Monday, July 23, 2007

பணக்காரர்களிடம் அதிக வரி வசூல் செய்வது எப்படி?

பணக்காரர்களிடம் அதிக வரி வசூல் செய்வது எப்படி?

 

"பணக்காரர்கள் அதிகம் வரி செலுத்துவதில்லை" இதை சொல்வது உலகில் மூண்றாவது பணக்காரராக விளங்கும், வாரன் புஃவே. முதலீட்டாளர்களின் குரு என்று அழைக்கப்படுகிறவர். அவர் கணக்குப்படி, மிக அதிகப் பணக்காரர்கள் இன்னும் அதிக வரி செலுத்தலாம்/ செலுத்துவார்கள், ஆனால் அரசாங்களுக்குத்தான் அதை வசூலிக்கத் தெரியவில்லை.

 

வியாபாரத் தத்துவங்களின் படி எல்லாமே ஒரு ஒப்பந்தம்தான். நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு எதைத் தருவாய்? என்பதுதான். அரசாங்கங்கள் வெறும் வரி மட்டும் விதித்தால், எவ்வளவு பெரிய பணக்காரனும் சற்று யோசிக்கத்தான் செய்வான். கொடுக்கல் வாங்கல் விதிப்படி அரசாங்கம் செயல் பட்டால், இன்னும் நிறைய வரிகளை வசூலிக்கலாம்.

 

இதைப் படித்தவுடன், என்னோட குதர்க்கப் புத்திக்கு சில வழிமுறைகள் புலப்பட்டன. பணக்காரர்களுக்கு பொதுவாகவே 'தான்' என்கிற ஒரு இறுமாப்பு இருக்கும். அந்த இறுமாப்புக்கு தீனி போடுகிற மாதிரி காரியங்கள் (பொது நலனை உத்தேசித்து) செய்தால், 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' மாதிரி எல்லோருக்கும் நலன் கிடைக்கும்.

 

திட்டம் # 1 : அவர் ஒரு நாள் கௌவுரவ பிரதம மந்திரியாக இருக்கலாம். நிர்வாக நடவடிக்கைகளை நிஜ பிரதம மந்திரி பார்த்துக் கொள்வார். கௌவுரவ பிரதம மந்திரி விழாக்களுக்கு போய் தலைமை தாங்கலாம். பாதுகாப்பு மற்றும் பிர வசதிகளையும் அனுபவிக்கலாம். ஒரு தடவைக்கு இத்தனை கோடி ரூபாய்ன்னு ரேட் பிஃக்ஸ் பண்ணிடலாம். (ஆனா முதல்வன் மாதிரி ஆயிடக்கூடாது).

 

திட்டம் # 2 : ஜனாதிபதி மாளிகையிலேதான் அவ்வளவு அறைகள் இருக்கே. அதனாலே அங்கே ஒரு நாள் தங்கி சகல சௌகரியங்களையும் அனுபவித்து வர, ஒரு நாளைக்கு இவ்வளவு என்று ரேட் நிர்ணயம் செய்து வைத்து விடலாம்.

 

திட்டம் # 3 : பாரத் ரத்னா போன்ற தேசிய விருதுகள் வழங்கலாம். லார்டு, சர், ஏர்ல், னைட் போன்ற பட்டங்களை இங்கிலாந்தில் வழங்குகிற மாதிரி, மிகப் பெரிய பணக்காரர்களுக்கு Lord of the riches, Money maker என்று பட்டங்கள் வழங்கலாம். ஒவ்வொரு பட்டதுக்கும் ஒரு விலை. முதல்லே கீழே ஆரம்பிச்சு அப்புறம் மேலே மேலே போகலாம். ஒவ்வொரு அப்கிரேடுக்கும் ஒரு விலை.

 

திட்டம் # 4 : ஸ்பெஷல் லாட்டரி திட்டம் ஒன்னு ஆரம்பிக்கலாம். அதிலே யாருக்கு முதல் பரிசு விழுதோ அவங்களுக்கு, அந்த தொகைக்கு சமமான வரி விலக்கு அளிக்கலாம்.

 

திட்டம் # 5 : தொடர் வண்டி(ரயில்) களுக்கு அவர்கள் பெயர் சூட்டும் திட்டம். அந்த தொடர் வண்டிகள் அந்த பணக்காரர்களின் பெயரிலேயே ஒரு வருடத்திற்கு அழைக்கப்படும். "சென்னை- தில்லி ஜிடி 'அனில் அம்பானி' துரித வண்டி" இதன் விலை அந்த தொடர் வண்டியின் வழித்தடம், தூரம், கிராக்கியைப் பொருத்து அமைக்கப்படும்.

 

திட்டம் # 6 : இதே போல நெடுஞ்சாலைகளையும் அவர்கள் பேரில் அழைக்கலாம். NH 8 தில்லி-மும்பாய் தேசிய 'லக்ஷ்மி மித்தல்' நெடுஞ்சாலை. இதன் விலை ஒரு கிலோ மீட்டருக்கு, வாகன போக்குவரத்து அடர்த்தியை பொருத்து அமையும்.

 

திட்டம் # 7 : ஸ்பான்சர்ஷிப் திட்டங்கள். நாட்டில்  அரசாங்கத்தால் நடத்தப்படும் பெரிய நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திட்டங்களுக்கோ ஸ்பான்சர்ஷிப் வழங்குதல். உதாரணமாக, தேர்தல்கள். ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று முடிவு செய்தோ அல்லது, மிக அதிக ஏலம் எடுக்கும் பணக்காரருக்கோ உரிமையை வழங்கலாம். அந்த தொகுதியில் ஒட்டப்படும் விளம்பரங்கள், வாக்குச் சீட்டு ஆகியவற்றில் எல்லாம், அவர் பெயர் விளம்பரபடுத்தப்படும்.

 

அதே போல பார்லிமெண்ட்டில் நடத்தப்படும், முக்கிய விவாதங்களுக்கும் ஸ்பான்சர்ஷிப் வழங்கலாம். (எனக்கு 1992 ல் நடந்த வளைகுடாப் போரே CNNஆல் ஸ்பான்சர் செய்யப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் கூட உண்டு).

 

பட்ஜெட் தொடரை ஆரம்பித்து வைத்தல் (இப்போ லார்ட்ஸ் மைதானத்தில் தினமும் ஒருத்தர் மணி அடிச்சு கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கி வைக்கிறாரே, அது போல),  தொடருக்கு முன் நிதி மந்திரியுடன் விருந்து போன்ற சலுகைகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஏற்பாடு செய்யலாம்.

 

திட்டம் # 8 : MLA, MP இவங்களுக்கு ஸ்பான்சர்ஸ் பேர் போட்ட ஒரு ஸ்வெட்டர் கொடுக்கலாம். இதுலே இன்னொரு நல்லதும் நடக்கும். அவங்க ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் சபையிலே ஸ்வெட்டர போட்டுகிட்டு இருக்காங்களோ, அவ்வளவு நேரத்துக்கு ஒரு மணிக்கு இவ்வளவு சன்மானம் கிடக்கும் ன்னு சொன்னா, வந்து வெறும் கையெழுத்துப் போட்டுட்டுப் போறவங்க உள்ளே வந்து உட்கார்ந்திருக்க மாட்டாங்க?

 

திட்டம் # 9 : சிறப்புத் தபால் தலை வெளியிடலாம். இத்தனாயிரம் ஸ்டாம்புக்கு இத்தனை ரூபாய்ன்னு ரேட் வச்சுடலாம்.

 

திட்டம் # 10 : சில சட்டங்களிருந்து விதி விலக்கு அளிக்கலாம். உதாரணமாக,

·         காரில் சிறப்பு விளக்கு பொருத்த அனுமதி,

·         வித்தியாசமான கலர்லே நம்பர் ப்ளேட் (வெள்ளையிலே கருப்பும், கருப்பிலே வெள்ளைன்னும் இல்லாமே),

·         கார் சீட் பெல்ட், அவங்க புள்ளங்க ஹெல்மேட் போட வேண்டாம்,

·         எங்க வேணுமின்னாலும் பார்க் செய்யலாம்,

·         அவர்கள் குழந்தைகளுக்கு IIM, IIT லே நேரடி அனுமதி (எவ்வளவு மார்க்காயிருந்தாலும்),

·         அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த தேர்தலிலும், 5 ஓட்டுக்கள் போட அனுமதி

·         அவர்கள் எவ்வளவு மனைவிகள் / கணவர்களுடனும் சட்ட பூர்வமாக வாழலாம் ( அவங்களுக்குத்தான் பணம் இருக்கே), ஒவ்வொரு திருமணத்திற்கும் இவ்வளவு என்று ரேட்.



Got a little couch potato?
Check out fun summer activities for kids.

No comments: