Monday, April 03, 2006

தேர்தல் பற்றிய என் கண்ணோட்டங்கள் # 1

ஜனநாயகத்தில், தேர்தல் என்பது மிக முக்கிய ஒரு அம்சமாகும். ஆனால், கட்சி அரசியலில், இந்த தேர்தல் சில சமயங்களில் எள்ளி நகையாடப் படுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்திய சோனியா காந்தியின் ராஜினாமா நாடகம். இதன் பாதிப்பும், என்னுள் நீண்ட காலமாக தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்புமே, இந்த பதிப்பு.
  1. தேர்தல் அறிக்கைகள் ஓரு சாசனம் (Charter) ஆகும். இவை மக்களுக்கு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அளிக்கும் ஒரு உறுதிமொழி. இந்த உறுதிமொழிகளை, தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் / சட்டசபையில் எடுக்கும் உறுதிமொழிக்கு சமமானதாக கருத நினைப்பதற்கு, விதி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் (அப்போது தான் இந்த, எல்லொருக்கும் TV, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி போன்ற பம்மாத்து வாக்குறுதிகளை கட்சிகள் அளிக்காது).
  2. எந்த ஒரு உறுப்பினரும் மரணம் அடைந்தலோ, உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ, அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடாது. முன்பு நடந்த தேர்தலில் இவருக்கு அடுத்த படியாக ஓட்டு வாங்கிய வேட்பாளரை மன்ற உறுப்பினராக ஆக்க வேண்டும். இதற்கு அவர் , முன்னவர் வாங்கிய ஓட்டில் குறைந்த பட்சமாக 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொகுதிக்குள் வரும், District Magistrate அல்லது District Collector ஐ நியமன உறுப்பினராக செய்ய வேண்டும். இந்த உறுப்பினர்கள் அடுத்த தேர்தல் வரை பதவி வகிக்கலாம்.
  3. ஆட்சி அமைத்த கட்சிகள், ஆண்டிற்கு ஒரு முறை, தேர்தல் வாக்குறுதி பற்றிய முன்னேற்ற தகவல் அறிக்கை (Progress Report) ஒன்றை பொது மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  4. ஆண்டு தோறும், சட்ட மன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் (நெருங்கிய உறவினர்கள் உட்பட) சொத்து மற்றும் வருமான அறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  5. சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த பட்சம் 80% கூட்டத் தொடர்களில் பங்கு பெற்றிருக்க வேண்டும். (இந்த வெறும் கையெழுத்து போடும் பாவ்லா வேலையெல்லாம் கூடாது. ஆக்க பூர்வமான பங்கேற்பு வேண்டும்).
  6. தன் தொகுதிக்குள் நடக்கும் அரசு அமைப்பு கூட்டங்களில் (திறப்பு விழாக்கள் அல்ல. Distrcit Consultative Committee போன்ற அமைப்புகள்), 80% கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாது.
  7. எந்த ஒரு தனி நபரும் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் சட்ட/ பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட கூடாது. வாழ்நாளில் 8 முறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
  8. திரும்பப் பெரும் உரிமை வேண்டும் (இது ஏற்கனவே விவாதத்தில் உள்ளது).

இன்னும் வரும்................

1 comment:

பாரதிய நவீன இளவரசன் said...

அரிசி, TV எல்லாம், தேர்தல் நேர ஸ்டண்டுகள் என்று பெரும்பாலான வாக்காளர்களுக்குத் தெரியும். போதிய கல்வியறிவற்ற மக்கள் வேண்டுமானால் இந்த வாக்குறுதிகளை நம்பலாம்.

மற்றபடி, தேர்தல் விதிமுறை, வேட்பாளர் ஒழுக்கம், அரசியற் கட்சிகளின் கடமை போன்றவற்றில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்திலும் இந்தியக் குடிமகன் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஒரு நியாயமான அக்கறையைக் காணமுடிகிறது.

என்ன செய்ய... இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்றால், இப்போதிருக்கும் சூழலில், `இல்லை' என்றுதான் கவலையுடன் சொல்லமுடிகிறது. இதற்குத் தீர்வு என்னவென்றால், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வும், கடமையுணர்வும் பெருகுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

சரி, மக்கள் மத்தியில் யார் இந்தப் பிரசாரத்தைக் கொண்டுசெல்வார்கள் (to educate and create awareness) என்ற கேள்விக்கு, அரசியல் சாரா அமைப்பினர் என்று சொன்னால், யார் யார் இந்த அரசியல் சாரா தன்னார்வ அமைப்பில் மனமுவந்து பணியாற்றவருவார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
அத்தைய அமைப்பு எத்தனைக் காலத்திற்கு உண்மையிலேயே எந்தவொரு அரசியற் கட்சியின் ஆதரவுமின்றி இருக்கும்; அமைப்பு என்று இருந்தால் அதற்கேயுரிய சிக்கல்களும் சர்ச்சைகளும் வராமல் போகுமா...போன்ற சந்தேகங்கள்தான் மிஞ்சுகிறது.

நாம் நம் அளவில் என்ன செய்ய முடியுமோ அதை நம் ஜனநாயகத்திற்குட்பட்டு செய்யமுடியும் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமுடிகிறது.

`இப்ப முடிவா, நீ இன்னாதான்யா சொல்ற?' என்றால், `ஒன்னும் பறையாம்பட்டில்லா..' என்று சொல்லி நகரத்தோன்றுகிறது..

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்