Sunday, June 18, 2006

நினைவெல்லாம் நான்....

நிலவொளி மொட்டை மாடியை நனைக்க, இதமான காற்று மெல்ல மெல்ல உடலை மஸாஜ் செய்து கொண்டிருந்தது. காற்றில் அசைந்த இலைகள் கச்சேரி ஆரம்பிக்கும் முன் சுருதி சேர்ப்பது போல சலசலத்தது. “வ்வ்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்…….”வாசலில் சென்ற மோட்டர் பைக் சுருதி பேதமாய் இருந்தாலும். அவனது மோன நிலை சற்றும் பாதிக்கப் படவில்லை.

அவன் இப்போது 30 வயது குறைந்திருந்தான். மனது இளமையாயிருந்தது. இது எத்தனை முறை அசை போட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒன்று. நன்கு மேய்ந்த பின்னர், மர நிழலில் சாவகாசமாக படுத்துக் கொண்டு அசை போடும் மாடு போல.

தாமரை இலையில் விழுந்த தண்ணீர் முத்துக்கள் சிறு துளிகளாகி, பின்னர் வழுக்கி ஒடி, இன்னொரு துளியுடன் சேர்ந்து சற்று பெரியதாகி மீண்டும் இன்னொன்றுடன் சேர்ந்து இன்னும் பெரியதாகி கடைசியில் இலையின் நடுவில் பெரியதொரு முத்தாய் இருக்குமே அது போல, நாட்கள் வாரமாய், மாதமாய் உருண்டோடி 30 வருடங்களாகி விட்டன. அந்த நாள்தான் அவனுக்கு வங்கியில் சேர அழைப்பு வந்த நாள். அவன் வாழ்க்கையில் நேர்ந்த மிகப் பெரிய திருப்பு முனை.

தபால்காரரிடமிருந்த பெற்ற கவரை பிரிக்கு முன்பே அவனுக்கு தெரிந்துவிட்டது . ஒரே குதுகலத்துடன் பிரித்து படித்தவுடன் “அம்மா, எனக்கு ஆர்டர் வந்துடுத்து” என்று சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் ஒடினது, அம்மா “என்னடா, என்னடா” என்று ஒரு கை தண்ணீரை எடுத்து எரியும் விறகின் தலையிலே தெளித்து அடுப்பை தணித்து வெளியே வந்து “என்னாடா சொல்றே, எங்கேயிருந்து ஆர்டர் வந்திருக்கு?” என்று கேட்டது, “அம்மா, எனக்கு பேங்க் அலாட் ஆகி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கும்மா. 25தேதிக்குள்ள ஜாய்ன் பண்ணனும். போஸ்டிங் திருநெல்வேலிம்மா” என்று சொன்னதும், “எல்லாம் ஸ்வாமி கிருபை” என்று அம்மா சந்தொஷப்பட்டதும் , சற்று நேரம் கழித்து “ஏண்டா, நம்மூர்லேயே திருச்சிலே வேலை இல்லையாமா?” என்று சற்று அரை மனதாக, பிறந்ததிலிருந்து இது நாள் வரை பிரியாத மகனை பிரியப்போகும் ஏக்கம் கண்ணில் தெரிய கேட்டது எல்லாம் ஏதோ சினிமா பார்ப்பது போல மனதில் வந்தது.

“சரி, சரி, ஸ்வாமிகிட்டே ஆர்டரை வச்சு நமஸ்காரம் பண்ணு. அப்புறம் எடுத்துண்டு போய் அப்பாகிட்டே காமி..”

அப்பா ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர். வீடு ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே. வாசலில் நின்று வேகமாகக் கத்தினால் அப்பாவிற்கு கேட்கும். ஆனால் அதற்கு அவசியமேயில்லை. “என்னடா, ஆர்டர் வந்துடுத்தா? போஸ்ட்மேன் சொன்னார். அதான் புக்கிங் கிளார்க்கை கொஞசம் பார்த்துக்க சொல்லிட்டு ஓடி வந்தேன்” என்றபடியே அப்பா நுழைந்தார். ஆர்டரை வாங்கி படித்துவிட்டு, “போன வாரம் அந்த குருவிக்காரி கை பார்த்து சொன்னது அப்படியே பலிச்சுடுத்துடா, அவளுக்கு தெய்வ வாக்கு…” என்றார். (இவர்கள் ரெகுலராக பயணம் செய்பவர்கள். பிளாட்பாரத்தில் ரயிலுக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில், பிரயாணத்திற்கு வரும் மற்ற பயணிகளிடம் இது மாதிரி ஜோஸ்யம் பார்க்கிறது, கொய்யாப்பழம் விற்பது, தள்ளுபடி விலையில் வேட்டி, புடவை விற்கிறது எல்லாம் நடக்கும். அப்படியே இன்னும் கொஞ்சம் தள்ளு விலையிலோ அல்லது சும்மாவோ, ரயில்வே ஸ்டாஃப்க்கும் கிடைக்கும்.)

எனக்கு பிஸ்ஸி(பிஸிக்ஸ்) படிக்கனும்தான் ஆசை. ஆனா அப்பாதான் என்னை பி.காம் படித்தால் தான் பாங்க் வேலை கிடக்கும் என்று சொல்லி என்னை கல்லூரியில் சேர்த்தார். அப்போது எல்லாம் பாங்க் வேலைன்னா ரொம்ப பெருமை. அப்பாவிற்கு அவருடைய எண்ணம் ஈடேறியதில் மிகவும் சந்தோஷம்.

கல்லூரியை பற்றி எண்ணியதுமே என் மனம் சற்று நின்று, ரிவர்ஸ் கியர் போட்டு இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றது.

என் கல்லூரி படிப்பிற்காகவே, அப்பா ஒரு குக்கிராம ஸ்டேஷனிலிருந்து, திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்திருந்தார். திருச்சி ஒரு மிகப்பெரிய ஊராக காட்சியளித்தது எனக்கு. எங்கள் சொந்தக்காரர் ஒருவர், எல்லா கல்லூரிகளிலும் எனக்கு அப்ளிகேஷன் வாங்கி வந்து கொடுத்து கூடவே, “..நீ ஒன்னும் கவலைப்படாதே, நேஷனல் காலேஜில் நான் உனக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்துடறேன்..” என்று உறுதியளித்து அவ்வாறே வாங்கியும் கொடுத்தார்.

தினமும் ரயிலில் பயணம், காலையும் மாலையும். 9:23 க்கு லால்குடி- திருச்சி பாஸஞ்சர் டவுன் ஸ்டேஷனுக்கு வரும். 9:26க்கு கிளம்பும். வண்டியில் முழுக்க ரயில்வே ஆபீஸில் (திருச்சி ஜங்ஷன் டிவிஷனல் ஆபீஸ் ரொம்ப பெரியது) வேலை செய்பவர்களும், கல்லூரி மாணவ மாணவியரும் தான். டவுன் ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷன், ஸ்ரீரங்கம். இங்குதான் வண்டி நிரம்பும். மாணவியர் அனைவரும் டவுனில் இறங்கி விடுவார்கள். (சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரிக்கும், சாவித்திரி வித்யாசாலாவிற்கும், சில பேர் மட்டும் ஹோலி கிராஸ் கல்லூரிக்கும் நடந்து சென்று விடுவார்கள்). டவுனில் ஏறுபவர்கள் அனைவரும் ரயில்வே ஆபீஸ் அல்லது, ஜமால் முகம்மது கல்லூரி அல்லது தேசிய (நேஷனல்) கல்லூரிக்கு செல்பவர்கள் (எல்லாம் ஆண்கள் ம(ட்டு)டம்).

அதே கம்பார்ட்மெண்ட், அதே நண்பர்கள், அதே பெரிசுகள், அதே இருக்கை. கல்லூரிப் படிப்பை முடித்த நண்பர்கள் மாறலாம். மற்றவை மாறவே மாறாது. ரங்காவும், சக்தியும் என் சீனியர்ஸ். இருவரும் ஸ்ரீரங்கம். வண்டி டவுன் ஸ்டேஷனைத் தாண்டியதும், கதவோரம் வந்து விடுவார்கள். ஒரு சிகரெட, நான்கு உதடுகள். சிகரெட் வாயில் இல்லாத நேரத்தில், ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பற்றி விமர்சனம் நடக்கும். இதில் கூட பயணித்த, மற்றும் உள்ளூர் தேவதைகளும், சில சமயங்களில் தேவாதி தேவர்களும்(தேவதைகளை பெற்றவர்கள்) இடம் பெறுவர்.

ஆனால் டவுனில் ஏறும் நாங்கள் அபாக்கியசாலிகள். நாங்கள் வண்டியில் ஏறும் போதும் அவர்கள் இறங்கும் போதும் கிடைக்கும் அச்சிறு கண நொடிகளே. இதில் எனக்கு இன்னும் கடினம். ஸ்டேஷன் மாஸ்டர் பையன் ஆனதால் அங்கு இருக்கும் எல்லாருக்கும் (அந்த ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள், ரயில் கார்டு, டிரைவர், டி.டி.ஆர், ரயில்வே ஆபீசில் பணி புரிபவர், கடலை விற்பவர் அனைவருக்கும்) என்னைத் தெரியும் (யாரது! கோபாலன் பையனா? என்ன நேஷனலா? நன்னா படி.. என்ன!!!). கப்சிப் என்று பவ்யமாக வண்டி ஏறி சென்று திரும்ப வேண்டியதுதான். சில சமயங்களில் சில பெரிசுகள் கூப்பிட்டு தன் பக்கத்தில் வேற உட்கார்த்தி வைத்துக் கொண்டு விடும். மேலும் திருச்சி எனக்கு புதிது! இந்த தேவ தரிசனம் அதனினும் புதிது!!

இந்த மாதிரியான விஷயங்களில் பால பாடங்கள் முடிந்து சற்று தேறிய நிலையில் இருந்த போது, (இப்போது நான் செயிண்ட் ஜோசப் கல்லூரி. பெண்கள் கல்லூரி வழியாகவும் போகலாம், மலை வாசல் வழியாகவும் போகலாம் ), என் சகோதரி (பெரியம்மாவின் பெண்) வந்து எங்களுடனேயே தங்கி பெண்கள் கல்லூரிக்கு போக ஆரம்பித்தாள். அவ்வளவுதான் . நான் தினமும் நவரத்னங்களை தவிர்த்து , மலை வாசலில் இருக்கும் மாணிக்க வினாயகரைத் தரிசனம் செய்து கொண்டு கல்லூரி செல்லலானேன்.

என் மேல் விழுந்த ஒரு நீர்த்துளி சடாரென்று என் மன வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியது. ஒரு சிறு சிலிர்ப்புக்குப் பிறகு வண்டி பாஸ்ட் பார்வோர்ட்ல் போய் சென்ற வாரத்தில் நின்றது.

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள்.

“ஆமாம்மா. US லே Purdue யுனிவர்சிட்டிலேருந்து ஆஃபர் வந்திருக்கும்மா. ஆகஸ்டுலே காலேஜ் ஆரம்பிச்சுடும்மா..”

“…… இத்தனை வருஷம் உங்கூடவே இருந்துட்டு இப்போ தனியா போகனும்.. ம்ம்ம்ம்ம்ம். ” என்று கூறி நமுட்டு சிரிப்புடன் “ ஏன் நீயும் வாயேன். நான் வீடு எடுத்துதான் தங்க போறேன். நீ வந்தா எனக்கும் சௌகரியமா இருக்கும்…” என்றவனிடம் “” போ..போ.. வேற வேலையில்லை. கொஞ்ச நாள் தனியா இருந்து அவஸ்தைப்படு. சும்மா அம்மா கோண்டா இருக்காதே..” என்று சிணுங்கினாள்.

“ஆனா பாருடா, அந்த கடலங்குடி சரஸ்வதி ஜோஸ்யம் சொன்னா. நீ வந்து நுண்துறை சம்பத்தப்பட்ட படிப்பு தான் படிப்பேன்னா. அதே மாதிரி ஆயிடுத்து பாரேன். சரி, இதை அப்பாக்கு போன்லெ சொல்லிட்டு, இ-மெயிலில் ஆபீஸ் அட்ரசுக்கு பார்வோர்டு பண்ணிடு..”

இது என் மகனுக்கும், மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கோண்டே உள்ளே வந்த நான், விவரங்கள் அறிந்த பிறகு, “என்னவோ போ.. நீ பாட்டுக்கு, இதைப் படிக்கிறேன், அதைப் படிக்கிறேன்னு சொல்றே. எனக்கு ஒன்னும் புரியலே. பெருமாள் கோயில் மாடு மாதிரி தலையாட்டிண்டு இருக்கேன்….”என்று நகர்ந்தேன்.

என்னை யாரோ உலுக்குவது போல் இருந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது, அதற்கு காரணமான என் மனைவி அருகிலிருந்தாள்.

“…என்ன மணி 10:30 ஆகிறது. சாப்பிட வரலையா? ஏன் அதுக்குள்ளே தூக்கம்?..”

“இல்ல! இப்படி எதையோ நினைச்சு யோசனை பண்ணிண்டு இருந்தேனா.. அப்படியே பழசு எல்லாம் நினைவுக்கு வந்தது..” என்றேன்.

“ஒஹோஹோ! என்ன ஆட்டோகிராபோ? “ என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“இல்லே ! இல்லே!! இது தவமாய் தவமிருந்து … “ என்று கூறி எழுந்தேன்.

---------------------------------------------------------------

பின் குறிப்பு : இந்த கதையின் தொடர்ச்சியை என் மகன் இன்னும் 30 வருடம் கழித்து நேனோ குக்கர், மைண்ட் ரீடர் என்றும், தன் பள்ளி, கல்லூரி அனுபவங்களையும்

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள் ..”

என்கிறதுலேயிருந்து ஆரம்பித்து எழுதுவான்……


எனக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் வளர்ந்து, சிதைந்து (மாறிப் ) போய் தான் இருக்கிறேன். எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?


தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்)

6 comments:

Anonymous said...

romba nalla eruku sir

Anonymous said...

That was simply superb..although someone read that to me, but it was truly amazing !

Anonymous said...

padippadarku migavum interesting aa irukku..ippo irukkara generation avaalukku vendiyadhai taaney mudivu pannikkuraa..kaalam veragu aduppu lendu cooking range kku evalo vidyasam aa irukkridado, adey maadiri inda generation um maari vittadu..

ulamaarnda vazhthukkal !

Anonymous said...

oru eassaikku suram avasiyam.... adhu madhiri ... unga karpanai valam unga writing la nanna erukku... gud sir,,,, keep it up

Unknown said...

//எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?//

touching

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....