Tuesday, February 06, 2007

The Majestic - திரை விமர்சனம்.

தொலைக்காட்சியில் "The Majestic" படம் பார்த்தேன். இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது . காரணம் கதை சொல்லப் பட்டிருக்கும் விதமும், பின்புலத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய அழகான, அன்பு மட்டுமே நிறைந்த ஒரு community மற்றும் சன்னமாக இழையொடிய ஆனால் ஆழமாக படமாக்கப்பட்ட ஒரு காதலும் ஆகும்.

இந்தப்படம் 2001ல் வெளியானது போலும். Jim Carrey கதாநாயகனாக நடித்த படம்.

நாயகன் திரைக்கதை எழுதுபவன். திடீரென்று அவன் மீது, கம்யுனிஸ்டுகளுக்கு சாதகமாக வேலை செய்பவன் என்று குற்றச்சாட்டு விழுந்து, அவனை Studio வேலை நீக்கம் செய்துவிடுகிறது. வருத்தமடைந்த அவன் கார் ஓட்டிக் கொண்டு ஒரு பாலத்தில் செல்லும் போது, குறுக்கே ஓடி வரும் எலிக்காக (?) திடீரென்று நிறுத்தும் போது கார் நிலை தடுமாறி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் நதியில் காருடன் கவிழ்ந்து விழுகிறான்.

கண் விழித்துப் பார்க்கும் போது ஒரு கடற்கரையில் கிடக்கிறான். ஒரு பெரியவர் அவனை அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்து மருத்துவம் பார்க்கிறார். அப்போதுதான் அவனுக்கும் மற்றவர்களுக்கும், அவனுக்கு பழையன எதுவுமே எதுவுமே நினைவில்லை என்று தெரிகிறது. அந்த ஊர் ஒரு சிறிய ஊர். பெரும்பாலான குடும்பங்களில் ஒரு சோகம். அந்த வீட்டு ஆண்மகன் / கள் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு உயிரிழந்து இருப்பர். அவ்வாறு தன் மகனை இழந்த ஒரு பெரியவர் நாயகனைப் பார்த்ததும் தன் மகன் தான் வந்து விட்டான் எனக் கூறி அழைத்து சென்று விடுவார். ஏனென்றால் அவர் மகன் லுயுக், நாயகன் மாதிரியே இருப்பது தான். லுயுக்கின் காதலியும், நாயகன்தான் லுயுக் என்று நம்புகிறாள். அந்த ஊர் மேயரும, ஊர் மக்களும், திரும்பி வந்த லுயுக்கிற்கு ஒரு வரவேற்பு விருந்து அளிக்கின்றனர். அதில் கலந்து கொண்ட லுயுக்கின் பியானோ டீச்சர், அவன்தான் தன் முதன்மையான மாணவன் என்றும் அவன் மிக நன்றாக வாசிக்கும் பழைய பாடலை பாடச் சொல்லி அவனுக்கு பழைய சம்பவங்களை நினைவு கூற முயற்சிப்பார். ஆனால் லுயுக் ராக் சங்கீதம் வாசிப்பான். அது போலவே பலரும் அவனுக்கு பழைய சம்பவங்களை நினைவு படுத்த முயற்சிப்பார்கள்.

ஆனால் நாயகியின் தந்தைக்கு மட்டும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். லுயுக்கிற்கு காணாமல் போன சமயத்தில் திருமணம் ஆகி அவனுக்கு அது இப்பொழுது மறந்து போய், தன் மகளை மணந்து கொண்ட பின்னர் நினவு திரும்பி வந்தால் அப்போது தன் மகளின் கதி என்ன என எண்ணி பயப்படுவார். ஆனாலும், நாயகனும் லுயுக்கின் காதலியும் நெருக்கமாகப் பழகுகின்றனர். அவள், அவனை தான் லுயுக்கிடன் சென்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்குவாள்.

லுயுக்கின் தந்தை 'The Majestic' என்று ஒரு தியேட்டரை முன்னர் நடத்தி வந்தார். லுயுக் போரில் இறந்து போய் விட்டான் எனத் தெரிந்தபோது துக்கத்தில் அந்த தியேட்டரை மூடி விட்டார். லுயுக்கின் வருகைக்குப் பிறகு லுயுக் மற்றும் ஊர் மக்கள் உதவியோடு, அந்த தியேட்டரை மீண்டும் புணர்ப்பித்து, படங்கள் திரையிடுகிறார். அப்போது நாயகன் திரைக்கதை எழுதிய ஒரு திரைப்படம் அதே தியேட்டரில் திரையிடப்படுகிறது. அதன் வசனங்களைக் கேட்ட நாயகனுக்கு பழைய நினைவுகள் திரும்பி வருகின்றன. படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே லுயுக்கின் தந்தையும் மாரடப்பு வந்து இறந்து போய் விடுகிறார். நாயகன், லுயுக்கின் காதலியிடம் தன் நிலையை விளக்கி சொல்ல, அவள் அதிர்ச்சியடைந்து அவனை விட்டு விலகி விடுகிறாள்.

இதற்கிடையில், கடற்கரையில் ஒதுங்கியிருந்த ஒரு காரை புலனாய்வு செய்ய, அது நாயகனுடையதுதான் என்றும் தெரிய வந்து பெடரல் ஏஜென்ஸி அவனை தேச விரோத கொள்கையுடையவன் என்று குற்றம் சாட்டி கைது செய்கிறது. அவன் கம்யுனிஸ சித்தாந்தம் கொண்டவன் அல்ல என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேடபதாயில்லை. அவனுடய வக்கீல், ஒரு முன்வரையப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றில் கையெழுத்து இடச் சொல்கிறார். அதில், தற்போது கம்யுனிஸ சித்தாந்தங்களிலிருந்து விடு பட்டு விட்டதாகவும், மேலும் சில நபர்களை பெயர் குறிப்பிட்டு காட்டிக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அதில் கையெழுத்து இட்டால் அவன் விடுதலையாகலாம் என்றும் அவர் கூறுகிறார். நீண்ட மனக்குழப்பத்திற்கு பிறகு அவன் அதற்கு ஒப்புக் கொள்கிறான். அதில் லுயுக்கின் காதலிக்கு ஒப்புதல் இல்லை. அவனை வாதாட சொல்கிறாள். ஆனல் அவன் மறுத்து விடுகிறான். அவனை அவ்வளவு தூக்கி வைத்து கொண்டாடிய அந்த ஊர் அவனை இப்போது தூற்றுகிறது. அவன் போகும்போது லுயுக்கின் காதலி அவனுக்கு அமெரிக்க அரசியலமைப்பு புத்தகம் ஒன்றையும் லுயுக் தனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தையும் கொடுக்கிறாள்.

அவன் விசாரணை செய்யப்படும்போது, அவன் அந்த முன்வரையப்பட்ட கடிதத்தை விசாரணையின் போது சமர்ப்பிக்க முடியாமல் தவிக்கிறான். மிகத்துணிவோட, தான் கம்யுனிஸவாதி இல்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு தன் மீது வேண்டுமென்றே போடப்பட்டதென்றும், இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை கொடுக்கச் சொல்லி தான் நிர்பந்திக்கப் பட்டதாகவும் எடுத்துக் கூறுகிறான். இந்த விசாரணை நேரடியாக ஒலி/ஒளி பரப்பப்படுகிறது. முடிவில் அவன் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பாகிறது.

அவன் லுயுக்கின் காதலிக்கு தான் ஊருக்கு வருவதாகவும், லுயுக்கின் கடிதத்தையும் அந்த புத்தகத்தையும் திருப்பிக் கொடுக்க விழைவதாகவும், தன்னை ஸ்டேஷனில் வந்து சந்திக்குமாறும், அப்படி அவள் வராவிட்டால், ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஒப்படத்து சென்று விடுவேன் என்றும் கடிதம் எழுதுகிறான். ஆனால் அவன் அந்த ஊரை சேர்ந்ததும், ஊர் மக்கள் கூடி அவனை மீண்டும் ஆர்ப்பாட்டமாக வரவேற்கிறார்கள். லுயுக்கின் காதலியும் அவனை விரும்பி ஏற்றுக் கொள்கிறாள்.

Jim Carrey யின் நடிப்பு ரொம்ப கச்சிதம். லுயுக்கின் காதலியாக வரபவரும் நன்றாக நடித்திருந்தார்.

திரைக்கதையை பார்க்கும் போது சமயத்தில் ஒரு மசாலா தமிழ்ப் படத்தை நினைவு படுத்தினாலும், மொத்ததில் மன நிறைவை கொடுத்தப்படம்.

No comments: