கிரண் பேடிக்கு 10 கேள்விகள்.
கிரண் பேடி தன்னுடைய பணி முதிர்ச்சி (service seniority) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், தன்னிலும் குறைந்த பணி முதிர்ச்சியுள்ளவவரை, தில்லி காவல் ஆணையாளாராக நியமித்தது தப்பு என்று ஒரு பெரும் கூக்குரலிட்டு, தான் வெகு நாள் விடுப்பில் செல்லப்போவதாக அறிக்கை விட்டார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலை சந்தித்துப் பேசி, சுமுகமாகி நேற்று வேலை திரும்பினார்.
கரன் தாப்பர், இவரை நேர்காணலுக்கு அழைத்து, அதற்கு அவரும் ஒத்துக்கொண்டு, பின்னர் தகுந்த காரணங்கள் கூறாமல், ஒதுங்கி விட்டாரென்றும், அவரிடம் தான் கேட்க விரும்பிய அந்த 10 கேள்விகளை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிட்டுள்ளார்.
பேடிக்குத் தகுதியிருந்தும், அவரின் கடந்த கால வேலைத்திறன் மற்றும் பணிப் பதிவுகள் சிறப்பாகவும் இருந்திருந்தால், அவருக்கு அந்த பதவி கொடுக்காமல் போனது நீதி மறுக்கப்பட்டது மட்டுமில்லாமல், வழிமுறை தவறியதும் ஆகும். ஆனால் பேடியின் கடந்த கால ஆவணங்கள், அவரை பணியில் அவ்வளவு தலை சிறந்தவராக படம் பிடித்துக்காட்ட வில்லை என்கிறார்.
பேடியிடம் அவர் கேட்க விரும்பிய அந்த பத்துக் கேள்விகளும், அத்துடன் என் மனதிற்கு பட்ட ஒரு சில கேள்விகளும்:
1. குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றின பிறகு, வழமையாக தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தியக் காவல் பதக்கம் (Indian Police Medal for Meritorious Service) மற்றும், ஜனாதிபதியின், காவல் துறையில் தனித்தகுதியுடன் பணியாற்றியமைக்காக (President's Police Medal for Distinguished Service) வழங்கப்படும் பதக்கங்களும் இன்று வரையில் (35 வருட பணிகளுக்குப்பிறகும்) உங்களுக்கு வழங்கப்படவே இல்லையே, அது ஏன்?
2. உங்கள் பதவிக்காலத்தில் இதுவரை 4 தடவை முழு பதவிக்காலத்தையும் முடிக்காமலும், 2 தடவையாவது உங்கள் பதவியை தகுந்த அனுமதியில்லாமல் (பணி புரிய மறுத்து) விட்டுச் சென்றதும் உண்டா?
3. நீங்கள் மிஸோரத்தில் DIG யாக வேலை பார்த்தபோது, பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை கசிய விட்ட குற்றத்திற்காக, அதன் ஆளுனர் உங்களுக்கு ஒரு முறையான அதிருப்தி தாக்கீது அனுப்பியது உண்மையா?
4. அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமன், மிஸோரத்திற்கு வருகை செய்த போது, அதன் ஆளுனர், நீங்கள் அந்த வருகையை தடை செய்ய உத்தேசித்து இருப்பதை அறிந்து, உளவியல் துறைக்கு, வகைப்படுத்தப்பட்ட தகவல்களையும், பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள நீங்கள் நம்பத் தகுந்தவரல்ல என்று தெரிவித்தது உங்கள் பணிப் பதிவேடுகளில் இருக்கிறது உண்மையா?
5. நீங்கள் 41 நாட்கள் சண்டிகரில் IG ஆக பணி புரிந்தீர்கள். அப்பொழுது, அதன் நிர்வாக ஆலோசகர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, உங்களின் பணி 'பொது மக்களின் நலத்திற்கு உகந்தது அல்ல" என்றும், உடனடியாக உங்களை சண்டிகரிலிருந்து அகற்றக் கோரியும் எழுதியது உண்மையா?
6. சில தற்காலிக பணி நீக்க உத்தரவுகளை நீங்கள் ஆதரிக்காததால், கீழ் பணிபுரிந்த காவல் அதிகாரிகளை, நிர்வாகத்திற்கு எதிராக நடக்கச் சொல்லி தூண்டி விட்டீர்கள். பத்திரிக்கைகள், நீங்கள் கலகம் உருவாக்க முற்படுகிறீர்கள் என்றும் குற்றம் சாட்டியது.
7. 1988ல் நடந்த வழக்கறிஞ்சர்கள் வேலை நிறுத்தத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகித்தீர்கள். நீங்களே உங்கள் சுய சரிதத்தில் இதைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்.
8. இவ்வாறாக பல குறைபாடுகளை உடைய உங்கள் பணிப் பதிவேட்டை, நீங்கள் ஒரு மெச்சத்தகுந்த பணிக்காலம் என்று கூறி அதன் ஆதாரத்திலா காவல் துறை ஆணையர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறுகிறீர்கள்?
9. அவ்வாறாக இருந்தால், பின் ஏன் துணை ஆளுனர் தேஜிந்தர் கன்னா, அவருடைய முந்திய பதவிக்காலத்தில் நீங்கள் அவருடைய தனி அதிகாரியாக இருந்தும், இப்போது உங்களை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்க வில்லை?
10. தற்பொழுது டாட்வால் அவர்களின் நியமனம், தகுதி மற்றும் முதிர்ச்சி அளவுகோலால் சரியானது அல்ல என்று வாதிடும் தாங்கள், தகுதித்திறனால் தங்களுக்கு கிடக்காத ஒன்றை, முதிர்ச்சியின் அடிப்படையில் கிடக்க வேண்டும் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம்?
என் மனதில் எழுந்த கேள்விகள்:
· இவர் 1972ல் பணி சேர்ந்தார். இது வரையில் பல பதவி உயர்வுகள், பரிசுகள் பெற்றுள்ளார். இதுவரையில் அவர் தன்னை விட பணி முதிர்ச்சியுள்ளாவர்களைத் தாண்டி உயர்வு பெறாமல் மேலே வந்துள்ளாரா?
· இவருக்கும், இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் டாட்வால் அவர்களுக்கும், 2 வருட பணி முதிர்ச்சி வித்தியாசமே. உயர் பதவிகளில் இது ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
· பேடி அந்த நேர்காணலுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் பக்கம் இருக்கும் நியாங்களையும், இந்த கேள்விகளுக்கான பதில்களையும் அறிய முடியவில்லை. அவர் பக்கம் நியாமமே இருக்கக்கூடும். ஆயினும் 3 மாத விடுப்பில் சென்று, திடீரென்று நேற்று (3 ஆகஸ்ட்) விடுப்பு விலக்கி பணியின் சேர்ந்தது மட்டும் ஏன் என்று புரியவில்லை.
ஆயினும் அவர் துணிச்சல் மிகுந்தவர். தில்லியின் ஆணையராக வந்திருந்தால், விஷமிகளை நிச்சயம் ஒரு கை பார்த்திருப்பார். ஒரு வேளை அதனால்தானோ என்னவோ அவருக்கு அந்த பதவி கொடுக்கப் படவில்லை……
Choose the right car based on your needs. Check out