Saturday, July 07, 2007

தினமும் 5 விவசாயிகள் தற்கொலை

தினப் பத்திரிக்கையில் படித்த நெஞ்சை உறைய வைக்கும் செய்தி. "கடந்த 6 வருடங்களில் (2001 2006) ஏறத்தாழ 11,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்". அதாவது 5க்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தீவிர வாதிகள் செய்யும் கொலைகளுக்கு ஒப்பாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கின்ற கோஷங்களெல்லாம் வெறும் மேடைப்பேச்சுகள் தான். அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்பதிற்கும், அதிகாரிகள் மேடைகளில் முழங்குவதற்கும் மட்டுமே.


வருடா வருடம் இந்த என்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. மகாராஷ்டிராவில் 50(2001), 122(2002), 170(2003), 620(2004), 572(2005), 746(2006) பேர் இறந்திருக்கிறார்கள். இதில் வேதனை தரும் விடயம் என்னவென்றால், பிரதம மந்திரியின் விதர்பா வருகைக்குப்பிறகு (30-6-2006) சாவு இன்னும் அதிகரித்துதான், ஜுலை 2 முதல் ஆகஸ்டு 20 வரைக்குள் 150க்கும் மேலானாவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மந்திரிகளின் வருகைகள் எல்லாம் வெறும் கண் துடைப்புதான், அதிகாரிகளின் செயல் பாடுகளில் எந்தவித மாற்றம் இல்லை என்றுதானே? பின் எதற்கு வருகையும், நீலித்தனமான ஆறுதல் வார்த்தைகளும். நடப்பது என்ன அரசாங்கமா இல்லை வேறு ஏதாவதா? இவ்வாறான தற்கொலைகள் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வில் அதிக அளவில் நடந்தேறியுள்ளனன.

இவர்களின் சாவிற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?

வரட்சியா? அதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், நிலைமை அறிக்கைகள் தரும் காரணங்களை அறிந்தால், உங்களுக்கு கண்ணீர் வராது, இரத்தம்தான் வடியும்.

· விவசாயக் கடன் முற்றும் விவசாயப் பொறுளாதாரங்கள் முற்றிலும் குலைந்து போய் விட்டனவாம்.

· இடுபொருட்களின் விலைகள், சிறு விவசாயிகளின் கை மீறிப்போய் விட்டன.

· உணவு தானியங்களிருந்து (food crops), வணிக தானியங்களுக்கு (cash crops) மாறியதில் மெரும்பாலான விவசாயிக்களுக்கு மரண அடிதான் மிச்சம். அதிக பண முதலீடு, அதிக தண்ணீர் மற்றும் இடு பொருள் தேவை, அதிக மின்கட்டணம் ஆகியவைதான் காரணம்.

· வாங்கும் திறனும் குறைந்த நிலையில், வேலை வாய்ப்பு வசதிகளும் சுருங்கிய நிலையில் அவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்? ஆந்திராவின் தொலை(ந்த) நோக்கு பார்வை 40 விழுக்காடு விவசாயிகளை வேலை இழக்கச் செய்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.

· தேவையான தருணத்தில் வழங்கப்படாத கடனுதவிகள், தண்ணீர் தேடி செலவிட்ட அபாரமான தொகை, தொடர்ந்து விவசாய நலிவு, இதனால் ஏற்பட்ட உடல்நல சுகமின்மை, அதற்கான மருத்துவ செலவுகள் என அடி மேல் அடியென மீளாக்கடன்களில் மாட்டி, சந்தை விலைக்கு கீழ் விற்கும் நிலைமை, உடமைகளை விற்கும் நிலைமை என தற்கொலை செய்து கொண்டவர்கள் தான் அதிகம்.

வறட்சியும், விளைச்சலின்மை மட்டுமே தற்கொலைகளுக்கு காரணமல்ல. மீளாக்கடன்சுமைகள் மட்டுமே பிரதான காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிக அளவில் ஊடூறிய வியாபார நோக்குத்தான் இவை அனைத்திற்கும் காரணம் என Madras Institute of Development Studies ஐ சார்ந்த பேராசிரியர் கே நாகராஜ் கூறுகிறார்.

இந்த விதமான அசம்பாவிதமான நிகழ்வுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட சில வழிகள்:

1. அரசாங்க அதிகாரிகளுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை உணர்வு பூரணமான நிலையில் அதிகப்படுத்துதல்.

2. சமுதாய, பொருளாதார மற்றும் மனரீதியான கஷ்டங்களை கண்காணித்து அவைகளை நிவர்த்திக்க ஆலோசனகளை வழங்குதல்.

3. குறைந்த பட்ச ஊதிய சட்டம், கடன் சட்டங்கள் போன்றவற்றை தீவிரமாக அமல் படுத்தி, மீறியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குதல்.

4. விவசாயிகளுக்கு வேளான்மை மேம்படுத்தக்கூடிய வழி முறைகளை இன்னும் அதிக அளவில் அறியப்படுத்துதல்.

5. ஆரம்ப சுகாதார வசதிகள், கல்வியறிவு, தொழிற்கல்வியறிவு போன்றவற்றை அதிகரித்தல்.

6. முக்கியமாக, தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உதவித் தொகையை நிறுத்துதல். இதுவே சில சமயங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கிறது ('உயிர் கொடுத்து, உயிர் வளர்த்தல்'). மாறாக, அக்குடும்பத்தில் உள்ளோற்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் வாழ்க்கையை அமத்திக்கொள்ள வழி வகுக்க வேண்டும்.

7. மான்யம் அளிக்கும் முறையை மறு பரிசீலிக்க வேண்டும். மான்யங்கள் விவசாயிகளுக்கு போய் சேருவதேயில்லை. இடைத்தரகர்களுக்கும், விவசாய இடுபொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பல சமயம் உதவி செய்கின்றது.

இவை அனைத்தையும் அரசாங்கம் தலையிட்டால் நிச்சயம் தீர்க்க முடியும். இதற்குத்தேவை தொலை நோக்குப் பார்வை மற்றும் திடமான கொள்கை ரீதியான அணுகு முறை. தேர்தல் காலங்களில் மட்டும் தொகுதிப்பக்கம் தலை காட்டி, எந்த பெருந்தன முதலாளிகளுடன் ஒப்பந்தம் போட்டால் எவ்வளவு விழுக்காடு பணம் வாங்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு இவர்களின் நிலை எங்கு புரியப்போகிறது? எதிர்க்கட்சிக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல இன்னுமொறு காரணம், அல்லது புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்கு பழைய கட்சியை விமரிசிக்க ஒரு காரணம், அவ்வளவுதான்.

No comments: