Saturday, January 12, 2008

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth) பிரமிப்புகளின் தொடர்ச்சி:

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth)

பிரமிப்புகளின் தொடர்ச்சி:

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

இரண்டாவது பிரமிப்பு தாய்லாந்தில் நிகழ்ந்தது. இம்முறை விடுமுறையில் குடும்பத்துடன், தாய்லாந்து பயணம் மேற்கொண்டோம். அதில் ஒரு பகுதியாக பாட்டையா சென்றிருந்தோம். கிடைத்த ஒரு அரை நாள் இடைவெளியின் போது எதேச்சையாக ஹோட்டல் லாபியில் உள்ள டூர் டெஸ்க்கில் ஒரு போட்டோவைப் பார்த்தோம். உடனே அதற்கான வழியைக்கேட்டுத் தெரிந்து கொண்டு டாக்ஸி பிடித்துச் சென்றோம்.

அதைப்பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் ‘மயன் மாளிகை’ என்று வர்ணித்தாலே போதும் (ஏன் அது மயனையே கூட நாணித் தலை குனிய வைத்திருக்கும்).  நம் புராதன கதைகளில் வர்ணிக்கப்பட்டது போலவும், சில தந்திரங்கள் நிறைந்த திரைப்படங்களிலும் பார்த்திருப்போமே அது போலவும் ஒர் அற்புதமான அமைப்பு அது. பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று. இப்படியும் ஒரு கட்டுமானம் இருக்க முடியுமா? இதுவும் மனிதனால் சாத்தியமா, இது பூமியா, இல்லை இந்திர லோகமா? என்று ஆச்சரியப்பட வைத்த ஒரு மரக் கோவில்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான ஆச்சரியங்களையும், அற்புதங்களையும் கலந்து ஒரு புது வடிவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்கோவில்.

‘உண்மையின் சரணாலயம்’ இந்தப்பெயர் அதற்கு முற்றிலும் தகும். கலைத்திறனுக்கும், கற்பனை வளத்திற்கும் நம்மை முற்றிலும் சரணடைய வைக்கும் இடம். ஒரு பக்கம் அழகான கடற்கரை. மற்றொரு பக்கம் சற்று உயர்ந்த மரங்களடர்ந்த சோலை, இடையில் இந்த சரணாலயம். அந்தி சாயும் சூரியனின் கிரணங்களினால் குளிப்பாட்டப்பட்டு, கடல் அலைகளினால் தாலாட்டப்பட்டு, சோலைத் தென்றலால் வருடப்பட்டு, ஆகா நாம் இங்கேயே இருந்து விட மாட்டோமா, அங்கு வடித்திருக்கும் தேவர்களுடன் ஐக்கியமாகி விட மாட்டோமா என்று எண்ணத் தோண்றும்.

அப்படித் தங்கி விட்டால், புத்தருடன் புதிர் விளையாட்டு விளையாடலாம், புத்த துறவிகளுடன் வாதம் புரியலாம், கிருஷ்ணருடன் கொஞ்சி விளையாடலாம், சிவனை சீண்டிப் பார்க்கலாம், நாராயணனை நலம் விசாரிக்கலாம், பிரம்மாவிடம் பாடம் கேட்கலாம், பஞ்ச பூதங்களுடன் பல்லாங்குழி ஆடலாம், நர்த்தகிகளுடன் நடனம் புரியலாம், தேவர்களுடன் ஒடிப்பிடித்து விளையாடலாம், குதிரைகளில் ஏறி சீறிப் பாயலாம், யானைகளில் பவனி வரலாம். அப்படி, மரத்தினாலான சிற்பங்கள் ஒவ்வொன்றும், உயிருள்ளவை போலத் தோன்றும்.

சற்றுக் களைப்படைந்து கால்நீட்டி அந்த மரத்தரையில் சாய்ந்து உச்சி முகட்டைப் பார்த்தால், அந்த மரச் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த அந்த சிற்பிகளின் கைகளுக்கு தங்கக் காப்பு அணிவிக்கத்தான் தோன்றும்.

DSC00513

 DSC00514 DSC00516 DSC00517 DSC00520

DSC00524 DSC00526

DSC00528 DSC00533 DSC00554DSC00551

 

கிழக்கு ஆசியாவின் மதங்களை சங்கமிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது இக்கோவில். 1981 ல் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 5 லிருந்து 8 வருடம் ஆகும் என்கிறார்கள், இதைக் கட்டை முடிக்க. அஸ்திவாரம் வரைக்கும்தான் இரும்பும் சிமெண்ட்டும். அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் முழுவதும் முழுக்க முழுக்க மரத்தினாலேயே செதுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தேக்கு மரங்கள். சிற்பங்கள் அருகிலுள்ள தொழிற்கூடத்தில் சிற்பிகளால் செதுக்கப்பட்டு பின்னர் கோவிலில் பொருத்தப்படுகின்ரன. சுமார் 100க்கும் மேற்பட்ட சிற்பிகள் வேலை செய்து வருகிறார்கள். இதற்கு கருத்து வடிவம் கொடுத்து செயல்களை ஆரம்பித்தவர் திரு. குன் லெக் என்கிற கோடீஸ்வரர். சில வருடங்களுக்கு முன் அவர் இயற்கை எய்தினாலும், கோவில் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன.

இந்திய, சீன, தாய் மற்றும் கேமர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு வாயில்களும் ஒவ்வொரு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வாயில் இந்திய, இந்து கலாச்சாரத்தையும், இன்னொரு வாயில் சீன புத்த கலாசாரத்தையும், மூன்றாவது வாயில் லாவோஸ், கம்போடியா கலாச்சாரத்தையும், பிரதான வாயில் தாய் கலாச்சாரத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

இக்கோவிலின் முக்கிய நோக்கமே, மேற்கத்திய கலாசாரமும், தொழில் நுட்பமும் நம்மை ஆக்கிரமித்து, நம் கலாசாரத்தையும், ஆன்மீக வழிமுறைகளையும், நற்பண்புகளையும் சீரழித்து வருவதை தடுத்து, வரும் சந்ததியினருக்கு அதை உணர்த்தவே என்கிறார்கள்.

உண்மையின் சரணாலயம் இயற்கையின் ஏழு படைப்பாளிகளை பிரதிபலிக்கிறது. வெளி, பூமி, தாய், தகப்பன், சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களே அவை.

மிக உயரமான மத்திய கோபுரத்தின் உயரம் 105 மீட்டர். அதன் உச்சியில் கல்கி பகவான் குதிரையின் மீது இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. புத்த சமயப்படி கல்கி, புத்தரின் ஐந்தாவது கடைசி அவதாரமாம்.

ஒரு வாயிலில் தாய், தந்தையருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அழகாக சிற்பங்களினால் செதுக்கியுள்ளார்கள். சயனத்தில் இருக்கும் விஷ்ணுவும், நர்த்தனம் புரியும் சிவனும், நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனங்களின் மீதிலும், கிருஷ்ணாவதார சிருங்கார காட்சிகளும், மகிஷாசுர மர்த்தினியின் சிலையும், மஹாயான போதித்துவத்தை பிரதிபலிக்கும் காட்சிகளும் மிகவும் அழகாக உள் மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பிரம்மாவிற்காக ஒரு தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அங்குலமும், மரச் சிற்பங்களால் நிரப்பப் பட்டுள்ளது.

நாம் கற்களில் வடிக்கப்பட்ட சிலைகளை இந்தியாவில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் மரத்தில் இவ்வளவு தத்ரூபமாக வேறு எங்கும் வடித்ததில்லை. கைத்திறனுக்கும், கலைத்திறனுக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டு. உலக அதிசயங்களில் முதன்மையான ஒன்றாக பாவிக்கப்பட வேண்டியதிற்கான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கலைக்கூடம்.

ஏனே தெரியவில்லை, இன்னும் இது அமைக்கப்பட்ட சுற்றுலாக்களில் (oraganized tours) இது இடம் பெறவில்லை. பாட்டையா சென்று, இதைப் பார்க்காமல் திரும்பினால், பாட்டையா சென்ற பயனே இல்லை.

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

2 comments:

வடுவூர் குமார் said...

சோனி கேமிராவில் படங்கள் நன்றாக வந்துள்ளது.

பாச மலர் / Paasa Malar said...

பட்டாயா சென்று பலனில்லாமல் தான் போய்விட்டது..இதைப் பார்க்கத் தவறி விட்டோம்..உங்கள் படங்கள் அருமை.