Tuesday, April 22, 2008

சொர்க்கத்தின் வாசற்படி…….

சொர்க்கத்தின் வாசற்படி…….

 

அது ஒரு மாலைப்பொழுது. சுமார் 7 மணி இருக்கும். தொலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "….கிருஷ்ணமூர்த்தி மாமா is no more. அரை மணி நேரம் முன்னாடி ஆச்சாம். நட்டு மாமாதான் கூட இருந்தாராம்…" என்று சொல்லி நிறுத்தினாள் என் சகோதரி. சமாசாரத்தைக் கிரகிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இந்த இழப்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அது நிகழும் போது, உள்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல. சதையும் இரத்தமுமாய் இருந்த ஒரு உறவு, திடீரென இல்லை, இனி வெறும் சடலம். சில மணி நேரங்களுக்குப் பிறகு வெறும் நினைவுகள்தான் என்பது எளிதில்  சீரணிக்கமுடியாத ஒன்று. எங்கள் மாமா, கடந்த ஒரு வருடமாகவே ஆஸ்பத்திரியும், வீடுமாய் மாறி மாறி வசித்துக்கொண்டிருந்தார். கடந்த முறை அவரைப்பார்த்த போது, இவர் இன்னும் ஓரிறு மாதங்கள்தான் இருப்பார் என்று நினத்தேன். அவர் படும் சிரமங்களைப் பார்த்த போது, எல்லோரும் மேலும் மேலும் வாழப் பிரார்த்திக்க, நான் இவர் பட்ட துன்பங்கள் போதுமென்று சீக்கிரம் விடை பிரியவே பிரார்த்தித்தேன். எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இந்தச் சம்பவம் நடந்த சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு…

 

முன்னிரவு நேரம். உறங்கப்போய் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். தொலைபேசி அழைத்து தூக்கத்தைக் கலைத்தது. நாடு, மக்களை விட்டு விட்டு, பிழைப்பைத்தேடி வெளியூரில் இருக்கும் எனக்கு, இரவில் தொலைபேசி அடித்தாலே மனத்தில் எப்போதும் ஒரு கலக்கம் வந்துவிடும். பதற்றத்துடன் எடுத்தேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "…நாந்தான் பேசறேன்.. அண்ணா passed away. இப்போதான் ஒரு மணி நேரம் ஆச்சு. அவர் ஏற்கனவே கிளம்பி போயாச்சு. நான் மத்தவங்க எல்லாம், காலைலே ஃப்ளைட்லே போறோம்.". இதுவும் என் அதே சகோதரி. இறந்தவர்  சகோதரியின் பெரிய மைத்துனர். அவர் பெயரும் கிருஷ்ணமூர்த்திதான். என்னால் வேறு எதுவும் பதில் பேச முடியவில்லை. குரல் நெஞ்சடைக்க, "அப்படியா.. பாவம். ரொம்ப கஷ்டப்பட்டாரா கடைசியிலே?" . "கொஞ்சம் தேறிண்டுதான் வந்தது. நினைவு கூட அப்பப்ப வந்து போச்சு. சரி, தப்பிச்சுடுவார்னு நினச்சோம். இப்படியாகும்ன்னு எதிர்பார்க்கலே…" . "மன்னிக்கு என்னோட வருத்தத்தை சொல்லு. பாட்டி இதை எப்படி எடுத்துக்கப் போறான்னுதான் தெரியலே. Take care of them." தொலைபேசியை துண்டித்தேன். தலையணையை எடுத்து சுவற்றில் அண்டை கொடுத்து சற்று நிமிர்ந்தவாறு உட்கார்ந்தேன். அதிகாலையில், பூஜைக்காக மலர் பறிக்க மாடி பால்கனிக்கு சென்று, எட்டிப் பறிக்கையில், கால் தவறி கீழே விழுந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரி வாசத்திற்குப்பின் வந்த முடிவு. எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இறந்த என் மாமா கிருஷ்ணமூர்த்திக்கு வயது 71 இருக்கும். பார்க்க ஆஜானுபாகுவாக, சிவந்த மேனியுடன், உயரமாக இருப்பார். எங்கள் சின்ன வயதில், அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வருகிறார் என்றாலே சப்த நாடியும் ஒடுங்கி, கூடத்தில் ஒரு மூலையில் போய் பதுங்கிக் கொள்வோம். ஆனால் ரொம்ப அன்பானவர். கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றிருந்த சிறுவர்களையெல்லாம், இரண்டு வில் வண்டிகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொள்ளிடத்திற்கு அழைத்துச் சென்று, முட்டியளவே தண்ணீர் இருந்த அந்த ஆற்றில் போட்ட ஆட்டம், நாற்பது ஆண்டுகளாகியும், இன்னும் மறக்க வில்லை. அவருடன் பிறந்தவர்கள் 6 பேர் ( இரண்டு சகோதரர்கள், நான்கு சகோதரிகள்). வாரிசுகளில் நான்காவது, ஆனாலும், மூத்த ஆண்மகன். எனவே அவர் பேச்சுக்கு குடும்பத்திலே எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். எப்போதும் தும்பைப்பூ போல வெள்ளை வெளேரென்ற எட்டு முழ வேட்டியுடன், புஜம் வரை மடித்து (சுருட்டி, சுருட்டி) விடப்பட்ட முழுக்கை சட்டையுடன் தான் காட்சியளிப்பார். இடுப்பு வேட்டியில் சொருகி வைக்கப்பட்ட பொடி டப்பா. சர்ர்ர்ர்ரெண்று எடுத்து உறியும் போது அவர் அடையும் ஆனந்தம் இருக்குமே.. அடடா.. (சிறு வயதில், ஒரு சமயம் அவருக்குத் தெரியாமல் ஒரு சிட்டிகையை எடுத்து உறிஞ்சி, அந்தப் பொடி, ரொம்ப எஜமான விசுவாசத்துடன் நம்மை போட்டுக் கொடுத்தது வேறு விஷயம்).

 

இறந்த அண்ணா என்கிற கிருஷ்ணமூர்த்தி, சின்னவர்களால் 'அண்ணா' என்றும், மற்றவர்களால் 'அம்பி' என்றும் அழைக்கப்பட்டவர். வயது 70க்கும் மேல். சிவந்த மேனியுடன் சாதாரண உயரத்துடன் இருப்பார். முகத்தில் சாந்தம் வாசம் புரியும். குரல் அதிராது. ரொம்ப அன்பானவர். சிறு குழந்தையாகட்டும், வயதில் முதிர்ந்தவராகட்டும், யார் வந்தாலும், அவருடன் சிறிது நேரம் செலவிடாமல் இருக்க மாட்டார். குடும்பத்தில் மூன்றாவது வாரிசு என்றாலும் மூத்த ஆண்மகன். உடன் பிறந்தவர்கள் 6 பேர் (மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள்). சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை தன் தலை மேல் தாங்கியவர். அவர் பேச்சுக்கு குடும்பத்தில் மறு வார்த்தை இருந்ததில்லை. எப்பொழுதும் அரைக்கை சட்டை, வெள்ளை வெளேரென்று வேட்டி. நெற்றியில் சந்தனக் கீற்று. தினமும் பூஜை முடிக்காமல் வெளியில் கிளம்ப மாட்டார்.

 

என் மாமா ஒன்றும் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளையோ சரித்திரங்களையோ படைக்கவில்லை. மாறாக அவரிடமிருந்த சில பழக்க வழக்கங்களே அவருக்கு எமனாய் அமைந்தன. ஆனால் அவரால் எவருக்கும் ஒரு துன்பமும் நேர்ந்ததில்லை. எவரையும் கடிந்து பேசியதில்லை. எப்போழுது போனாலும் புன்முறுவலுடன் அவர் வரவேற்கும் பாணியே அலாதி. எவரையும் தன் வயப்படுத்தக்கூடிய சாதுர்யம். ஈடு பட்ட விஷயங்களில் அவரின் அறிவும், புத்திக்கூர்மையும் அசாதாரணம். வாய்ப்பும், நேரமும் அமையாததினால், பிரகாசிக்க வில்லை. "..ஏய் ஜெயராமா, வந்திருக்கிறது என் மருமான். அவன் ஒரு வீடு கட்றான். அதுக்கு மரம் பாக்கத்தான் வந்திருக்கோம். நல்ல சீஸண்டு மரம் இருக்கா?.... ".  "…..என்ன கிருஷ்ணமூர்த்தி, நீ போய் என்ன கேக்கிறியே. போய்ப்பாரு பின்னாடி. நிறைய இருக்கு. உனக்கு எது வேணுமோ அத மார்க் பண்ணிட்டுப் போ. கார்பெண்டரை விட்டு ஸைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிக் கொடுக்கிறேன்.." என் வீட்டில் உள்ள ஒவ்வொரு நிலையும், வாசல், சன்னல் கதவுகளும் என்றென்றும் அவர் புகழ் பாடும். "....கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு அக்கவுண்ட்ஸை சரி பார்க்கச் சொல். அதுக்கப்புறம் ஆடிட்டர்கிட்டே கொடுக்கலாம்…" ஆடிட்டரை விட இவரின் வரவு செலவு பதியலில், திருப்தி அடந்த முதலாளி. ஆனால், தான் சம்பாத்தித்த சொத்துக்களை கணக்கில் வைத்துக்கொள்ளாமல், செலவழித்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் நின்றார்.

 

அண்ணா கிருஷ்ணமூர்த்தி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை, தாய் மாமனுடன் சேர்ந்து தன் தலையில் சுமந்து அனைவரையும் ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கியவர். பிறர் பாரத்தை தன் பாரம் போல் கருதி தன்னலம் பாராமல் உழைத்தவர். தான் ஈட்டிய அனைத்தையும்  பிறருக்கு கொடுத்து கடைசி வரைக்கும் தனக்கு என்று ஒன்றுமே இல்லாமல் வாழ்ந்தவர்.

 

அன்று ஈமக்கிரியை நடக்கும் தினம். தெருவெங்கும் அடைத்து உற்றார்களும், உறவினர்களும், நண்பர்களும், தெரிந்தவர்களும், தெரியாதவர்களும். சகோதரிகளின் மகன்களும், மகள்களும் தத்தம் துணையோடு, தனக்கு தொட்டிலிட்டு, நெல்லில் பெயர் எழுதியதையும், தன்னை தட்டாமாலை சுற்றியதையும், தோளில் தூக்கி வைத்து விளையாடிய அதே மாமன், திருமணத்தின் போது தன் தோள் மேல் தூக்கி மாலை மாற்றியதையும் நினைவு கூர்ந்து, அம்மான் சீர் செய்த மாமனுக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். சகோதரிகள், தத்தம் வீடுகளில் நடந்த நல்லது கெட்டது நிகழ்வுகளில் முதல் ஆளாய் நின்று முழுச் சுமையையும் தல் தலை மேல் போட்டுக்கொண்டு உழைத்த, தனக்கு பொங்கலுக்கும், கார்த்திகைக்கும் வருடா வருடம் சீர் செய்த உடன் பிறப்புக்கு அஞ்சலி செலுத்தி அழுது கொண்டிருந்தனர். துணையைப்பிரிந்த மனைவியோ, வாழ்வே ஒரு கேள்விக்குறியாய் மாறியதே என்று அழக்கூடத் தோன்றாமல் சூன்யப் பார்வைப் பார்த்து, சொல்வார் சொல்வதை, ஒரு நடைப்பிணம் போல் செய்து கொண்டிருந்தார். நினைவுகள் மனதில் ஒரு நிழற்படமாய் ஓட, பிரிவின் துயரம் பின்னனியில் சோக கீதமாய் ஒலிக்க, அனைவருடைய மனமும் மௌனமாய் அழுது கொண்டிருந்தன. ஆனால், சம்பிரதாயங்களும், சடங்குகளும், மனதின் வலிக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று தத்தம் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தன.

 

அன்று மேலுலகத்தில் வேதங்களில் சொல்லப்படும் கடைசித் தீர்ப்பு நாள். கணக்காயர் வந்து அமர்ந்தார். கணக்கர்கள் தத்தம் பதிவேடுகளோடும் அனைவரைப் பற்றிய குறிப்புக்களோடும் தயாராக வத்திருந்தனர். கணக்காயர் ஆரம்பித்தார்.

"கணக்கர்களே! உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், நான் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். இங்கே வந்திருக்கும் இறந்தவர்களின் இதயங்களை நாம் ஒரு மெல்லிய இறகோடு எடையில் ஒப்பிடுவோம். வாழும் காலத்தில் பாவங்கள் செய்த மனிதர்களின் இதயம் அந்த பாவ மூட்டையோடு வந்திருந்தால், அதை தராசுத் தட்டில் இடும் போது, இறகு இருக்கும் தட்டை விட அதிக பளு உள்ளதாக இருக்கும். அதனால், அது கீழே இறங்கும். அந்த மனிதர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவர். ஆனால் இதயம், இறகை விட இலேசாக இருந்து, இறகு வைத்திருக்கும் தட்டு, கீழே இறங்கினால், அவர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவர். "

 

ஒவ்வொருவரைப்பற்றிய குறிப்பும் படிக்கப்பட்டு, இதயங்கள் எடை போடப்பட்டு அவர்கள் எங்கு செல்லத் தகுதியானவர்களோ அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

'அம்பி' என்கிற 'அண்ணா' கிருஷ்ணமூர்த்தியின் முறை வந்தது. குறிப்பு படிக்கப்பட்டது. "இவர் வாழ்க்கையில் தனக்கென வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்தார். கர்ணன் எப்படி தன்னுடன் ஒட்டிப் பிறந்த கவச, குண்டலங்களை, கண்ணன் தானமாக கேட்ட போது தயங்காமல் வாரி வழங்கினானோ, அதே போல தன் உடல் உறுப்பை, தன் இளவல் உயிர் வாழ வழங்கிய உத்தமர்…….." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டில் இட்டனர். இறகு வைத்திருக்கும் தட்டு அதிக பளு காரணமாக கீழே இறங்கியது. "…இவர் சொர்க்கத்திற்கு செல்வாராக.." கணக்காயர் கட்டளையிட்டார்.

 

மாமா கிருஷ்ணமூர்த்தியின் முறை. "இவர் வாழ்ந்த வாழ்க்கை நெறி முறை குடும்பத்தினராலும், மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தன் துயரங்களை மறக்க, இவர் தேர்ந்தெடுத்த வழி சரியானதல்ல என்றாலும், இவர் வாழ்க்கை ஒரு எதிர்முறைப் பாடமாக அவர் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் செயல் பட்டது. இதன் மூலமாக பலருக்கு சரியான வாழ்க்கை நெறியை அவர் கற்றுத் தந்துள்ளார்...." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டிலிட்டனர். இரண்டு தட்டுக்களும் மேலும் கீழும் ஏறி இறங்கின.

 

முடிவில் இரண்டு தட்டுக்களின் ஆட்டங்களும் அடங்க, தராசு முள் சம நிலையில் நின்றது.

.

.

.

.

.

.

.

"…இவரும் சொர்க்கத்திற்கு செல்வாராக.."


1 comment:

பாச மலர் / Paasa Malar said...

நெகிழ வைத்த பதிவு..இருவரின் ஆத்மாவும் சாந்தி பெறட்டும்..