Thursday, November 29, 2007

விகடன் செய்த தவறு

"நாங்கள் இந்தியர்கள் அல்ல" என்கிற தலைப்பில் வெளியான நாகாலாந்து மக்களின் போராட்டத்தை பற்றிய ஒரு கட்டுரையில் (ஜுனியர் விகடன் 2-12-07 இதழில்) இந்திய வரைபடத்தை இவ்வாறாக பிரசுரித்துள்ளது.

 

 

 p21b

இதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை விட்டு விட்டது. தேசிய சிந்தனையுள்ள, பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கை இவ்வாறு கவனக்குறைவாக இருக்கலாமா?

Tuesday, November 27, 2007

அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா

அன்று வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்தேன். கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் விமான நிலையம், எப்பொழுதும் போல இருந்தது. டாக்சியிலிருந்து இறங்கி, போர்டிங் கார்டு வாங்கி, லக்கேஜ் செக் இன் செய்து, இமிகிரேஷன் கிளியெரென்ஸ் முடித்து, உங்கள் விமானம் புறப்படும் லவுஞ் வரைக்கும் கண்ணை மூடிக்கொண்டு சென்று விடலாம். எந்த மாற்றமும் இல்லை என்பதற்கு ஒரே அடையாளம், விரிந்திருந்த கார்ப்பெட் தான். அதே விரிப்பு. அதன் உண்மையான நிறம் மங்கி, காப்பி, டீ, பெப்ஸி கரைகளும், மற்ற கறைகளும் பட்டு,கறுப்பாக இருந்தது. உள்ளே தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த செடிகளும், மரங்களாகாமல், அப்படியே செடிகளாகவே (!!!) இருந்தன.

அங்கிருந்த நீரூற்றைப் பார்த்ததும், “அட்லீஸ்ட் இந்த தண்ணியையாவது மாத்திருப்பாங்களா?” என்ற சந்தேகம்தான் என்னில் எழுந்தது. உடனே என் மனைவி, “ஒரே ஒரு சேஞ்ச் பண்ணியிருக்காங்க. விமானப் புறப்பாட்டிற்காக காத்திருக்கிற இடத்தில, ஒன்னிரண்டு ஃபாஸ்ட் புட் கடைங்க வந்திருக்கு பாருங்க..” என்றாள்.

கூட இருந்த நண்பன், “..அது சரி. அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. பத்து வருஷத்திலே நிலா மட்டும் மாறிடுச்சா என்ன?..” என்று லொள்ளடித்தான்.

வழக்கம் போலவே விமானத்தில் ஏற அனுமதிக்கும் நேரத்தில், ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் 300க்கும் மேற்பட்ட பயணிகளை அடுத்த கேட்டுக்கு வரச் சொன்னார்கள், இத்தனைக்கும் இரண்டு அமர்விடங்களுக்கும் ஒரே பொதுவான கேட் தான் இருக்கிறது. அந்த அதிகாரி, இந்த வாசல் கதவிற்கு பதிலாக அந்த கதவைத் திறந்தால் போதும். அவர் ஒரு இரண்டு அடி மட்டுமே நகர வேண்டும். ஆனால் 300க்கும் மேற்பட்டவர்களை இங்கிருந்து அங்கு அலைக் கழித்தார். நம்மவர்களும், இந்த விமானம் நம்மை விட்டு விட்டு மேலே எழும்பாது என்று நன்றாக தெரிந்திருந்தும், எங்கே இடம் கிடைக்காமல் போய் விடுமோவென்று என்று எண்ணியோ என்னவோ, திபு திபுவெனெ அங்கிருந்து இங்கு ஒடி வந்தார்கள்.

இது ஒவ்வொரு முறையும் நடக்கும், நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை வைட்டிங் லவுஞ்சிலிருந்து பார்த்ததால், ஏன் இப்படி நடக்கிறது என யோசித்தேன். பின்னர்தான் இதன் காரணம் புலப்பட்டது. புறப்பாடு கேட் எண்ணை அராபியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். ஆங்கில எண் ஒரு கதவின் மேலும், அராபி எண் இன்னொரு கதவின் மேலும் எழுதியிருந்தது. நம் மக்கள் (அவர்கள் அராபி எண்ணை அறிந்திருந்தாலும்) ஆங்கில எண் எழுதிய கதவு இருக்கும் லவுஞ்சில் சென்று அமர்ந்து விடுகிறார்கள். போர்டிங் பாஸ் செக் செய்து உள்ளே அனுமதிப்பவரோ இந்த ஊர் ஆசாமி. அவர் சரியாக, அராபி எண் எழுதியிருக்கும் கதவருகே வந்து உள்ளே செல்ல அனுமதிக்கிறார். அதனால்தான் இந்த குழப்பம்.

அப்பொழுது கண்ட இன்னொரு காட்சி, என் மனதை என்னவோ செய்தது. 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு கேட்டிலிருந்து இன்னொரு கேட்டிற்கு வரிசையாக இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் 25லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து அவர்கள் ஸீலங்காவை சேர்ந்தவர்கள் என்று கண்டு கொண்டேன். மற்ற தோற்றங்களை வைத்து அவர்கள், இங்கே பணிப்பெண்களாக பணி புரிபவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

குடும்ப நன்மைக்காக, வளமான வாழ்க்கைக்காக ஆண்கள், தனியாகவோ அல்லது குடும்பத்தாரோடு புலம் பெயர்வதென்பது வேறு. பெண்கள் தனியாக புலம் பெயர்வதென்பது வேறு. படித்த பெண்கள் தனியாக வெளிநாடுகளில் சென்று பணி புரிகிறார்கள். அவர்களையும், இவர்களையும் ஒப்பிடக்கூடாது. இந்தக் காட்சி ஏன் என்னை இவ்வாறாக சிந்திக்கத் தூண்டியெதென்றால், சில நாட்களுக்கு முன் படித்த ஒரு செய்திதான்.

ஒரு பெண், 13 வருடங்களுக்கு முன், பணிப்பெண் வேலைக்கு இங்குள்ள ஒரு குடும்பத்தால் அழைத்து வரப்பட்டார். வந்த சில மாதங்களைத் தவிர, அவருக்கு எந்த வித ஊதியமும் கொடுக்கப்படவில்லை. அவரால் ஊரிலிருக்கும் தன் குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல விதமான சித்திரவதைகளுக்கு ஆளான பின்னர், அவர் அந்த வீட்டிலிருந்து தப்பித்து ஸீலங்கா தூதரகத்தில் போய் அடைக்கலமானார். பின்னர் அங்கிருந்து அவர் ஒரு புகலிடம் இல்லாதோருக்கான ஆதரவகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், அவரை அழைத்து வந்த, அவருக்குப் பொறுப்பான அந்த அராபியக் குடும்பத்தலைவர் இறந்து போய்விட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கியை பெற வழியேதும் இல்லாமல் போய் விட்டது. இதை அறிந்த கவர்னர், அந்த சம்பள பாக்கியைத் தான் தருவதாக ஒத்துக்கொண்டு 53,000 ரியால் அளித்தார்.

இவற்றை எடுத்துக்கொண்டு அந்தப்பெண்மணி, தன் ஊரை அடைந்தார். அவரிடமிருந்து இந்தனை நாள் எந்தவித தகவலும் இல்லை என்பதால், அவர் குடும்பத்தார், அவர் இறந்து விட்டதாக கருதியுள்ளார்கள். அவரைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்தப் பெண்மணி இன்று அந்த ஊரில் ஒரு பணக்காரப் பெண்மணி (கிட்டத் தட்ட 15.50 இலட்சம் ஸீலங்கா ரூபாய் 1 SAR = 29.50 Lankan Rupee).

குறிப்பிட்ட விமான நிலையம் = ரியாத், சௌதி அரேபியா.

Friday, November 16, 2007

Sachin Syndrome ... 'Oh.. not again..'

Syndrome - A group of symptoms that collectively indicate or characterize a disease, psychological disorder, or other abnormal condition - American heritage dictionary

சச்சின் டெண்டுல்கரின் நேற்றைய ஆட்டம் அபாரம். ஆனாலும் சதம் அடிக்க முடியவில்லை. அவர் இவ்வாறு 90களில் ஆட்டம் இழப்பது வாடிக்கையாகி விட்டது. அவரே இதை ஒரு 'wrong habit'  என்று ஒத்துக் கொள்கிறார். 2007ல் மட்டும் 6 முறை இவ்வாறு ஆட்டம் இழந்துள்ளார்.

அவர் சதத்தை நெருங்கிய போதெல்லாம், 'இன்று சதம்தான்' என்று எழுந்து நின்று ஆர்ப்பரித்த ரசிகக் கூட்டம், இன்று ' சதம் போடுவாரா' என்று சந்தேகம்/விவாதம் செய்கிறது. இனிமேல் அவர் 'சதம் போட வேண்டுமே' என்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர் ஆட்டமிழந்து வரும் போது, 'He is great' என்று கூறி ஆரவாரம் செய்தவர்கள், 'Just missed' என்று சமாதானம் செய்து கொண்டே கை தட்டியவர்கள், இன்று 'Oh.. not again..' என்று உச்சுக் கொட்டும் நிலைக்கு வந்து விட்டார்கள். அவரின் குழந்தையும் கூட sixer அடித்து சதத்தை எட்டி விடு என்று தொலைபேசியில் கூறும் அளவுக்கு உள்ளது.

உன்னதத்திலிருந்து, வியப்பிற்கு மாறி, இப்போது பரிதாபத்திற்கு உரியவாராகியுள்ளார். சச்சின் ஒரு 'statistician's delight'  என்று கூறுவார்கள். இப்போது ஒரு புதுவிதமான புள்ளி விவரத்தை ஆரம்பித்து உள்ளார். 50 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 200க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, என்பதின் இடையே, 90-100 எண்ணிக்கை என்கின்ற ஒரு புது புள்ளி விவரத்திற்கு அடி போட்டு அதிலும் அவரே முதன்மையான வராயிருக்கிறார்.

பாகிஸ்தானின் சல்மான் பட், யுனிஸ் போன்றவர்கள் 90களில் சர்வ சாதாரணமாக ஆடும் போது, 400 பந்தயங்களுக்கு மேல் ஆடிய சச்சின் 90 களில் ததிங்கனத்தோம் போடுகிறார். அவர் அதிக ஒட்டங்கள் குவித்திருக்கலாம், மிக அபாரமாக ஆடி குழுவின் வெற்றியை உறுதி செய்யலாம். அனாலும் அந்த மைல்கல்லை எட்டமுடியாதிருப்பது அவ்ர் ஒரு விதமான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.  

மேலே கூறிய விளக்கப்படி இது ஒரு வியாதியே. அவர் ஒரு மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது எனத் தோண்றுகிறது.

 

பி:கு: சச்சினின் ஆட்டத்தையோ, அவர் குழுவின் வெற்றிக்கு ஆற்றிய பங்கைப் பற்றியோ, அவரின் dedication பற்றியோ எந்தவொரு சந்தேகமும் எழுப்பவில்லை. அவை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது.

Wednesday, November 14, 2007

டாடா குழுமத்தின் ஆசியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் நான்காவது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த Computational Research Laboratories (CRL), நொடிக்கு 117.9 trillion கணக்குகள் செய்யக்கூடிய ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க CRL ன் சுய தொழில் நுட்பத்தால் உருவானது என்று அதன் தலைவரும், TCS நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுமான S. ராமதுரை கூறியுள்ளார். இதன் பெயர் 'ஏக'. சம்ஸ்கிருத வார்த்தையான இது 'முதல்' என்ற அர்த்தம் தரும். இது பற்றி மேலும் அறிய

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEB20071113105830&Title=Business&rLink=0

இந்தியத் தொழில் நுட்பத்தை உலகறியச் செய்யும் டாடா குழுமத்திற்கு இது மற்றும் ஒரு வெற்றிக்கல். பாராட்டுக்கள்.

Sunday, November 11, 2007

அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ - மத்திய அரசின் பாராமுகம். அது சரி முதலில் முகம் என்று ஒன்று இருந்தாலல்லவோ பார்ப்பதற்கு. மேற்கு வங்காள ஆளுனர் நந்திகிராம் ஒரு ‘யுத்த களம்’ ஆக மாறிவிட்டது. எந்த ஒரு அரசாங்கமும், அந்நிலையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருக்க கூடாது என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.

மேலும், மேதா பாட்கர் போன்ற சமுதாய சிந்தனையாளர்களின் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது, நாகரீகமான அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று வேறு கூறியுள்ளார்.

CPI-M கட்சியாளர்கள் நந்திகிராமத்தை மீண்டும் ‘அபகரித்திருப்பது’ ஒரு சட்ட விரோதமான செயல் என்றும் ஒத்துக்கொள்ள முடியாதவொன்று என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ என்று மேற்கு வங்காள உள்துறை காரியதரிசி கூறியதையே ஆளுனரும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் இடது சாரி கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. அவர் தன் எல்லை மீறி நடப்பதாகவும், சார்பற்று நடப்பதாகவும் கூக்குரல் இடுகின்றன. இதன் நடுவில் அவர்கள் மந்திரி சபையிலிருந்து ஒரு அமைச்சரும் (கோஸ்வாமி) அரசின் நிலையை எதிர்த்து ராஜினாமா செய்திருக்கிறார்.

உண்மையான நிலை தனக்கு பாதகமாயிருப்பதால், ஆளுனரின் கண்டனத்தையும் அவரின் நிலைப்பாட்டையும் அரசு எதிர்க்கிறது. ஆளுனர் என்றால் என்ன கர்நாடகா ஆளுனர் தாக்கூர் போல கை கட்டி வாய் பொத்தி உட்கார்ந்திருக்க வேண்டுமா? அத்தனை நாள் அவகாசம் கொடுத்தும் காங்கிராசால் குதிரைப்பேரம் பேசி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜபா வை நேற்று அரசமைக்க அழைத்துள்ளார். ஆனால், காந்தி உண்மையான அக்கறையோடு செயல்பட்டால் அதற்குக் கூப்பாடு, மத்திய அரசும் மவுனம்.

ஒரு நடுநிலையான அரசாயிருந்தால் ஆளுனரின் இந்த பேட்டியையே அவரின் அறிக்கையாக எடுத்துக்கொண்டு இந்நேரம் மேற்கு வங்க அரசை கலைத்திருக்க வேண்டும். ஆனால், எப்படிப் பண்ண முடியும்? குடுமி அங்கேயல்லவா இருக்கிறது. அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

இதே எதிர்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருந்தால் இத்தனை நேரம் ஜனாதிபதி ஆட்சி அமுலாயிருக்கும். ராத்திரியோட ராத்திரியா, அப்துல் கலாமை மாஸ்கோவிலே கையெழுத்து போட வச்சவங்க தானே இவங்க.

ஆனா ஒன்னு, வரப்போகிற பாராளுமன்றத் தொடர், அணு சக்தி ஒப்பந்தம், நந்திகிராம் ரெண்டுலேயே அடிபட்டுப்போயிடும். சாட்டர்ஜியோ, ப்ளீஸ், ப்ளீஸ்.. சிட் டவுண், என்று கெஞ்சியே, (சபையைத் தள்ளித் தள்ளி வச்சு, பாராளுமன்றக் கட்டிடம் கடைசியிலே சென்னைக்கே வந்து விட்டாலும் ஆச்சரியப் பட வேண்டாம் :-))))))) ) நொந்து போக வேண்டியதுதான்.

Thursday, November 08, 2007

தீபாவளி தொல்லைக் காட்சிகள் - 1

காலையில் மங்கள நாதத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடங்கின. ஜெயாவின் வேலூர் ஸ்ரீபுரம் பற்றிய தொகுப்பு மிக அருமை. விடியலில் எடுத்த படப்பிடிப்பு மனத்தைக் கொள்ளை கொண்டது.

பின்னர் 6:30 க்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் பழமை சங்கீதம் பற்றிய நிகழ்ச்சிகள், கலைஞரைத் தவிர. சன் - நித்யஸ்ரீ கர்நாடக சங்கீதத்தில் தமிழ்ப் பாடல்கள் , ஜெயா - சுகன்யா ராம்கோபால் நடத்திய லய ராக சங்கமம், பஞ்ச கன்னிகைகள் கடம், மிருதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று புது விதமான ஒரு ஆர்கெஸ்ட்ரா. ஸ்டார் விஜயில் ஹரிஹரனின் ஹார்மோனியம், கஜல், கிடார், தபேலா,  சரோட் என்று வடக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளோடு சங்கீத சங்கமம். கலைஞரில் மட்டும் டாக் ஷோ சத்யராஜோடு, சினிமா தான் வாழ்வின் ஆரம்பமும், முடிவும் என்று.

7:00 மணிக்கு கலைஞரிலும், சன்னிலும் கிட்டத்தட்ட ஒரே நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீகாந்தும், அவர் மனைவி வந்தனாவும் பேட்டி காணப்பட்டார்கள், தலை தீபாவளி தம்பதியாம். கடந்த சில மாதங்களாக வேறு சில காரணங்களுக்காக தொலக்காட்சிகளும், ஊடகங்களிலும் தோன்றியவர்கள் இன்று ஜோடியாக சேர்ந்து வந்தது ஒன்றை நன்றாக நினைவு படுத்தியது. விட்டுக்கொடுத்தல் இருந்தால், வாழ்வில் நலம் பெறலாம் என்பதுதான் அது. ஆனால் அது எப்படி ரெண்டு தொலைக்காட்சிகளும் ஒரே நிகழ்ச்சி. இன்னிக்கு மீண்டும் 'கில்லி' யாட்டமா? போகப்போகத்தான் தெரியும்.

7:30க்கு பொதிகையில் சொர்ணமால்யாவின் 'வந்தாள் மகாலக்ஷ்மி' பரத நாட்டியம். சொர்ணமால்யாவின் முதல் நாட்டிய நிகழ்ச்சியாம். ஹரிபிரசாத்தின் சாரீரம் ரொம்பவும் நன்றாக இருந்தாலும், சொர்ணமால்யாவின் சரீரம் ரொம்ப சங்கடம் கொடுத்தது. இவர் உடம்பு மெலிதாக இருந்த காலத்தில் ஆட வந்திருக்க வேண்டும். இவ்வளவு ரெட்டை நாடியான உடம்பை வைத்துக் கொண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டார். சிகப்புக் கலரில் உடை கண்ணை கூச வைத்தது. ஜெயாவும், சன்னும் சினிமா நிகழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டார்கள், நதியாவும், விஷாலும். ஸ்டார் விஜய் 7:00 மணிக்கே புது பாடல்களை ஆரம்பித்து விட்டனர். இனிமே இன்னிக்கு முழுசும் குத்தாட்டம்தான்.

Monday, November 05, 2007

மரத்தை வெட்டினால் 1 கோடி ரூபாய் இனாம்.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டும் போது அங்கே இருக்கும் ஒரு பேரிச்சை மரத்தை அகற்ற முடியவில்லை. அந்த மரம், கார் பார்க்கிங் தளத்தில் இருக்கின்றது. முதலில் அதை வெட்ட முயன்றனர். முடியவில்லை. பின்னர் டிராக்டர் கொண்டு இழுத்து சாய்க்க முயன்றனர். தோல்வி கண்டனர். இன்னும் பெரிய டிராக்டர் கொண்டு வந்து முயற்சி செய்தனர். அப்போதும் அதை சாய்க்க முடியவில்லை.

பிறகு மதத் தலைவர்கள்,அங்கே ஒரு பூதம் தன் குடும்பதுடன் வாழ்வதாகவும், அந்த மரத்தை அதுதான் பாதுகாத்து வருவதாகவும் கூறி அந்த மரத்தை வெட்ட எத்தனிக்க வேண்டாம் என்று அந்த கான்டிராக்டரிடம் கூறினராம்.tree5_

அங்கே வேலை செய்பவர்களும், காவல் காரர்களும், அந்த மரத்தை அகற்ற முயன்ற நேரத்திலிருந்து அங்கே பல அசம்பாவிதங்கள், ஒருவர் மாடியிலிருந்து தலை குப்புற கீழே வி ழுந்து உயிர் விட்டது முதற்கொண்டு, நடக்கின்றன என்கிறார்கள்.

அந்த மரத்தை அப்புறப் படுத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் ரியால் (ஒரு ரியால் = 10 ரூபாய்க்கும் மேல்) தருவதாக அந்த காம்ப்ளெக்ஸ் சொந்தக்காரர் அறிவித்திருக்கிறார் (இடம் ஜித்தா, சவுதி அரேபியா).

ராமர் பாலம், ஆதாம் பாலம், மணல் திட்டு (நீங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க, என்ன) உடைக்கும் முயற்சியிலும், இப்படித்தானே டிரெட்ஜர் மாறி மாறி உடஞ்சது.

நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற்கும் ஒரு முடிச்சும் போடலைடா, சாமி, ஏதோ ஞாபகம் வந்திச்சு சொன்னேன், அம்புட்டுத்தான்….