கடந்த சில நாட்களாக கேள்விப்படும் செய்திகள், தொண்மை வாய்ந்த, வளர்ந்த செழிப்பான நாகரீகம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் நமது நாகரீகம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையை எட்டியிருக்கிறது என்பதை தெளிவு படுத்தும். அறியாமையை விலக்கி, பகுத்தறிவோடு கூடிய உணர்தலை புகட்டக்கூடிய கல்வியறிவு பெற்ற சிலர் எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்துள்ளார்கள் என்று அறியும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.
மனைவியும், கணவரும் டில்லி அருகில், நொய்டாவில் பல் மருத்துத் துறையில் இருப்பவர்கள். கணவர், தன் 14 வயது மகளை கொலை செய்திருக்ககூடும் என்று காவல்துறை கருதி அவரை சிறையில் வைத்துள்ளது.
நன்கு படித்த, பல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்யும், நான்கு மென்பொருள் பொறியாளர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மிரட்டி பணம் பறித்தார்கள் என்கிற குற்றத்திற்காக பெங்களூருல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தன் பழைய காதலனை, புதிய காதலனோடு சேர்ந்து சதி செய்த கொன்ற குற்றத்திற்காக, MBA படித்துக் கொண்டிருந்த மாணவிக்கும் மாணவனுக்கும் புனாவில் உள்ள நீதி மன்றம், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
தன் உடன் வேலை பார்த்த விமான உபசரிப்பு பெண் ஊழியரை, தங்கும் விடுதியின் அறையில் கொலை செய்த குற்றத்திற்காக, சக விமான செலுத்துநர்(co-pilot), மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் சகோதரியைக் காதலித்த குற்றத்திற்காக, காதலனைக் கொன்ற வழக்கில், யாதவ் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தில்லி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும், கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்தவை. ஊடகங்கள் மூலமாக பெரிதாக விவாதிக்கப்பட்டதால் அறியப்பட்டவை. இக்குற்றங்களில் சம்பத்தப் பட்டவர் அனைவரும், மத்திய தர வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள். நல்ல படிப்பறிவு பெற்றவர்கள். கல்வியறிவை, தன் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை நெறித்திறனை மேம்படுத்த உபயோகப்படுத்தாமல், நெறி கெட்டு மற்றவர்களின் உயிரைப் பறிப்பதற்கு உபயோகப்படுத்தும் இந்த சமுதாயப் பதர்களை, சட்டங்கள் மிக அதிகபட்ச தண்டனை வழங்கி, சமுதாய மேன்மைக்கு மேலும் பங்கம் வராமல் காக்க வேண்டும்.