Monday, May 05, 2008

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்

சென்ற வெள்ளிக்கிழமை (மே மாதம் 2 ம் தேதி) பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய ஒரு கருத்தரங்கம் ரியாத், சௌதி அரேபியாவில் நடை பெற்றது. அதில் நான் வாசித்தளித்த கட்டுரை.
........

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்
(கோ. பாலமுகுந்தன்)

மேதகு இந்தியத் தூதர் அவர்களுக்கும், எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஏனைய பெரியோர்களுக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

பாவேந்தரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், எனக்கும் ஒரு பங்களித்து, சந்தர்ப்பம் தந்துதவிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் நன்றி.

ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இந்த பாடலை ஒலி பரப்பி என் உரையை வாசிக்கிறேன்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தில் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா
அறமிதென்றும் மறமிதென்றும் யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா..”

இதயத்தின் வலிக்கு இசையை அழைத்தவன். வன்முறையை நீக்கி, ஏழ்மையைக் களைவதற்கு தமிழை துணைக்கு அழைத்தவன். கல்வி புகட்ட வள்ளுவனை ஆசானாய் ஏற்றவன். தமிழே மூச்சாய், தாரக மந்திரமாய், தரணியெங்கும் தழைத்தோங்க சங்க நாதமிட்டவன்.

பாவேந்தர் பற்றி பேசும் போது இயற்கையுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பை மறக்க முடியுமா? புரட்சிக் கவிஞரின் மறு பக்கம் என்று சொல்லக் கூடிய வகையிலே அவர் இயற்கையை வர்ணித்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ ஒரு தெவிட்டாத தேன். மங்காத ஒளி. வர்ணனைகள் காட்சிகளை கண் முன் கொண்டு நிறுத்தும். கை கோர்த்து நடத்திச் செல்லும்.

அவற்றிலிருந்து சில வர்ணணைகளை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடற்கரையை, தினம் வந்து போகும் காதலர்கள் பதித்த கால் தடங்களால் வரையப்பட்ட ஒரு பெரிய புள்ளிக் கோலம் என்று வர்ணிக்கும் கவிஞர்கள் மத்தியில், அதை ஒரு மணல் மெத்தையென்றும், அங்கே மேவும் நீர் அலைகளை, கல்விக் கூடத்தில் பாடம் பயிலும் இளைஞர்களின் எழுச்சி மிகு பூரிப்பிற்கு ஒப்பிடுவதும் இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.
…..
கடல் ஆர்ப்பரித்த முழக்கத்தை இசையாய் வரித்த வாணர் இவர்.
“கடல் நீரும் நீல வானும் கை கோக்கும்!
அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை;
அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்து இன்பத்தை
வடிக்கின்ற புலவன்!
தம்பி, வண்கடற் பண் பாடல் கேள்”
அதனால் தான் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..” என்று ஏங்கினானோ?
….
‘அழகு’ என்றாலே கவிஞர்களுக்கு எப்போதும் ஒரு பரவசம்தான். அழகைக் கண்டால் ‘ஆடாத மனமும் உண்டோ?’ அழகை ஒரு பெண்ணாகவே பாவிக்கும் கவிஞர்கள் தான் இந்தப் புவியில் உண்டு. சுப்பு ரத்தினம் இதற்கு விதி விலக்கா? ஆனால் என்ன, மற்றவர்கள் மங்கையை (அழகை) நிலவில், இரவில் அதன் ஒளியில் கண்டனர். இவர் கதிரவனின் இளம் காலைக் கதிரில் கண்டார். கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் கண்டார்.

தென்றலை திகட்டாமல் வர்ணிக்கும் வள்ளல் இவர். “தென்றல் வந்து என்னைத் தொடும். சத்தமின்றி முத்தம் இடும்” என்றார் ஒரு கவிஞர். இவரும் அவ்வாறே தென்றலின் குறும்பை வர்ணிக்கிறார். “பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை” என்று. குழந்தையின் நெற்றியில் விழும் சிறு குழலை அசைந்தாட்டி, மழலையை சிலிர்க்க வைக்கும் தென்றலைப் போற்றுகிறார்.
“கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்தனங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள், தமிழைத் தந்தாள்,
தமிழ் எனக்கு அகத்தும், தக்கத் தென்றல் நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேண் அன்றோ?” என்று தென்றலுக்கு தலை வணங்கி நன்றி சொல்கின்றார்.
….
குமுத மலரை பெரும்பாலான கவிகள், காதலியின் இதழ்களுக்கும், கண்ணிற்கும் ஒப்பிடுகையில், “கரிய பாம்பின் தலைகள் போல நிமிர்ந்திருந்த தாமரை சிற்றரும்புகள்” என்று சற்று பயம் ஏற்படும் வண்ணம் வர்ணித்தாலும், உடனே அடுத்த வரியிலேயே “மங்கைமார் செங்கை ஏந்தி அணி செய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போல” என்று தாமரை மொட்டை, ஒளிச்சுடருடன் ஒப்பிடுகிறார்.

மயிலைப் பற்றி இவர் யாது கூறுகின்றார்? “மயிலே! நீயும் பெண்களும் ஒருவருகொருவர் சமம் தான், நடையின் ஒயிலிலாகட்டும், மெல்லிய இடையிலாகட்டும், வண்ணத் தோன்றலிலாகட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் நிகர்தான். ஆனால் ஒன்றில் மட்டும் வேறுபடுகிறீர்கள். கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க உனக்கு நீள் கழுத்து அளித்தாள் இயற்கை அன்னை. ஆனால் பெண்களுக்கோ, அயலான் வீட்டில், அறையில் நடப்பதை எட்டிப்பார்க்காதிருக்க குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்’’’ என்று கூறி
“இங்கு வா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக! “ என்று வம்பிற்கு இழுக்கிறார்.
….
கானகத்தைப் பற்றி இவர் வர்ணனையில் ஒரு காட்சி:
பெட்டைக் கோழியைத் தேடி ஒடும் காட்டுச் சேவலின் சிறகுகள் பட்டு, செடி கொடிகளில் படர்ந்திருந்த கொசுக் கூட்டங்கள் உயரப் பறக்குமாம். அவ்வாறு அவை பறக்கும் போது கரு மேகங்களை ஒத்திருக்குமாம். உடனே கான மயில்கள், கார் மேகங்கள் தான் வந்து விட்டன என்று மகிழ்ந்து தன் தோகைகளை விரித்து ஆடத் துவங்குமாம். அந்த மகிழ்ச்சியான ஆட்டத்தில் சுழன்று, சுழன்று தரையிலிருந்தும், மரக் கிளைகளிலிருந்தும் ஆடும்போது, தோகைகள், மரக்கிளைகளில் இருக்கும் தேன் கூடுகளின் மேல் பட்டு அந்தக் கூடுகள் உடைந்து அதிலிருந்து தேன் வழியுமாம். அந்தத் தேனுக்காகத் தவமிருக்கும் கரடி, வழியும் தேனைக் குடித்தபடி, மயிலுக்கு நன்றி கூறுமாம்.
ஆகா!! என்ன ஒரு கற்பனை வளம். கேட்கும் போதே காட்சி கண் முன் முப்பரிமாணத்துடன் தெரிகின்றதோ?
….
நதியைப் பற்றியும், நதியில் வரும் புனல் பற்றியும் இவர் பார்வையே அலாதி. வறண்ட நதியில் இருக்கும் மணற்துகள்களை, உதிர்ந்த தாழம்பூவின் பொடிகளுக்கு ஒப்பிடுகிறார். விளை நிலங்கள் நடுவே இருக்கும் வறண்ட நதியில் வானவில்லைக் காண்கிறார். பெருஞ்சிங்கமொன்று அறைந்தால், எப்படி ஒரு மத யானை, பலமாக பெரும் சப்தத்துடன் கீழே விழுமோ அவ்வாறு வந்தது வெள்ளம் என்கிறார். கரையோர மரங்கள், தன் கிளைகளிருந்து பூக்களை சொரிந்து வெள்ளத்தை வரவேற்றன வென்றும், உழவுப் பெருமக்கள், தம் நோய் தீர்ந்தது, வறுமை ஒழிந்தது என்று ஆடிப்பாடினரென்றும், அதனைக் கண்டு, எப்படி ஆனந்தக் கூத்தாடும் தம் மக்களைக் கண்டு ஒரு தாய் பேருவகை கொள்வாளோ அவ்வாறு அந்த நதியன்னை, அசைந்து அசைந்து பெருமிதத்துடன் சென்றாள் என்று முடிக்கிறார்.
….
கானலைப் பற்றி பாவேந்தர் கூறியதை உங்களுடன் பகிர்ந்து என் உரையை முடிக்கிறேன். இது பாலை வாழ் நமக்கும் சாலப் பொருந்தும்.
“வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல்எழுப்பும்!
கானலில் நான்நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லைஅங்கே!
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா (து)- எடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

திடுக்கென விழித்தேன் –நல்ல
சீதளப் பூஞ்சோலை”

ஆம்! விழித்தெழுந்தேன் !! பாவேந்தர் புகழ் பாடும், நல்லெண்ணம் கொண்ட பெருந்தகையார் நடுவில், தமிழே சுவாசம் என்று பூத்துக் குலுங்கும் இச்சோலையிலே.

நன்றி, வணக்கம்.

***************


அரங்கேறிய நிகழ்வு:

பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.

முன்னிலை: மேதகு இந்தியத் தூதர் , திரு.பரூக் மரைக்காயர் அவர்கள்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்

1 comment:

Unknown said...

Arumaiyana karuththurai{katturai}. manadhirkku migavum niraivai erundhadhu. edaiyel konjam kadinamana,elaya thalaimuraikku puriahyadha mozhi endralum.. mighavum arumaiyagha amaindhulladhu. melum niraiya vaippukkal amaiya enadhu vazthukkal.