Thursday, February 01, 2007

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 3




இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களும், தன்னார்வு நிறுவனங்களும் எவ்வாறு நுண் வியாபார உரிமையை மேம்படுத்துகின்றன என்று சென்ற பாகத்தில் பார்த்தோம்.

சீனா இந்த யுக்தியை பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை கண்டதாகக் கூறப்படுகிறது. Consumer goods and Toys ல் சீனா உலக சந்தையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது இதன் மூலமாகக் கூட இருக்கலாம்.

நிச்சயமாக அரசாங்கம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் நுண் வியாபார உரிமையை ஊக்கப்படுத்த இன்னும் அதிக சலுகைகளை அளிக்கலாம். அரசு இலவச சலுகைகளை அளிப்பதை விட்டு விட்டு, அந்தப் பணத்தில் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். 2000 அல்லது 3000 ரூபாய்க்கு தொலக்காட்சிப் பெட்டி வழங்குவதற்கு பதிலாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் கல்வி கற்றுத் தந்து அந்த குடும்பம் என்றென்றும் நலமாக வாழ வழி செய்திருக்கலாம். நிலங்களை இலவசமாக தருவதற்கு பதிலாக, அந்த பயனாளிகள் அனைவரையும் சேர்த்து, கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, அந்த சங்கங்களின் மூலமாக அதே நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து மேம்பட வழி செய்திருக்கலாம்.

“கொசுக்களினால் பரவும் நோயைத் தடுக்க கொசு வலை கொடுக்காதே, சுகாதார மையம் அமைத்து சுற்றுப்புற சூழலை ஒழுங்குபடுத்து”.

இலவசங்கள் வியாதியை தற்போதைக்கு நீக்குகின்றன. ஆனால் அதன் காரிய காரணங்களை போக்குவதில்லை.


இந்த நுண் வியாபார உரிமை யுக்தியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது, அரசும் கண்டிப்பாக நடத்தக்கூடாது. அரசு இத்தகைய செயல்திட்டங்களை செயல்படுத்தும் போது வெற்றி பெறுவது இல்லை. அதற்கு காரணம், அரசியல்வாதிகளின் குறிக்கீடு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு. உதாரணத்திற்கு,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தங்கள் மொத்தக் கடன் தொகையில் 1% DRI(Differential rate of interest) scheme ல் அளிக்க வேண்டும் என்று 1977க்கு முதலே (ஏனெனில் நான் வங்கியில் சேர்ந்தது 1977ல்) உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ரூபாய் 4500 வியாபார மூலதனத்திற்காகவும் (Fixed assets) ரூபாய் 1500 வியாபாரப் பொருட்கள் கொள்முதல் (Working capital) செய்வதற்கும் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. இந்த கடனுக்கு வட்டி 4% மட்டுமே. இன்று கூறப்படும் நுண்கடன், எப்பொழுதோ இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு அமல் செய்யப்பட்டு வந்துள்ளது. இதன் மூலமாக ஒரு சிலர் பயனடைந்தாலும், இந்த் திட்டம் எத்தனை பேரை வறுமைக் கோட்டிற்கு மேல கொண்டு சென்றதென எனக்குத் தெரியாது.

இதே போல் மிக நல்ல திட்டம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டம் (Integrated Rurald Development Programme). ஆனால் இதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அதிக அளவில் பயன் அளிக்கவில்லை. 5000 பேர் இருக்கும் ஊரில் கிட்டத்தட்ட 3000 கறவை மாடுகள், 2000 ஆடுகள், 500 முடிதிருத்தும் கடைகள், 500 உணவகங்கள் ஆகியவைகளுக்கு சுற்று வட்டாரத்திலுள்ள 2 அல்லது 3 வங்கிகள் நிதிஉதவி வழங்கியிருக்கும். ஓரே நபர் 2 வங்கிகளில் இருந்து கடன் வாங்கியிருப்பார். அட ! அந்த பணம் அவருக்கு சென்றிருந்தால்தான் பரவாயில்லையே ! அவர் பொருளாதார ரீதியில் முன்னுக்கு வந்திருப்பாரே. அது சென்ற இடமெல்லாம், ப்ளாக் டெவெலப்மெண்ட் ஆபிசருக்கும் அந்த ஏரியா MLA/MP க்கும் தான். அதில் ரொம்ப அழகாக சுருட்ட "லோன் மேளா" என்கிற திட்டம் போட்டது ஜனார்தன் பூஜாரி என்கிற மத்திய இணை நிதி அமைச்சர்தான்.


இந்தியாவில் நுண்கடன் வசதி அளிப்பதற்கான கட்டுமான வசதிகள் ஏற்கனவே உள்ளன. கிராமிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள்/ வங்கிகள், நில மேம்பாட்டு வங்கிகள், அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (rozgar yojana), மானியத் திட்டங்கள் (subsidy schemes), கிராமப் புற வரையிலான அரசு நிறுவனங்கள் (block development offices), ஆகிய அனைத்தும் இருந்தும், ஏன் நம்மால் வேலை வாய்ப்பு வசதிகளை “அதிக அளவில்” பெருக்க முடியவில்லை? இந்த திட்டங்கள்/செயல் பாடுகள் வெறும் ஓட்டு பெருவதற்கான திட்டங்கள் தானா? அல்லது இதில் உள்ள குறைபாடுகள் என்ன? ஆனால் தனியார் முயற்சியால் தொடங்கப்படும் திட்டங்கள் பெருமளவு வெற்றி பெருவதன் காரணம்? உதாரணமாக,


  • சுனாமி நிவாரணத் திட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டி கொடுத்துவிட்டன. ஆனால் அரசு எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுத்தது? இருவருடைய வலிமையையும் ஒப்பிடும்போது வெற்றி சதவிகிதம் எவ்வளவு?
  • குஜராத் அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கு அரசு காரணமா? அல்லது அதில் முனைப்பட்ட கூட்டுறவு சங்கமா?
  • லிஜ்ஜத் பப்பட்டின் வெற்றிக்கு யார் காரணம்?
  • மும்பை டப்பாவாலா பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். (மதிய உணவு பெட்டியை, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காலையில் பெற்று, அதை உரிய நேரத்தில், மும்பையில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கும் தனி நபர்களிடம் சேர்த்து, பின்னர் காலி பெட்டியை சேகரித்து வீட்டில் கொண்டு சேர்க்கும் பணி). வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள். 99.9999% சதவிகிதம் சரியான வெற்றி. கணிணி இன்றி, படிப்பறிவு இன்றி, இயந்திர மயமாக்கல் இன்றி. Six Sigma தர நிர்ணயத்தில், உலக மதிப்பீட்டார்களின் கணிப்பில் ஒரு அதிசயம். இதில் அரசின் பங்கு 0.00001% கூட இல்லை.
  • அரசு பங்கு பெற்றாலும், தன் பங்கை நிதி உதவியுடன் நிறுத்தி நிர்வாகத்தை தன்னாட்சியாக செயல் பட வழிவகுத்தால் அந்த திட்டங்கள் குறித்த இலக்கில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உதாரணம்: கொங்கன் இரயில்வே, டெல்லி மெட்ரோ
எனக்குத் தோண்றிய சில நுண் வியாபார உரிமை யுக்திகள்:
  • ஆசிரியர்கள் வேலைக்குத் தகுதியான பட்டம் பெற்ற பல வேலையில்லா பட்டதாரிகளின் மூலமாக கிராம மற்றும் சிறு நகரங்களில், மாலை வேலைகளில், அங்குள்ள பள்ளிகளில் பயிலும் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனிக்கல்வி அளித்தல்.
  • அதே போல், பள்ளி வசதிகள் இல்லாத கிராமங்களில், பள்ளி செல்ல வசதியில்லாத (பொருளாதார அல்லது தொலை தூரம்) சிறார்களுக்கு கல்வி அறிவு அளித்தல் – திண்ணைப் பள்ளிக்கூடம். இந்த திட்டங்களை தனியார் நிறுவனங்கள் (Aptech, NIIT) மூலமாக அரசு செயல் படுத்தலாம்.
  • ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவ கூடங்கள் (Health centers) , மருந்தகங்கள் போன்றவற்றை, அப்பல்லோ போன்ற மருத்துவ மனைகள் ஏற்படுத்தலாம். அரசு நடத்தும் primary health center களின் நிலை என்ன என்று நம்மில் பலருக்குத் தெரியும்.
  • BSNL/VSNL போன்ற நிறுவனங்கள், புறநகர் பகுதிகளில் தனியார் தொழில் முனைவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் சேவைகளை இப்போதுள்ள அளவிலிருந்து (PCO விற்கும் மேம்பட்ட) இன்னும் அதிகரிக்கலாம். இணைய மையம், நடமாடும் தொலை தொடர்பு மையங்கள் போன்றவை. சமீபத்தில் Airtel நிறுவனம் மும்பை டப்பாவாலாக்களின் மூலம் தனது pre-paid recharge voucher விற்பனையை துவக்கியுள்ளது. (http://economictimes.indiatimes.com/Airtel_hires_Dabbawallahs_as_salesmen/articleshow/1501785.cms)
  • Food-world, Nilgiris போன்ற பிரபல நிறுவனங்கள் சுகாதாரணமான முறையில் தயாரிக்கப்படும் சிறு/குறுந்தீனி பண்டங்கள்/ உணவுப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யலாம்.
  • பிரபல விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களை நேரடியாக பயிற்றுவிக்கப்பட்ட முனைவர்கள் மூலம் வாடகை மையங்கள் அமைத்து வேலை வாய்ப்பு வழங்கலாம்.

மேற்கூறியவற்றில் பல இப்பொழுதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறன. ஆனால் அவை நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பில் இல்லை, பல இடைத்தரகர்கள் மூலமாக உபயோகிப்போர்களை வந்தடைகின்றன. இதனால் விலையும் அதிகம். நிறுவனங்கள் நேரடியாக செயல் படுத்தும்போது நுண் வியாபார உரிமை முறை செயல் படுத்தப்படுகின்றது. விலையும் குறைய வாய்ப்புண்டு.

இதுவும் ஒரு வகையான வெளிக்கொள்முதல் (outsourcing ன் தமிழாக்கம் சரியா?) தான். தயாரிப்பாளர்களின் தயாரிப்பு மற்றும் வியாபார செலவுகள் குறையும், பரந்த வேலை வாய்ப்பு உண்டாகும்.

நண்பர்களே, இந்த மூன்று பாகங்களில் நான் கூறிய அனைத்தும் வலையில் மேய்ந்த போது எனக்குக் கிடத்தவை மற்றும் என் சுய அலசல்கள். நான் இந்த துறையில் முன்னோடியோ, அனுபவசாலியோ அல்ல.


இந்த தொடர் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நீங்களும் உங்களுக்குத் தோண்றிய நுண் வியாபார உரிமை வாய்ப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.


Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2 ஐ படிக்க



நன்றி….

2 comments:

வடுவூர் குமார் said...

பாலா
மூன்றும் முத்துக்கள்.
டிவி இலவசம் - சொன்னவுடனே ஓட்டு கிடைத்தது. உனக்கு வியாபார செய்ய உதவுகிறேன்,ஓட்டு போடு என்றால் மக்கள் போடுவார்களா?
அரசாங்கம், மக்கள் உழைப்பை முன்னிறுத்தி திட்டங்களை போட்டு செயல் படுத்த வேண்டும்.சரியான தலைமை நேர்மையான அரசாங்கம் மட்டும் இல்லாமல் மக்களும் ஒத்துழைத்தால்... முடியும்.
"பேட் நீயூஸ் இந்தியா"- சொன்ன மாதிரி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.

Bala said...

வடுவூர் குமார் அவர்களே வருக. தங்கள் மறுமொழிக்கு நன்றி.