Microfranchising (நுண் வியாபார உரிமை)
Microfranchising இதன் தமிழாக்கம் என்ன? எனக்குத் தெரியவில்லை. இந்த கட்டுரையைப் பொருத்த வரையில், நான் இதை “நுண் வியாபார உரிமை” என்றே குறிப்பிடப் போகிறேன்.நுண் வியாபார உரிமை, நுண்கடனைச் (MicroCredit) சார்ந்தது மட்டுமல்லாமல், நுண்கடனின் அடுத்த தலைமுறை என்றும் கூறப்படுகிறது. பொருளாதார வல்லுனர்களால், மிக முக்கியமாக, வளர்ந்து வரும் நாடுகளில், இதன் அத்தியாவசத்தன்மை பெரிதும் உறுதிப்படுத்திப் பேசப்படுகிறது. இது வறுமையை ஒழிக்கும் முறைகளில் மிகப்பெரிய ஒரு முறையாகவும் எடுத்து வைக்கப்படுகிறது. வருவாய் பெருக்கும் முறையாக மட்டுமல்லாமல், சுய வேலைப்பாடு, மற்றும் நண்பர்கள்/சார்ந்தோர் (neighbourhood) வேலைப்பாடு, சொத்து உருவாக்குதல், சமுதாய வளர்ச்சி ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து ஒரு பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் ஒரு சித்தாந்தமே நுண் வியாபார உரிமை. பங்களாதேசத்தை சேர்ந்த, கடந்த வருடம் நோபெல் பரிசு பெற்ற மொஹம்மது யுனுஸ், நுண்கடண் சித்தாந்தத்தை மிகப்பெரிய அளவில் உபயோகப்படுத்தி வெற்றி பெற்றார். அதன் மூலமாக இணைக்கப்பட்ட (networked) நிருவனங்களையும் உருவாக்கினார்.
நுண் வியாபார உரிமை என்றால் என்ன? இதில் பல்வகைபட்ட உரிமைகள் உள்ளன. இது ஏதோ புது வகையான தொழில் முறையோ என்று மூளையை கசக்கிக் கொள்ளவேண்டாம். ஒரு சில வடிவங்களில், இந்தியாவில் இது ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதுதான். உதாரணமாக, இன்சுரன்ஸ் ஏஜென்சி ஒரு நுண் வியாபார உரிமை தான். அதாவது ஒரு பெருமையுடைய (known brand) நிறுவனம், தன் வியாபார பொருட்களை/ சேவையை, நேரடியாக தனி மனிதரின் மூலம் விற்பது/அளிப்பது தான் நுண் வியாபார உரிமையின் அடிப்படை. இதில் பல்வேறு உத்திகள் கையாளாப்பட்டு வருகின்றன. வாகன வியாபாரங்கள், உணவகங்கள், செய்தித்தாள்/பத்திரிக்கை ஆகியவை பெரும்பாலும் இந்த முறையைத்தான் கடைபிடிக்கின்றன. சில வகையான தொழில்களூக்கு மிக அதிக மூலதனம் வேண்டியிருக்கும். நுண் வியாபார உரிமையில், மத்திய அல்லது அதற்கும் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள மக்கள் சுயமாக பொருள் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் உத்திகள் மட்டுமே உள்ளடக்கம். இது ஏதடா “புதிய மொந்தையில் பழைய கள்” என்று முகம் சுளிக்க வேண்டாம். வேண்டுமென்றால் “புதிய சீசாவில், புதிய பதனீர்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
வேறு எங்கிலும் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒரு தொழிலை/ வியாபாரத்தை /சேவையை அல்லது தொழில்/வியாபார/சேவை முறையை அதே அடிப்படையில் மற்ற இடங்களிலும் நகல் முறையில் அமல் படுத்தப்படும் போது வெற்றி வாய்ப்பு நிச்சயப்படுத்தப்படுகிறது. அதே சமயம் இதில் முனைப்படுபவர்களுக்கு மிகப் நுண்ணிய தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்றோ அல்லது தொழில் அறிவோ இருக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. நுண் வியாபார உரிமைக்கும், தனி நபர் செய்யும் தொழில் அல்லது வியாபாரத்திற்கும் வேற்றுமைகள் நிறைய உண்டு. நுண் வியாபார உரிமையில் சிறு மூலதனம், விற்பனை நிலையம் அல்லது தொழில் திறன் (skill) மட்டுமே போதும். தேவையான கச்சா பொருட்கள் அல்லது விற்பனை பொருட்கள், வியாபார உத்தி, சந்தை நிலவரம் ஆகியவை தானாகவே வழங்கப்படும். எனினும் எல்லோராலும் தொழில் முனைவர் (entrepreneur) ஆவது என்பது முடியாது. ஆனால் எவரால் முடியுமோ அவர் மற்றவர்க்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.
நுண்கடன், நுண் வியாபார உரிமையோடு இணையும்பொழுது, அது சிறு தொழில் முனைவர்களுக்கு, ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அது மட்டுமல்லாமல், இந்த மாதிரியான நிறுவனங்கள் ஒரு வறையறுக்கப்பட்ட விதிமுறைகளோடு செயல்படுவதால், அவைகளின் அதிக வளர்ச்சிக்கு அரசாங்க உதவிகளும், வங்கிகளின் நிதியுதவிகளும் மற்றும் பல நன்மைகளும் கிடைக்கும்.
இவைகளின் வளர்ச்சி சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், பெருநகரங்களை விட அதிகமாக இருக்கும். இதனால், தனி மனித தேவை சம்பந்தபட்ட எல்லா விதமான தொழில்/ சேவைகளிலும் நுண் வியாபார உரிமை சாத்தியப்பட்டதே. உதாரணமாக, அன்றாட அத்தியாவசிய தேவைகள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான தேவைகள் போன்றவற்றில் ஆரம்பித்து, இணைய மையம், சூரிய எரி சக்தி, நீர் வினியோகம், கணிணிக் கல்வி, தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசி அட்டை வினியோகம் மற்றும் இணைப்புகள், தபால் வினியோகம் (courier), ஐஸ் கிரீம் மற்றும் பேக்கரி பொருட்கள், சிறு/குறு திண் பண்டங்கள் ஆகிய அனைத்தும் சாத்தியமே.
மொத்தத்தில் நுண் வியாபார உரிமை ஒரு பொதுவுடமையான முதலாளித்துவம் (communistic capitalism) என்று கூறினால், அதில் ஏதேனும் மிகைப்பாடு உண்டா? இல்லை இதை ஒரு ஜனநாயக முதலாளித்துவம் (democratic capitalism) என்று கூறலாமா?
இந்தியாவில் நுண் வியாபார உரிமை எந்த அளவிற்கு இருக்கிறது அதை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம். (தொடரும்)
2 comments:
நல்ல பதிவு. தொடருங்கள் பாலா சார்.
படிச்சிட்டேன்.
நல்ல தொடக்கம்.
தொடருங்கள்.
Post a Comment