Monday, July 30, 2007

"திருடினது யாருன்னு ஆதாரத்தோட சொன்னா, நாங்க உடனே புடிச்சுக்கொடுக்கிறோம்"

"எந்தெந்த அரசியல் வாதிகளின் கைகளில் அரசு நிலங்கள் சிக்கியுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் தெரிவித்தால் அவற்றை கைப்பற்ற அரசு தயாராக உள்ளது" என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
சில நாட்கள் முன், "எந்தெந்த கல்லூரிகள் அதிக நிதி வசூல் செய்கின்றன என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று மருத்துவர் ராமதாசுவிற்கு பதில் அளித்தார்.
 
இனிமே நாம போலீஸ் ஸ்டேஷன்லே போய் ஏதாவது திருட்டுப் புகார் கொடுத்தா, அங்கே இருக்கிற காவல் அதிகாரிகளும் "திருடினது  யாருன்னு  ஆதாரத்தோட  சொன்னா, நாங்க உடனே புடிச்சுக்கொடுக்கிறோம்" ன்னு சொல்லப் போறாங்க...
 
இன்னும் எந்தெந்த மாதிரியான அறிவிப்புகளைப்  பார்க்கப்  போகிறோமோ  தெரியவில்லை.  


Pinpoint customers who are looking for what you sell.

Monday, July 23, 2007

பணக்காரர்களிடம் அதிக வரி வசூல் செய்வது எப்படி?

பணக்காரர்களிடம் அதிக வரி வசூல் செய்வது எப்படி?

 

"பணக்காரர்கள் அதிகம் வரி செலுத்துவதில்லை" இதை சொல்வது உலகில் மூண்றாவது பணக்காரராக விளங்கும், வாரன் புஃவே. முதலீட்டாளர்களின் குரு என்று அழைக்கப்படுகிறவர். அவர் கணக்குப்படி, மிக அதிகப் பணக்காரர்கள் இன்னும் அதிக வரி செலுத்தலாம்/ செலுத்துவார்கள், ஆனால் அரசாங்களுக்குத்தான் அதை வசூலிக்கத் தெரியவில்லை.

 

வியாபாரத் தத்துவங்களின் படி எல்லாமே ஒரு ஒப்பந்தம்தான். நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு எதைத் தருவாய்? என்பதுதான். அரசாங்கங்கள் வெறும் வரி மட்டும் விதித்தால், எவ்வளவு பெரிய பணக்காரனும் சற்று யோசிக்கத்தான் செய்வான். கொடுக்கல் வாங்கல் விதிப்படி அரசாங்கம் செயல் பட்டால், இன்னும் நிறைய வரிகளை வசூலிக்கலாம்.

 

இதைப் படித்தவுடன், என்னோட குதர்க்கப் புத்திக்கு சில வழிமுறைகள் புலப்பட்டன. பணக்காரர்களுக்கு பொதுவாகவே 'தான்' என்கிற ஒரு இறுமாப்பு இருக்கும். அந்த இறுமாப்புக்கு தீனி போடுகிற மாதிரி காரியங்கள் (பொது நலனை உத்தேசித்து) செய்தால், 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' மாதிரி எல்லோருக்கும் நலன் கிடைக்கும்.

 

திட்டம் # 1 : அவர் ஒரு நாள் கௌவுரவ பிரதம மந்திரியாக இருக்கலாம். நிர்வாக நடவடிக்கைகளை நிஜ பிரதம மந்திரி பார்த்துக் கொள்வார். கௌவுரவ பிரதம மந்திரி விழாக்களுக்கு போய் தலைமை தாங்கலாம். பாதுகாப்பு மற்றும் பிர வசதிகளையும் அனுபவிக்கலாம். ஒரு தடவைக்கு இத்தனை கோடி ரூபாய்ன்னு ரேட் பிஃக்ஸ் பண்ணிடலாம். (ஆனா முதல்வன் மாதிரி ஆயிடக்கூடாது).

 

திட்டம் # 2 : ஜனாதிபதி மாளிகையிலேதான் அவ்வளவு அறைகள் இருக்கே. அதனாலே அங்கே ஒரு நாள் தங்கி சகல சௌகரியங்களையும் அனுபவித்து வர, ஒரு நாளைக்கு இவ்வளவு என்று ரேட் நிர்ணயம் செய்து வைத்து விடலாம்.

 

திட்டம் # 3 : பாரத் ரத்னா போன்ற தேசிய விருதுகள் வழங்கலாம். லார்டு, சர், ஏர்ல், னைட் போன்ற பட்டங்களை இங்கிலாந்தில் வழங்குகிற மாதிரி, மிகப் பெரிய பணக்காரர்களுக்கு Lord of the riches, Money maker என்று பட்டங்கள் வழங்கலாம். ஒவ்வொரு பட்டதுக்கும் ஒரு விலை. முதல்லே கீழே ஆரம்பிச்சு அப்புறம் மேலே மேலே போகலாம். ஒவ்வொரு அப்கிரேடுக்கும் ஒரு விலை.

 

திட்டம் # 4 : ஸ்பெஷல் லாட்டரி திட்டம் ஒன்னு ஆரம்பிக்கலாம். அதிலே யாருக்கு முதல் பரிசு விழுதோ அவங்களுக்கு, அந்த தொகைக்கு சமமான வரி விலக்கு அளிக்கலாம்.

 

திட்டம் # 5 : தொடர் வண்டி(ரயில்) களுக்கு அவர்கள் பெயர் சூட்டும் திட்டம். அந்த தொடர் வண்டிகள் அந்த பணக்காரர்களின் பெயரிலேயே ஒரு வருடத்திற்கு அழைக்கப்படும். "சென்னை- தில்லி ஜிடி 'அனில் அம்பானி' துரித வண்டி" இதன் விலை அந்த தொடர் வண்டியின் வழித்தடம், தூரம், கிராக்கியைப் பொருத்து அமைக்கப்படும்.

 

திட்டம் # 6 : இதே போல நெடுஞ்சாலைகளையும் அவர்கள் பேரில் அழைக்கலாம். NH 8 தில்லி-மும்பாய் தேசிய 'லக்ஷ்மி மித்தல்' நெடுஞ்சாலை. இதன் விலை ஒரு கிலோ மீட்டருக்கு, வாகன போக்குவரத்து அடர்த்தியை பொருத்து அமையும்.

 

திட்டம் # 7 : ஸ்பான்சர்ஷிப் திட்டங்கள். நாட்டில்  அரசாங்கத்தால் நடத்தப்படும் பெரிய நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திட்டங்களுக்கோ ஸ்பான்சர்ஷிப் வழங்குதல். உதாரணமாக, தேர்தல்கள். ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று முடிவு செய்தோ அல்லது, மிக அதிக ஏலம் எடுக்கும் பணக்காரருக்கோ உரிமையை வழங்கலாம். அந்த தொகுதியில் ஒட்டப்படும் விளம்பரங்கள், வாக்குச் சீட்டு ஆகியவற்றில் எல்லாம், அவர் பெயர் விளம்பரபடுத்தப்படும்.

 

அதே போல பார்லிமெண்ட்டில் நடத்தப்படும், முக்கிய விவாதங்களுக்கும் ஸ்பான்சர்ஷிப் வழங்கலாம். (எனக்கு 1992 ல் நடந்த வளைகுடாப் போரே CNNஆல் ஸ்பான்சர் செய்யப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் கூட உண்டு).

 

பட்ஜெட் தொடரை ஆரம்பித்து வைத்தல் (இப்போ லார்ட்ஸ் மைதானத்தில் தினமும் ஒருத்தர் மணி அடிச்சு கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கி வைக்கிறாரே, அது போல),  தொடருக்கு முன் நிதி மந்திரியுடன் விருந்து போன்ற சலுகைகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஏற்பாடு செய்யலாம்.

 

திட்டம் # 8 : MLA, MP இவங்களுக்கு ஸ்பான்சர்ஸ் பேர் போட்ட ஒரு ஸ்வெட்டர் கொடுக்கலாம். இதுலே இன்னொரு நல்லதும் நடக்கும். அவங்க ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் சபையிலே ஸ்வெட்டர போட்டுகிட்டு இருக்காங்களோ, அவ்வளவு நேரத்துக்கு ஒரு மணிக்கு இவ்வளவு சன்மானம் கிடக்கும் ன்னு சொன்னா, வந்து வெறும் கையெழுத்துப் போட்டுட்டுப் போறவங்க உள்ளே வந்து உட்கார்ந்திருக்க மாட்டாங்க?

 

திட்டம் # 9 : சிறப்புத் தபால் தலை வெளியிடலாம். இத்தனாயிரம் ஸ்டாம்புக்கு இத்தனை ரூபாய்ன்னு ரேட் வச்சுடலாம்.

 

திட்டம் # 10 : சில சட்டங்களிருந்து விதி விலக்கு அளிக்கலாம். உதாரணமாக,

·         காரில் சிறப்பு விளக்கு பொருத்த அனுமதி,

·         வித்தியாசமான கலர்லே நம்பர் ப்ளேட் (வெள்ளையிலே கருப்பும், கருப்பிலே வெள்ளைன்னும் இல்லாமே),

·         கார் சீட் பெல்ட், அவங்க புள்ளங்க ஹெல்மேட் போட வேண்டாம்,

·         எங்க வேணுமின்னாலும் பார்க் செய்யலாம்,

·         அவர்கள் குழந்தைகளுக்கு IIM, IIT லே நேரடி அனுமதி (எவ்வளவு மார்க்காயிருந்தாலும்),

·         அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த தேர்தலிலும், 5 ஓட்டுக்கள் போட அனுமதி

·         அவர்கள் எவ்வளவு மனைவிகள் / கணவர்களுடனும் சட்ட பூர்வமாக வாழலாம் ( அவங்களுக்குத்தான் பணம் இருக்கே), ஒவ்வொரு திருமணத்திற்கும் இவ்வளவு என்று ரேட்.



Got a little couch potato?
Check out fun summer activities for kids.

இப்படியும் ஒரு மனிதர் .. கலாம்!!!

பாலி நரிமன் எழுதிய கட்டுரையிலிருந்து:

மே, 2006ல் கலாமின் உறவினர்கள் தில்லிப் பட்டினம் சுற்றிப் பார்க்க சென்றார்கள். மொத்தம் 53 பேர். அவர்களை இரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதிலிருந்து திரும்பி செல்லும் வரை அவர்களின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்ளுமாறு, உதவியாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம், அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கு ( உறவினர்கள் தங்கிய அறைகளுக்கு வாடகை,  உணவு வகைகளுக்கான நேரடி செலவுகள், போக்கு வரத்து செலவுகள் போன்றவை)  தனிக்கணக்கு வைத்துக்கொள்ளுமாறு, அன்றாட வரவு செலவு பார்க்கும் அதிகாரியிடம் கூறியிருந்தார்.

உறவினர்கள் விடை பெற்று சென்றதும் அந்த செலவினங்களின் தொகையை (ரூபாய் 3,54,924)  தன் சொந்த கணக்கிலிருந்து கட்டினார். உறவினர்களின் போக்கு வரத்திற்கு ராஷ்டிரபதி பவனின் வாகனங்கள் ஒன்று கூட உபயோகப்படுத்தப் படவில்லை.

இது பற்றிய விவரங்களை வெளியில் சொல்லக்கூடாதென்றும் ஊழியர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்போது விடை பெற்று செல்லும் போதும் சிறிய இரண்டு பெட்டிகள் (இந்த பெட்டிகள் நிச்சயமாக  'அந்த பெட்டிகள்' அல்ல) மட்டும்தான் எடுத்துப்போகப் போகிறார்.
 
ம்ஹும்......இப்படியும் ஒரு மனிதர்...


Got a little couch potato?
Check out fun summer activities for kids.

Thursday, July 19, 2007

அ இ அ தி மு க, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளீப்பது நல்லது, ஏன்?

அ இ அ தி மு க, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டாலும் போடலாம். சற்றுமுன் (இந்திய நேரம் 10:12 காலை) NDTV யில் கேட்டது. எல்லா MLA க்களும் சட்டசபையின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த முடிவு இரண்டு விதத்தில் நல்லது. ஜனநாயக முறைக்கு மதிப்பளிப்பது என்பது முதல் நல்லது.

அப்படி ஓட்டு போடலன்னா, எல்லா தேர்தல் போலவும், இதிலேயும் வேற யாராவது வந்து இவங்க ஓட்டை பிரதிபா பாட்டிலுக்கு குத்திட்டா அப்பறம் என்ன பன்றது? அப்படி எதுவும் நடக்காம இருக்கறது இரண்டாவது நல்லது.

Wednesday, July 18, 2007

தலைவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

தலைவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

நாம தேர்ந்தெடுக்கற ஜனாதிபதியோ, துணை ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ, முதன் மந்திரியோ இல்ல பிற தலைவருங்களோ எப்படி இருக்கணும்கறத்துக்கு, நமக்கு நாமே சில ரூல்ஸ் போட்டு வச்சிக்கணும். அப்பத்தான் நாம செலக்ட் செய்யற தலைவருங்களை நமக்கும் புடிக்கும், நம்ம பொழுதும் குஜாலா போவும்.

இப்போ பாருங்க நம்ம ரூல்ஸ ::

தலைவருங்கள நாம டிவியில, பத்திரிக்கையில இல்ல நேரில அடிக்கடி பாப்பமா?

அப்போ நாம பாக்க வேண்டியதெல்லாம், எலீக்ஷனுக்கு நிக்கறவங்க கண்ணுக்கு லட்சணமா, ஸ்டைலா இருக்காங்களான்னு மட்டுந்தான். அழுது வடியற மூஞ்சிய தினம், தினம் காலையில பார்த்திட்டு போனா, நாம போற வேல ஆவுமா? மந்த்ரா, ஐஸு, பிபாஷா, மல்லிகா, மும்தாஜ் கணக்கா லீடர்ஸ் இருந்தா, காலைலே டிவிலே ஒரு பேட்டியப் பாத்துட்டு வேலக்குப் போனா, சும்மா அன்னிக்கு முச்சுடூம் ரவுண்டு கட்டி அடிப்போம்ல. சரி இது ஆம்புளங்களுக்கு. சாருக், சல்மான், மேடி (அதாங்க மாதவன்), விஜய் கணக்கா இர்ந்தா பொம்பளங்களுக்கு சரியாவுந்தானே? ரெண்டு பேருக்கும் சரியாவுனும்னா, ரஜனி, அமிதாப் கணக்கா இருந்தாப்போரும்.


ஜனாதிபதி பதவிக்கு வரவங்களுக்கு அப்படியெல்லாம் வானாம். நாம அவர வெளி நாடு போக சொல்ல பாப்பம், இல்லே வெளி நாட்லேர்ந்து பெரிய தலீவருங்க வரும் போது பாப்பம். அதுனாலே யார் வேணும்னா வந்துட்டுப் போவட்டும்.

சபாநாயகரு பதவிக்கு வரவுங்க எப்படி இருக்கணும்?

சபாநாயகரு யாருங்க? சபைக்கு தலீவரு இல்லீங்களா? அவரு எப்படி கெத்தா, மொட்ட பாஸ் கணக்கா இருக்கனும். சும்மா சோம்நாத் சாட்டர்ஜி மாதிரி, ப்ளீஸ், சிட் டவுன், லிஸன் டு மீ ன்னு அழுவாத குறையா அப்பீலு வுட்டுக்கினு, சபைய தள்ளி வச்சுட்டு உக்காந்தா போதுமா? அந்த எடத்லே நம்ம அம்ரீஷ் புரியையோ, நம்பியாரையோ வச்சு பாருங்க. லாங் கோட்டு, ஷெர்வானி ஸ்டைல்லே ட்ரஸ் போட்டுக்கினு அதுலே கோல்டு கலர்லே கயறு, தோள்லே ஸ்டார் எல்லாம் வச்சு தெச்சு, கையிலே ஒரு சின்ன கம்புன்னு எப்படி பட்டையை கிளப்பியிருப்பாங்க. ஒரு பய எழுந்து நின்னு கூவ முடியுமா? ஒரு பட்டன தட்டினா அவன் சேர் மல்லாக்க கவுந்து, கீழ தர பொளந்து உள்ள போயிட மாட்டான்? லோக்சபாவுலே எதுக்குங்க அத்தினி தலீவருங்க படம்? ஒவ்வொரு தலீவருங்க படத்துக்கு பின்னாலேயும் ஒரு கண்ணாடி ரூம் இருக்குமில்லே. பாண்டு பட கணக்கா ஒன்னுலே சுறா மீனுங்க சுத்தி சுத்தி வரும். இன்னொன்லே விஷப் புகை, அடுத்ததுலே சிங்கம், பக்கத்லே பாம்பு அப்படின்னு இருக்குமில்லே? ரொம்ப உதார் விட்டாங்கன்னா, ஒவ்வொன்னா திறந்து காமிச்சா, அப்பீட் ஆயி கம்னு ஒக்காந்திட மாட்டாங்க. பாஜபாவெல்லம் பஞ்சர் ஆயிடாது? தூர்தர்ஷன் லோக்சபா டிவி எப்படி இருக்கும்னு பாருங்க. எவனாவது அதுக்கப்பறம் கிரிக்கெட் பாப்பாங்கிறீங்க? யோசிச்சு பார்த்தாலே சும்மா அதிருதில்லே?

தலீவருங்க பேக்ரவுண்ட் தெரியணுமா?

கண்டிப்பா தெரியோனும். பின்ன தலீவருன்னா சும்மாவா? கோதாவுல இறங்கி, வூடு கட்டி விளையாட வேணாம்? எத்தினி மர்டரு கேஸு, யார் யாரெல்லாம் பினாமி, எத்தினி கட்சிலே இர்ந்திருக்காரு, காண்ட்ராக்ட்லே எத்தினி காசு பார்த்தாரு, பேங்கெல்லாம் கவுத்தாரான்னு பாக்கத்தாவல? நின்னு ஸ்டெடியா ஆட இத்தினி எஸ்பீரியன்ஸு வாணாம்? பின்ன என்ன கலாம் கணக்கா ஒரு பீரிடு முடிஞ்சதுமே, சலாம் போட்டுட்டு போறதா? சச்சினு கணக்கா, நச்சுன்னு ஆட வேனாம்?

அரசியல் தெரியணும்னு சொல்றீங்களா? அட போப்பா, நீ வேற. இன்னிக்கு இருக்கற எத்தன பேருக்கு தெரிஞ்சுருக்கு? எது கேட்டாலும், நீ அன்னிக்கு செய்யலியா, அவன் அன்னிக்கு செய்யலியான்னு சொல்லி, பழசயே திருப்பி திருப்பி செய்யறாங்க. இல்ல புத்சா எதுனா செஞ்சு, ஜனங்க கூப்பாடு போட்டா உடனே ஜகா வாங்கிடறாங்க. அப்பாலே எதுக்கு தனியா அரசியல் தெரியனும்? இருக்கர 5 வருஷத்லே என்னமோ சனங்களுக்கு அப்படியே பெரிசா பண்ணிட போறாங்க போங்க. மாறி மாறி, மொர வச்சுக்கினு வரப்போறானுவ. வந்து, மொதல்லே, முன்னாலே இர்ந்தவனை உள்ளே வச்சு பழி தீக்கவே 3 வர்ஷம் ஆயிடும். இதுக்குள்ளே போட்ட பணத்த எடுக்கனும். அப்பொறம் இன்னும் காசு பண்ணனும். அதுக்கொள்ற பீரியடு முடிஞ்சுடும்.

அதனாலே எந்த எலீக்ஷன் வந்தாலும், நம்ம ரூல்ஸ ஃபாலோ பண்ணி ஓட்டு போடுங்க.




Be a better Globetrotter. Get better travel answers from someone who knows.
Yahoo! Answers - Check it out.

Saturday, July 07, 2007

தினமும் 5 விவசாயிகள் தற்கொலை

தினப் பத்திரிக்கையில் படித்த நெஞ்சை உறைய வைக்கும் செய்தி. "கடந்த 6 வருடங்களில் (2001 2006) ஏறத்தாழ 11,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்". அதாவது 5க்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தீவிர வாதிகள் செய்யும் கொலைகளுக்கு ஒப்பாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கின்ற கோஷங்களெல்லாம் வெறும் மேடைப்பேச்சுகள் தான். அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்பதிற்கும், அதிகாரிகள் மேடைகளில் முழங்குவதற்கும் மட்டுமே.


வருடா வருடம் இந்த என்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. மகாராஷ்டிராவில் 50(2001), 122(2002), 170(2003), 620(2004), 572(2005), 746(2006) பேர் இறந்திருக்கிறார்கள். இதில் வேதனை தரும் விடயம் என்னவென்றால், பிரதம மந்திரியின் விதர்பா வருகைக்குப்பிறகு (30-6-2006) சாவு இன்னும் அதிகரித்துதான், ஜுலை 2 முதல் ஆகஸ்டு 20 வரைக்குள் 150க்கும் மேலானாவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மந்திரிகளின் வருகைகள் எல்லாம் வெறும் கண் துடைப்புதான், அதிகாரிகளின் செயல் பாடுகளில் எந்தவித மாற்றம் இல்லை என்றுதானே? பின் எதற்கு வருகையும், நீலித்தனமான ஆறுதல் வார்த்தைகளும். நடப்பது என்ன அரசாங்கமா இல்லை வேறு ஏதாவதா? இவ்வாறான தற்கொலைகள் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வில் அதிக அளவில் நடந்தேறியுள்ளனன.

இவர்களின் சாவிற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?

வரட்சியா? அதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், நிலைமை அறிக்கைகள் தரும் காரணங்களை அறிந்தால், உங்களுக்கு கண்ணீர் வராது, இரத்தம்தான் வடியும்.

· விவசாயக் கடன் முற்றும் விவசாயப் பொறுளாதாரங்கள் முற்றிலும் குலைந்து போய் விட்டனவாம்.

· இடுபொருட்களின் விலைகள், சிறு விவசாயிகளின் கை மீறிப்போய் விட்டன.

· உணவு தானியங்களிருந்து (food crops), வணிக தானியங்களுக்கு (cash crops) மாறியதில் மெரும்பாலான விவசாயிக்களுக்கு மரண அடிதான் மிச்சம். அதிக பண முதலீடு, அதிக தண்ணீர் மற்றும் இடு பொருள் தேவை, அதிக மின்கட்டணம் ஆகியவைதான் காரணம்.

· வாங்கும் திறனும் குறைந்த நிலையில், வேலை வாய்ப்பு வசதிகளும் சுருங்கிய நிலையில் அவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்? ஆந்திராவின் தொலை(ந்த) நோக்கு பார்வை 40 விழுக்காடு விவசாயிகளை வேலை இழக்கச் செய்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.

· தேவையான தருணத்தில் வழங்கப்படாத கடனுதவிகள், தண்ணீர் தேடி செலவிட்ட அபாரமான தொகை, தொடர்ந்து விவசாய நலிவு, இதனால் ஏற்பட்ட உடல்நல சுகமின்மை, அதற்கான மருத்துவ செலவுகள் என அடி மேல் அடியென மீளாக்கடன்களில் மாட்டி, சந்தை விலைக்கு கீழ் விற்கும் நிலைமை, உடமைகளை விற்கும் நிலைமை என தற்கொலை செய்து கொண்டவர்கள் தான் அதிகம்.

வறட்சியும், விளைச்சலின்மை மட்டுமே தற்கொலைகளுக்கு காரணமல்ல. மீளாக்கடன்சுமைகள் மட்டுமே பிரதான காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிக அளவில் ஊடூறிய வியாபார நோக்குத்தான் இவை அனைத்திற்கும் காரணம் என Madras Institute of Development Studies ஐ சார்ந்த பேராசிரியர் கே நாகராஜ் கூறுகிறார்.

இந்த விதமான அசம்பாவிதமான நிகழ்வுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட சில வழிகள்:

1. அரசாங்க அதிகாரிகளுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை உணர்வு பூரணமான நிலையில் அதிகப்படுத்துதல்.

2. சமுதாய, பொருளாதார மற்றும் மனரீதியான கஷ்டங்களை கண்காணித்து அவைகளை நிவர்த்திக்க ஆலோசனகளை வழங்குதல்.

3. குறைந்த பட்ச ஊதிய சட்டம், கடன் சட்டங்கள் போன்றவற்றை தீவிரமாக அமல் படுத்தி, மீறியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குதல்.

4. விவசாயிகளுக்கு வேளான்மை மேம்படுத்தக்கூடிய வழி முறைகளை இன்னும் அதிக அளவில் அறியப்படுத்துதல்.

5. ஆரம்ப சுகாதார வசதிகள், கல்வியறிவு, தொழிற்கல்வியறிவு போன்றவற்றை அதிகரித்தல்.

6. முக்கியமாக, தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உதவித் தொகையை நிறுத்துதல். இதுவே சில சமயங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கிறது ('உயிர் கொடுத்து, உயிர் வளர்த்தல்'). மாறாக, அக்குடும்பத்தில் உள்ளோற்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் வாழ்க்கையை அமத்திக்கொள்ள வழி வகுக்க வேண்டும்.

7. மான்யம் அளிக்கும் முறையை மறு பரிசீலிக்க வேண்டும். மான்யங்கள் விவசாயிகளுக்கு போய் சேருவதேயில்லை. இடைத்தரகர்களுக்கும், விவசாய இடுபொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பல சமயம் உதவி செய்கின்றது.

இவை அனைத்தையும் அரசாங்கம் தலையிட்டால் நிச்சயம் தீர்க்க முடியும். இதற்குத்தேவை தொலை நோக்குப் பார்வை மற்றும் திடமான கொள்கை ரீதியான அணுகு முறை. தேர்தல் காலங்களில் மட்டும் தொகுதிப்பக்கம் தலை காட்டி, எந்த பெருந்தன முதலாளிகளுடன் ஒப்பந்தம் போட்டால் எவ்வளவு விழுக்காடு பணம் வாங்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு இவர்களின் நிலை எங்கு புரியப்போகிறது? எதிர்க்கட்சிக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல இன்னுமொறு காரணம், அல்லது புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்கு பழைய கட்சியை விமரிசிக்க ஒரு காரணம், அவ்வளவுதான்.