Monday, May 22, 2006

விவசாயிகள் கடன் ரத்து - இது ஒரு பொருளாதார நடவடிக்கையா?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் மதிப்பு ரூபாய் 6,600 கோடி ஆகும். இந்த செயல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றாலும், பொருளாதார அடிப்படையில் இந்த முடிவு சரியா?

இந்த செயல்பாட்டை அரசியல், சாதி விருப்பு, வெறுப்பு இன்றி விவாதிக்க நண்பர்களை அழைக்கின்றேன்.

நலிந்த விவசாயிகளிக்கு கடன் நிவாரணம் அளிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் பட்ட நஷ்டம் இயற்கை பொய்த்ததாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தாலோ உருவானது. இந்த நஷ்டத்தை கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் ஈடு செய்வதுதான் ஒரே வழியா? வேற வழி ஒன்றும் இல்லையா?

இந்த கேள்வியை அலசும் போது எனக்குள் எழுந்த சில கேள்விகளும், பதில்களும்:

1. கூட்டுறவுக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. ஏன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் (வங்கி என்றே இனி அழைப்போம்) வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வில்லை?

கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் தள்ளுபடி செய்வது சுலபமாகப் போனது. வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் , வங்கிகளும், மத்திய அரசும் இதை அனுமதிக்காது. அவ்வாறு அனுமதித்தால் இந்த தள்ளுபடி மற்ற எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட வேண்டும், இது இயலாத காரியம். (பொதுவாக மத்திய அரசு வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்யும், கடனை செலுத்த அதிக தவணை கொடுக்கும்).

2. அப்படியானால் வங்கிகளில் கடன் வாங்கி, நஷ்டப்பட்டவர்களின் கதி என்ன?

தெரியவில்லை.

3. கூட்டுறவுத்துறை ஒரு தொலை நோக்கோடு உருவாக்கப் பட்ட அமைப்பு. இது ஒரு நுண் கடன் (Micro Credit) அமைப்பு. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்களுக்குட்பட்ட அமைப்பு மூலமாக, சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அது அதிக லாபம் ஈட்டா விட்டாலும், நஷ்டத்தில் இயங்காமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. இவ்வாறு கடன்களை ரத்து செய்தால், அந்த அமைப்புகள் எவ்வாறு தங்கள் செலவீனங்களை ஈடு கட்ட இயலும்?

அரசாங்கம், கடனில் உள்ள மூலதனத்தை (Principal) ஈடு செய்து விடும். அதுவும் பொதுவாக அந்த தொகையை ஒரு மானியமாக கருதி அதை அரசாங்கத்தின் கூடுதல் முதலீட்டாக கருத ஆணையிடும். (that is, the government will instruct the Societies to treat the amount waived as Tier 1 capital and thus increase the investment of the govt in the societies. This is just a book entry and as such there won’t be any additional cash flow into the credit mechanisam). இது எதிர்காலத்தில் கடன் கொள்கையை பாதிக்கும்.

4. இந்த நிவாரணத்தை வேறு எவ்விதமாக வழங்கியிருக்கக் கூடும்?

இது மாதிரி நஷ்டங்களை ஈடு செய்யவே காப்புறுதிக் குழுமங்கள் (Insurance Companies) உள்ளன. அரசாங்கம், விவசாயக் காப்புறுதியை கட்டாயமாக்கி அதற்குண்டான காப்புறுதித் தவணை (Premium)யையும், சிறு மற்றும், மத்திய தர (Small and Marginal) விவசாயிகளின் சார்பாக செலுத்த வேண்டும். காப்புறுதிக் குழுமங்களும் இத்தகைய இழப்பு ஏற்படும் பட்சத்தில், அரசாணையை மதித்து (வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல்), ஈடு செய்ய வேண்டும்.

5. இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

· கடன் தள்ளுபடி என்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாறும். கட்சிகள் சம்பத்தப்பட்ட ஒரு நிலைப்பாடாக இருக்காது.
· கூட்டுறவுத் துறை மேலும் திறம் படுத்தப்படும் (Due to cash circulation).
· கடன் வாங்குபவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் என்றால் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணம் ஏற்படாது.
· கடன் தள்ளூபடியால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை மீண்டும் பொது மக்கள் தலையிலேயே புதிய அல்லது அதிக வரியாக சுமத்த வேண்டிய நிர்பந்ததிற்கு அரசு ஆளாக இருக்காது. காப்புறுதித் தவணைமட்டுமே செலுத்த வேண்டும்.

2 comments:

Radha N said...

கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது, ஒழுங்காக கடனை கட்டிக்கொண்டிருக்கும் விவசாயிகளை, தவணைக்கட்டும் மனப்போக்கினை மாற்றிவிடக்கூடிய அபாயம் உள்ளது. மறுக்கமுடியாத உண்மையும்கூட.

தாங்கள் கூறியுள்ளது போது, காப்பீட்டு வழிமுறைகளைக் கட்டாயம் ஆக்கி, அதன் தவணைகளை வேண்டுமானால் அரசு, மான்யமாக வழங்கலாம்.

ஆரோக்கியமான சிந்தனை வாழ்த்துக்கள்.

ரவி said...

எங்க ஊர்ல நிறைய பேர் கூட்டுறவு கடனை கட்டி இருக்கிறார்கள்..மேலும் கடன் கேட்டால் இனிமேல் தரமாட்டார்கள் என்ற எண்ணமே உள்ளது அவர்களுக்கு...

மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனையும் திரும்ப செலுத்தபோவதில்லை என்று தெரிவித்தார் ஒருவர்..

இது எப்படி இருக்கு..