரியும் என் மனசு படற சங்கடம். அவனுக்கு என்னமா அடி விழுந்திருக்குன்னுதான் நீங்க பார்த்தீங்களே.. பின்னாடி செமத்தியான அடி. முன்னாடியும் தான். எப்படி விசனப்படாம இருக்க முடியும்..” என்று இன்னும் அதிகம் சோகப்பட்டாள்.

“சரிம்மா.. வண்டின்னு இருந்தா விபத்து எல்லாம் வரத்தான் செய்யும். நம்ப பேரிலே தப்பு இல்லாட்டாலும், அடுத்தவன் பண்ற தப்பாலும் விபத்து வரத்தான் செய்யும். அதான் அடிச்சவனே எல்லா செலவையும் ஏத்துக்கறேன்னு சொல்லிட்டான்ல. ஏதோ தலக்கு வந்தது தலப்பாகையோடு போச்சுன்னு இருக்கிறத விட்டுட்டு ஒரே கவலையும் வருத்தமும் இருந்தா எப்படி?...”

“அட நீங்க ஒன்னு.. மனுஷி எதைப்பத்தி கவலப்படறான்னு தெரியாம வந்து ஏதோ ஆறுதல் சொல்றேன்னு சொல்லி, இருக்கற கவலையை இன்னும் அதிகம் பண்ணிக்கிட்டு.. இங்கே காசு, பணத்தைப் பத்தி யாரு கவலப்பட்டா? என் கவலயெல்லாம் நம்ம வண்டியைப் பத்தித்தான். நான் அதை என்னிக்காவது வண்டி மாதிரி பார்த்திருக்கேனா? அது உடம்புலே ஒரு கீரல் கூட விழ விட்டதில்லே. பூ மாதிரி வச்சுக்கிட்டிருந்தேன். அது எனக்கு ஒரு குழந்த மாதிரி. நீங்க கூட என்கிட்ட எத்தினியோ தடவ சண்டை, சத்தம் போட்டிருப்பீங்க. அது என்கிட்ட ஒரு நாள் கூட சண்டித்தனம் பண்ணதில்லே. நான் எங்கேயாவது போனம்னு, உங்க பெரிய புள்ளையை கூப்பிட்டா, அவன் வர மாட்டான். அந்த மகாராணி சின்னவ இருக்காளே, அவளும் மூஞ்சியை திருப்பிக்கிட்டு போயிடுவா. ஆனா எப்ப கூப்டாலும் சமத்தா வந்து என்கூடவே இருக்கும். அது எங்கே நின்னுக்கிட்டுருக்கோ, அங்கே நான் இருக்கேன்னு எல்லோரும் டான்னு சொல்லுவாங்கல்ல. அதுக்கு அடின்னவுடனே கவலை இருக்காதா பின்ன. நாலு வருஷமா நான் எங்கே போனாலும் கூடவே வந்து போயிக்கிட்டு இருக்கிற அதுக்கு அந்த மாதிரி அடி பட்டதும் மனசு தாளலைங்க. பாழாய்ப் போற பய. சிக்னல்லே நின்னுக்கிட்டிருக்கும்போது பின்னாடி வந்து படார்ன்னு இடிச்சு என் குழந்தையை நாசம் பண்ணிட்டானே..”

அவள் புலம்பல் ஓயாது. வண்டி, தப்பு தப்பு, சமர்த்துக் குழந்தை, சரி செய்யப்பட்டு முழுசாக கண் முன் வந்து நிற்கும் வரை.

1 comment:

நானானி said...

வண்டியை வண்டியாகப் பார்க்காத
என் போன்றொர்க்கு அவள் புலம்பல்
நியாயமானதுதான்!!ஹி..ஹி..!
நானானி