Sunday, May 25, 2014

இந்திய இருவார நாடக விழா

இந்திய இருவார நாடக விழா 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட தினம் தொடங்கி இன்று வரையிலும், மற்றும் இன்னும் சில தினங்களுக்குத் தொடரும் நிகழ்வுகள் ஒரு நாடக விழாவில் வெவ்வேறு விதமான நாடகங்களைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

நாடகம் 1: 'நீ என்னை பிடிக்க முடியாதே' - நிதிஷ் குமாரின் ராஜினாமா: கட்சியில் பெருகும் பிளவைத் தடுக்கவும், மோதி எங்கே பீகார் வந்தாலோ, அல்லது தாம் தில்லி செல்லும் போதோ, மோடிக்கு மாலை மரியாதை செய்ய வேண்டிய தர்ம சங்கடத்தை தவிர்க்கவும், அதே சமயத்தில், தன் கைப்பாவையாக செயல்படக்கூடிய ஒரு தலைமையிடம் ஆட்சியை ஒப்படைக்கும் ஒரு ராஜ தந்திர நாடகம்..

நாடகம் 2: 'நானே காங்கிரஸ், என் மகனே தலைவன்' - சோனியா, ராகுல் ராஜினாமா: காங்கிரஸின் எல்லா வயதானவர்களும், காரிய கமிட்டி என்கிற பெயரில் ஒன்று கூடி, தத்தம் பெயரில் பழிகளை ஏற்றுக் கொண்டு, தியாகச் செம்மல்களாக மாறும் குணச்சித்திரக் கதை.

நாடகம் 3: 'நீ வருவியா, மாட்டியா?' - இது ஒரு அதிரடி நாடகம். யாரும் எதிர்பார்க்காத வேளையில், SAARC நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணத்திற்கு அழைப்பு அனுப்பி, மோதி தன் சொந்த கதை, வசனத்தில் இயக்கி அறங்கேற்றியது. இந்த நாடகத்தின் தனிப் பெருமை என்னவென்றால், வெவ்வேறு இடங்களில், நாடுகளில் கிளை நாடகங்களை ஒரங்க நாடகமாக மேடையேற்றியதுதான். 

கிளை நாடகம் 1: 'மீண்டும் ஒரு அந்த 7 நாட்கள்'. பாகிஸ்தானில் ஒரு சிறு நில நடுக்கத்தையே கூட ஏற்படுத்தியது எனலாம். ராணுவமும், தீவிரவாத (நம் கணக்குப்படி தீவிரவாதம், ஆனால் அவர்கள் கணக்குப்படி தேசியவாதிகள்) அமைப்புகளும் முட்டுக்கட்டைபோட, போனாலும் ஆபத்து, போகாவிட்டாலும் ஆபத்து என்று இரண்டும் கெட்டான் நிலமைக்குத் தள்ளப் பட்ட பாகிஸ்தான் பிரதமர், கடைசியில் துணிச்சலாக வருவது என்று முடிவெடுத்தது, பாக்கியராஜின் 'அந்த 7 நாட்கள்' கிளைமாக்ஸுக்கு சமானம். சிறைபிடித்த இந்திய மீனவர்கள விடுவிக்கும் காட்சி கடைசியாக இணக்கப்படுகிறது. தன்மானப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகம்.

கிளை நாடகம் 2: 'இலங்கை படையெடுப்பு' - ராஜ பக்சேயை அழைத்தது தமிழ் நாட்டில், தமிழின பெருமையை காப்பதில் முதலிடம் எனக்கா, உனக்கா என்ற சர்ச்சையை கிளப்பி விட்டது. வங்காள விரி குடாவில் அன்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் வேறு எங்கும் ஏற்பட்டதோ இல்லையோ, தமிழ் நாட்டில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. வைகோ முதன்முதலில் கொடியுர்த்த, எங்கே நாம் பின் தங்கி விடுவோமா என்று உடனே ஜெயாவும் குரலெழுப்பினார். நான் சளைத்தவனா என்று மு.க.வும் முச்சந்திக்கு வந்தார். இதில் மு.க. வை மிகப் பெரிதும் பாராட்டவேண்டும். தேர்தல் முடிவினால் குற்றுயிரும் குலையிருமாக இருந்தும், 2G வழக்கில் துணைவியை துவட்டிக் கொண்டிருந்த போதிலும், மக்கள் தம் மழலைச் சொல் கேட்டாரோ இல்லையோ, இப்போழுது இழி சொல் கேட்டுக் கொண்டிருந்த போதிலும், 'தன்மானத் தமிழன்' நிலமையை விடாமல் இருந்தார். 'நானும் உள்ளேன் ஐயா'என்று ராமதாஸ் சேர்ந்து கொண்டார். விலகிநின்றது விஜயகாந்த் மட்டுமே.  உணர்ச்சிக் கொந்தளிப்புகள் நிறைந்த நாடகம்.

கிளை நாடகம் 3: 'மோதி என் பக்கம்' - இலங்கையில் ராஜபக்சேவிற்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. தமிழ் நாட்டு நண்பர்களின் அழுத்தத்தில், எங்கே மோதி இலங்கைக்கு எதிறாக ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளப் பட்டு விடுவாரோ என்கிற பயத்தில் இருந்தவருக்கு, இந்த அழைப்பு, பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது. உடனே அவரும் சிறைபிடித்த இந்திய மீனவர்களை விடுவித்தார். இது ஒரு காமெடி பீஸ்.

கிளை நாடகம் 4: 'அறேங்கேறாத நாடகம்' - இந்த நாடகம் காங்கிரஸால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில காட்சிகள் ரெடியாக இருந்தாலும், முக்கிய கதா பாத்திரங்களான, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் நவாஸ் ஷெரிப் வரவை ஆதரிக்கத் தயாராகி விட்டதால், இந்த நாடகம் நடக்காது எனத் தெரிகிறது.

நாடகம் 4: 'நான் வர மாட்டேன்' - இது வரையில் மம்தா, ஜெயா, சித்தராமையா ஆகியோர் இந்த நாடகத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்கள்.

நாடகம் 5ம் அதற்கு மேலும்: 'வெள்ளித் திரையில் காண்க (அ) மேடை அலங்காரம்' - இனி வரும் நாட்களில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள், மந்திரி சபையில் யார் யாருக்கு இடம், எந்த தோழமை கட்சிக்கு என்ன பதவி ஆகியவை முடிவு செய்யும் நேரம். இந்த நாடகங்களுக்கு இன்னும் ஸ்டோரி லைன் ரெடியாக வில்லை. ஆனால் ஒவ்வொரு நாடகமும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதமாக தயாராவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. எதிர்பார்ப்புகள் 'கொல்லைப் பக்கம் போகுமா' இல்லை கொள்ளை போகுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments: